நீயென் நாயகி -18

அத்தியாயம் -18

விஷ்வா கண் விழிக்கும் போது தலைக்கு குளித்து விட்டு துவட்டிக் கொண்டிருந்தாள் வேதா.

எதேச்சையாக திரும்பியவள் அவன் விழித்திருப்பதையும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டாள். அவன் மீது பார்வையை வைத்துக் கொண்டே ஹேர் டிரையர் உபயோகிக்க ஆரம்பித்தாள்.

தன்னிடம் வரச் சொல்லி அவன் சைகை செய்ய, வர முடியாது எனும் படி வீம்பாக பார்த்து நின்றாள்.

“வேதா…”  என ஆசையாக அவன் அழைக்க, ஹேர் டிரையரை வைத்து விட்டு விரித்து விட்ட கூந்தலோடு அவனிடம் சென்றாள். அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவன் ஆரத் தழுவிக் கொண்டான்.

இரவில் நடந்ததெல்லாம் இருவருக்குமே நினைவிலாடியது.

தன் தந்தையை போலத்தான் தானும் என்பதாக தன்னை சந்தேகிக்கிறாள் என்ற கோவத்தோடுதான் அவளை நெருங்கியிருந்தான் விஷ்வா. அவனது நடத்தையிலும் நிதானம் இல்லாமல் வன்மை கூடித் தெரிய, “விஷ்வா தள்ளுங்க காதுல விழல உங்களுக்கு, அப்புறம் நீங்களே வருத்த படுவீங்க, தள்ளுங்க…” என சொல்லி தன் பலத்தை பிரயோகித்து அவனை விலக்கி விட்டாள்.

கலைந்த சிகையும் சிவந்த விழிகளுமாக சற்றே மூச்சு வாங்க அவன் அவளை கோவமாக பார்த்தான்.

அவளும் நீண்ட மூச்சுக்களை எடுத்துக் கொண்டவளாக, “ஏங்க இப்படிலாம் யோசிக்கிறீங்க? அந்த மாதிரி நினைச்சிருந்தா உங்க கூட வாழ வந்திருப்பேனா? உங்களுக்கும் அந்த சந்தேகம் வேணாம், அது மாதிரினா ஏன் எனக்கு தாலி கட்ட போறீங்க? நிஜமா உங்க மூளை குழம்பித்தான் கெடக்கு” என கடிந்து கொண்டாள்.

தன் தவறு புரியவும் கண்களை மூடிக் கொண்டான்.

அவன் மார்பில் தலை வைத்து படுத்து, கன்னத்தை வாஞ்சையாக பிடித்துக்கொண்டவள், “நீங்க ஸ்ட்ரெஸ்ல இருக்கீங்க, உங்களை இப்படி பார்த்து நானும் ஸ்ட்ரெஸ் ஆகிட்டு வர்றேன். அதிலேருந்து நீங்க வெளில வர, எல்லாத்தையும் மறந்து நீங்க ரிலாக்ஸ் ஆக, நானே உங்களுக்கு மருந்தா இருக்க நினைச்சேன், முழு விருப்பத்தோடதான் உங்களை நெருங்கினேன். நீங்க பேசினதுக்காகவும் ஃபீல் பண்ண வேணாம், உங்களை எனக்கு புரியுது” என்றாள்.

“ஸாரிடி” என நலிந்து போன குரலில் சொன்னான்.

“இட்ஸ் ஓகே…” என்றவள் அவனிடமிருந்து விலகி படுத்துக் கொள்ள, “இப்படி போனா…” எனக் கேட்டான்.

“நீங்கதான் இப்ப ரெடியா இல்லையே?”

“அது அப்ப, உன்கிட்ட வர்றதுக்கு முன்ன, இப்ப நிலைமை வேற” என்றவன் அவளிடம் மேலும் பேசிக் கொண்டிராமல் முத்தமிட்டான்.

அவனது வேகத்தில் சற்றே பதறியவள், அவன் கையை அழுத்திப் பிடித்து தன் கண்களை பார்க்க செய்தாள். பார்வை மூலமாகவே அவனுக்கு தன்னை தன் பயத்தை உணர்த்தினாள்.

அந்த நேரம் நிதானமாக நடந்து கொண்டாலும் சற்று நேரத்தில் தன் வசமிழந்து போனான்தான். அதற்குள் அவனை அவள் புரிந்து கொண்டு பயத்தை விலக்கி அவனோடு ஒன்றிப் போனாள்.

பிடிவாதக்காரன் தன்னிஷ்டப் படி அவளை கொஞ்சம் படுத்தித்தான் வைத்தான். வெட்கம் வேலைக்கு ஆகாது என புரிந்து அவளும் அவன் மனம் கோணாமல் நடந்து கொண்டாள்.

உடலின் சக்தியெல்லாம் வடிந்த பின்னும் அவளை விலக விடாமல் இரவெல்லாம் அவளின் கத கதப்பை உணர்ந்த படியேதான் உறங்கினான்.

விடியலில் அவளது உறக்கத்தை மீண்டும் கலைத்தான். உறக்கம் வருவதாக சிணுங்கினாள் அவள். இடைவெளி விடாமல் அவளது காதுக்குள் ‘ப்ளீஸ்’ சொல்லிக் கொண்டிருந்தவனை முத்தமிட்டுத்தான் வாயை அடைக்க செய்திருந்தாள். அந்த முத்தத்தையே அவளின் சம்மதமாக எடுத்துக் கொண்டு அவளை மொத்தமாக ஆட்கொண்டான்.

அவனது அணைப்பில் இருந்தவள், “நைட் நீங்க பேசின பேச்சுக்கு நான் கிளம்பி ஊருக்கு போயிருக்கணும், இப்ப மட்டும் என்ன… இன்னும் கோவமிருக்கு எனக்கு, நான் கிளம்பறேன்” என பொய்யாக அவனிடம் வம்பு செய்தாள்.

அவனோ மிகவும் தீவிரமான தொனியில், “கோவத்துல கேட்கல, எனக்கு தெரிஞ்சுக்கணும். நிஜமா நீ என்னை வேற மாதிரி நினைக்கவே இல்லையா, ஒரு நொடி ஒரு பொழுது கூட?” எனக் கேட்டான்.

அதில்தான் அவளுக்கு கோவம்.

“சில விஷயங்களை வார்த்தையால சொல்லக்கூடாது, உணரணும். உங்களை எவ்ளோ விரும்பினேன்னு பல தடவை சொல்லியிருக்கேன். எதை வச்சு நான் அப்படி நினைச்சிருப்பேன்னு உங்களுக்கு தோணிச்சு? அப்ப நீங்க என்னை புரிஞ்சுக்கலைல?” என அவள் ஆற்றாமையாக கேட்க, அப்போது இறுக அணைத்து சமாதானம் செய்து விட்டு தூங்கி விட்டான்.

அவளுக்கோ இப்போது வரை அந்தக் கோவம் தீரவில்லை.

அவளுடனே படுக்கையில் சாய்ந்தவாறு அமர்ந்து கொண்டான். வெற்று மார்பில் அவளது ஈரக் கூந்தல் விரிந்து கிடந்தது. அவளுமே தன் மேனியின் குளு குளுப்பை அவனுக்கு கடத்தினாள்.

காலை நேர இதத்தை கெடுத்துக் கொள்ள விரும்பாமல் அவனுடன் சண்டையிடாமலேயே இருந்தாள்.

மூன்று பகல் இரண்டு இரவு என அவனுள் கிடந்த பாரம் அவனைப் போட்டு அப்படி அழுத்திக் கொண்டிருந்தது. இதோ இப்போது அப்படி உணராமல் லேசாக உணர்ந்தான். எதுவும் மாறி விடவில்லை, ஆனால் பூட்டப் பட்ட அறையில் வெளியேற இயலாமல் மூச்சு முட்ட முட்டி மோதிக் கொண்டிருந்தவனை, வேறு பக்கமாக வெளியில் அழைத்து வந்து விட்டாள் வேதா.

அவளது முடிக்கற்றைக்குள் கை நுழைத்து விளையாடிக் கொண்டே, “குறையில்லாத மனுஷன் எவனும் இல்லை, நானும் அப்படித்தான். நானும் என் குறைகளும் ரேர் காம்பினேஷன், நீதான் எப்படி ஹேண்டில் பண்ணணும்னு பார்த்து நடக்கணும், கோச்சுக்கலாம் கூடாது” என்றான்.

பட்டென அவள் நிமிர்ந்ததில் அவனது தாடையில் நன்றாக இடித்து விட்டாள். அவன் வலியில் முகம் சுளிக்க, கை வைத்து தடவி விட்டவள், “கர்வமா பேசினா இப்படித்தான் அடி படும்!” என்றாள்.

சிரித்தவன் அவளது நெற்றியோடு நெற்றி மோதி, “ஹ்ம்ம்… எதுக்கு எழுந்த? டயர்ட் ஆகலையா நீ? நான் டயர்ட் ஆக்கலையா உன்னை?” எனக் கேட்டான்.

“கேள்விய பாரு! வேணாம் நான் ரெடி இல்லை அது இதுன்னு சிடுமூஞ்சி ஜூம்பான்சியாட்டம் கத்தி பேசிட்டு… நீங்க செஞ்ச அலும்பு இருக்கே… என் பேச்சை காதுல வாங்குனீங்களா? எல்லாம் உங்க இஷ்டம்”

“சரி சரி குறையெல்லாம் தீர்த்து வைக்கிற மாதிரி இப்போ…” என்றவன் அத்து மீற, அவனது கைகளை சேர்த்து பிடித்து வைத்துக் கொண்டு முறைத்தாள்.

“உன்னை டயர்ட் ஆக்கினேனா இல்லையா?” என விடாமல் கேட்டான்.

அவனது முகத்தை பாராமல், “ம்ம்… அதுக்காக குளிக்காம கொள்ளாம படுத்திட்டே இருப்பாங்களா? நீங்களும் குளிங்க, சாப்பிடலாம்” என்றாள்.

“எனக்கு சாப்பாடெல்லாம் வேணாம், நீ போதும்”

“ஆஹா! இவர் பெரிய முனிவர் காத்தை சாப்பிட்டு உயிர் வாழறது போல பொண்டாட்டியை சாப்பிட்டு உயிர் வாழுவார்!” என நொடித்தாள்.

“அப்படித்தானே இருக்க நீ?”

“எப்படி?”

“பார்த்தா கடிச்சு சாப்பிடணும் போல…” என்றவன் அவளது கையை பிடித்து வலிக்காமல் கடித்தான்.

அவள் சலித்துக் கொள்ள, முகத்தை பிடித்து கன்னத்தை கடித்தான்.

“எச்சில் பண்ணாதீங்க, நான் குளிச்சிட்டேன்” என சொல்லி கன்னத்து ஈரத்தை துடைத்துக் கொண்டாள்.

அவன் அவளின் இதழ்கள் நோக்கி வர, அவனது வாயை கையால் மூடியவள், “சாப்பாடு ஆறிட்டு இருக்கும், எங்க போக போறேன், பொறுமையா நிதானமா என்னை கடிச்சி திங்கலாம், எந்திரிங்க” என்றாள்.

அவளது கையை விலக்கி கன்னங்கள், நெற்றி என மென்மையாக முத்தங்களிட்டு விட்டே எழுந்து சென்றான்.

அடுத்து வந்த மூன்று நாட்களும் வீட்டிலேயேதான் இருந்தார்கள். நினைத்த நேரமெல்லாம் அவளை தனக்குள் வாரி சுருட்டிக் கொள்வான். தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல் அவனுக்காக என்றே பார்த்து பார்த்து நடந்து கொண்டாள்.

அவளிடம் தன்னை தொலைத்துக் கொண்டதில் புதிய மனிதனாக மீண்டிருந்தான்.

இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவை நோக்கி பயணிப்பதற்கு தயாராகி விட்டான்.

அன்று காலையில் தாமதமாக எழுந்து குளித்து விட்டு நல்ல திருப்தியாக சாப்பிட்டார்கள். வெளியே எங்கேயாவது போகலாமா என அவள் ஆரம்பிக்கவும் அடுத்த வார்த்தை பேச விடாமல் அவளை அறைக்கு இழுத்து வந்து விட்டான்.

“எப்டி இன்னிக்கும் நாள் முழுக்க ரூம்ல இருக்கிறதா பிளானா?” என கிண்டலாக கேட்டாள்.

“காலம் முழுக்க உன் கூட இருக்கிறதா பிளான்” என்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.

“எவ்ளோ நாள் இப்படி நல்லவரா இருக்க போறீங்கன்னு பார்க்கிறேன்”