தேன் சாரல் நீ 17. 1

  கீதாவின் தந்தையை தவிர அனைவரும் எழுதி கையெழுத்து இட்டுவிட்டு கிளம்ப ரெடியாக, அவர் தனியாக இருக்க பயந்து

     “சார் நானும் எழுதி…..” என மெதுவாக சொல்ல

    “ஏய் என்னைய என்னன்னு நெனச்ச, உங்க வீட்டு வேலைக்காரன்னா? நீயா மாப்பிள்ளைய காணாமுன்னு வருவ, கேஸ் போட்டதும், நானும் இனி எதுவும் பண்ணமாட்டேன்னு எழுதி குடுத்துட்டு போறேன்னு சொல்லுவ, இங்கிருக்க நாங்க எல்லாம் கேனையன்களா?”

   “ உக்காருய்யா. அந்த பையன என்ன பண்ணிங்க? மறைக்காம சொல்லு. உயிரோட இருக்கானா? இல்லை அப்பனும், மகளுமா சொத்துக்காக கொன்னு புதைச்சிட்டிங்களா? உண்மைய சொல்ற வரை இருக்குற இடத்தவிட்டு அசையகூடாது. கை, கால ஆட்டுனாகூட கை கால முறிசச்சிடுவேன்.”

    “பேப்பர்காரங்க வெளிய இருக்காங்க. யாராவது ஒருவர் போய் கூட்டிட்டு வாங்க.” என்ற இன்ஸ்பெக்டர்

    “ யாராவது இந்த ஆளோட பொண்ணு போட்டோ வச்சிருக்கிங்களா? இருந்தா ரிப்போர்ட்டர்கிட்ட குடுங்க. நாளைக்கு காலையில நியூஸ் பேப்பர்ல முத பக்கத்துல கொட்டை எழுத்துல  “கல்யாணம் ஆகி ஒரே மாசத்துல சொத்துக்காக கொழுந்தனை கொன்று புதைத்த அண்ணியும், அவளின் அப்பாவும்” அப்படின்னு போட்டோவோட வரனும். குடுங்க” என்று சொல்லி,

     “ நீங்களாம் அந்தாளோட எடுபிடிகள். உங்ககிட்ட போட்டோ இருக்காது. அந்தாள் பர்ஸ்ல பாருங்க வச்சிருப்பான். தேடிக்குடுங்க” என உடன் வந்தவர்களை ஏவ, அவர்கள் நான், நீ என மேலே விழுந்து தேடினர்.

  அதற்குள் ஒருவர் கேமரா, பேப்பர், பேனா சகிதமாக வர பதறிய கீதாவின் அப்பா, “ஐயோ சார், நாங்க அந்த பையன ஒன்னும் பண்ணல. எங்கூட பிறந்தவங்க ரெண்டு பேரு. நாங்க எல்லாம் ஒன்னா ஒரே வீட்டுல இருக்கோம்.”

  “ எனக்கு ரெண்டு பொண்ணு, ஒரு பையன். மொத தம்பிக்கு ஒரே பொண்ணு பேரு நிர்மலா. ரெண்டாவது தம்பிக்கு ஒரே பையன்.”

    “யேம் பொண்ணை என்னோட பெரியப்பா பேரனுக்கு கட்டி குடுத்தோம். என்னால முடிஞ்ச அளவு நகை, பணத்தை சீரா குடுத்தேன். “

    “நிர்மலாவுக்கு அவங்கப்பா சொத்து முழுசும் போகும். எம் பொண்ணால அத ஏத்துக்க முடியல.”

    “செல்லமா வளந்த எனக்கு நாற்பது பவுனு, ஐம்பதாயிரம் மட்டும் கொடுத்து அனுப்புவிங்க.”

   “ ஆனா அவளுக்கு மட்டும் ஏழு ஏக்கர் நிலம், அவங்கம்மா நகை, சித்தப்பா சேர்த்து வச்ச பணமுன்னு கோடீஸ்வரியா அனுப்புவிங்க அப்படின்னு கோவப்பட்டுச்சி”

    “யேந்தம்பி சொத்து முழுசும் நிர்மலாவுக்கு கொடுக்காம தனக்கே வேணுமுன்னு எம்பொண்ணு ஆசப்படுது.”

     “அதான் நிர்மலாவ படிக்க விடாம செஞ்சோம். இப்ப எம்பொண்ணோட கொழுந்தனுக்கு கட்டி வச்சி, அவங்க ரெண்டு பேருக்கும் விவரம் பத்தாதுன்னு சொல்லி எம்பொண்ணு பேருல சொத்த எழுதிடலாமுன்னுதான் திட்டம் போட்டோம் நானும், எம்பொண்ணும்.”

    “ஆனா இப்ப எங்கக்கா மகனையும் காணல. நானும் மாட்டிக்கிட்டேன்.”

    “எங்கக்கா மகனை நான் ஒன்னும் பண்ணல. என்னைய விட்டுடுங்க. எந்தம்பி பொண்ணு கல்யாணம் நின்னுடும். தயவுசெஞ்சி என்னைய விட்டுடுங்க” என காலில் விழுந்தார் அந்த பெரிய மனுசன்.

      “யோவ் பெரிய மனுசா! அந்த பொண்ணும் உனக்கு பொண்ணு தானயா? உன் தம்பி பொண்ணுதான்னாலும் அதும் உன் ரத்தம் தான? அதுக்கு துரோகம் பண்ண நினைச்ச நீயி, இந்த பையன கொன்னிருக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்? இவன் உன் மவளோட கொழுந்தன்தானே? பாசமா??? வளர்த்த பொண்ணையே சொத்துக்காக பலி குடுக்க நினைச்ச நீ கொலை பண்ணியிருப்ப. உன்ன என்னால விட முடியாது.  அந்த பையன் திரும்பி வரட்டும் அப்புறம் உன்னைய வெளிய விடறேன்.” என்றவர்

     “எப். ஐ. ஆரை இந்த ஆள் மேல போடுங்க” என்று சொல்லி செல்ல, அதற்குள் கீதா தன் அப்பாவை அழைத்தாள். அவர் இந்தப்பக்கம் “ஹலோ” என பேச ஆரம்பிக்கும்முன் பொரிய ஆரம்பித்தாள். அப்பனை பேசவே விடல.  இன்ஸ்பெக்டர் கண்காட்டவும் ஸ்பீக்கரில் போட

    “ஏம்பா அந்த கழுதைய நீங்களே போயி மாலை மரியாதையோடதான் கூட்டிட்டு வரனுமா? அம்மாவுக்கு நெஞ்சுவலி உயிர் ஊசலாடுதுன்னு யேன் மாமனார ரெண்டு தட்டுதட்டி கதற வச்சிருந்தா பதறி அடிச்சி ஓடி வரப்போறான். இதெல்லாம் கூட நாந்தான் சொல்லித்தரனுமா?”

     “அடிமையா, அடிமாடா போவ இங்க அந்த நிர்மலா மேக்கப் போட்டு கிளம்பி இருக்கா. இருக்குற நகையெல்லாத்தையும் உங்க தம்பி பொண்டாட்டி மகளுக்கு இன்னைக்கு பூட்டி இருக்கா. அவளோட நகையில ஒன்னை எனக்கு குடுத்திருப்பாளா? போடட்டும் இன்னைக்கு.”

    “யேம் மாமியாகாரிய தாஜா பண்ணி நாளைக்கு சாயங்காலமே யேன் கைக்கு வரவைக்கிறேன்.”

    “ நாளைக்கு சாயங்காலம் வரைக்கும் எதுக்கு காத்துக்கிட்டு இருக்கனும். பக்கத்துல ஏதாவது கவரிங் கடை இருந்தா நல்லா பளபளன்னு இருக்கிற மாதிரி ஒரு நாலு செட்டு வாங்கிக்கிட்டு வாங்க.”

   “நைசா கண்ணு பட்டுடும், தொலைஞ்சி போயிடுமுன்னு பேசி அத கழட்டி நான் வாங்கிக்கிட்டு இதை போட்டுவிட்டிடலாம். எங்கையாவது வச்சா பாதுகாப்பில்லைன்னு நானே போட்டுக்கிறேன். ஐடியாவ நான் குடுத்துட்டேன். நகை இன்னும் கொஞ்சநேரத்துல நீங்க வந்ததும் என் கைக்கு வந்திடனும் சொல்லிட்டேன்.”

     “ இனிமேல் தினமும் பட்டு சேலை, கழுத்து நிறைய நகையோட நானிருக்கிறத பாத்து ஆத்தாளுக்கும், மகளுக்கும் வயிரு எரியட்டும்.” என வஞ்சினத்தோடு பேசியவள்,

    “அப்பா நாளைக்கு காலையில நாம திட்டம் போட்டது போல கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்றேன்னு சொத்தை யேன் பேருல எழுத ரெடி பண்ணியாச்சுதானா? பத்திரமெல்லாம் எழுதியாச்சா? யாருக்கும் சந்தேகம் வராதே?  முக்கியமா யேன் புருஷனுக்கு?” என பேசிக் கொண்டே போக கீதாவின் அப்பாவிற்கு கிலி பிடித்தது.

    “எவ அவ? போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிறவன நகை வாங்கியார சொல்ற எடுபட்டவ? ஏன்டி படுபாவி நகை, பணமுன்னு யேன் அக்கா புருஷன ஜெயில்ல போட வழி பண்ணதுமில்லாம சொத்தும் வேணுமா உனக்கு?” என்று கூட வந்த எடுபிடிகளில் ஒன்னு குதிக்க இன்ஸ்பெக்டர் கண்காட்ட போலீஸ்காரர் ஒருவர் விட்டார் பளீரென ஒரு அறை. எல்லோரும் கப்சிப் ஆயினர்.

    கீதாவின் அப்பா கீதா பேசிக் கொண்டிருக்கும் போதே கட் செய்திருந்ததால், கீதாவுக்கு இவர்கள் போலீஸிடம் மாட்டியிருப்பது தெரியவில்லை.

   அவள் நிர்மலாவின் நகைகளை ஆசையாக பார்த்துக் கொண்டும், அதை தான் எப்படியெல்லாம் போடலாம் என யோசித்துக் கொண்டுமிருந்தாள்.

   சுசிலா கீதாவிடம் வந்து “கீதா கண்ணு, அப்பாவுக்கு போன் போட்டியா? எங்க வந்துகிட்டு இருக்காங்கலாம்? வீடு வர எவ்வளவு நேரமாகுமாம், ஆரத்தி கரைச்சி வைக்க கேக்கறாங்க…?” என்க

    “அத்தை அப்பாகிட்ட பேசினேன். ஆனா இதை கேக்கல. ஜெயன் சின்ன பையன். விளையாட்டுதனமா இருப்பான். பாத்து கூட்டிட்டு வாங்கன்னு சொன்னேன். இதோ இப்ப கேக்கறேன்.” என்று போனை எடுத்தாள்.

    “ச்சே இந்த ரெண்டுக்கும் ஆரத்தி ஒன்னுதான் குறை…. இந்த அத்தை வேற நேரங்காலம் தெரியாம உளறிக்கிட்டு இருக்கு.” என மனதுக்குள் திட்டிக் கொண்டே மறுபடியும் தன் அப்பாவுக்கு போனை போட்டாள்.

   எப்போதும் போல் எதிரிலிருப்பவர் யார்? என்ன சொல்கிறார்? என்பதை கவனியாமல்,

   “அப்பா கிளம்பிட்டிங்களா? கவரிங் நகை வாங்கிட்டிங்க தானே? அந்த கொழுப்பெடுத்த நாயி ஒன்னும் பிரச்சனை பண்ணலையே?” என்றவள்

    “உங்க அக்கா வேற என்னைய தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கு. எங்க வர்றாங்க? எப்ப வருவாங்க? ஆரத்தி ரெடி பண்ணவா?ன்னு. தாங்க முடியல அது சந்தோசத்த. வாழ வைக்கவா நாம கல்யாணம் பண்ணி வைக்கிறோம்? இத தெரியாம அந்த லூசு இங்கேயும் அங்கேயும் சுத்திக்கிட்டு கிடக்கு. சரி சீக்கிரம் வாங்க. அந்த நகைய நான் உடனே போட்டு பாக்கனும். புரியுதா?” என்க இன்ஸ்பெக்டர் லத்தியை எடுத்து எறிந்ததில் அந்த போன் கீழே விழுந்து சிதறியது.

   “யோவ் மாக்கானுங்களா! இதுல ஒருத்தனுக்கு கூட மனச்சாட்சி இல்லையா? இத தெரிஞ்சிதான் நீங்க எல்லாம் கூட வந்திங்களா? ஐய்யோ யேன் பொண்ணு வாழ்க்கைதான் இப்படி ஆச்சின்னா இன்னொரு பொண்ணுக்கும் இப்படியா?” என உள்ளே லாக்கப்பில் இருந்த ஒருவர் கதறி

    “இன்ஸ்பெக்டர் ஐயா!  நான் ஒரு கொலை பண்ணிட்டு இங்க வந்திருக்கேன். இப்ப வெளிய விடுங்க. இன்னும் ரெண்டு பேரை கொலை பண்ணிட்டு ஒன்னா சரண்டர் ஆயிடறேன். இந்தாளு, இந்தாளு பொண்ணால இன்னும் எத்தனை பேரு வாழ்க்கை கெட போவுதோ தெரியல?” என அழுதபடி கத்த

 கீதாவின் அப்பாவுக்கு அந்த கைதியை வெளியே விட்டு விடுவார்களோ, அவர் நம்மையும், நம்ம கீதாவையும் கொலை பண்ணிடுவாரோன்னு பயத்தில் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.

    “ஐய்யா என்னைய மன்னிச்சிடுங்க. நான் இந்த கல்யாணத்தை நிறுத்தி நிர்மலாவ காப்பாத்திடுறேன்” என காலில் விழ வர,

   “ யோவ் இருய்யா. பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப கால புடிக்கற. நான் எங்க ஆபீசர கேட்டுட்டு சொல்றேன்னு” போனை எடுத்துக் கொண்டு உள்ளே போய் ஈஸ்வரையும், விஜயனையும் தொடர்பு கொண்டு போச அவர்கள் ஒரு திட்டம் சொல்ல அதில் இருந்த சாதக பாதகங்களை அலசினர்.

   “ஓகே. பர்பெக்ட். ஈஸ்வரா அங்க இந்தாள் ஊருல யாருடா இன்ஸ்பெக்டரா யாரிருக்கா? நீ லீவுல இருக்கிறதால நான் இங்க உன் இடத்தில் வேலை பாக்கிறேன். அங்க இருக்கவங்க எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்களா?” என சந்தேகமா கேக்க

     “டேய் அங்க சதா இருக்கான்டா” என்க

   “சரி ஈஸ்வர் நீ உன்னோட கல்யாண வேலைய பாரு. நானும் சதாவும் இந்த கூட்டத்த ரௌண்டு கட்றோம்.” என்றவன் அந்த சதாவிடம் பேச, ஈஸ்வர் அவனுடன் ஏற்கனவே பேசி இருப்பதும், இனி செய்ய வேண்டியதும் முடிவானது. கடைசியாக சதா

   “டேய் சேகரு நிலைமைய பாத்தியா? ப்ரெண்டுக்கு ஹெல்ப் பண்ண காலம் போய் ப்ரெண்டோட ப்ரெண்டுக்கு ஹெல்ப் பண்ண திட்டம் போடறோம். சரி ஈஸ் கல்யாணம் மறந்துடாத. அப்புறம் அந்த குட்டி பிசாசு ஏன் வரலைன்னு வச்சி செய்யும்” என்றான். அவள் எதிர்காலத்திற்குதான் உதவுகிறோமுன்னு தெரியாமலே அண்ணன்கள் மூவரும் திட்டம் போட்டனர்.

    வெளியே வந்து “அந்த பையன் கிடைக்கிற வரை நீங்க எங்க பாதுகாப்புலதான் இருக்கனும். ஆனா அந்த பொண்ணு கல்யாணத்துல நீங்க கலந்துக்கனுமே என்ன செய்ய?”

   “ஒன்னு நீங்க இங்க இருக்கனும், இல்லையினா நாங்க யாராவது உங்களோட வரனும்? சரி உங்க ஊரு ஸ்டேஷன்ல எனக்கொரு வேலை இருக்கு நானே வர்றேன்” என்ற சேகர்,

   திட்டப்படி அவர்களுடன்  துப்பாக்கியுடன் சொல்ல அனைவருக்கும் உதறலெடுத்தது.

   ஊருக்கு வந்ததும் மண்டபம் செல்லாமல் போலீஸ் ஸ்டேஷன் செல்ல சொல்ல, கீதா அப்பாவோ

    “சார் தயவு செஞ்சி கல்யாணத்திற்கு போலாம்” என்க

    “ யோவ் நீயே கிரிமனல். கடத்தல்காரன். என்கிட்ட ஆடர் போடறயா? தட்டி தூக்கிடுவேன் பாத்துக்க” என்று சேகர் கோபமாக பேச, அதற்குள் ஸ்டேஷன் உள்ளிருந்து வந்த சதா,

   “ வாங்க சார். இப்போதான் எஸ்பி சார் போன் பண்ணாரு. நீங்களே பெர்சனலா இந்த கொலகார கும்பல கூட்டிட்டு வர்றதா. ஓகே சார். நான் இனி சார்ஜ் எடுத்துக்கிறேன். நீங்க கிளம்புறிங்களா இல்ல உங்க திட்டம் என்னன்னு சொன்னிங்கன்னா…..?” என்க

    “சார் தம்பி பொண்ணு, அக்கா பையன் ரெண்டு பேரை ஒரே டைம்ல முடிக்க ட்ரை பண்ணியிருக்காங்க. பையன கொன்னுட்டு காணோமுன்னு நம்மகிட்டையே நாடகமாடறாங்க, அதுவுமில்லாம பையன் என்னோட லிமிட்லதான் கடைசியா பாத்திருக்காங்க. ஸோ….” என்க

   “நீங்க சொல்ல வர்றது புரியுது. நீங்க எங்களோடவே இருந்து இந்த கல்யாணம் முடிஞ்சதும், இவனுங்கள அள்ளிட்டு போக போறிங்க. ஓகே சார். ஐ வில் ஜாயின் வித் யூ.” என வார்த்தைக்கு வார்த்தை சார் போட கடுப்பான சேகர் அவனை கடுமையாக முறைத்தான்.

    சேகர் விலங்கை சதாவிடம் கொடுக்க, அவன் கீதா அப்பாவிடம், “கைய நீட்டுய்யா.” என்க

    “சார் யேன் சொந்தகாரங்க முன்னாடி யேன் கைல விலங்கோட போனா மானம் போயிடும் சார். நான் எங்கேயும் போக மாட்டேன். உங்களோடவே உட்கார்ந்து இருக்கேன். இது மட்டும் வேணாமுங்க சார்” என கெஞ்ச

    “சார் ரெண்டு துப்பாக்கி இருக்கு. இந்தாளு பொண்ணப்பத்தி விசாரிச்சேன். அது நெல்லு மூட்டை போல இருக்குமாம். இந்தாளு ஓடினாலும் அது உருண்டு போறதுக்குள்ள நானு நாளு புல்லட்டாவது அத நோக்கி சுட்டுடுவேன். துப்பாக்கி சுடறதில்ல நீங்க சேம்பியன். அப்புறம் எதுக்கு கவலை வாங்க பாத்துக்கலாம்” என்க

  கீதாவின் அப்பா பயந்து கொண்டே வர, மண்டபத்தை அடைந்தனர்.

    கீதாவும், சுசிலாவும் வாசலிலேயே காத்திருந்தனர். கீதா நகை வாங்க பேராசையுடனும், தன் மருமகளின் ஆசைப்படி கல்யாணம் பண்ணப்போகும் தன் சின்ன மகனை எதிர்பார்த்தும் காத்திருந்தனர்.

  வந்ததோ  போலீஸுடன், வெறுங்கையுடன் வருபவரை பாத்த கீதா, உடன் வருபவர்களை பார்க்காமல், “நகை எங்கப்பா? புது டிசைன்ல எந்தங்கச்சிக்கு நகை வாங்கிக்கிட்டு வர சொன்னா வெறுங்கைய வீசிக்கிட்டு வர்றிங்க? இவ்ளோ கும்பல்ல நம்ம பாப்பா நெறய தங்க நகைய போட்டு இருந்தா கண்ணுபட்டுடுமுன்னு பாட்டி சொன்னாங்க. யாராவது நகைக்காக பாப்பாவ ஏதாவது செஞ்சிட்டா? போங்கப்பா உங்களுக்கு நம்ம பாப்பா மேல அக்கரையே இல்ல” என புலம்ப

    “ஹெல்லோ பேட் லேடி. நாங்க அவங்க நகை காணாம போகாம பாத்துக்க வந்திருக்கோம். நீங்க வாங்க. நீங்களும், உங்கப்பாவும் எங்களோடவே உட்காரனும். தெரியுதா?” என சதா துப்பாக்கிய எடுக்க,

    “அப்பா இவங்க இங்க எதுக்கு வந்திருக்காங்க? நகை பாதுகாப்புக்கா?” என்றவள் அப்போதுதான் ஜெயனை தேடினாள்.

    “அப்பா மாப்பிள்ளை, அதான் யேங் கொழுந்தன் எங்கேப்பா?” என விசாரிக்க

    “அத நீங்கதான் சொல்லனும் கீதா. எங்க புதைச்சிருக்கிங்க? கொலையில யாருக்கெல்லாம் பங்கிருக்கு? சொல்லுங்க” என சேகர் கடுமையாக கேக்க தடுமாறினாள் கீதா.

  “கொலையா? ஐய்யோ புள்ளையார புடிக்க குரங்கா முடிஞ்சிடுச்சே” என மனதுக்குள் பயரேகை ஓட ஆரம்பித்தது.