இங்கே சேனாதிபதியோ, மனைவி கிளம்பியதும், மொபைலில் அலாரத்தை செட் செய்து வைத்துவிட்டு படுத்தவன் தான், நன்றாக அடித்துப் போட்டது போல ஒருமணிநேரம் தூங்கி எழுந்து, அதன் பிறகே அலுவலகத்திற்கு கிளம்பினான்.

சேனாதிபதி அலுவலகத்திற்குள் நுழையவுமே, அவனோடு பணிபுரியும் ஜெகன்நாதன், “வெல்கம் புதுமாப்பிள்ளை” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றபடியே தன் கையை நீட்ட, சிறுபுன்னகையோடு அதைப்பற்றி குலுக்கினான் சேனாதிபதி.

 இணைந்து பணிபுரிபவர்கள் என்பதையும் தாண்டி சேனாதிபதிக்கும், ஜெகன்நாதனுக்குமிடையே ஒரு நல்ல நட்பு உண்டு. அதனாலேயே தனக்கு திருமணமான விஷயத்தை நேற்றிரவு ஜெகன்நாதனிடம் அலைபேசியில் பேசும்போது சொல்லியிருந்தான் சேனாதிபதி.

ஜெகன்நாதனைத் தொடர்ந்து அங்கிருந்த மற்றவர்களும் சேனாதிபதிக்கு தங்கள் வாழ்த்துக்களைச் சொல்ல, புன்னகையோடு ஏற்றுக் கொண்டு தனது அறையை நோக்கி நடந்தான் சேனாதிபதி. உடன் நடந்தான் ஜெகன்நாதன்.

“ஜெகா… அந்த பசங்க எந்த பப் க்கு போனாங்க ங்குறதப் பத்தி விசாரிக்க சொன்னேனே, விசாரிச்சாச்சா?” அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்தபடி கேட்டான் சேனாதிபதி.

“ஹ்ம்ம்… எக்ஸ்ஸாக்ட்டா கண்டுபிடிக்க முடியலை. ஆனா, ஒரு பையன் ஷர்ட் பாக்கட்ல இருந்த ஏடிஎம் கேஷ் வித்ட்ராயல் சிலிப்பை வச்சு, அந்த ஏரியாவை சர்ச் பண்ணுனதுல, அங்க இரண்டு பப் இருக்குறது தெரிஞ்சுது. இரண்டுமே செல்வவிநாயகம், ரத்னவிநாயகம்னு இரண்டு ப்ரதர்ஸ் பெயர்ல ப்ராப்பரா ரெஜிஸ்டர் ஆகியிருக்கு. ஆனா, விசாரிச்ச வரைக்கும், அந்த இரண்டுபேருமே இராஜபூபதி ங்குற மனுஷனோட பினாமி தான்.”

“அந்த இராஜபூபதி…, ” என்ற ஜெகன்நாதன், ஒரு அரசியல் கட்சியின் பெயரைச் சொல்லி, “அதோட எக்ஸ் எம்எல்ஏ. அதனால போலீஸ் என்கொயரி பண்ணுறோம்னு தெரிஞ்சு கூட, பப்ல இருக்குறவனுங்க தெனாவெட்டா தான் பதில் சொல்லுறானுங்க. நானும் இரண்டு பேரை அந்த ஏரியாவுல மப்டியில டூட்டி பாக்கவிட்டுருக்கேன்.” சேனாதிபதிக்கு எதிரில் அமர்ந்தபடியே சொன்னான் ஜெகன்நாதன்.

“குட்… அடுத்ததா இறந்துபோன பசங்களோட ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளை விசாரிங்க. யாராவது ஒருத்தங்க விசயத்தை சொன்னாலும் போதும், தெனாவெட்டா பேசுறவங்களுக்கு தண்ணி காட்டிடலாம். அவங்களுக்கு காட்டுற காட்டுல மொத்த நெட்வொர்க்கே அலறணும்.” கண்கள் சிவக்க சொன்னான் சேனாதிபதி.

அதன்பிறகு டிஜிபி அலுவலகத்தில் உயர்போலீஸ் அதிகாரிகளுக்கு நடைபெற்ற கூட்டத்தில் இருவருமே கலந்து கொண்டார்கள். அங்குமே நள்ளிரவில் நடந்த அந்த விபத்தும், போதைப்பொருள் விற்பனையுமே விவாதப்பொருளாக இருந்தது.

“காவல் காக்குறவனைவிட கள்ளன் தான் பெரியவன் ங்கறதை, நம்ம பாதுகாப்பு வளையத்தை எல்லாம் தாண்டி போதைப்பொருளை வித்து நிரூபிச்சிட்டு தான் இருக்குறாங்க. அதுவும் காலேஜ், ஸ்கூல் பசங்க மத்தியில கூட, இந்த போதைப்பொருள் புழக்குதுன்னு கேள்விப்படும் போது ரொம்ப பயமா இருக்கு. இதை இப்பிடியே விட்டா, வர்ற ஜெனரேஷன் போதைக்கு அடிமையான ஜெனரேஷனாவே மாறிப்போகும். அதனால இரும்புக்கரம் கொண்டு அதை ஒடுக்கணும். போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்குற விஷயத்துல உங்க எல்லாருக்குமே எல்லையில்லா அதிகாரம் தர்றேன். உங்க ஃபுல் எஃபோர்டையும் போட்டு அதை கட்டுப்படுத்த முயற்சி செய்யணும்” என்று எல்லோரிடமும் கிட்டத்தட்ட விண்ணப்பமாகவே வைத்தார் டிஜிபி.

மீட்டிங் முடித்து, வெளியே சில அலுவல்களையும் முடித்து விட்டு மறுபடியும் சேனாதிபதி அலுவலகத்திற்கு வரும்போது நண்பகல் மூன்று மணியாகிவிட்டது.

தனது அறையில் நாற்காலியில் வந்து அமர்ந்தவன், எப்போதும் போல, முடிவடையாத பழைய கேஸ் ஃபைல் ஒன்றை எடுத்துக் கொண்டு அமர்ந்தான். ஆனால், எப்போதும் போல ஃபைலில் கவனத்தை ஆழ்ந்து செலுத்தமுடியாமல் மனம் தடுமாறியது. ஃபைலை மூடிவைத்தவனுக்கு, நகையோடு அலுவலகத்திற்கு சென்றிருக்கும் மனைவியே ஞாபகத்துக்கு வந்தாள்.

“இருக்குற பிரச்சினை காணாதுன்னு, இவ வேற மனுஷனை பைத்தியக்காரன் ஆக்குறா.” தன்னை மீறி சேனாதிபதியின் உதடுகள் முணுமுணுக்க, ‘இல்லைன்னா மட்டும் ஏசிபி சாருக்கு பொண்டாட்டி ஞாபகம் வரவே வராது’ என்று நையாண்டி அடித்தது அவன் மனது.

 தன் செயல்கள் குறித்து சேனாதிபதிக்குமே ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ஒருகாலத்தில் எந்த அளவுக்கு சுபாஷிணியின் மீது எல்லையில்லா அன்பு வைத்திருந்தானோ, அதே அளவிற்கு அவள் மீது வெறுப்பை வளர்த்து வைத்திருப்பதாக நம்பிக் கொண்டிருந்தவன், இன்று அவளையே திருமணமும் செய்துகொண்டு, அவளோடு ஒரு வாழ்க்கை வாழ தன்னோடு சென்னைக்கு அழைத்தும் வந்திருக்கிறானே! அது ஒன்று போதாதா அவன் ஆச்சர்யப்பட.

அதுவும், இன்று காலையில் சுபாஷிணியின் கைகளைப் பற்றிக் கொண்டு பேசியதை நினைக்கும் போது ‘இத்தனை இயல்பாக அவளோடு பேசியது தானா?’ என்று அவனுக்கே சந்தேகமாக இருந்தது.

‘அப்படியானால், பழைய காதலோடு ஒரு வாழ்க்கை சுபாஷிணியோடு எனக்கு சாத்தியம் தானா?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவனுக்கு, நெஞ்சின் அடியாழத்தில் புதைந்து கிடந்த சுபாஷிணி சொன்ன வார்த்தைகள் தன் இருப்பை உணர்த்தியதில், அது சாத்தியம் இல்லை என்றே தோன்றியது.

‘அப்படியானால் எந்த தைரியத்தில் நான் அவளை திருமணம் செய்திருக்கிறேன். கல்யாணம் என்ற பந்தத்துக்குள் நுழைந்த பிறகு, அதற்கான மரியாதையை கொடுக்காமல் இருப்பது தவறு அல்லவா?’ என்று அவன் நியாய மனது கூச்சல் போட, தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது அந்த ஏசிபி க்கு.

கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்தமர்ந்தவன், மனதை சமன்படுத்த ஒன்றிலிருந்து நூறுவரை எண்ண ஆரம்பித்தான். சற்றுநேரத்திலேயே அவன் எண்ணியது ஈடேற ‘அநாவசியமாக சிந்தித்து மூளையை சூடேற்றி கொள்வதற்கு பதில், வாழ்க்கையை அதன் போக்கில் வாழ முயற்சி செய்யவேண்டும்’ என்று தெளிந்த மனதோடு முடிவெடுத்துக் கொண்டவன், கடிகாரத்தைப் பார்க்க, அது மாலை நான்கு மணி என்றது.

அதற்கு மேல் தாமதிக்க மனமின்றி அறையை விட்டு வெளியே வந்தவன், தனது காருக்கருகில் வர, ட்ரைவர் ராஜ் ஓடிவந்தார்.

அவரைத் தவிர்த்து, ட்ரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தவன், அடுத்த அரைமணி நேரத்தில் சுபாஷிணியின் அலுவலகத்துக்கு முன்னர் காரை நிறுத்தியிருந்தான்.

எப்போதும் போல தன் வேகநடையோடு சுபாஷிணியின் அலுவலகத்துக்குள் நுழைந்த சேனாதிபதியை முதலில் திவ்யா தான் கண்டது.

“ஹேய்… சுபா… ஏசிபி… ஏசிபி சார் வந்துருகாப்ல” என்று பரபரப்பாக சுபாஷிணியிடம் திவ்யா சொல்ல, கணவனை அங்கே எதிர்பார்க்காத சுபாஷிணியின் முகம் சூரியனைக் கண்ட தாமரையாக மலர்ந்தது.

சட்டென்று எழும்பி, “வாங்க த்தான்” என்று சுபாஷிணி வரவேற்பில் இறங்க, “எங்களை ஏசிபி சாருக்கு இன்ட்ரோ குடு சுபா” என்று முந்திரிக்கொட்டையாய் குதித்தாள் திவ்யா.

திவ்யா உட்பட அங்கிருந்த அனைவரையும் கணவனுக்கு சுபாஷிணி அறிமுகப்படுத்த, “உங்க ஆடிட்டர்?” என்று இழுத்தான் சேனாதிபதி.

“ம்ம்… அவரையும் பாத்துடலாம். வாங்க…” என்று சொன்னாலும் சுபாஷிணியின் பேச்சில் ஸ்ருதி கொஞ்சம் இறங்கித் தான் இருந்தது.

இங்கே நடப்பவற்றை தன் கண்ணாடி கதவு வழியே பார்த்தாலும், எதையும் பாராதது போல தன்னிடத்திலேயே அமர்ந்து கொண்டான் ஆனந்த். பாவம்… ஒரு நாளிலேயே எத்தனை அதிர்ச்சியைத் தான் அவனாலும் தாங்கமுடியும்.

எப்போதும் போல கதவைத் தட்டி ஆனந்திடம் அனுமதி வாங்க சுபாஷிணி முயற்சி செய்ய, பளிச்சென்று கதவைத் திறந்து, “எக்ஸ்கியூஸ்மீ..” என்றபடி அறைக்குள் நுழைந்த சேனாதிபதி, “ஐ அம் ஏசிபி சேனாதிபதி. க்ளாட் டூ மீட் யூ” என்று, தன் வலது கையை ஆனந்தை நோக்கி நீட்டினான்.

சீருடையிலேயே சேனாதிபதி வந்திருக்க, மரியாதை நிமித்தம் சட்டென்று எழும்பிய ஆனந்த், நீட்டிய சேனாதிபதியின் கையைப் பற்றி குலுக்கி, “வெல்கம் சார்… ப்ளீஸ்.. டேக் யுவர் சீட்” என்றான் எந்திரத்தனமாக.

“இல்ல… டைம் இல்ல, இந்த பக்கமா வந்ததால ஒரு இன்ரோ கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். வித் யுவர் பெர்மிஷன், இப்போ என் வைஃபையும் எங்கூட கூட்டிட்டு போலாம்னு நினைக்கிறேன்.”

 தன் கணீர் குரலில் சொல்லிய சேனாதிபதி, “சீக்கிரமா கிளம்பி வா சுபா” என்று மனைவியை பணித்துவிட்டு மறுபடியும் ஒரு கைக்குலுக்கலோடு ஆனந்திடம் விடைபெற்றுக் கொண்டான்.

ஆனந்த் நல்லவன் தான். சுபாஷிணியின் மீது ஒரு ஈடுபாடு இருந்தாலும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவளிடம் தன் விருப்பத்தைச் சொல்லி அவளைக் கலவரப்படுத்தாத நாசூக்கு தெரிந்தவன் தான். ஆனால், தான் விரும்பிய பெண்ணின் கணவன் தன்னைவிட அந்தஸ்தில் உயர்ந்தவன் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மனப்பக்குவம் உடையவன் இல்லை. எனவே சேனாதிபதியின் ஆளுமையில், மனதோடு சேர்ந்து முகமும் சுருங்கிப் போயிற்று அவனுக்கு.

திவ்யாவிடம் ஸ்கூட்டி சாவியை கொடுத்து விட்டு, தன் பேக்கை எடுத்துக்கொண்டு அரக்கபரக்க அலுவலகத்தை விட்டு வெளியே வந்த சுபாஷிணி, காருக்கருகில் நின்றிருந்த சேனாதிபதியிடம், “என்னைக் கூட்டிட்டு போறதுக்காகவே வந்தீங்களா அத்தான்?” என்றாள் வாயெல்லாம் பல்லாக.

 “என்னை, உனக்கு செக்யூரிட்டி வேலை பாக்கவச்சதும் இல்லாம, இந்த நினைப்பு வேற உனக்கிருக்கா?” ட்ரைவர் சீட்டில் அமர்ந்தபடியே காரணமே இல்லாமல் அவளிடம் எரிந்து விழுந்தான் சேனாதிபதி.

கணவன் தன்னை அழைக்க வந்ததில் சிறகில்லாமல் வானத்தில் பறந்த சுபாஷிணி, அவன் கோபத்தில் பொத்தென்று தரையிறங்கி, “செக்யூரிட்டி வேலையா?!” குழப்பமாக கேட்டபடி அவன் அருகே சீட்டில் அமர்ந்தாள்.

“ஆமா.. இந்த செயினை மட்டும் நீ போட்டுட்டு வரலைன்னா, நான் எதுக்கு இப்போ இங்க வரப்போறேன்?” சுவாதீனமாக, மனைவியின் கழுத்து தாலியை கையில் பற்றிச் சொல்லியவன்,

“இதக்கூட உனக்கு கல்யாணம் ஆகிடிச்சுன்னு அந்த ஆளுகிட்ட ப்ரூஃப் பண்ணுறதுக்காக தான், பிடிவாதமா நீ போட்டுட்டு வந்தியோன்னு எனக்கு இப்பத் தோணுது” என்றான் ஒரு மாதிரியான குரலில்.

“எந்த ஆளுகிட்ட?”

“அதான்… உங்க ஆடிட்டர்..”

கணவனின் பேச்சில், ‘என்ன பேசுகிறான் இவன்?’ என்று ஒருகணம் தடுமாறிய சுபாஷிணிக்கு, அடுத்த கணமே தன் கணவன் பொறாமையில் பொசுங்குறான் என்பது புரிந்துவிட, மனதெல்லாம் மத்தாப்பு சிதறல்.

ஆனால் உண்மையை கணவனுக்கு சொல்லிவிடும் விதமாக, “அதுவும் ஒரு காரணம் தான் த்தான். ஆனா, ஆனந்த் ரொம்ப நல்லமாதிரி. இதுவரைக்கும் எங்கிட்ட ப்ரொப்போஸ் பண்ணுனதும் கிடையாது, தப்பா பிஹேவ் பண்ணுனதும் கிடையாது. ஆனா, இன்னைக்கு உங்களை அவர் பார்த்த பார்வையில ஒரு பொறாமை தெரிஞ்சுது.”

 “ஒருவேளை வெளியில உங்களை அவர் நேருக்கு நேராக மீட் பண்ணுற சந்தர்ப்பம் வந்தா, உங்ககிட்ட முரட்டுத்தனமா பிஹேவ் பண்ணகூட சான்ஸ் இருக்கோன்னு எனக்கு தோனுது. அப்பிடி மட்டும் ஒரு சூழ்நிலை வந்தா, எனக்காக நீங்க கொஞ்சம் ஆனந்தை பொறுத்துக்கணும், ரீஆக்ட் பண்ணிடக் கூடாது. இன்ஃபேக்ட், உங்க இரண்டு பேருக்கிடையில ஒரு ஃப்ரெண்ஸ்ஷிப்பை நீங்க மெயின்டெய்ன் பண்ணி, நிதர்சனத்தை அவருக்கு புரியும்படி எடுத்து சொன்னா, நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்று சிரிக்காமல் சொல்லி முடித்தாள்.

 ஆனந்தைப் பற்றி சுபாஷிணி பேசத் தொடங்கியதும், கவனமாக கேட்க ஆரம்பித்த சேனாதிபதி, அவள் முடித்த விதத்தில் சுபாஷிணியின் காதைப் பற்றி லேசாக திருக்கியபடி தன்னை மறந்து சத்தமாகச் சிரித்தான்.

கிட்டத்தட்ட பலவருடங்களுக்குப் பிறகு தன்னிடம் மனம்விட்டு சிரிக்கும் தன் அத்தானை கண்கள் குளிர பார்த்தாள் சுபாஷிணி.

‘இப்படியே எல்லாவற்றையும் மறந்து தன் அத்தான் தன்னோடு ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட வேண்டும்’ என்று அந்த பெண் மனது அவசரமாக ஒரு ப்ரார்த்தனையை வைத்ததாலும், நீண்ட நாட்களாக உள்ளுக்குள்ளேயே கொதித்து கொண்டிருக்கும் எரிமலைக் குழம்பு, ஒருநாள் வெடித்து சிதறும் அபாயம் உண்டு என்று சுபாஷிணிக்கும் தெரியும்.

என்றாலும், அந்த எரிமலைக் குழம்பு இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள அவளுக்கு பயமாகவும் இருந்தது. ‘ஒருவேளை குளிர்ந்த நிலையில் இருந்தால், தன்பேச்சு வீணாக அதை பொங்க வைத்து விடக்கூடாதே. அதனால் போகும் வரை போகட்டும், அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்ற எண்ணமே அவளிடம்.

சிரித்து முடித்த சேனாதிபதி, “என்னோட வாழ்க்கையில கவர்மென்ட் வெஹிக்கிளை பெர்ஸ்னல் பர்ப்பஸ்ஸுக்காக யூஸ் பண்ணுறது இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் டைம்மா இருக்கணும் சுபா” என்றான் ஆழ்ந்த குரலில். அதில் இனிமேல் இப்படி எதிர்பார்த்து விடாதே என்ற மறைமுகத் தகவல் இருந்தது மனைவிக்கு.

“நீங்க இப்பவும் பெர்ஸ்னல் பர்ப்பஸ்க்கு வெஹிக்கிளை யூஸ் பண்ணுறீங்கன்னு யார் சொன்னது? ஒரு செயின் ஸ்நாச்சிங்கை ல்ல தடுத்துருக்கீங்க” என்று சிரிக்காமல் சுபாஷிணி சொல்ல,

“அப்பிடியா!… எனக்கது தெரியாமப் போச்சே…” என்று சிரித்தவன், “ஹாஸ்டல்ல இருந்து எதுவும் திங்ஸ் எடுக்கணுமா சுபா?” என்றும் கேட்கத் தவறவில்லை.

“இல்ல த்தான்… இந்த வீக் என்ட்ல வந்து வெக்கேட் பண்ணிக்கிறேன்.” சீருடையோடு கணவனை தனக்காக காத்திருக்க வைக்க மனமின்றி சொன்னாள் சுபாஷிணி.

முகத்தில் இலகுவான புன்னகையோடு, தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் முன் தன்னை இறக்கிவிட்ட கணவனிடம், “நைட்டுக்கு வீட்டுக்கு வந்துடுவீங்களா அத்தான்?” கேட்கக்கூடாது என்று நினைத்தாலும் தன்னை மீறி சுபாஷிணி கேட்க,

“தெரியல…” என்று தோள்களைக் குலுக்கிய சேனாதிபதி, “நைட் அவசியம் இல்லாம கதவை திறந்துட்டு வெளிய வராத சுபா” என்று சொல்லி, சென்றே விட்டான்.

“தெரியலையா? இது என்ன பதில்?” என்று மனம் சுணங்கினாலும், ‘இந்த அளவிற்கு சேனாதிபதி தன்னிடம் சுமுகமாக பேசுவதே பெரிய விஷயம்’ என்று எண்ணியபடி வீட்டுக்கு வந்தாள்.

சுபாஷிணி வீட்டுக்குள் நுழைவதற்கு காத்திருந்தது போல, அவள் அலைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தாள். அழைப்பது அவள் பாட்டி மரகதம். அதாவது சுபாஷிணியின் அம்மா விசாலியின் தாயார்.

யோசனையோடே போனை காதுக்கு கொடுத்து, “நல்லாயிருக்கீங்களா பாட்டி?” என்று சுபாஷிணி பேசத்தொடங்க,

“உன் கல்யாணத்துக்கு பெத்ததாயையும், கூடப்பிறந்த அண்ணனையும் கூப்பிடணும்னு உங்கம்மாவுக்கு தான் தெரியலைன்னா, சென்னைக்கு வந்து முழுசா ஒருநாள் ஆனபிறகும், உம்புருஷனோட வந்து எங்களை பாக்கணும்னு உனக்கு கூட தோணலை, இல்ல?” எடுத்தவுடனே தனது கட்டைக் குரலில் கத்தினார் மரகதம்…