தடதடக்கும் மனதுடன் தான் பார்த்திபன் அறைக்குள் சென்றாள் மங்கை. அவனோ வெறும் உள் பனியன் மற்றும் லுங்கியுடன் படுத்திருக்க அவனது அந்த தோற்றம் சிறு தடுமாற்றத்தைக் கொடுத்தது. அவனை அப்படி பல முறை பார்த்திருக்கிறாள் தான். ஆனால் இவ்வளவு அருகில் இதுவே முதல் முறை.
“ஹேய் மங்கை சீக்கிரம் போய் அவரை எழுப்பி விஷ் பண்ணு. வெளிய எல்லாரும் இருக்காங்க. நீ இப்படி தயங்கிட்டு இருந்தா நேரம் ஆகும். வெளிய உள்ளவங்க என்ன நினைப்பாங்க?”, என்று மனசாட்சி எடுத்துரைக்க தயக்கத்தை உதறி அவனை நெருங்கியவள் “பார்த்தி பார்த்தி”, என்றாள்.
அவன் அசையவே இல்லை என்றதும் வேறு வழி இல்லாமல் அவன் தோளில் கை வைத்து “பார்த்தி பார்த்தி”, என்று எழுப்ப பதறி அடித்து எழுந்து அமர்ந்தவன் ஒரு நொடி அவளைக் கண்டு திகைத்து அமர்ந்து விட்டான்.
கண்ணை கசக்கி கொண்டு அவளைப் பார்க்க அவளோ தவிப்பாக அவனைப் பார்த்தாள். இது கனவா? மங்கை எப்படி என்னோட ரூம்ல? என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க “ஹேப்பி பெர்த்டே பார்த்தி”, என்றாள்.
அவள் குரலில் தான் இது கனவு இல்லை நிஜம் என்ற உண்மை புரிந்தது. “ஹேய், நீ நிஜமாக தான் இங்க வந்துருக்கியா? எனக்கு கனவு மாதிரியே இருக்கு”, என்றான்.
“கனவு எல்லாம் இல்லை. சீக்கிரம் எந்திச்சு முகம் கழுவிட்டு நல்லா டிரஸ் பண்ணிட்டு வெளிய வாங்க. அம்மா அப்பா அண்ணன் எல்லாம் வெளிய இருக்காங்க”, என்று சொல்ல அவனுக்குள் பரபரப்பு.
“ஏய் எல்லாருமா?”, என்ற படி எழுந்து விட்டான்.
“சரி வாங்க, நான் போறேன்”, என்ற படி அவள் செல்ல போக “ஏய் இரு டி, எங்க ஒடுற?”, என்ற படி அவள் கையை பற்றி விட்டான்.
அவன் செய்கையில் அதிர்ந்தாலும் “விடுங்க பார்த்தி, நேரம் ஆகுது”, என்று அவள் குரல் மெதுவாக வர “விடுறேன், ஒரு நிமிஷம் இரு. இன்னைக்கு முதல் வாழ்த்தே உன்னோடது தான். எனக்காக இன்னொரு தடவை சொல்லேன்”, என்றான்.
“கையை விடுங்க சொல்றேன்”
“விட்டா நீ ஓடிருவ”, என்ற படி அவளை இழுக்க அவன் மார்பில் வந்து விழுந்தாள்.
இது தான் சாக்கென்று அவன் கரம் அவளை இறுகப் பற்றிக் கொள்ள “பார்த்தி என்ன பண்ணுறீங்க? விடுங்க”, என்றாள்.
“நீ என் பக்கத்துல என்னோட ரூம்ல இருக்க. இந்த சான்ஸ் இனி எப்ப வருமோ? பிளீஸ் விஷ் பண்ணு”
“என்னோட பார்த்திக்கு என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்கள். எப்பவும் நீங்க சந்தோஷமா இருக்கணும். போதுமா?”
“அதுக்கு நீ எப்பவும் என் கூட இருக்கணும்”
“சரி இருப்பேன்”
“எங்க என்னோட கிப்ட்?”
“ஐயோ, அது வெளிய அம்மா கிட்ட இருக்கு”
“அது இருந்துட்டு போகுது. இப்ப வேற கிப்ட் கொடு. சுவீட் கூட ஓகே தான்”, என்றவனின் கண்கள் அவள் உதட்டில் நிலைக்க “உங்க பார்வையே சரி இல்லை, விடுங்க நான் போறேன்”, என்றாள்.
“பிளீஸ் கொடு டி”, என்று அவன் குரல் கெஞ்ச அவள் எப்படி மறுக்கவாம்? அவன் நெற்றியில் இதழ் பதிக்க அடுத்த நொடி அவன் உதடுகள் அவள் இரண்டு கன்னங்களிலும் பதிந்தது.
அதை எதிர் பார்க்காதவள் அவன் கொடுக்கும் உணர்வுகளைத் தாங்க முடியாமல் அவன் தோள் பட்டையை இறுக்கிப் பிடிக்க அந்த சந்தர்ப்பத்தை விட மனதில்லாதவன் அடுத்த நொடி அவள் உதடுகளை நோக்கி குனிந்தான். மனம் ஒரு மாதிரி பரவசத்தில் திளைக்க, அவன் முத்தத்தில் கரைந்து போனாள் மங்கையர்க்கரசி. அவனுக்கோ அவள் உதடுகள் வெண்ணை போல தனக்குள் கரைந்து செல்லும் உணர்வு.
மேலும் மேலும் ஆசைகள் பெருக்கெடுத்தாலும் இருக்கும் சூழ்நிலை புரிய அவளை விட்டு விலகியவன் “சூப்பர் கிப்ட். இந்த பிறந்த நாள் சிறப்பா முடிஞ்சிருச்சு. சரி நீ போ. நான் கிளம்பி வரேன்”, என்று சொல்ல அவன் முகத்தைக் கூட பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டாள்.
வெளியே வந்தவளுக்கு அனைவரின் முகத்தையுமே ஏறெடுத்துப் பார்க்க சிறு வெட்கம். “மாப்பிள்ளை எங்க டி?”, என்று கேட்டாள் கோமளம்.
“இப்ப வந்துருவாங்க மா”, என்று சொல்லி விட்டு அண்ணன் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.
அனைவரும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த அவளும் சிறிது நேரத்தில் சாதரணமாகி விட்டாள். ஆனாலும் மனதுக்குள் அந்த நொடியின் படபடப்பு இருந்து கொண்டே இருந்தது. அதற்கு பிறகு பார்த்திபன் வெகு நேரம் எல்லாம் எடுத்துக் கொள்ள வில்லை. உடனடியாக குளித்து முடித்து தந்தை வாங்கிக் கொடுத்த புது உடையை அணிந்து வெளியே வந்து விட்டான்.
அனைவரும் இருப்பார்கள் என்று எதிர்பார்த்து தான் வந்தான். ஆனால் இப்படி கேக் எல்லாம் வாங்கி அலங்காரம் எல்லாம் செய்திருப்பார்கள் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை.
அனைவரும் பார்க்கும் போதே அவன் கண்கள் கலங்கிப் போக அனைவராலும் அவன் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது.
அவசரமாக தந்தை மற்றும் தங்கையை நெருங்கினான். “பிறந்த நாள் வாழ்த்துக்கள் டா பார்த்தி”, என்று சேதுவும் “ஹேப்பி பெர்த்டே அண்ணா”, என்று கயலும் வாழ்த்து சொன்னார்கள்.
தந்தை காலில் விழுந்து வணங்கியவன் தங்கையையும் அனைத்துக் கொண்டான். மங்கை வீட்டினரும் அனைவரும் வாழ்த்து சொல்ல பின் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்தான்.
சந்திரன் மற்றும் கோமு அருகே சென்று நின்றவன் “ரெண்டு பேரும் என்னை ஆசீர்வாதம் பண்ணனும்”, என்றான்.
“டேய் இரு டா ஒரு நிமிஷம்”, என்று சொன்ன சேது “மங்கை நீயும் பார்த்தி கூட சேந்து அப்பா அம்மா கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ மா”, என்று சொல்ல சந்தோஷமாக இருவரும் விழுந்து வணங்கினார்கள்.
சந்திரன் அவன் கையில் பணத்தைக் கொடுக்க முதலில் மறுத்தவன் அவருடைய கட்டாயத்தால் வாங்கிக் கொண்டான். பின் சேது காலிலும் இருவரும் விழுந்து வணங்கினார்கள். பின் கவின் மற்றும் நந்தன் குடும்பமும் அவனுக்கு வாழ்த்து சொல்ல கடைசியாக சொன்ன அஸ்வின் வாழ்த்தையும் ஏற்றுக் கொண்டு அனைவருக்கும் சாப்பிட கேக் கொடுத்தான்.
மங்கை அவனுக்கு கடிகாரம் பரிசளிக்க “போட்டு விடு”, என்னும் விதமாய் கையை நீட்டி விட்டான்.
“இவனோட”, என்று எண்ணி அவள் வெட்கத்துடன் தயங்க “போட்டு விடு மருமகளே”, என்றார் சேது. அவளும் அவனுக்கு அணிவிக்க “என்ன இருந்தாலும் அந்த கிப்ட் மாதிரி வராது. இன்னொன்னு கிடைக்குமா?”, என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு முணங்கினான். அதைக் கேட்டு அவள் முகம் குப்பென்று சிவந்து போக அவ்வளவு ரசனையாக அவளைப் பார்த்தான்.
அதற்கு பின் “பார்த்தி இந்தா. இது அப்பாவோட கிப்ட்”, என்று சொல்லி சாவி அடங்கிய குட்டி பரிசு பொதியை கொடுத்தார் சேது.
“தேங்க்ஸ் பா, இந்த சின்ன டப்பால என்ன கிப்ட் இருக்கு?”, என்று கேட்டான் பார்த்திபன்.
“பிரிச்சு பாத்தா தெரிஞ்சுறப் போகுது மாப்பிள்ளை”, என்று சந்திரன் சொல்ல “மாமா நீங்க பார்த்தினே சொல்லுங்க”, என்றான்.