இருந்தாலும், ‘இனி இதையெல்லாம் பழகிக்கொள்ள தான் வேண்டும்’ என்று நினைத்தவன், உணவு சாப்பிடப்படாமல் மேஜை மீது இருப்பதைப் பார்த்து, “ம்ப்ச்… இன்னும் நீ சாப்பிடலையா சுபா?” என்றான் அதிருப்தி குரலில்.
இதைப்போல கையில்லா பனியனில் எல்லாம் இதுவரையிலும் சேனாதிபதியை கண்டிராத சுபாஷிணியிடமும் சிறு தடுமாற்றமே. இருந்தாலும், நான் இயல்பாகக் தான் இருக்கிறேன் என்பதை சேனாதிபதிக்கு காட்டிவிடும் விதமாக, “உங்களுக்கு? நான் அதை சாப்டுட்டா உங்களுக்கு த்தான்?” என்று அவன் கண்களைப் பார்த்து கேள்வி கேட்க முயன்றாள் சுபாஷிணி.
ஆனால், அவள் முயற்சியை தவிடுபொடியாக்கி, அவன் தோள்களைத் தாண்டி உயர மறுத்து சண்டித்தனம் செய்த சுபாஷிணியின் விழிகளில், சேனாதிபதியின் வலது தோளில் நீளவாக்கில் இருந்த கீறல் பளிச்சென்று விழுந்தது.
அவ்வளவு தான்… கொண்டிருந்த தயக்கம், தடுமாற்றம் எல்லாவற்றையும் நொடியில் உதறியவள், கணவனின் தோள் தழுவி தன் கையால் அந்த கீறலை மெதுவாக தடவி, “இது… இது.. என்ன த்தான்? எப்பிடி ஆச்சு?” என்றாள் சட்டென்று கண்களை நிறைத்த கண்ணீரோடு.
இப்படியொன்றை சுபாஷிணியிடமிருந்து எதிர்பார்க்காத சேனாதிபதியின் உடல் மனைவியின் தொடுகையில் சட்டென்று விரைத்துப்போனது.
‘அன்னைக்கு உன்னால என் மனசுல பட்ட காயத்தைவிட, இது ஒன்னும் பெரிய காயம் இல்ல.’ தொண்டைவரை வந்த வார்த்தைகளை சிரமப்பட்டு விழுங்கியவன், அவளை லாவகமாக தன்னிலிருந்து விலக்கி, “இதெல்லாம் போலீஸ் லைஃப்ல சாதாரணம். ஒவ்வொன்னுக்கும் உனக்கு காரணம் சொல்லிட்டு இருக்கமுடியாது” என்றான் கோபமாக.
பின்னர் என்ன நினைத்தானோ தெரியாது, “நேத்து, அந்த பசங்களை ஆக்சிடென்ட் ஆன காருக்குள்ள இருந்து வெளிய தூக்கும் போது கண்ணாடி கிழிச்சிடிச்சி. லேசான காயம் தான். இஞ்செக்ஷன் கூட போட்டாச்சு. நீ இப்போ சாப்பிடு” என்றான் அமைதியாக.
“லேசா கிழிச்சதால போச்சு, இதே ஆழமா வெட்டியிருந்தா என்ன ஆயிருக்கும்?” நடந்ததில் இருந்து வெளியே வர மறுத்து புலம்பினாள் சுபாஷிணி.
“ம்ப்ச்… அதான் ஒன்னுமில்லன்னு சொல்லுறேன்ல, அப்புறமும் சும்மா அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டு.” சற்றே குரலை உயர்த்தி கோபமாக அதட்டியபடி கிச்சனுக்குள் நுழைந்தான் சேனாதிபதி.
தனக்காக பதறித்துடிக்கும் மனைவியை எங்கே தன்னை மீறி அணைத்து ஆறுதல்படுத்தி விடுவோமோ என்ற பயம் அவனுக்கு.
திருமணம் என்ற ஒன்று ஆனபிறகு, தான் இருக்குமிடத்தில் மனைவியின் இருப்பு இயல்பே என்று புரிந்து கொள்ள முடிந்தவனுக்கு, மனைவியை அணைத்து ஆறுதல் படுத்த வேண்டும் என்று தனக்கு தோன்றும் உணர்வுகளும் கூட மிகவும் இயல்பானதே என்று புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையும் தாண்டி, அவன் சுமந்து கொண்டிருக்கும் சுபாஷிணியின் மீதான கோபம் அவனை புரிந்து கொள்ளவிடவில்லை.
சேனாதிபதியின் கோபத்தில் நிதானத்திற்கு வந்திருந்த சுபாஷிணி, மறுபடியும் அவன் சாப்பிடு என்று சொல்வதற்கு முன் உணவை கையில் எடுத்திருந்தாள்.
சேனாதிபதியோ ஊற வைத்திருந்த சிறுபயிரை நன்றாக தண்ணீரில் கழுவி, நீரை சுத்தமாக வடிகட்டி மூடி வைத்தான். பார்த்துக் கொண்டிருந்த சுபாஷிணிக்கு, பயிரை முளைகட்டுகிறான் என்று புரிந்தது.
அதன்பிறகு ஃப்ரிட்ஜிலிருந்து நான்கு முட்டைகளை எடுத்து அடுப்பில் வேக வைத்தவன், பழங்களை எடுத்து நறுக்க ஆரம்பிக்க, “டெய்லி இப்பிடியே சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும் அத்தான்? கொஞ்சமாவது சப்பாத்தி சாப்பிடுங்களேன்.” கையிலிருந்த சப்பாத்தியை சேனாதிபதியை நோக்கி நீட்டினாள் சுபாஷிணி.
“உனக்காகத் தான் வாங்கிட்டு வந்தேன். நீ சாப்பிடு” என்றவன், “எப்பிடி சாப்பிடுறோம் ங்கறதை விட, என்ன சாப்பிடுறோம் ங்கறது தான் முக்கியம்” என்று சொல்ல, புரியாமல் முழித்தாள் சுபாஷிணி.
“சோறு, இந்த மாதிரி டிஃபன் ஐட்டம்ஸ் எல்லாம் வயிறு நிறைய சாப்பிட்டா தான் உடம்புக்கு சத்து கிடைக்கும்னு இல்ல. கொஞ்சமா சாப்பிட்டாலும் நம்ம உடம்புக்கு தேவையான சத்து எல்லாம் கிடைக்கிற மாதிரி இருக்கணும் நம்ம ஃபுட். நீயும் என்னை மாதிரி சாப்பிட பழகிட்டா, அப்புறம் சோறு, இட்லி, தோசை எல்லாம் பிடிக்காமல் போயிடும்” என்று சொல்ல,
“ஆத்தாடி… ஆத்தா… நம்மால ஆகாது சாமி” என்று வேகமாக சொல்லிய சுபாஷிணி, சேனாதிபதிக்கு எதிர்புறமாக திரும்பி அமர்ந்து வேகமாக சாப்பிட ஆரம்பிக்க, சேனாதிபதியிடம் சிரிப்பு.
சாப்பிட்டு முடித்து, சேனாதிபதி அவன் உணவை எடுத்துக் கொள்ளும் வரை அங்கேயே இருந்த சுபாஷிணிக்கு, தன்மீதுள்ள கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கட்டுப்படுத்திக் கொண்டு தன்னோடு பேசுவதற்கு கணவன் ரொம்பவே மெனக்கெடுகிறான் என்பது புரிந்தது.
‘என்னைப் புரிய வைத்துவிட்டால், அத்தான் தன்னை சிரமபடுத்திக் கொள்ள தேவையில்லையே. இருவருக்கிடையே இருக்கும் கண்ணுக்குத் தெரியாத இந்த மாயத்திரைக் கூட அகன்றுவிட கூடுமே’ என்று நினைத்தவள், எல்லாவற்றையும் தெளிவாக கணவனிடம் அப்போதே பேசிவிடும் நோக்கத்தில், “சாரி த்தான்… அன்னைக்கு நான் தெரியாம சொல்லிட்டேன்…” என்று மெதுவாகத் தொடங்க,
“என்னைக்கு?” என்றான் சேனாதிபதி.
“அதான்… நீங்க ப்ரப்போஸ் பண்ணும் போது…” தயக்கமாக சுபாஷிணி இழுக்க,
“ஓ… இப்பிடி ஐபிஎஸ் ஆவேன்னு தெரியாம சொல்லிட்டியா? அப்படி மட்டும் தெரிஞ்சிருந்தா அன்னைக்கே இந்த பட்டிக்காட்டு கறுப்பனுக்கு சரின்னு சொல்லியிருப்பல்ல” என்றான் சேனாதிபதி நக்கலாக.
இந்த பேச்சை எடுத்தால் கண்டிப்பாக ஒரு பிரளயம் வெடிக்கும் என்று தெரியும் சுபாஷிணிக்கு. இருந்தாலும், எப்போது என்ன நடக்குமோ என்று பயந்து, யோசித்து யோசித்து பேசுவதற்கு பதில், ஒரேயடியாக பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே இப்போது சுபாஷிணியிடம்.
என்றாலும், சேனாதிபதியின் பேச்சு சுபாஷிணியை இடம் பார்த்து அடிக்க, “அப்பிடியில்ல த்தான்… உண்மையில் அன்னைக்கு என்ன நடந்திச்சின்னா…”
“தயவுசெய்து யாரும் சொல்லித் தந்ததாலத் தான் அப்பிடி சொன்னேன்னு சொல்லி, உன்னை நீயே குறைச்சிக்காத.” சுபாஷிணியை முந்திக்கொண்டு பேசிய சேனாதிபதி,
“இப்போ எதுக்கு இதெல்லாம்? முடிஞ்சு போனது முடிஞ்சு போனதாவே இருக்கட்டுமே. எப்படின்னாலும் நாம ரெண்டு பேரும் தான் கணவன், மனைவி. இதுல எந்த மாற்றமும் இல்ல. நானும் என் மனைவிக்கான ரெஸ்பெக்ட்டை கண்டிப்பா உனக்கு குடுப்பேன். நாமளும் மத்தவங்களை மாதிரி ஒரு கல்யாண வாழ்க்கையை கண்டிப்பா லீட் பண்ணுவோம். ஆனா அதுக்கு கொஞ்சம் எனக்கு நாளெடுக்கலாம்…” என்றவன் சற்றே நிறுத்தி,
“ஆனா, பழைய, அந்த அப்பழுக்கில்லாத காதல் உங்கிட்ட எனக்கு வருமான்னு கேட்டா, தெரியாதுன்னு தான் சொல்லுவேன்” என்றவன், “ஏன் தெரியாது? கண்டிப்பா வராது” என்று ஆணித்தரமாக சொல்லியவன், “இதுக்கு மேல நீ என்ன விளக்கம் கொடுத்தாலும் ரொம்ப ட்ராமாட்டிக்கா இருக்கும் சுபா. அதனால, எதுவும் சொல்லாத ப்ளீஸ்…” என்றான்.
‘இப்படி பேசுபவனிடம், அன்று ஏதோ சிறுபிள்ளைத்தனமாக பேசிவிட்டேன்… கடந்த சில வருடங்களாக உன்மீது காதலால் கசிந்துருகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லவா முடியும்? சொன்னாலும் உடனே நம்பி விடுவானா என்ன?’ கனத்துப்போன இதயத்தோடு அலுத்துக் கொண்ட சுபாஷிணி,
‘இதற்கு மேல் என்னை புரியவைப்பதற்கு நான் எந்த முயற்சியும் எடுக்கப்போவதில்லை. தானாக என்னை புரிந்து கொண்டால் சரி. இல்லையென்றால் இப்படியே வாழ்க்கை ஓடட்டும்’ என்று முடிவெடுத்து கொண்டு அமைதியாகிப் போனாள்.
“நான் திரும்பவும் டுயூட்டிக்கு போகணும். இப்போ போனா எப்போ வருவேன்னு தெரியாது. எதைச் சொல்லி யார் கூப்பிட்டாலும் நைட் அவசரப்பட்டு வெளியே வரக்கூடாது. எதுன்னாலும் எனக்கு போன் செய்து கன்ஃபார்ம் பண்ணிக்கணும்.” சட்டையை அணிந்து வந்த சேனாதிபதி மனைவிக்கு சொல்ல, தலையாட்டினாள் சுபாஷிணி.
“ஹாங்… அப்புறம் இந்த கலர் உனக்கு பிடிக்குமோ என்னவோ தெரியாது. ஆனா, இதுதான் சேஃப். தாலிச்செயினை கழட்டி வைக்கிறது உனக்கு கஷ்டமா தோணிச்சுன்னா இதைப்போட்டுக்கோ. தேவையில்லைனா வேண்டாம்” என்றவன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய நகை டப்பாவை எடுத்துக் கொடுக்க, ‘என்னடா இது என்ற பார்வையே’ சுபாஷிணியிடம்.
கையில் வாங்கி திறந்து பார்த்தால், தங்கத்தில் கோர்த்திருந்த கருகுமணி மாலையாலான திருமாங்கல்யம். எனக்காக இந்த அளவிற்கு யோசித்திருக்கிறானே என்று சந்தோஷமே சுபாஷிணியிடம்.
என்றாலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நல்லாயிருக்கு த்தான். இதையே போட்டுக்குறேன்” என்றாள் அமைதியாக.
ஆர்ப்பாட்டமாக ஒரு பதிலை சுபாஷிணியிடமிருந்து எதிர்பார்த்தவனுக்கு, அவளின் அமைதி என்னவோ போலாக, “என்ன சைலண்ட் ஆகிட்ட” என்றான் யோசனையாக.
அவளோ, “தூக்கம் வருது த்தான்” என்றாள் கண்ணைக் கசக்கியபடி.
“சரி, நீ தூங்கு. நான் கிளம்புறேன். டேக் கேர்” என்ற வார்த்தையோடு கிளம்பி போய் விட்டான் சேனாதிபதி.
வேறெதைப் பற்றியும் யோசிக்காமல், நகையை சேனாதிபதியின் கபோர்டிலேயே வைத்துவிட்டு, அவன் கட்டிலிலேயே படுத்து தூங்கியும் போனாள் சுபாஷிணி.
சும்மா சொல்லக்கூடாது… நடுவில் விழிப்புதட்டாத நல்ல தூக்கம் தான் சுபாஷிணிக்கு. எப்போதும் போல காலையில் ஆறுமணிக்கு முழித்தவளுக்கு, கணவன் வீட்டுக்கு வந்திருப்பானா என்ற எண்ணம் தான் உடனே ஓடிவந்தது. கண்களோ தன்னருகே கணவனைத் தேட, “ஆஹா… உனக்கு ரொம்ப தான் சுபா பேராசை” என்று தன்னைத்தானே கலாய்த்து கொண்டாள் சுபாஷிணி.
கைகளை உயர்த்தி சாவகாசமாக சோம்பல் முறித்தபடி ஹாலுக்கு வந்தவளின் கண்களில் சோஃபாவில் படுத்திருந்த கணவன் விழுந்தான்.
அதுவும், அறைக்குள் வந்து உடைமாற்றிவிட்டு, வெளியே வந்து படுத்திருந்தவனைப் பார்த்து தோளைக் குலுக்கியவள், ‘பாவம்… எப்போ வந்து படுத்தாங்களோ? தூங்கட்டும்’ என்று எண்ணி பூனைநடை நடக்க, அப்போது கூட அவள் கொலுசுமணியின் மெல்லிய சத்தத்தில் சடாரென்று எழும்பி அமர்ந்தான் சேனாதிபதி.
‘சரியான போலீஸ்காரர் தான்.’ மனதுக்குள் நொடித்துக் கொண்டே, “குட்மார்னிங் அத்தான். எப்போ வந்தீங்க?” என்றாள் சுபாஷிணி.
“குட்மார்னிங்… ஒரு மூனு மணிக்கெல்லாம் வந்துட்டேன்” என்றவனின் பார்வை மனைவியின் கழுத்தை தடவியது.
“ஆஃபீஸுக்கு போகும் போது போட்டுக்குவேன் த்தான்” என்றாள் கணவனின் பார்வையின் பொருள் உணர்ந்து.
அதன்பிறகு பணிக்கு செல்லும் பொருட்டு இருவரும் அவரவர் வேலையில் மூழ்கிப்போக, “சுபா… டிபன் மெஸ்ல ஆர்டர் குடுக்கட்டுமா?” என்றான் குளித்து முடித்து வந்த சேனாதிபதி.
“இல்லத்தான்… இந்த மாசத்துக்கு ஹாஸ்டல்ல பணம் கட்டிட்டேன். அதனால அங்க போயே சாப்டுக்கறேன். உங்களுக்கு வேணும்னா நீங்க ஆர்டர் கொடுங்க” என்றாள் மனைவி.
நேற்று கணவனோடு காரில் வந்துவிட்டதால், அவள் ஸ்கூட்டியை திவ்யாவிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறாளே. அதனால் இன்றும் விடுதிக்குப் போய், அங்கேயே சாப்பிட்டு, லஞ்சையும் எடுத்துக்கொண்டு, திவ்யாவோடு அலுவலகம் செல்லலாம் என்ற எண்ணம் சுபாஷிணியிடம்.
“இல்ல சுபா... இன்னைக்கு நான் உன்னை அவங்களுக்கு அறிமுகப்படுத்தி விடுறேன். அப்புறம் நீயே தேவைன்னா ஆர்டர் குடுத்துக்கலாம் பாரு” என்றவன், “எது ஆர்டர் பண்ணட்டும்?” என்று கேட்க,
கணவன் சொல்வதும் சரிதான் என்று தோன்றவே, “அங்க என்னல்லாம் கிடைக்கும்னு எனக்கு என்ன த்தான் தெரியும்” என்று மறைமுகமாக தன் சம்மதத்தைச் சொன்னாள் சுபாஷிணி.
“ஹ்ம்ம்… ஆப்பமும் கடலைக்கறியும் சொல்லலாமா? டேஸ்ட் ரொம்பவே நல்லாயிருக்கும்” என்றவன், போனில் மெஸ்ஸுக்கு அழைத்து ஆர்டர் சொன்ன பத்தாவது நிமிடம் காலிங்பெல் அடித்தது.
“ஃபாஸ்ட் சர்வீஸ்” என்றபடியே சேனாதிபதி கதவைத் திறக்க, சுபாஷிணியின் பார்வை மொத்தமும் வாசலில் குவிந்தது.
அங்கே… மெரூன் கலரில் சுடிதார் அணிந்து, விரித்து விடப்பட்ட நெளிநெளியான கூந்தலோடு, நெற்றியில் சந்தனம் துலங்க, அழகான கேரள பெண்குட்டி ஒன்று கையில் கேரியரோடு சேனாதிபதியைப் பார்த்து சிரித்தபடி நின்று கொண்டிருந்தது.
“அம்மா இல்லையா? நீ வந்துருக்க மோனி?” சேனாதிபதி விசாரணையில் இறங்க,
“அம்மைக்கு கொறைச்சு வேலையுண்டு சாரே. அதக்கொண்டே ஞான் வந்தது” என்று கொஞ்சியது அந்த கேரளத்து பைங்கிளி.
“ஓ…” என்றவன், “சுபா… இங்க வா” என்று அழைத்து, “இவங்க என்னோட வைஃப், உங்க மெஸ்ல அவங்க ஏதாவது ஆர்டர் கொடுத்தா, இதேப்போல ஃபாஸ்டா கொண்டு வந்து குடுக்கணும்” என்று மோனியிடம் சொல்ல,
“எந்தா சாரே… நிங்கள் கல்யாணம் கழிச்சோ?!” அதிர்ச்சியில் விழிகளை விரித்த அந்த மோனி, விட்டால் அழுதுவிடுபவள் போல் நிற்க,
“எங்கயிருந்து தான், எனக்குன்னு டிசைன் டிசைனா கிளம்பி வருவாளுங்களோ?” என்று புலம்பியது சுபாஷிணியின் மனது…