அத்தியாயம் 04

அந்த அதிகாலை நேரத்தில் மாதவபுரத்தை ஒட்டிய கடற்கரை பகுதியில் ‘நெட்’ கட்டி வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்களின் ஆரவாரம், ஹோ… என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடல் அலைகளின் சத்தத்தையும் மிஞ்சியதாக இருந்தது. காரணம், அவர்களோடு சேனாதிபதி வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தான்.

“அண்ணா… சூப்பர் ண்ணா. அண்ணா… அசத்தல் ஷாட் ண்ணா…” ஒவ்வொரு முறையும் சேனாதிபதியின் கைகளுக்கு பந்து சென்று, அவன் அதை மறுமுனைக்கு அடித்து விடும்போதெல்லாம் இளைஞர்களிடமிருந்து பாராட்டுதலாக இந்த வார்த்தைகள் வந்து விழுந்த வண்ணம் இருந்தது.

சார்.‌‌.. சார் என்று கேட்டு பழகிப்போயிருந்தவனின் காதுகளுக்கு, தன் கிராமத்து இளைஞர்கள் அழைத்த ‘அண்ணா’ என்ற வார்த்தையை கேட்பதற்கே மனதுக்கு இதமாக இருந்தது.

அடிப்படையில் சேனாதிபதி ஒரு வாலிபால் ப்ளேயர். பள்ளி, கல்லூரி காலங்களில் மாவட்ட அளவில் இருந்து, மாநில அளவில் வரை விளையாடச் சென்றிருக்கிறான். எனவே அவன் கைகளில் பந்து, அவன் சொன்னபடியெல்லாம் ஆடியது.

நேற்று எல்லோரையும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டு, சிகிச்சை நடந்து கொண்டிருந்த பாட்டிக்கு துணையாக, தாயுடன் மருத்துவமனையிலேயே தங்கிகொண்டான் சேனாதிபதி.

“கல்யாணம் ஆன அன்னைக்கே இரண்டு பேரும் இப்பிடி தனித்தனியா.‌. எனக்கு மனசு ஒத்துக்கவே இல்லை. மக்கா சேனா, நீ வீட்டுக்கு போயேன் ய்யா.” இரவு எட்டு மணிக்கு போல பாட்டி பூரணி, பேரனிடம் சொல்ல,

 “இதுக்கு மேல ஏதாவது சொன்னா, பாவ புண்ணியம் எல்லாம் பாத்துட்டு இருக்கமாட்டேன் பாட்டி.” பாட்டியின் கழுத்தை நெறிப்பது போல, சேனாதிபதி தன் கைகளைக் கொண்டு செல்ல, சட்டென்று கண்களை மூடிக்கொண்டார் பூரணி.

ட்ரைவர் ராஜை கன்னியாகுமரியில் நல்ல ஹோட்டல் ஒன்றில் ரூம் புக் செய்து தங்க வைத்திருந்தான் சேனாதிபதி. அவர் கையில் போதுமான அளவிற்கு பணத்தைக் கொடுத்து, “கன்னியாகுமரியை நல்லா சுத்தி பாருங்க ராஜ். நான் கூப்பிடும் போது வந்தா போதும்” என்று சொல்லி காரை மட்டும் கொண்டு வந்திருந்தான்.

காலையிலேயே எழும்பி தாயிடம் சொல்லிவிட்டு, காரில் வீட்டுக்கு வந்தவன், உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக ஒரு ஸ்போர்ட்ஸ் பனியனும், ஜெர்ஸியும் அணிந்து, காலில் ஸ்போர்ட்ஸ் ஷூ சகிதம் கடற்கரைக்கு வந்துவிட்டான். அந்த அளவிற்கு உடற்பயிற்சிக்கு அவன் வாழ்க்கையில் முக்கிய பங்கு உண்டு.

ஊரின் தென்எல்லையில் இருக்கும் கடற்கரை ஒரு பதினைந்து நிமிட நடையில் வந்துவிடும். ஆரம்பகாலங்களில் அந்த கடற்கரையை விளையாட்டு மைதானமாக உபயோகப்படுத்தியதே சேனாதிபதியும் அவன் நண்பர்களும் தான்.

சேனாதிபதியோடு, கைலாஷ், மாதவன், கார்த்திக் என்று இன்னும் மூன்று பேர் உண்டு. நால்வரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இதில் கைலாஷ் மட்டும் மாதவபுரத்துக்காரன். மற்ற இருவரும் அங்கிருந்து ஒரு ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அஞ்சுகிராமம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் நால்வரின் பொழுதும் இந்த கடற்கரையில் தான் விடியும். ஓட்டம், உடற்பயிற்சி, வாலிபால் விளையாட்டு என்று இந்த கடற்கரை மணலில் உருண்டு புரண்டுவிட்டு தான் கல்லூரிக்கே நால்வரும் ஓடுவார்கள்.

அவர்களின் அன்றாட செயலை அந்த கிராமமே உற்று நோக்கி கொண்டு தான் இருந்தது. எப்போது தங்கள் மண்ணின் மைந்தன் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றிருந்தானோ, அப்போதே அவனை பின்பற்றி மாதவபுரத்து இளைஞர்கள் உடற்பயிற்சிக்கு என்று கடற்கரையில் குவிய ஆரம்பித்து விட்டார்கள்.

ஆன்லைன் கேம்களில் தங்களைத் தொலைத்துக் கொள்ளாமல், இளைஞர்கள் இப்படி வெளியே வந்து விளையாடுவதும் நல்ல அறிகுறி தானே.

அதனால், அவர்கள் செயலை ஊக்குவிப்பதற்காக, அவர்களுக்கு விளையாடுவதற்கு தேவையான அத்தனை தளவாடங்களையும் தன் தந்தை மூலம் வாங்கி கொடுத்திருக்கிறான் சேனாபதி.

அப்படிப்பட்ட தங்கள் ஆதர்ஷ நாயகனை, இன்று நேரடியாக காணவும், தங்களோடு அவனை விளையாட அழைத்திருந்தார்கள் இளையவர்கள்.

சேனாதிபதியும் இளையவர்களுக்கு இணையாக உற்சாகமாகவே அவர்களோடு இணைந்து வாலிபால் ஆடிக்கொண்டிருந்தான்.

“ண்ணா… உங்க பாடி ஸ்ட்ரக்ச்சர் போல வரணும்னா என்ன செய்யணும் ண்ணா.” சேனாதிபதி அணிந்திருந்த ஸ்போர்ட்ஸ் உடையின் தயவால் உரமேறி விரிந்திருந்த அவன் மார்பையும், உருண்டு திரண்டிருந்த கை, கால்களையும் கண்டு, ஆர்வக்கோளாறில் இளையவன் ஒருவன் கேட்டான்.

“இதே மாதிரி டெய்லி ஒருமணிநேரம் விளையாட்டு, ஓட்டம்னு, ப்ராக்டீஸ் செய்தாலே போதும். தன்னாலே பாடி ஒரு ஷேப்புக்கு வந்துடும்.” மெல்லிய சிரிப்போடு பதில் சொன்ன சேனாதிபதி, வாலிபால் விளையாட்டின் நுணுக்கங்களையும் ஆட்டத்தின் நடுநடுவே இளைஞர்களுக்கு சொல்லிக்கொடுக்க, ஆர்வமோடு கேட்டுக்கொண்டார்கள் இளையவர்கள்.

“டேய்… மக்கா சேனா…” என்ற உற்சாக அழைப்பில் இளையவர்களிடமிருந்து கவனத்தை விலக்கி, திரும்பி பார்த்தான் சேனாதிபதி.

அங்கே, இரண்டு பைக்குகளில் வந்த கார்த்திக், கைலாஷ், மாதவன் ஆகிய மூவரும் பைக்கை அப்படியே கடல் மணலில் சரியவிட்டபடி, சேனாதிபதியை அழைத்துக் கொண்டே உற்சாகமாக ஓடிவந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு குறையாத உற்சாகத்தோடு அவர்களை எதிர்கொண்ட சேனாதிபதி, “எப்பிடிடா?” என்றான் மூவரையும் ஒன்றாக கண்ட ஆனந்தத்தில்.

“எல்லாம் நம்ம மிலிட்டரி தயவாலத்தான்.” கண்களைச் சிமிட்டி கைலாஷின் புறம் கையை நீட்டினான் கார்த்திக். கைலாஷ் இராணுவத்தில் பணிபுரிவதால் அவனை மிலிட்டரி என்ற கார்த்திக், நாகர்கோவில் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கியொன்றில் மேலாளராக இருக்கிறான்.

“நீ எப்போ ஊருக்கு வந்த?” கைலாஷிடம் தன் அடுத்தகட்ட விசாரணையை சேனாதிபதி தொடங்க,

 “யப்பா போலீஸு… நானும் நேற்று காலையில் தான் ப்பா வந்தேன். வரவும் எம்பொண்டாட்டி உங்க ஃப்ரெண்ட் வந்துருக்காங்கன்னு சொன்னா. உடனே இரண்டு பேருக்கும் போன் செய்து தகவல் சொன்னேன். பேங்க் மேனேஜராவது பக்கத்துல தான். ஆனா நம்ம டிஎஸ்பி தான் உன்னைப் பாக்குறதுக்காக திருச்சியில இருந்து ராத்திரியோட ராத்திரியா ட்ராவல் செய்து வந்துருக்காரு” என்றான் கைலாஷ், திருச்சி டிஎஸ்பி யான தங்கள் நண்பன் மாதவனைப் பார்த்து.

“ஏன் டா?” இவ்வளவு கஷ்டப்பட்டு வரவேண்டுமா என்ற ஆதங்கத்தில் மாதவனின் தோளில் கையைப் போட்டபடி கேட்டான் சேனாதிபதி.

“ம்ம்… ஒரு வருஷத்துக்கு முன்னாடி கார்த்திக் கல்யாணத்தப்போ நாம மீட் பண்ணுனதா ஞாபகம் ஏசிபி சார். அதான்.‌..” என்ற மாதவனின் பார்வை, அங்கே வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களின் மீது விழ,

“ஹேய்… நாம நாலுபேரும் சேர்ந்து விளையாடி எத்தனை வருஷமாச்சு. வாங்க டா ஒரு மேட்ச் போடலாம்” என்றபடியே விளையாடிக் கொண்டிருந்த இளையவர்களை நோக்கி நகர்ந்தான்.

அணிக்கு இருவராக பிரிந்து நால்வரும் இளையவர்களோடு விளையாட்டில் சேர்ந்து கொள்ள, அடுத்த அரைமணி நேரத்திற்கு அங்கே ஆரவாரத்திற்கு குறைவில்லாமல் இருந்தது.

பின்னர் நால்வரும், அங்கிருந்த வருங்கால இந்தியத் தூண்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லி, அவர்களிடமிருந்து விலகி கடற்கரை ஓரமாக நடக்க ஆரம்பித்தார்கள்.

 சற்று நேரத்தில் தாங்கள் வழமையாக அமரும் ஒற்றைப் பனைமரத்தைக் கண்டு அதை நோக்கி உற்சாகமாக ஓடத்தொடங்கினார்கள்.

“என்னடா இது, உங்கூடச் சேர்ந்து உன் வயிறும் குதிக்குது?” தங்களோடு சேர்ந்து ஓடிக்கொண்டிருந்த நண்பன் கார்த்திக்கின் இளம் தொப்பையைக் கண்டு மாதவன் கிண்டலடிக்க,

“ம்ம்… ஆமா, நானும் விளையாடும் போதே பார்த்தேன். இதையெல்லாம் மொதல்லயே கண்ட்ரோல் பண்ணிரணும் கார்த்திக். அப்புறம் கஷ்டமாகிடும்” என்றான் சேனாதிபதியும்.

“இது கல்யாண வயிறு மச்சான்ஸ். நீங்க கண்டுக்காதீங்க…” லேசான வெட்கத்தோடு கார்த்திக் சொல்ல,

“என்னது? நீ கன்சீவ் ஆகிட்டியா?! சொல்லவே இல்ல…” என்று வாயைப் பிளந்தான் மாதவன்.

நண்பனின் கேலியில் மற்றவர்கள் வாய்விட்டு சிரிக்க, “அடேய்… உன்ன…” என்று மாதவனின் கழுத்தை துள்ளிக் கட்டிக்கொண்டு, அவனோடு கடற்கரை மணலில் விழுந்து புரண்டான் கார்த்திக்.

“இப்படியே விட்டா, அப்படித்தான் ஆகிப்போகும் மச்சான். கொஞ்சம் சோம்பல் படாமல் எக்சர்சைஸ் பண்ணு” என்றபடி இருவரின் விளையாட்டு சண்டையை பிரித்துவிட்ட சேனாதிபதி, கால்களை நீட்டிக் கொண்டு கடற்கரை மணலில் அமர்ந்துவிட, மற்றவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

நால்வரும் அமரவும், வேகமாக ஓடிவந்த அலை ஒன்று அவர்களின் கால்களை நனைத்து செல்ல, இப்போது கூடுதல் புன்னகை அவர்கள் முகத்தில்.

“அப்புறம் மச்சான்… வழக்கமா நாமதான் கட்டம் கட்டி அக்கியூஸ்ட் எல்லாரையும் தூக்குவோம். ஆனா நேற்று, பாட்டி உன்னைப் பக்காவா தூக்கிடிச்சாமே, கைலாஷ் சொன்னான்.” வாய்கொள்ளா சிரிப்போடு நண்பனின் தோளோடு தன் தோளை இடித்தபடி கேட்டான் மாதவன்.

“ம்ப்ச் போங்கடா… இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் கிளம்பி வந்துருக்கவே மாட்டேன் தெரியுமா?” மானசீகமாக தான் எப்போதும் அணிந்திருக்கும் காக்கிச்சட்டையை கழற்றி வைத்துவிட்டு, அவர்களின் நண்பனாக பேச ஆரம்பித்தான் சேனாதிபதி.

 அவனையே புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருந்தவர்களின் முகங்கள், நண்பனின் பதிலில் சுருங்கிவிட, “ஏன்டா சேனா இப்படி சொல்லுற? நீ ஆசைப்பட்ட வாழ்க்கை தானே!” என்றான் கார்த்திக்.

“ஹ்ம்ம்… எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்பிடி கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்?” கைகள் இரண்டையும் பின்பக்கமாக நிலத்தில் ஊன்றியபடி கீழ்வானில் உதித்து மெல்ல மெல்ல மேலே செல்லத் தொடங்கியிருந்த சூரியனை பார்த்தபடியே சொன்னான் சேனாதிபதி.

இருபத்தைந்து வயதிலேயே ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, இன்று சென்னை ஏசிபி யாக வலம் வந்து கொண்டிருக்கும் தங்கள் நண்பனின் அலுத்துக் கொண்ட பாவனையைப் பொறுத்துக் கொள்ள முடியாத கைலாஷ், “நீ நினைக்கிற மாதிரி சுபாஷிணி ஒன்னும் மோசமான பொண்ணு கிடையாது சேனா. போன தடவை நான் ஊருக்கு வந்திருக்கும் போது, என்னைப் பார்த்து சிரிச்சா தெரியுமா?” என்றான் வேகமாக.

“ஆமா சேனா. எனக்கும் கூட, சுபாஷிணி, அவளா உன்னை அப்படி பேசியிருக்க மாட்டான்னு தான் தோனுது. எல்லாம் அவகூடவே ஒட்டிக்கிட்டு அலைஞ்சாளே அந்த குள்ளக் கத்திரிக்காவோட வேலையா தான் இருக்கும்” என்று, சுபாவின் மாமன் மகள் ரம்யா மீது பழியைத்தூக்கிப் போட்டான் மாதவன்.

சேனாதிபதிக்கும் சுபாஷிணிக்குமிடையே நடந்திருந்தவை அத்தனையும் இவர்கள் மூவருக்கும் தெரிந்திருந்தபடியால், சுபாஷிணியின் மீது தவறு இருக்காது என்று அவளுக்காக பரிந்து கொண்டு பேசினார்கள்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில், சேனாதிபதிக்காக மாமன் மகள் காத்திருக்கிறாள் என்ற செய்தி, கைலாஷின் மூலம் மாதவனுக்கும் கார்த்திக்கும் தெரியவர, அவளை தங்களுக்கு காட்டியே ஆகவேண்டும் என்று சேனாதிபதியை இருவரும் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

அதற்கேற்ப சுபாஷிணியும் ஊருக்கு வர, தன் வீட்டுக்கு வரும்படி நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான் சேனாதிபதி.

அவர்களும் பரந்தாமனின் ஷூட்டிங்கையும், அப்படியே சுபாஷிணியையும் பார்த்துவிட்டு வரலாம் என்று ஆர்வமாக வந்திருந்தார்கள்.

கன்னியாகுமரியில் நடந்த சூட்டிங்கில் இயக்குனரின் மருமகன், அவன் நண்பர்கள் என்ற ரீதியில் இராஜ உபச்சாரம் நால்வருக்கும் கிடைத்தது. அதை நன்றாக பயன்படுத்தி ஷூட்டிங்கை திகட்டத் திகட்ட பார்த்தவர்கள், சுபாஷிணியையும் பார்த்துவிடலாம் என்று மாதவபுரத்துக்கு வந்தால், அவளைக் காண்பதுவோ குதிரைக்கொம்பாக இருந்தது.

அப்படியே தப்பித் தவறி, தான் தங்கியிருந்த மாடி அறையை விட்டு கீழே சுபாஷிணி வந்தாலும் ‘வாம்மா மின்னல்’ ரீதியில் தாய்மாமன் மகள் ரம்யாவோடு சேர்ந்து கொண்டு கண்மூடி திறக்கும் முன் காணாமல் போயிருந்தாள்.

காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்துப்போன சேனாதிபதியின் நண்பர்கள், மறுநாள் வருவதாக விடைபெற்று சென்றார்கள்.

போகும் போது, “இதுக்கு மேலயும் உன்காதலைச் சொல்ல லேட் பண்ணாத சேனா” என்று நண்பனுக்கு அறிவுரை வேறு.

சேனாதிபதிக்கும் அந்த எண்ணமே இருந்ததால், மறுநாள் காலையில் பாட்டி வீட்டுக்கு பின்னால் இருந்த பெரிய மாமரத்துக்கு கீழே பிடித்து விட்டான் மாமன் மகளை.

“என்ன சுபா? அத்தானை மறந்துட்டியா என்ன? கண்டுக்கவே மாட்டேங்குற?” என்றவனின் குரலில் ஊருக்கு வந்ததிலிருந்து மாமன் மகள் தன்னைக் கண்டுகொள்ளாத ஆதங்கம் இருந்தது.

“இல்ல த்தான்… கொஞ்சம் வேலையா இருந்தேன். அதான்…” என்றவளின் கண்கள், அங்கிருந்து தப்பித்து செல்லும் நோக்கத்தில் அங்குமிங்கும் அலைபாய்ந்தது.

“சரி… போனது போகட்டும். இனிமேலாவது ஊருக்கு போற வரைக்கும் எங்கூட ஒழுங்கா பேசணும் சரியா?” என்ற சேனாதிபதி, “ரொம்ப… ரொம்ப அழகா இருக்குற சுபா” என்றான் தன்னை மறந்து.

சேனாதிபதியின் வார்த்தைகளில் திகைப்பூண்டை மிதித்தது போல திருதிருத்த சுபாஷிணி, “நான்… போறேன்” என்று அவசரமாக சொல்லியவள், அங்கிருந்து நகர முயன்றாள்.

“ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம்… இதை வாங்கிட்டு போ சுபா.” அவள் முன்னால் வந்து போகவிடாமல் தடுத்தவன், தன் முதுக்குப்பின்னால் மறைத்து வைத்திருந்த வலது கையிலிருந்த ஒற்றை சிகப்பு ரோஜாவையும், அதோடு சேர்த்து வைத்திருந்த வாழ்த்து அட்டையையும் சுபாஷிணியிடம் நீட்டினான்.

“என்… என்னது?” வாங்க மறுத்தவளின் வார்த்தையோ தந்தியடித்தது.