“உன் விஷயத்துல நான் மாற மாட்டேன் வேதா. உனக்கு சொன்னா புரியாது, நாலு நாள் முன்னாடி நான் இருந்த நிலைக்கும் இன்னிக்கு இருக்க நிலைக்கும் எவ்ளோ வித்தியாசம் தெரியுமா? வெறும் பிஸிகல் இண்டிமேசி மட்டும் இதுக்கு காரணம் இல்லை. எனக்கு தெரியும் நான் எவ்ளோ முரட்டு தனமா உன்கிட்ட நடந்துகிட்டேன்னு, அதும் ஃபர்ஸ்ட் டைம்… உனக்கு எப்படி இருந்திருக்கும்? ஆனாலும் எனக்காக… ஹேய் இப்படிலாம் பேச வைக்காதடி” என்றான்.
அவள் கண்கள் மூடிய நிலையில் அவன் அணைப்பிலேயே இருக்க, அவனே மீண்டும் பேசினான்.
“நீ என்னை லவ் பண்ண நான் என்ன பண்ணினேன்? உன்னை இம்ப்ரெஸ் பண்ணன்னு ஏதும் செஞ்சது இல்லை, என் குணம் என்ன, நான் எப்படி பட்டவன் ஏதும் தெரியாம என்னை லவ் பண்ணின. கல்யாணம் கூட… ப்ச், எவ்வளவோ நடந்திடுச்சு? அப்பவும் என்னை மன்னிச்சு இன்னொரு சான்ஸ் கொடுத்த. இப்ப வரை என்னை விட்ராம தொறத்திட்டு வந்து நிக்கிற. நீ இல்லாம இந்த நேரம் நான் எப்படி சமாளிச்சுருப்பேன்னு சத்தியமா எனக்கு தெரியலை” மனதிலிருந்து சொன்னான் விஷ்வா.
வேதாவும்தான் கணவனை நினைத்து எவ்வளவு பயந்து போயிருந்தாள்? இப்படி அவன் மீண்டு வர வேண்டும் என அவளுக்குள்ளும் ஒரே போராட்டமாகத்தானே இருந்தது?
இப்போது அவன் பேச பேச, உணர்ச்சி மிகுதியில் அவளுக்கு அழுகை வந்தது. உணர்ந்து கொண்டவன் அவளின் முகத்தை மார்போடு இன்னும் நெருக்கமாக அழுத்திக் கொண்டு, “எங்கம்மா எனக்கு எல்லாமே பெஸ்ட்டா கொடுக்க நினைச்சிருக்காங்க, அதான் உன்னை என்னோட கோர்த்து விட்டுட்டாங்க” என கேலி போலவே சொன்னான்.
அவனது மார்பில் குத்தியவள், “ஆமாம், உங்களுக்கு நல்லது நினைச்சவங்க என்னை பத்தி யோசிக்கல, ஊருக்கு போனதும் அத்தைகிட்ட போய் நல்லா சண்டை போட போறேன்” என்றாள்.
“என்னன்னு?”
“சரியான மண்டை கனம் புடிச்சவனை என் தலைல கட்டி வச்சிட்டீங்கன்னு”
புன்னகைத்தவன், “எங்களுக்குள்ள எல்லாம் சரியாகுமா வேதா?” எனக் கேட்டான்.
“கண்டிப்பாங்க! உங்க பார்வை தன் பக்கம் திரும்பாதான்னு தவம் கிடக்காங்க என் அத்தை. என்ன ஒன்னு இப்ப திடீர்னு நீங்க அவங்கள்ட்ட போய் நிக்கும் போது அவங்களாலேயே அதை நம்ப முடியாது, மயக்கம் போடவும் வாய்ப்பு இருக்கு”
அவளை விட்டு விலகிப் போய் அமர்ந்து கொண்டவன், “எல்லா உண்மைகளையும் அம்மாக்கும் நீ தெரிய படுத்தணும் வேதா” என்றான்.
அவசியமா என பார்த்தாள் அவள்.
“அப்பா இல்லாம போனதுக்கு தானும் ஒரு காரணம்னு அவங்களுக்குள்ள சின்னதா குற்ற உணர்ச்சி இருக்கலாம். இல்லைனாலும் அவரோட வாழ்க்கை நடத்தினவங்களுக்கு இந்த உண்மையை தெரிஞ்சுக்கிற உரிமை இருக்கு” என அழுத்தம் திருத்தமாக சொன்னான்.
அவள் சரிதான் என தலையாட்டிக் கொள்ள, “அவங்களுக்கு மட்டும்தான் தெரியணும், வேற யாருக்கும் ஏதும் கசிய கூடாது. எனக்கு உண்மை தெரியுங்கிறது என் தாத்தாக்கும் தெரியக்கூடாது” என தீர்மானமாக சொன்னான்.
“தாத்தா செய்தது தப்பில்லையாங்க, அவர் நினைச்சிருந்தா எப்பவோ உங்களுக்கு உங்கம்மாவோட உறவு கிடைச்சிருக்கும்தானே?”
விரக்தியாக சிரித்தவன், “ஒரே மகனை இழந்து பல வருஷமா வாழ்க்கை நடத்திட்டு இருக்கார், அதை விடவா ஒரு மனுஷனுக்கு பெரிய தண்டனை கிடைக்க போகுது? அவருக்கு தான் செய்த தப்போட வீரியம் புரியலை. என் அம்மாவையும் என்னையும் பிரிக்கணும்ங்கிறது அவரோட நோக்கம் இல்லை. இந்த வயசுல அவரை வருத்த படுத்தி பார்க்கிற அளவுக்கு எனக்கும் துணிச்சல் இல்லை வேதா” என்றான்.
“இதுல நான் என்ன கருத்து சொல்ல? தாத்தா என்னை நம்பி சொன்ன விஷயத்தை உங்கள்ட்ட சொல்லிட்டேனே” என கவலை பட்டாள்.
“இதை தவிர என்ன செய்திருந்தாலும் என் அம்மாவை நான் ஏத்துகிட்டிருந்திருப்பேனா? நீ சரியாத்தான் நடந்திருக்க”
“ம்… அத்தையும் நீங்களும் சேர்ந்தா அதுவே போதும் எனக்கு” என்றாள்.
“ம்ம்… எல்லாம் சரி, அந்த பொடியன் கூடல்லாம் உறவாடனும்னு நினைக்கும் போதுதான்…” என எரிச்சலாக சொன்னான் விஷ்வா.
“சித்து உங்க தம்பிங்க”
“ஹ்ஹ்ஹான் அதுக்கு? அவன்தான் எனக்கு மரியாதை கொடுக்கணும், நான் இல்லை”
“சரி அவன் பேச்சை விட்ரலாம்”
“ஆமாம்னு ஒத்துக்காம அதென்ன விட்ரலாம்னு சொல்ற?”
“அடடா மலை ஏறிக்காதீங்க” என்றவள் அவன் பக்கத்தில் அமர்ந்து சமாதானமாக அவனை பற்றிக் கொண்டே, “அத்தைக்கு அவனை விட உங்க மேல நிறைய பாசம், அதுல அவன் கொஞ்சம் ஹர்ட் ஆகிட்டான்” என்றாள்.
“ஸோ வாட்? அவன் அம்மா கூடவே இருந்தான், நான் அப்படி இல்லை. தலைச்சம் புள்ள மேல அதும் கூட வச்சுக்க முடியாத புள்ள மேல அன்பு அதிகமா இருக்கிறது சகஜம்தானே? அம்மாகிட்டேருந்து கிடைக்கிற அத்தனை சலுகையும் அனுபவிச்சிவன் ஹர்ட் ஆகீட்டான்னு அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறியா நீ?” என சற்றே கோவப் பட்டான்.
“இதுக்குத்தான் அவன் பேச்சு வேணாம்னு சொன்னேன்”
“நீ சொல்லுடி, நான்தான் பாதிக்க பட்டவன், என் வியூஸ்தான் கரெக்ட்னு சொல்லு” என அடமாக சொன்னான்.
போடா என்பது போல அவள் பார்க்க, “என்ன… என்ன லுக்? நான்தான் உனக்கு முக்கியம், அவன் இல்லை” என்றான்.
“இன்னொரு முறை எனக்கு யார் முக்கியம்னு யாரோடயும் உங்களை கம்பேர் பண்ணி இப்படி பேசாதீங்க விஷ்வா! நமக்கு இடைல யாரும் இல்லை, நீங்க சொல்றது சரியா இல்லாம இருக்கும் போது அதை எப்படி அக்செப்ட் பண்ணி பேச முடியும்? அதுக்காக நீங்க எனக்கு முக்கியம் இல்லைனு ஆகிடுமா?”
“அவனும் தப்பு செய்திருக்கான், ஆனாலும் அவன் மேல உனக்கு ஒரு… ஒரு… கரிசனம் இருக்கு, நான்னா மூஞ்சுல அடிச்ச மாதிரி பேசுவ. கோயில்ல வச்சு அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா வாழ்ந்து காமிப்பேன்னு சொன்ன, அதுதான் என்னை ட்ரிகர் பண்ணிச்சு, அதனாலதான் உனக்கு தாலி கட்டினேன், உன் முன்னாடி கெட்டவன் ஆகி நிக்கிறேன்”
“நான் வேணாம், என்னோட கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு போன நீங்க அப்படியே போக வேண்டியதுதானே? நான் என்ன பண்ணினா உங்களுக்கு என்ன? செஞ்ச தப்பை எல்லாம் நியாய படுத்தி பேசிட்டு இருக்காதீங்க”
“நான் தப்பு பண்ணிட்டேன்னு ஒத்துகிட்டுத்தான் பேசுறேன். அந்த தப்பை செய்ய காரணம் என்னன்னு சொல்லி அவன் எனக்கு எப்படின்னு உனக்கு புரிய வைக்கிறேன் வேதா”
“அவன் உங்களுக்கு ஜென்ம எதிரியாவே இருக்கட்டும், அதுக்கு நான் என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க?”
“ஜென்ம எதிரி! என்ன டெர்ம் இது? வாட்எவர்… எனக்கு அவன் வேணாம்னா நீயும் அவன்கிட்ட டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்றதுதான் சரி”
“முடியாதுன்னு சொன்னா?”
“அதெப்படி சொல்வ?”
“ம்ம்… வாயாலதான்” பற்களை கடித்துக் கொண்டு சொன்னாள்.
“வேதா…”
“என்ன…”
“அவனுக்காக போய் என்கிட்ட சண்டை போடுவியா நீ?” என சலுகையோடு கேட்டான்.
“அவனுக்காக ஒன்னும் சண்டை போடல. என்னென்ன பிரச்சனைகளோ நடந்து இப்பதான் மனமொத்து வாழ ஆரம்பிச்சிருக்கோம். இப்ப போய் எனக்கு தாலி கட்டினதுக்கு காரணம் சொன்னீங்க பாருங்க… நீங்கல்லாம்…” என்றவள் அவனை திட்ட வார்த்தை தேடி பொருத்தமாக ஏதும் சிக்காமல் முஷ்டியை மடக்கினாள்.
அவளை இழுத்து, அவள் மறுக்க மறுக்க அவளை அணைத்துக் கொண்டவன், “ஹப்பா எவ்ளோ கோவம்டி! எனக்கு ஏத்த பொண்டாட்டின்னு இப்படித்தான் ப்ரூவ் பண்ணனுமா? அந்த ராஸ்கல்கிட்டயெல்லாம் உன்னை விட்டு கொடுக்க மனசு வரலை. நீ மட்டும் அப்படி பேசாம இருந்திருந்தா நானும் உன் பின்னால சுத்தி, அலைஞ்சு, உன்னை இம்ப்ரெஸ் பண்ணி, உன் வீட்ல சம்மதிக்காம இருந்தா கூட போராடி கல்யாணம் பண்ணியிருப்பேன், அதை சொல்றதுக்குள்ள சவுண்ட் தூள் பறக்குதே” என்றான்.
“எங்க… சுத்தி அலைஞ்சு லவ் பண்ற மூஞ்சிய காட்டுங்க. எல்லாத்தையும் விட பெரிய காமெடி… போராடி கல்யாணம் பண்ணிப்பாராம்! உங்க லட்சணம் எனக்கு தெரியாத மாதிரி அடிச்சி விடாதீங்க” என்றவள், அவனிடமிருந்து விலகி தள்ளிப் போய் நின்று கொண்டாள்.
கால் மீது கால் போட்டுக் கொண்டே அவளின் கோவத்தை ரசனையாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.