அத்யாயம் 26:

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. ஆதி கேசவனின் வீட்டில் இப்போது அனைத்துமே சிவ தீர்த்தா தான் என்ற நிலைமையாகிப் போனது.கம்பெனியையும், மில்லையும் ஆதியும் விசாகனும் பார்த்துக் கொள்ள, வீட்டு நிர்வாகம், தோட்டம் துறவு, வயல் என்று அனைத்தும் சிவாவின் வசம். கரும்பு தின்னக் கூலியா என்பதைப் போல், சிவாவும் மனமுவந்தே அனைத்தையும் செய்ய, அவளின் ஆர்வமும், வேலை வாங்கும் பாங்கும், அவர்களோடு சேர்ந்து வேலை செய்யும் பாங்கும் ஆதியை அதிகம் ஈர்த்திருந்தது.

“வேலை எல்லாம் செய்யக் கூடாது. மேற்பார்வை பார்த்தா போதும் தீர்த்தா” என்று ஆதி பலமுறை சொன்னாலும் அவள் காதில் வாங்கினாள் இல்லை. அதில் அவளுக்கு ஒரு நன்மையும் இருந்தது. தினமும் கிருஷ்ணனை பார்த்து விடும் நன்மை தான்.

ஆதி சிவாவை பார்த்த காலம் போய் இப்போது சிவா தான் எந்த நேரமும் ஆதியின் நினைப்பில் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அவளின் அகமும் புறமும் ஆதியே ஆகிப் போனான். கல்லூரி வாழ்க்கையில் இன்னும் ஒரு பருவம் மட்டுமே மீதமிருந்தது.

அன்று வழக்கம் போல் ஆதி இரவு தாமதமாய் வர, சிவாவோ முகத்தை தூக்கி வைத்தபடி அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள்.

‘இப்ப எதுக்கு கோபமா இருக்கா?’ என்று யோசித்தவனுக்கு அவளின் கோபத்திற்கான காரணம் புரியவில்லை.

“ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்றான் சாப்பிட்டுக் கொண்டே.

சிவாவோ பதில் பேசாமல் அமைதியாய் இருக்க,

‘பழைய படி பேசாம இருக்குற பழக்கத்தை ஆரம்பிச்சுட்டாளோ?’ என்றவன் அவளின் முகத்தைப் பார்க்க, அவளோ அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

“என்னடி ஆச்சு?” என்றான் புரியாமல். சிவா அவனை முறைக்க, யோசனையுடனே சாப்பிட்டு முடித்தான்.

“நீ பார்க்குற பார்வையை பார்த்தா வேற பிரச்சனை இருக்குற மாதிரி தெரியலை. அப்போ நான் தான் பிரச்சனை சரியா?” என்றான்.

‘எப்படி சரியா கண்டு பிடிக்கிறார்? இதை முதல்ல கத்துக்கணும்’ என்று எண்ணியவள் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க,

“வாயைத் திறந்து பேசுடி” என்றவனுக்கு நிஜமாகவே மண்டை காய்ந்தது.

சிவாவோ எதுவும் பேசாமல் அவனை முறைத்தபடி, முந்தானையை சொருகியபடி கடுப்புடன் செல்ல,

படியேறும் போது  அவளின் ஜடையும் இடையும் அசைந்ததில் ஆதியின் மனம் தான் ஆட்டம் கண்டிருந்தது. அவள் கோபத்திற்கான காரணம் புரிந்தவனுக்கு தன்னையும் மீறி இதழ்களில் புன்னகை மலர, உல்லாசமாய் சிரித்தபடி பின்னே சென்றிருந்தான்.

இரண்டு நாட்களாக அவன் சரியாக வீட்டிற்கு வரவில்லை. அந்த கோபம் தான் அவளுக்கு. ஏனோ இப்போதெல்லாம் அவளால் அவனைப் பிரிந்து இருக்க முடியவில்லை. எந்த நேரமும் அவனின் நினைப்பிலேயே உழன்று கொண்டிருந்தாள்.

கோபத்தில் அவள் அறையை அளந்து கொண்டிருப்பதைப் பார்த்தவன்,

“இப்ப ஏன் இவ்வளவு டென்ஷன் தீர்த்தாவுக்கு?” என்றான் அவளையே பார்த்தபடி.

“உங்க மேல செம்ம கோபத்துல இருக்கேன். பேசாம போய்டுங்க” என்றாள்.

ஆதியும் பேசாமல் போய் படுத்துக் கொள்ள, அவனின் செயலில் சிவாவோ இடுப்பில் கை வைத்தபடி அவனை முறைத்திருந்தாள்.

“நீ தானடி பேசாம இருக்க சொன்ன? பொண்டாட்டி பேச்சை என்னைக்கு தட்டியிருக்கேன், அதான்” என்றான் வந்த சிரிப்பை அடக்கியபடி.

“உங்களுக்கு கொஞ்சம் கூட என் மேல அக்கறையே இல்லை” என்றாள் கடுப்புடன்.

“யாரு எனக்கு அக்கறை இல்லை? சரித்தான்டி. இது எவ்வளவு பெரிய பொய்ன்னு உனக்கே தெரியும். நீ நினைக்கிறதைக் கூட,உனக்கு என்ன தேவைங்கிறதைக் கூட உன்னோட கண்ணசைவில கண்டு பிடிக்கிறவன்டி நானு” என்றான் ஆதி.

“நீங்க தான் மெச்சிக்கனும். இப்ப நான் என்ன நினைக்கிறேன், எனக்கு என்ன வேணும்னு உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு என் நினைப்பே இல்லை. இனி இப்படி அன் டைம்ல வந்தா சோறு போட மாட்டேன் சொல்லிட்டேன்” என்றாள் கோபமும், இயலாமையும் கலந்து.

“ரெண்டு நாள் சரியா வீட்டுக்கு வரலை. அதுக்கு இந்த அக்கப் போறா?” என்று நினைத்தவன், எழுந்து அவளின் அருகில் சென்று அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டவனோ,

“இப்ப உனக்கு என்ன வேணும்னா, என் முத்தம் வேணும், என் அணைப்பு வேணும், சிம்ப்ளா சொல்லனும்னா இப்ப நானே மொத்தமா உனக்கு வேணும். எப்படி சரியா சொல்லிட்டேனா?” என்றான் காதோரத்தில்.

அவனின் பேச்சில் விழி விரித்தவள், அவனை கண்சிமிட்டாமல் பார்க்க,

“என்ன?” என்றான் புருவத்தை உயர்த்தி.

“மாமா” என்றவளுக்கு காத்து தான் வந்தது.

“என்ன தீர்த்தா கனவா?” என்றான் ஆதி கேசவன்.

“இவங்க இப்போ என்கூடத்தான பேசிட்டு இருந்தாங்க. ஆனா கட்டில்ல படுத்திருக்காங்க” என்றவளின் குழம்பிய முகத்தைப் பார்த்தவன், இதழ்மடித்து சிரிப்பை அடக்கியபடி, அவளைத்தான் ரசித்துக் கொண்டிருந்தான்.

அவன் மறைக்க நினைத்தாலும், அவன் முகம் காட்டிக் கொடுத்துவிட, அவளுக்கோ கோபம் தலைக்கேறியது.

“உங்களை” என்று பல்லைக் கடித்தவள், வேகமாய் சென்று சட்டமாய் அவன் மேலேயே படுத்துக் கொண்டாள்.

“என்ன கனம்டி கனக்குற?” என்றான்.

“ஏன் தாங்க மாட்டிங்களா?” என்றாள்.

“இப்படியே தாங்கிட்டு இருந்தா எப்படி தூங்குறது?” என்றான் சிரிப்புடன்.

“உங்களை இன்னைக்குத் தூங்க விட மாட்டேன்” என்றாள்.

“நல்லா யோசிச்சு தான் பேசுறியா?” என்றவனின் சிரிப்பில் அவன் பேச்சிற்கான அர்த்தம் புரிய,

“சிரிக்காதிங்க. எல்லாம் நீங்க நினைச்ச ஆர்த்தமே தான்” என்று அவள் சொல்ல இப்போது அதிர்ந்து முழிப்பது அவன் முறையாக இருந்தது.

“நல்லா தேறிட்டடி” என்றான் உல்லாசமாய்.

“நான் தான் புருஷன் கிறுக்கு பிடிச்சுப் போய் இருக்கேன். நீங்க அப்படியில்லை” என்றாள் குறையாய்.

“ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும். அப்பறம் போகப் போக சரியாகிடும்” என்றான் ஆதி.

“எது உங்க நினைப்பா?” என்றாள்.

“இல்ல கிறுக்கு” என்று சிரித்தவனை அவள் அடிக்க, அவள் கைகளைக் பிடித்துக் கொண்டவனோ அவளின் இதழ்களையும் களவாடியிருந்தான்.

“மாமா”

“ஏமா?”

“இப்பல்லாம் நீங்க என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்றிங்க. எப்பவும் உங்களைப் பத்தி தான் நினைச்சுட்டே இருக்கேன். யாரைப் பார்த்தாலும் நீங்க தான் தெரியரிங்க. நீங்க பக்கத்துலையே இருக்கணும்னு தோணுது. உங்க கூடவே இருக்கணும்னு தோணுது. இப்படி கட்டிபிடிச்சுகிட்டே இருக்கணும்னு தோணுது. இன்னும் தப்புத் தப்பா என்னெல்லாமோ தோணுது.  அப்போ எனக்கு புருஷன் கிறுக்கு தான பிடிச்சிருக்கு” என்றாள் பாவமாய்.

“இதுக்கு பேர் கிறுக்கு இல்ல தீர்த்தா. என் பொண்டாட்டிக்குள்ள இந்த ஆதி முழுசா நுழைஞ்சிட்டான்னு அர்த்தம். அவ அன்பும் காதலும் கோபமும் தாபமும் முழுசா எனக்கே சொந்தம்னு அர்த்தம்” என்றவனைத் தான் ஆசையாய் பார்த்திருந்தாள்.

“நீ பார்க்குற பார்வையே சரியில்லடி” என்றான்.

“எப்படி மாமா இப்படி இருக்கீங்க? கொஞ்சம் கூடம் ஈகோ இல்லாம ஒரு ஆம்பளையால இருக்க முடியுமா?” என்றாள் ஆச்சர்யமாய்.

“அப்படியெல்லாம் சொல்ல முடியாது. அது வரவேண்டிய இடத்துல வரும். அதுக்காக பொண்டாட்டிகிட்ட ஈகோ பார்க்க முடியுமா? நான், நீன்றதைத் தாண்டி ‘நாம்’ன்னு  ஆகுறது தான வாழ்க்கை. ஆம்பளையோட ஆண்மையை நிருபிக்க கூட பொண்ணு தான் தேவைப்படுறா பொண்டாட்டியா. அப்படி வந்தவகிட்ட எனக்கென்னடி ஈகோ” என்றவனை முத்தமிட்டே கிறங்கடித்திருந்தாள் சிவா.

“என்னடி? இன்னைக்கு புல் ரொமான்ஸ் மோடுல இருப்ப போலவே” என்றவனிடத்தில்,

“எனக்கு பாப்பா வேணும்” என்றாள். அவள் கேட்ட விதத்தில் அவன் பக்கென்று சிரித்துவிட,

“இதென்னடி இப்படி ஒரு மாடுலேஷன்?” என்றான்.

“சிரிக்காதிங்க மாமா..! எனக்கு நிஜமாவே உடனே பாப்பா வேணும்” என்றாள்.

“உடனே எப்படிடா பாப்பா வரும். பத்து மாசம் ஆகும்” என்றான் என்றான் சிரிப்பை அடக்கி.

“அது எனக்கும் தெரியும். ஆனா எனக்கு பாப்பா வேணும்” என்றாள் விடாப்பிடியாய்.

“சிவா பாப்பாவுக்கே பாப்பாவா? இன்னும் ஆறு மாசம் போகட்டும் தீர்த்தா” என்றவனை முறைத்தவள், அவனிலிருந்து இறங்கி ஓரமாய் சென்று படுத்துக் கொண்டாள்.

“தீர்த்தா” இடையோடு அணைத்தவனை தட்டி விட்டிருந்தாள்.

“உனக்கு தான் சிரமம்” என்றான் பொறுமையாய்.

“நான் சொன்னேனா உங்ககிட்ட, எனக்கு சிரமம்னு” என்றவள் பட்டென்று திரும்பிக் கொள்ள,

“பாப்பா வேணும்னு சொல்லிட்டு இப்படி பத்தடி தூரம் தள்ளிப் படுத்தா எப்படிடி பாப்பா வரும்” என்று காதோரத்தில் கேட்ட குரலில் திரும்பிப் பார்க்க, குறும்பு சிரிப்புடன் அவளைப் பார்த்திருந்த கணவனின் அழகில் சொக்கித் தான் போனாள் சிவ தீர்த்தா.

“கிறுக்கு முத்திடுச்சு” என்று வாய்விட்டு சிரித்தவனின் இதழ்களை சிறைப்பிடித்திருந்தாள் சிவா. இன்னும் கத்துக் குட்டியாகவே இருந்தவளுக்கு காதல் பாடங்களை கற்றுக் கொடுத்தவனோ எதிர்கால சந்ததியை உருவாக்கும் செயல்முறைத் திட்டத்தில் இறங்கியிருந்தான்.