அத்தியாயம்27

“தங்கமே … தங்கமே…..” என்று இன்பா அழைக்கவும் தூக்க மாத்திரை உபயோகத்தில் உறங்கிக் கொண்டிருந்த மகா திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள் சுற்றி பார்க்க ஒரே இருள், ஒன்றும் கண்களுக்கு தெரியாத நிலை.

“தங்கம்…. தங்கமே….” என்று மீண்டும் கேட்ட குரலில், அந்த குரல் வந்த திசையில் மெல்ல நடந்து சென்றாள்.

எங்கு போகிறோம் என்று கூட தெரியாது அவன் குரலை கேட்டு நடந்தவள் முன்னே வீட்டின் குட்டி தோட்டம் வெளிச்சமாக தெரிய திறக்க சிரமப்பட்ட கண்களை திறந்து பார்த்தாள்.

அங்கு நின்று கொண்டிருந்தவனை பார்த்து மகிழ்ந்தவள் ஓடி சென்று காற்று புக முடியாத அளவு இறுக அணைத்து கொள்ள

“ஏ… தங்கம்…. என்னது இது …” என்று இன்பா சிறு புன்னகையுடன் அவளை பதிலுக்கு அணைக்க, மகா அவனுள் புதைந்து விட எண்ணினாள் போலும் மேலும் மேலும் அவள் அணைப்பை இறுக்கினாளே தவிர அவனை விட்டு விலக வில்லை.

“டேய்… என்னடா இது …. இங்க பாருடா…. “ என்று அவள் முகம் நிமிர்த்தி தலையில் முத்தம் ஒன்று வைக்க, கண்ணீர் வழிய அவனை பார்த்த படி மகா

“ என்னால முடியல இன்பா “ என்று அழுதவளின் கண்களை துடைத்தவன்.

“ஏன் எதுக்கு இந்த அழுகை என் தங்கத்துக்கு என்ன ஆச்சு அவ ஸ்ட்ராங் தான…” என்றதற்கு தலையை மறுப்பாக அசைத்தவள்.

“ ரொம்ப வலிக்குது இன்பா, உன் கூடவே பகல்ல இருந்து இரவு வர உன் சுவாசத்தில் இருந்த எனக்கு, இப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு டா உன்ன ரொம்ப தேடுறேன் “

“என்ன எங்கேடா தேடுற நான் தான் உன் கூடவே உன் நினைவா, உன் சுவாசமா கலந்து உனக்குள்ள இருக்கேன் தான.  என்ன வெளிய தேடுனா எப்படி தங்கம் இருப்பேன் “

“ இல்ல இன்பா என்னால முடியல ரொம்ப வலிக்குதுடா…. எனக்கு வலினா நீ தான சரி பண்ணுவ. ஆனா இப்போ என் வலியை கேட்க கூட நீ இல்லையே டா “ என்று அழுதவளை அணைத்து பிடித்துக்கொண்ட இன்பா அவள் அழுகை காண இயலாது திணற, மாக

“கண்ணு முழிச்சதும் தேடுனேன்டா உன்ன …. ஆனா உன்ன காணோம். இப்போ வரையும் உன்ன தான் தேடுறேன். நீ தான் வரல. ஏன் இன்பா இப்படி பண்ண ? உனக்கு தெரியாதா தனியா எப்படி நான் இருப்பேன். நீ இல்லாம எப்படி நான் இருப்பேன்னு நீ நினைச்ச டா “ என்றவளின் நெற்றியில் இதழை பதித்தவன்.

“அப்போ அங்க எனக்கு என் உயிரான நீ தான்டா முக்கியமா தெரிஞ்ச “ என்று சொன்னவனை நிமிர்ந்து கண்கள் கலங்க பார்த்தவள்.

“உன் உயிரை காப்பாத்திட்டு என் உயிரை எடுத்துட்டு போயிட்டியே டா …”

“ தங்கம்……” என்று அணைத்து கொண்டு இன்பா திணறி நிற்க அதை உணர்ந்த மகா

“இப்போ என்ன இன்பா உன் உயிரை பத்தறப்படுத்த வந்தியா “ என்றதற்கு அமைதியாக அணைத்த படி இருந்தவன்.

“உனக்கு நான் அன்னைக்கு சொன்னது நினைவு இருக்கா தங்கம் “ என்று கேட்டவனை நிமிர்ந்து யோசனையாக மகா பார்க்க

“என்னில் கலந்த நீயும், உன்னில் கலந்த நானும். நீ, நான்னு இல்ல தங்கமே… நாம, எப்பவும் நாம் தான்டா நமக்காக நம்ம ஆசைகள நீ நிறைவேற்ற வேண்டாமடா. என் ஆசை உன் ஆசை இரண்டையும் இனிமே நீ தான பார்க்கணும் “என்று பேசியவனை வெறித்து பார்த்தவள்.

“நம்ம ஆசை … நம்ம கனவு…” என்று அவன் மார்பில் புதைந்தவள்.

“சரிடா….” என்று கண்களை துடைத்தவள் “ நம்ம கனவை என் கூட இருந்து நீங்களும் பாருங்க டா “ என்று சிரித்தவளை கட்டி கொண்டவன்.

“என் தங்கம்… என் தங்கம்….” என்று தொண்டை கரகரக்க சொன்னவன் காற்றாக கலைந்து போக மகா கண்கள் நீர் வடிய தூக்கத்தில் இருந்து முழித்தாள்.

கண்களை துடைத்த படி எழுந்து அமர்ந்தவள்

“ எனக்கு கஷ்டமா இருக்கும்னு தெரிஞ்சும் என்ன விட்டு பொய்டலடா. “ என்று புலம்பிய படி அமர்ந்தவள் காதில் இவள் தேர்வில் வெற்றி பெற்ற செய்தி விழுந்தது.

அதில் “ இது தெரிஞ்சிட்டு தான் என்ன பார்க்க வந்தியா டா “ என்று லேசான புன்னகையை சிந்தியவள். எழுந்து தயாராகி வெளியே வந்திருந்தாள்.

இவற்றை எல்லாம் நினைத்த படி வந்தவள் திரும்பி அவள் அருகே பார்க்க ஜெயா அவள் கையை கெட்டியாக பிடித்து கொண்டு இவள் தோளில் சாய்ந்து உறங்குவது தெரிந்தது.

அவள் செயலில் இன்பா தோளில் சாய்ந்து இவள் தூங்குவது நினைவிற்கு வர கண்கள் பனிக்க அவளை பார்த்தாள்.

மனதில் “ நீ சொன்னது சரி தான் இன்பா நீ எங்கயும் போகல என் கூட தான் இருக்க “ என்று கண்களை மூடி அவளின் வாழ்வின் மறு பகுதியை காண தயாரானாள்.

உயிரானவன் துணையுடன் அவன் கைபிடித்து செல்லும் இடம் எல்லாம் இனி அவனின் நினைவுகளை மட்டும் தாங்கி தனித்து செல்லும் நிலை இருந்தும் அனைத்தையும் தாண்டி ஓட தொடங்கினாள்.

அதன்பின் அவள் வேலையிலும் வெற்றிகரமாக மூழ்கி இருந்தவள்  நிற்க நேரமின்றி இன்று வரை ஓடிக்கொண்டு இருக்கிறாள் இன்பாவின் மகாவாக.

இங்கு ஆஸ்பிட்டலில் மகாவிற்கு பக்கத்து அறையில் அமிர்ந்தம் அழுது கொண்டிருந்தார்.

“சரியான அழுத்தகாரி அவ. எத்தன சண்டை போட்டு யாரும் வேணாம்னு போனா. போனவ அவ உடம்ப பாத்துக்க வேணாமா. இதுக்கு தான் சொன்ன கல்யாணம் பண்ணிக்கோ டி வாழ்க்கைல கூட துணையா ஒருத்தர் இருக்கணும்னு  எங்க கேட்ட “

என்று அழுது புலம்பியவர் மேலும் தொடர்ந்தார்

“ கல்யாணத்தை பத்தி பேச்சு எடுத்ததும் எங்க இருந்தோ ரெண்டு பொடுசுகளை கூட்டி வந்து என் புள்ளைங்க இவுங்க. இனி இவுங்க தான் வாழ்க்கைன்னு வீராப்பா போனவ இன்ன வரை நம்ம வீட்டுக்கு வந்தாளா “ என்று புலம்பியவர் அப்போது தான் அங்கு வந்து நின்ற லேகாவை பார்த்தார்.

அமிர்தம் பார்வையில், லேகா

“ அது மகா ம்மா …. இல்ல சாப்பிடுறீங்களான்னு கேட்க வந்தேன் “ என்று தடுமாறி நின்றவளை கைபிடித்து அருகில் அமர வைத்தவர்.

“என்ன ம்மா பாட்டி பேசுனது கேட்டு கஷ்டமா இருக்கா “ என்று அருகில் அமர வைத்துக்கொள்ள, சந்தானம்

“அறிவு கெட்ட கிருக்கி எந்த இடத்துல என்ன பேசணும்னு உனக்கு தெரியுதா டி “

“நான் என்னங்க பன்னேன், என் கஷ்டத்த புலம்புன அதுல என்ன தப்பு. நீயே சொல்லு ம்மா நல்ல வரனா ஒருத்தன் முதல் தாரத்துலயே வரப்போ என் பொண்ண தான நான் பாக்க முடியும் “ என்றதற்கு ஆமாம் என்று லேகா தலையசைக்கவும்

“அப்போ சண்ட போட்டுட்டு போனவ கொஞ்ச நாளிலேயே ஒரு கையில உன்னையும் ஒரு கையில சத்தியாவையும் கூட்டிட்டு வந்து என் பசங்கன்னு நின்னா.. எனக்கு எப்படி ம்மா இருக்கும்

அப்போ கூட கொஞ்சம் சந்தோஷம் தான் பட்டேன். அவளுக்குன்னு நீங்க இருப்பீங்கன்னு ஆனா அம்மான்னு ஒருத்தி இருந்தாளேன்னு அந்த வீட்டு பக்கம் வந்தாளா உங்க அம்மா.

நல்ல நாளுன்னா உங்கள மட்டும் அனுப்பி வைக்குறவ என்னை பாத்துட்டு பேசாம கூட ஓடிடுவா அப்போ எனக்கு ஆதங்கம் இருக்கும் தான” என்று முந்தானையால் முகத்தை துடைத்து கொண்டவர்.

“கைக்குள்ளேயே இருப்பா மத்த மூணும் என் பேச்ச கேக்காம ஏட்டிக்கி போட்டியா நின்னா… இவ மட்டும் அம்மா அம்மா ன்னு மடுகுள்ளேயே இருப்பா . அப்படி இருந்த பொண்ணு இத்தன வருஷமா ஒரு வார்த்தை கூட பேசாம ன்னா எனக்கு கஷ்டமா இருக்காத “ என்று அழுதவரை சமாதானம் செய்ய

“பாட்டி… அழாதீங்க…. அம்மா உங்க கூட பேசலனாலும் உங்கள பத்தி அதிகம் கேப்பாங்க பாட்டி. நீங்க பேசுறத எல்லாம் விசாரிப்பாங்க பாட்டி “ என்று லேகா சொன்னதை கேட்டு  அதற்கே மகிழ்ந்த அமிர்தம்.

“நிஜமாவா லேகா…. எனக்கு தெரியும் என் புள்ளைக்கு அவ புருஷன மறக்க சொன்னதுல தான் கோபமே தவிர மத்த படி பாசகாரி என் புள்ள “ என்று எழுந்து மகா அறைக்கு சென்றவர்.

“தங்கம்…. மகா முழிடி …. முழிச்சி அம்மா கிட்ட பேசுடி அம்மா ஏதோ தெரியாம பேசிட்டேன் டி “ என்று மகா கைகளை பிடித்து கொண்டு அழுதவரை சத்தியா , லேகா பாவமாக பார்த்த படி நிற்க

 அப்போது மகா கைகள் மெல்ல அமிர்தத்தின் கையை பிடிக்கவும் அவர் “ மகா…. அம்மா…. என் தங்கம் முழிச்சிட்டியா டி “

என்று அவள் கன்னம் தடவவும் அனைவரும் உள்ளே வேகமாக சத்தம் கேட்டு வர மகா கண்களை திறந்து திறந்து மூடிய படி அனைவரையும் சுற்றி பார்த்தவள்.

அழகாக சிரித்த படி தலையசைத்து விட்டு அமிர்தம் புறம் திரும்பி “ அம்மா….” என்று காற்றாக மாறி போன குரலை கடினப்பட்டு ஒலிக்க அங்கேயே அவர் மகாவை அணைத்து கொண்டு அழுது விட்டார்.

அதன் பிறகு வேகமாக மகவிற்கு மூளையில் எம்.ஆர்.ஐ எடுத்து பார்க்க  அதில் ஆபரேஷன் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டனர். அதை மகா பிடிவாதமாக மறுத்து விட்டாள்.

யார் வந்து பேசினாலும் பலன் இன்றி போக மருத்துவரும் ஆபரேஷன் செய்தாலும் நினைவு வருவது வாய்ப்பு குறைவே என்று சொல்லியிருக்க மகா அதை பிடித்துக் கொண்டாள்.

இப்படி அடமாக நிற்பவளை என்ன செய்ய என்று புரியாமல் நின்ற நேரம் ஜெனிஷா மகாவை பார்க்க ஆஸ்பிட்டல் வந்தாள்.

அவளை பார்த்து மகிழ்ந்த மகா அவளை அருகில் அழைத்து பேச தொடங்கினாள்.

“என்ன ஜெனி இன்னும் டெல்லில தான் இருக்க போல “ என்று எந்த ஒரு பதட்டமும் இன்றி மகிழ்ச்சியாக பேசியவளை வியந்து போய் தான் பார்த்தாள்.

“அது மேம் உங்கள பாத்துட்டு போலாம்னு தான் ஸ்டே பண்ணிட்டேன் “ என்று சோகமாக பேசியவளை கூர்ந்து பார்த்தவள்.

“என்ன ஜெனி பயந்திடிங்களா? எனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு “

“மேம்…. இப்படி பேச்சுக்கு கூட சொல்லாதீங்க “ அதில் மேலு‌ம் சிரித்த மகா

“சரிடா… சொல்லல, ஆமா என் கதைய முழுசா தெரிஞ்சிகிட்ட போல “

“அது மேம்….” என்று இழுத்தவள் மகாவை பாவமாக பார்த்து “ பாலாஜி சார் கிட்ட கேட்டேன் மேம் “

“அவனும் உளறி வச்சிட்டானா”

“ம்ம்ம்….மேம் “

“ச்ச… மிஸ் ஆகிருச்சு நானே என் கதைய முழுசா சொல்லி முடிக்கணும் னு நினைச்சேனே “

என்றவர் முகத்தை பார்த்த ஜெனி “ உங்களுக்கு சொல்லணும்னு தோணுதா மேம் “

“அது இல்ல பரவாயில்லைம்மா “ என்று ஏதோ யோசித்தவர் தீடீர் என்று ஜெனி கையை பிடித்து

“நான் சொன்ன கதைய ஒரு புக்கா எழுதி தரியா ஜெனி?” மகா சொன்னதை கேட்டு அதிர்ந்த ஜெனி

“என்ன மேம் சொல்றீங்க?”

“அது என்னோட லவ் ஸ்டோரிய ஒரு ஜாலியான எண்டிங் வச்சி ஒரு ஸ்டோரியா எழுதிரியாமா?”

“ஆனா உங்களுக்கு தான் உங்கள பத்தி மத்தவங்களுக்கு தெரியுறது பிடிக்காதே மேம்?”

“அட நான் என்ன என் பேர போட்டாமா எழுத சொன்னேன்? வேற பேர் போட்டு சும்மா ஒரு கற்பனை கதையா எழுதி தாயேன்.”

அதைக்கேட்டு யோசித்த ஜெனி, “எனக்கு ஜஸ்ட் இன்டர்வியூ எடுத்து அதை ஆர்டிகிளா எழுதி தான் எனக்கு பழக்கம் மேம்.”

“ஜஸ்ட் ஒரு ட்ரை தான் ஜெனி,” என்று தலையை சரித்து ஆசையாக கேட்டவருக்கு மறுப்பு சொல்ல இயலாத ஜெனிஷா சரி என்று தலையை ஆட்டவும், அவளை அணைத்த மகா.

“நான் யார் கூடவும் ரொம்ப அட்டாச் ஆனது இல்ல ஜெனி, ஆனா என்னமோ உன் கூட டிராவல் பண்ண டைம் கம்மியானாலும் என்னோட நெருங்கிட்ட ஜெனி.”

அதை கேட்டு அழகாக சிரித்த ஜெனி, “எனக்கு கொஞ்சோ டைம் தாங்க மேம், ஸ்டோரி முடிஞ்சதும் உங்கள வந்து பார்க்குறேன்.”

“டேக் யுவர் டைம் ஜெனி, ஆனா எழுதி முடிச்சதும் ஃபர்ஸ்ட் காப்பி எனக்கு தான்.”

“கண்டிப்பா மேம்.”

“நான் நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிடுவேன் ஜெனி, உன்னை சென்னையில மீட் பண்றேன்,” என்று சந்தோஷமாக கை அசைத்தவருக்கு பதிலுக்கு புன்னகை முகத்தை காட்டி விட்டு வெளியே வந்தவள் கண்கள் சட்டென்று கலங்கி போய் நிற்க லேகா அவளை அணைத்து கொண்டாள்.

“என்னங்க வேற எதுவுமே பண்ண முடியாதா?” என்று அழுதவளுக்கு என்ன பதில் சொல்ல என்று புரியாமல் நிற்க,

“மேம்க்கு பேசாம ஆபரேஷன் பண்ணிடலாமே.”

“அது ரிஸ்க் ஜெனி, அம்மாவுக்கு நினைவு வராமலும் போய்டலாம்.”

“மேம்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?” என்று கண்களை துடைத்தவள்.

“மேம்க்கு அவங்க இன்பாக்கு அப்பறம் அவங்க ஃபேமிலிய தான் ரொம்ப பிடிக்கும் சோ முடிஞ்ச அளவு எல்லோரையும் அவங்க கூட இருக்க வைங்க.”

இந்த யோசனை லேகாவுக்கும் இருக்கவே செய்தது, அதனால் அவளும் சம்மதமாக தலை அசைக்க லேகா கண்களை துடைத்த படியே அந்த மருத்துவமனையை விட்டு சென்னைக்கு சென்றாள்.

சென்னைக்கு சென்றவள் மகா கேட்டு கொண்ட படியே அவள் கதையை எழுத தொடங்கினாள்.