நீ மட்டும் நிஜமாக 14

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வாசுவின் நிலை கொஞ்சம் மோசமாகத் தான் இருந்தது. கைகால்களில் வெட்டு காயங்கள், உடல் முழுவதும் சிராய்ப்புகள், ரத்த கசிவு, எலும்பு முறிவு என்று சக்தி புரட்டிப் போட்டிருந்தான் அவனை.

செண்பகப்பாண்டியன் தான் அவனையும் மருத்துவமனையில் சேர்த்தது. கூடவே, அவன் தந்தைக்கும் அவனே அழைத்து தகவல் சொல்லியிருக்க, அரக்கப்பரக்க ஓடி வந்தவரிடம் விவரம் கூறிவிட்டு மீண்டும் சக்தியுடன் சேர்ந்து கொண்டான் அவன்.

சக்தியும் காலை வரை மருத்துவமனையிலேயே இருக்க, தேனருவிக்கு வலி நிவாரணிகள் செலுத்தப்பட்டதால் அயர்ந்து உறங்கியிருந்தாள். காத்தன் மனைவி அவருடன் அவர் அறையில் இருக்க, சக்தியும், செண்பகப்பாண்டியனும் வெளியே அமர்ந்திருந்தனர்.

விடியும் நேரம் வெற்றி வந்து நிற்க, அவனைப் பார்வையாலே கொளுத்தினான் சக்தி. 

“டேய்… நான்… நான் இப்படி ஆகும்னு யோசிக்கலடா. தெரிஞ்சு இருந்தா தேனுவை விட்டிருக்க மாட்டேன்” என்று வெற்றி விளக்க,

“எல்லாத்தையும் யோசிக்கணும். முன்ன பின்ன யோசிக்காம கல்யாணம் பண்ணி இருக்க. அப்போ அதை வச்சு எங்கே இருந்து என்ன வரும் எல்லாம் யோசிக்கணும்.” என்று கண்டித்தான் சக்தி.

“சாரிடா”

“உள்ளே போய் பாரு. உன்னை நம்பி வந்தவ. அடுத்து உங்க பாதுகாப்புக்கு கூட வந்தவர். ரெண்டு பேரையும் பாரு. போ” என்றான் சக்தி.

“சக்தி”

“போடா” என, செண்பகப்பாண்டியன் வெற்றியை தேனுவின் அறைக்குள் அழைத்துச் சென்றான்.

அதற்குமேல் சக்தி அங்கு தாமதிக்கவில்லை. அங்கிருந்து கிளம்பியவன் வீட்டிற்கு வர, அப்போதுதான் சொக்கநாதரும் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தார்.

பேரனை காணவும், “சக்தி” என்று அவர் அருகில் வர,

“உள்ளே வாங்க தாத்தா” என்றவன் ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தான். 

“என்னய்யா? என்ன ஆச்சு?” என,

“வாசு தாத்தா…” என்றவன் சற்று நிதானித்து, “வெட்டி இருக்கேன் தாத்தா. என்ன நிலைமை தெரியல. ஆனா, ஆறேழு முறை…” என்றான்.

சொக்கநாதர் தலையில் கையை வைக்க, இவனுக்கு தண்ணீர் எடுத்து வந்த வடிவு அப்படியே நின்றுவிட்டார்.

சக்தியே மீண்டும், “ஸ்டேஷன்ல சரண்டர் ஆகப் போறேன். என்ன நடந்தது அப்படியே சொல்லிடுவேன். ஜாமீன்ல எடுக்கற போல இருக்கும். பார்த்துக்கோங்க” என்றவன் எழுந்து கொள்ள, அப்போதுதான் வடிவை கவனித்தான்.

“அம்மா” என்று மகன் அருகில் வர, 

“சக்த்தி” என்று கேவியபடியே மகனை அணைத்துக் கொண்டார் வடிவு. அவன் காயங்களை கையால் வருடியவாறு, “அய்யோ என் பிள்ளைக்கு நேரமே சரியில்லையே. என் குடும்பத்துக்கு ஒன்னு போனா, ஒன்னு வருதே” என்று அவர் அழ, 

“நீ ஏன்ய்யா சரண்டர் ஆகணும். நான் வேற ஏற்பாடு பண்றேன் சக்தி. கல்யாணத்தை நெருக்கத்துல வச்சுட்டு இதெல்லாம் வேண்டாம்ய்யா.” என்றார் சொக்கநாதர்.

“அதெல்லாம் சரியா வராது தாத்தா. நானே”

“நான் சொல்றதை கேளு சக்தி.”

“தாத்தா இதுக்குமேல அவனை விட முடியாது. நான் சரண்டர் ஆனா தான் அவன் நம்ம வழிக்கு வருவான். தேனருவியை வச்சே அவனை உள்ளே வைக்கலாம்” என்று பேரன் வாதிட, 

“சக்தி… தாத்தா சொல்றதை கேளு. இதுக்குமேல இந்த போராட்டம் எல்லாம் வேண்டாம்ய்யா. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குய்யா. போலீஸ் கேஸ்ன்னு நம்மால் அலைய முடியாது சக்தி. இது எதுவும் வேண்டாம்ய்யா” என்று வடிவு வேறு அழுது அரற்றிக் கொண்டிருந்தார்.

சக்திக்கு அவரை சமாளிப்பதே ஒரு பாடாக இருக்க, அறையில் இருந்து அப்போதுதான் வெளியே வந்த மனோன்மணி, வேல்விழியும் அழுகையில் சேர்ந்து கொள்ள, இந்த பெண்களை சமாளிப்பது பெரும் வேலையாகிப் போனது அவனுக்கு.

இறுதியில், “இப்ப அழுகையை நிறுத்த போறீங்களா இல்லையா?” என்று சக்தி கத்த, அழுகை தேம்பலாக மாறியது.

பயந்து நின்றிருந்த தங்கையைப் பார்க்க அவனுக்கே பாவமாக இருக்க, அவளை மெல்ல தோளோடு அணைத்துக் கொண்டான்.

“ஒன்னும் இல்ல வேலு. இவங்களோட சேர்ந்து நீயும் படுத்தாத. இப்போ அவனை விட்டுட்டா, இன்னும் என்ன வேணாலும் செய்வான். எப்பவும் அவன் என்ன செய்வானோன்னு பயந்துட்டே எல்லாம் இருக்க முடியாது. மொத்தமா முடிக்க நான் போயாகணும். எனக்கு ஒன்னும் ஆகாது. நீ அம்மாவையும், பாட்டியையும் பார்த்துக்கோ” என்றான் தங்கையிடம்.

தங்கையும் புரிந்து கொண்டதாக தலையசைக்க, நிம்மதியுடன் தனது அறைக்குச் சென்றவன் உடையை மாற்றிக் கொண்டு கீழே வந்தான்.

சொக்கநாதர் தானும் வருவதாக கூற, செண்பகப்பாண்டியனும் அப்போதுதான் வந்து சேர்ந்தான். மூவரும் கிளம்பி காவல் நிலையம் சென்றனர்.

சக்தி நடந்த அத்தனை சம்பவங்களையும் ஒன்று விடாமல் ஆய்வாளரிடம் கூற, “தேனருவி சாட்சி சொல்வார்களா சக்தி?” என்று அவர் கேட்கும்போதே, மனைவியை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் வந்தான் வெற்றி.

வெற்றி மீது சாய்ந்து, நடக்க முடியாமல் நடந்து வந்தாள் தேனருவி. அங்கிருந்த காவலர்களுக்கே அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.  

இத்தனை நாட்களாக மெல்ல மெல்ல வெற்றி உருவேற்றியது அத்தனையும் ஒரே நாளில் தொலைந்து போயிருக்க, மீண்டும் வாய் திறக்கவே நடுங்கும் பழைய தேனருவியாக மாறியிருந்தாள் அவள்.

உடன் பிறந்தவனே தன்னை கொல்வதற்கு நின்றது மறக்கவே இல்லை அவளுக்கு. அந்த இருளில் கொலை வெறியுடன் மின்னிய வாசுவின் முகம் இப்போது நினைத்தாலும் உடல் நடுக்கம் கொண்டது.

ஆனால், அத்தனையும் மீறி அவள் காவல் நிலையம் வர காரணம் சக்தி. செண்பகப்பாண்டியன் வெற்றியிடம் சக்தியின் முடிவைக் கூறியிருக்க, தேனருவியும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

வெற்றி பேசி முடித்த நிமிடம், “நாம ஸ்டேஷனுக்கு போவோம் வெற்றி” என்றுவிட்டாள்.

“தேனு” 

“கண்டிப்பா போகணும் வெற்றி. அண்ணா எனக்காகத் தான் இதை செஞ்சாரு. நான் என்ன நடந்ததுன்னு சொல்லணும்” என்றாள் தேனருவி.

வெற்றியும் அவள் விருப்பப்படியே அவளை காவல் நிலையம் அழைத்து வர, தங்கள் காதலித்த தினம் தொடங்கி நேற்று வரையிலான நிகழ்வுகளை ஒன்று விடாமல் கூறி முடித்தாள் தேனருவி.

“நீ உன் அண்ணன் மேல புகார் கொடுக்கறியா” என்று கேட்டதற்கு, சம்மதமாக தலையசைத்தவள் தன் கைப்பட ஒரு புகார் கடிதத்தையும் எழுதி நீட்டிவிட, அதற்குள் சபாபதிக்கு செய்தி சென்றுவிட்டது. அதற்கென ஆட்களா இல்லை காவல் நிலையத்தில்.

தேனருவியின் புகார் முறைப்படி பதியப்பட்டு, முதல் தகவல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்பே பதறிக்கொண்டு வந்துவிட்டார் மனிதர்.

ஏற்கனவே மகன் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடக்க, அது போதாதென்று அவனை சிறைக்கு அனுப்பவும் துணிவாரா அவர். 

காவல் நிலையத்திற்குள் நுழைந்தவர் நேரே சொக்கநாதரிடம் சென்று நிற்க, அவரை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை பெரியவர்.

“ஐயா. இது நியாயமா? ஏற்கனவே அடிபட்டு ஆஸ்பத்திரில கிடக்கிறான். இப்போ அவனை ஜெயிலுக்கு அனுப்பவும் திட்டம் போட்டுட்டீங்களா” என்று அவர் ஆதங்கம் கொள்ள,

“உன் மகன் பெரிய பெரிய வேலையெல்லாம் செஞ்சுட்டான் சபாபதி. எங்களை ஒன்னுக்கும் ஆகாதவங்கன்னு முடிவு பண்ணிட்டான் அவன். எங்க வீட்டு பிள்ளை மேல கையை வைக்கவுமே அவனை பொளந்து இருக்கணும். எங்க பொண்ணு வெளியே வரட்டும்ன்னு நாங்க பொறுத்தா, அடுத்து என் வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு மேல கையை வைப்பானா?”

“வீட்டு பொம்பளைங்க மேல கைய வைக்கிற அளவுக்கு நீயும், உன் மகனும் தரம் தாழ்ந்து போய்ட்டிங்களா. வெட்கமா இல்ல? இனி உன் பையனை விட்டு வைக்கிறதா இல்ல. நீ எதுவா இருந்தாலும் சட்டப்படி பார்த்துக்க” என்றுவிட்டார் சொக்கநாதர்.

சொக்கநாதர் இத்துடன் முடிக்கமாட்டார் என்பது புரிய, சக்தியிடம் பேச முற்பட்டார் சபாபதி.

அவர் பேசுவதற்கு முன்பே, கையை உயர்த்தி அவரை தடுத்துவிட்டவன், “உன் மகனோட நல்ல நேரம் அவன் பொழைச்சுட்டான். ஆனா, எப்போதும் இப்படியே நடக்காது. பிள்ளையை பொறுப்பா பார்த்துக்கோ. என் அத்தை மக விஷயத்துல உன் மகன் எதுவும் செஞ்சு இருக்க கூடாதுன்னு பதினெட்டாம் படியான்கிட்ட நேர்ந்துக்க. அதை மட்டும் உன் மகன் செஞ்சிருக்கட்டும்… என் கையால தான் அவனுக்கு சாவு.” என்று கண்கள் சிவக்க கூறி வைத்தான் சக்தி.

“தம்பி” என்று அவர் மீண்டும் தொடங்க, 

“அப்படி என்னய்யா வெறி உன் மகனுக்கு? காதலிச்சா கூடப் பொறந்தவளையே வெட்டி வீச சொல்லுதா? இதுவும் நீ பெத்த பிள்ளை தானே. உன் மகன் வெட்ட வந்திருக்கான். முழுசா காயப்பட்டு நிற்கிறா. வந்தவன் ஒரு வார்த்தை அவளை விசாரிச்சியா? நீ எல்லாம் அப்பன். உன் மகன் அவளை கொன்னு போட்டு இருந்தாலும், நீ அவனை காப்பாத்த தான் துடிப்ப. நீ எல்லாம் எதுக்குய்யா உசுரை வச்சுட்டு இருக்க.”

“பெத்த மக தள்ளாடி நிற்கிறா. அதை பார்த்து கூட இரங்கல நீ. பிள்ளைக்கு வக்காலத்து வாங்குற. உன் மகனை உள்ளே வைக்கிறது தான் சரி. அவன் வெளியே இருந்தா அப்பனும் மகனும் சேர்ந்து மறுபடியும் இதையே தான் செய்விங்க. உள்ளே கிடக்கட்டும்” என்றுவிட்டான் சக்திவேல்.

அவன் பேச்சில் தேனருவி கலங்கி நிற்க, “அட… இந்தாளுக்காக எல்லாம் அழாதத்தா. நீ வா. எவன் வர்றான் நான் பார்க்கிறேன்” என்று விட்டான்.

சபாபதி நின்ற இடத்தில் நிற்க, “உன் மக வந்த அன்னைக்கே, என் தம்பியையும், அவன் பொண்டாட்டியையும் என் வீட்டுக்கு அழைச்சுட்டு போயிருப்பேன். சரி… பெத்தவன் கோபத்துல இருக்கான். கொஞ்சம் ஆறப் போடுவோம். அவன் இறங்கி வரட்டும்னு உன் கோபத்துக்கு நான் மதிப்பு கொடுத்தேன். ஆனா, நீயும் உன் மகனும் எங்களை கையாலாகாத ஆம்பளைங்கன்னு முடிவு பண்ணிட்டிங்க இல்ல. அவன் ஒருத்தன் போதும் உன் பிள்ளைக்கு. இனி தெரியும்” என்று சட்டையின் கையை மேலேற்றிக் கொண்டவன், “வாடா” என்று தன் தம்பியை பார்த்து கூறிவிட்டு காவல் நிலையத்தை விட்டு வெளியேறினான்.

வெற்றிவேல் சபாபதியை முறைத்தபடியே, அவர் மகளை அழைத்துக்கொண்டு வெளியேற, அவனைத் தொடர்ந்து சொக்கநாதரும், செண்பகப்பாண்டியனும் வெளியேறி இருந்தனர்.

சக்திவேல் மீது கண் துடைப்புக்கு மட்டுமே முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்க, அவன் தரப்பு வழக்கறிஞர் ஏற்கனவே ஜாமீனுக்கான வேலைகளை முடித்துவிட்டிருந்தார்.

சக்தி காருக்கு அருகில் காத்திருக்க, “நான் தோட்டத்து வீட்டுக்கே போறேன்” என்று நின்றான் வெற்றி.

சக்தி தன் தாத்தனைப் பார்க்க, “ஏன்டா அவன் தான் கூப்பிடறான் இல்ல. இன்னும் கொழுப்பு குறையல உனக்கு” என்றார் சொக்கநாதர்.

“சக்தி கல்யாணம் முடியட்டும் தாத்தா. பிறகு வர்றேன்” என்று அவன் ஒரே வார்த்தையில் வெற்றி முடிக்க,

“அப்போ இந்த ஜென்மத்துக்கு நீ வீட்டுக்கு வர முடியாது” என்ற சக்தி காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். அவன் சொக்கநாதருக்காக கூட காத்திருக்கவில்லை.

அவன் வார்த்தையில் வெற்றியும், சொக்கநாதரும் அதிர்ச்சியாகி நிற்க, வெற்றி தான் முதலில் தெளிந்தது. 

“என்ன நினைச்சுட்டு இருக்கான் இவன்? ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டானா?” என்று வெற்றி சொக்கநாதரிடம் கேட்க,

“அவனை யாருடா நிம்மதியா விடறீங்க? இப்போ என்ன செய்ய காத்திருக்கானோ தெரியல.” என்று புலம்பியவர், “வீட்டுக்கு வர்றியா இல்லையா” என்று நின்றார்.

“நீ அவன் பஞ்சாயத்தை முதல்ல பாரு தாத்தா. நான் பிறகு வர்றேன்.” 

“அதுதான் சொல்லிட்டாரு இல்ல. நீ வண்டியை எடுடா” என்று செண்பகப்பாண்டியனை அதட்டியவர், வேகமாக சென்று அவன் காரில் ஏறிக் கொண்டார்.

அவருக்கு இப்போது மற்ற எதையும் விட, பேரனின் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்து கொள்வது தான் கடினமாக இருந்தது.

அவர் பேரனை தேடி கிளம்பிய அதே நேரம், மதுரையை நெருங்கி கொண்டிருந்தாள் மீனாட்சி.

முத்தையா காரை செலுத்திக்கொண்டு இருக்க, “அப்பா… தாத்தா வீட்டுக்கு போங்க” என்றாள் மகள்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்க நம்ம வீட்டுக்கு போங்க. மீனு… அம்மா சொல்றதை கேளு. உடம்பு குணமாகாம, நீ எங்கேயும் போகக்கூடாது” என்று முடித்துவிட்டார் வள்ளி.

மீனுவுக்கு கண்கள் கலங்கிட, தன் உடல் நிலையை கணக்கில் கொண்டு கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.