ஆனால் அதற்கான வயது இது அல்ல என்று புரிய “என்னை சைட் அடிக்காம ஒழுங்கா ஊதி கொடு டா. இன்னும் அவ்வளவு இருக்கு”, என்று சிரித்த படி சொல்ல “டிரஸ் நல்லா இருக்குன்னு தான் சொன்னேன். உடனே இவளை சைட் அடிக்கிறங்கலாமா? அவ்வளவு எல்லாம் உனக்கு சீன் இல்லை. மொக்கை பீஸ் டி நீ”, என்று வேறு கலாய்க்க அவள் அவனை முறைக்க என்று அவர்கள் நேரம் நன்றாக சென்றது.

பார்த்திபன் புதிதாக தந்தை வாங்கிக் கொடுத்த போனில் சிம்மை போட்டு அதில் என்ன என்ன இருக்கிறது என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்ததால் வெளியே நடப்பதை கவனிக்க வில்லை.

சற்று நேரத்தில் அவர்கள் ஆர்டர் கொடுத்திருந்த வண்டியும் வந்து விட கோமளம் மங்கைக்கு அழைத்து வரச் சொல்லி இருந்ததால் அவளும் வந்து விட்டாள்.

அதுவும் வந்ததும் அணிந்திருந்த சுடிதாரை கலைந்து விட்டு சேலை கட்டி பூ வைத்து புது பெண் போல மிதமான அலங்காரத்தில் வேறு இருக்க லதாவுக்கு குழப்பமாக இருந்தது.

இப்போது வரை நந்தன் மற்றும் லதாவிடம் அவர்கள் மங்கை திருமண விஷயம் பற்றி பேசி இருக்க வில்லை. வேண்டும் என்று சொல்லாமல் இருக்க வில்லை தான். ஆனால் அவர்களுக்கு தெரியாது.

நந்தனும் அந்த நேரம் வேலை முடிந்து வந்து விட அன்னையும் தங்கையும் கிளம்பி இருப்பதை பார்த்து அவர்களை கேள்வி கேட்க எண்ணினாலும் மனைவி முகத்தை மட்டுமே பார்த்தான்.

லதா தனக்கும் தெரியாது என்பதாய் உதட்டைப் பிதுக்க அப்போது அங்கே வந்த கவின் “அம்மா வாங்க, அப்பா கூப்பிட்டாங்க”, என்றான்.

“இரு டா வறோம்”, என்று அவனிடம் சொல்லி விட்டு மங்கை புறம் திரும்பி “மங்கை நீ வாங்கின கிப்ட் மறக்காம எடுத்து வச்சிக்கோ”, என்றாள் கோமளம்.

அன்னையிடம் கேட்க மனதில்லாமல்  அதே நேரம் ஆர்வத்தையும் தடுக்க முடியாமல் “கவின் இங்க என்ன டா நடக்குது?”, என்று கேட்டான் நந்தன்.

“அது பார்த்தி மாமாவுக்கு பிறந்த நாள். அதான் அங்க போறோம். உனக்கு தெரியாதா அண்ணா?”

“எது பார்த்தி மாமாவா?”, என்று அவன் அதிர “ஆமா மங்கை அக்காவை பார்த்தி மாமாவுக்கு தான் கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க”, என்று சொல்ல அவனுக்கு அதிர்ச்சி தான். கூடவே இவ்வளவு பெரிய விஷயத்தை கூட தன்னிடம் சொல்லலையே என்று மனம் வருத்தமாக இருந்தது.

“என்ன மா இதெல்லாம்?”, என்று அன்னையிடமே நேரடியாக கேட்டு விட்டான்.

“என்ன என்ன?”, என்று அவனை முறைத்த படி கேட்டாள் கோமளம்.

மங்கைக்கோ பார்த்திபனைக் காண வேண்டும் என்ற பரபரப்பு இருக்க “இப்ப தான் இந்த அண்ணன் இது பத்தி பேசனுமா?”, என்று இருந்தது.

“என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம இவ்வளவு பெரிய முடிவு எடுத்துருக்கீங்க மா”

“எங்களுக்கு மங்கை கல்யாணம் நல்ல படியா முடியனும். எந்த பிரச்சனையும் வரக் கூடாது. அதனால இதை யார் கிட்டயும் சொல்லலை”, என்றாள் கோமளம்.

“நான் யாரோவா மா?”

“நீ அப்படி தானே நடந்துதிட்ட?”

“நான் பண்ணினது தப்பு தான். அதுக்குன்னு என்னை ஒதுக்கி வைப்பீங்களா?”

“நானா ஒதுக்கலை. நீயா ஒதுங்கி கிட்ட, அவளோட அண்ணனா ஏதாவது செஞ்சிருந்தா நாங்களும் சொல்லியிருப்போமோ என்னவோ?”

“தப்பு தான். இனி அப்படி நடந்துக்க மாட்டேன். எனக்கு கஷ்டமா இருக்கு மா”, என்று வேதனையாக அவன் சொல்ல அதற்கு மேல் கோமளமும் மகன் மீது கோபத்தை இழுத்து பிடித்து வைக்க வில்லை.

“சரி விடு டா. இப்ப என்ன? நல்ல விஷயம் தான நடந்திருக்கு? பார்த்தி மாதிரி ஒரு மாப்பிள்ளை உன் தங்கச்சிக்கு கிடைப்பானா? அவரை விட நல்ல மாப்பிள்ளை நீ பாத்துருவியா?”, என்று கேட்க நந்தன் எப்படி ஆம் என்று சொல்லுவான்? அவனுக்கு தான் பார்த்தியை பற்றி முன்பே தெரியுமே. அவன் குணம் யாருக்கும் வராது என்று.

“இங்க பாரு நந்து உறவு அப்படிங்குறது கண்ணாடி பாத்திரம் மாதிரி ஒரு முறை உடைஞ்சு போச்சுனா அதை ஒட்ட வச்சா கூட பழைய அழகு வராது. உன்னோட சம்பாத்தியத்தை உன் தங்கச்சிக்கு கொடுன்னு நாங்க கேக்கலை. ஒரு அண்ணனா அவளுக்கு ஆறுதலுக்கு இருன்னு தான் சொல்றோம். இந்த விஷயத்தை உன் கிட்ட நாங்க வேணும்னு சொல்லாம இருக்கலை. இன்னும் எந்த முடிவும் பண்ணலை. சும்மா பேசிப் பாக்கலாம்னு தான் யோசிச்சோம். என்னமோ உனக்கு தெரியாம பேசி எல்லாம் முடிச்சிட்டோம்ன்னு எல்லாம் நினைக்காத. இப்பவும் என் மகன் அப்படிங்குறது உண்மைனா உன் பொண்டாட்டி பிள்ளைகளை கூட்டிட்டு அங்க வா”, என்று சொன்ன அன்னை மகள் மற்றும் இளைய மகனுடன் பார்த்தி வீட்டுச் சென்றாள்.

அவர்கள் போனதும் பழக்க தோஷத்தில் “பாத்தீங்களாங்க, உங்க வீட்ல எவ்வளவு பெரிய விஷயத்தை நம்ம கிட்ட இருந்து மறைச்சிருக்காங்க”, என்று லதா கேட்டது தான் தாமதம் சப்பென்று ஒரு அறையை அவள் கன்னத்தில் வைத்திருந்தான் நந்தன்.

ஏனோ இப்போது தான் அவனைப் பார்க்க அக்மார்க் ஆண் என்பது போல இருந்தது. ஏனென்றால் பல கணவர்கள் வீட்டில் பிரச்சனை என்றாலும் அலுவலகத்தில் பிரச்சனை என்றாலும் அதை காண்பிப்பது மனைவியிடம் தானே? இப்போதும் தாய் தந்தை மீது இருக்கும் கோபம் கை வழியாக மனைவி கன்னத்தில் இறங்கி இருந்தது.

“நானே கடுப்புல இருக்கேன். தேவையில்லாம ஏதாவது பேசி வாங்கிக் கட்டிக்காத. அச்சுவை கிளப்பி நீயும் கிளம்பு, சீக்கிரம்”, என்று சொன்னவன் உள்ளே செல்ல கண்களில் நீருடன் மகனை கிளப்பி தானும் கிளம்பினாள் லதா.

கயல் மற்றும் கவின் இருவரும் அலங்காரம் செய்து கொண்டிருக்க கோமளம் மற்றும் மங்கை இருவரும் கேக் மற்றும் சிற்றுண்டிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு தகப்பன்களும் சேரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே வண்டி வேறு வெளியே வந்து நின்றிருந்தது. அப்போது நந்தன் குடும்பத்துடன் வர உண்மையிலே அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. சேது அவர்களை வரவேற்க தயக்கத்துடன் தந்தை அருகில் சென்று அமர்ந்தான் நந்தன்.

பலூனைக் கண்டதும் அஸ்வின் கயல் அருகே ஓடிச் செல்ல லதாவும் கணவன் அருகே அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

டிவி நியூஸ் வேறு கொஞ்சம் சத்தமாக ஓடிக் கொண்டிருந்ததால் உள்ளே இருந்த பார்த்திபன் அதை கவனிக்க வில்லை. அது மட்டும் அல்லாமல் அன்று முழுவதும் அலைந்ததால் அவன் லேசாக தூங்கி இருந்தான்.

“கயல் மாப்பிள்ளையை கூட்டிட்டு வா மா. கேக் கட்ட பண்ணிறலாம்”, என்றாள் கோமளம்.

“கயல் தான் கூப்பிடணும்னு இல்லை தங்கச்சி. எங்க வீட்டு மருமகளும் அவனை கூப்பிட போகலாம்”, என்று சொன்னார் சேது.

மங்கை தயக்கமாக தந்தையைப் பார்க்க “இதுல என்ன இருக்கு? போய் மாப்பிள்ளையை கூட்டிட்டு வா டா”, என்றார் சந்திரன்.

சிறு தயக்கம் மற்றும் ஆர்வத்துடன் உள்ளே சென்றாள் மங்கை. அவளும் இந்த தனிமைக்காக தானே ஆவலாக எதிர் பார்த்தாள். தனியே அவனுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் போல இருந்தது.

அவள் உள்ளே சென்ற போது சாரம் மற்றும் ஒரு கையில்லாத வெள்ளை பனியனுடன் குப்புற படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் பார்த்திபன்.

தொடரும்..