அத்தியாயம் 02

சென்னை மாநகரை விட்டு வெளியே வந்திருந்த அந்த ஸ்கார்பியோ, தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தது.

கன்னியாகுமரியை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச் சாலையாக இருக்கவே, வில்லிருந்து புறப்பட்ட நாணாக, எந்த இடையூறும் இன்றி இருட்டைக் கிழித்துக்கொண்டு தன் இலக்கை நோக்கி பறந்து கொண்டிருந்தது அந்த வாகனம்.

சேனாதிபதி தன் இடது கையிலிருந்த டிஜிட்டல் வாட்சில் நேரத்தை பார்த்தான். அதுவோ இரவு ஒன்பது மணி முடிந்து பதினைந்து நிமிடங்கள் ஆகிவிட்டது என்று சொல்லியது.

“ராஜ், உங்களுக்கு எப்போ டயர்ட்டா ஃபீல் ஆனாலும் தயங்காமல் எங்கிட்ட சொல்லிடணும். நான் ட்ரைவ் பண்ணுவேன், நீங்க ரெஸ்ட் எடுத்துக்கலாம்” என்று ட்ரைவரிடம் சொல்லிய சேனாதிபதி, “அடுத்ததா வர்ற நல்ல ஹோட்டல்ல நிறுத்துங்க, சாப்பிட்டுக்கலாம்” என்றும் சொன்னான்.

“சரி சார்” என்றபடி பாதையில் கவனத்தை வைத்தார் ட்ரைவர் ராஜ்.

இதுதான் சேனாதிபதி. தனக்கு கீழ் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களிடம் வரை எந்த வேறுபாடும் காட்டாமல் பழகும் குணம் அவன் தனிச்சிறப்பு.

பணியில் இருக்கும் போது, குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், பொதுமக்களிடம் மனித நேயத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் அவனது கோட்பாடு.

அரசன் எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே என்பது போல, சேனாதிபதிக்கு கீழே பணிபுரியும் காவல்துறை அலுவலர்களும் கூட, தங்கள் தலைவனின் அணுகுமுறையைத் தான் பின்பற்றினார்கள்.

தாத்தாவையும் அப்பாவையும் போல, தானும் சீருடைப் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே சேனாதிபதியின் நெஞ்சில் விதையாக விழுந்து விட, அதற்கு விடாமுயற்சி என்னும் நீர்பாய்ச்சி, ஐபிஎஸ் என்னும் கனியை சேனாதிபதி அறுவடை செய்யும் போது, அவனுக்கு வயது இருபத்தைந்து.

 ஒருவருட பயிற்சிக்குப் பிறகு, தர்மபுரி, திருப்பூர், கோபிச்செட்டிப்பாளையம் என்று மாறி மாறி மூன்று வருடங்கள் ஏஎஸ்பி யாக பணியாற்றினான் சேனாதிபதி.

ஐபிஎஸ் தேர்வில் தேசிய அளவில் சேனாபதி பெற்றிருந்த சிறப்பான தரவரிசையின் காரணமாக, தமிழ்நாட்டுக்குள்ளேயே அவனுக்கு ஏஎஸ்பி யாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

தான் பணியாற்றிய மாவட்டங்களில் எல்லாம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், அவற்றிற்கு கிடைத்த வெற்றிகளும் சேர்ந்து, இதோ‌.. சேனாதிபதியை சென்னை மாவட்ட சட்டம் ஒழுங்கு ஏசிபி ஆக்கிவிட்டது.

அவனது துணிச்சலான நடவடிக்கைகளாலும், அதிரடிச் செயல்களாலும் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மனதில் எந்த அளவிற்கு வேகமாக இடம்பிடித்தானோ, அதே அளவிற்கு எதிரிகளையும் சம்பாதித்து தான், வைத்திருக்கிறான் ஏசிபி சேனாதிபதி.

கார் இப்போது எதிர்பாராமல் ஒரு வேகத்தடையில் ஏறியிறங்கியதில் லேசாக குலுங்கியது. “பாத்து ராஜ்… பின்னாடி தூங்குறாப்ல.” தன்னை மறந்து சேனாதிபதியிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்திருந்ததோடு, இயல்பாக பின்பக்கம் திரும்பியும் பார்த்திருந்தான்.

தூக்கத்திலேயே இருக்கையைப் பற்றி தன்னை நிலைபடுத்திக் கொண்டு மறுபடியும் தூங்க ஆரம்பித்திருந்தாள் சுபாஷிணி.

காருக்குள் இருந்த மெல்லிய வெளிச்சத்தில் சுபாஷிணியின் மாசுமருவில்லாத முகத்தை ஒருநிமிடம் ஆழ்ந்து பார்த்தான் சேனாதிபதி. நெற்றியில் ஒட்டப்பட்டிருந்த சிறிய கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு பளிச்சென்று இவன் கண்களில் விழுந்தது.

அதைத்தொடர்ந்து, என்னைப் பார் என் அழகைப் பார் என்பது போல, எதிரே வந்த வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சத்தின் பின்னணியில், சேனாதிபதியைப் பார்த்து தைரியமாக கண்சிமிட்டியது பெண்ணவளின் மூக்குத்தி.

அதைப் பார்த்தவனுக்கு மூச்சடைத்தது. சட்டென்று பார்வையை விலக்கி கொண்டவனுக்கு, “பாட்டிம்மா… உங்களை மாதிரியே எம்பொண்டாட்டியும் மூக்குத்தி போட்டுக்கணும்னு எனக்கு ஆசை. உங்க பேத்தி கிட்ட நான் சொன்னேன்னு மூக்குத்தி போடச் சொல்லுங்க.” எம்ஏ சோஷியாலஜி முதல் வருடம் படிக்கும் போது மாமனின் வீட்டுக்கு சென்ற பாட்டியிடம், தான் சொல்லிவிட்ட வார்த்தைகள் ஞாபகத்திற்கு வர, சுர்ரென்று கோபம் ஏறியது சேனாதிபதிக்கு.

 ‘செய்யவேண்டியதை எல்லாம் சிறப்பா செய்துட்டு, இப்போ எதுக்கு இந்த நடிப்பு?’ என்று, சுபாஷிணியைப் பார்த்து கோபமாக முணுமுணுத்துக் கொண்டது அவன் இதயம்.

‘வேண்டாம், எதையும் நினைக்காதே மனமே’ என்று சேனாதிபதி தன் மனதிற்கு கட்டளை இட்டாலும், காயத்தை ஏற்படுத்தியவளின் அருகாமையில், ஒன்றன் பின் ஒன்றாக அந்த நாளின் நினைவுகள் எல்லாம் திமிறிக்கொண்டு ஊர்வலம் வரத்தான் செய்தது.

அனுமதி இல்லாமல் ஊர்வலம் நடத்துபவர்களை அடக்க தெரிந்த ஏசிபி க்கு, தன் அனுமதி இல்லாமலேயே ஊர்வலம் போகும் நினைவுகளை கட்டுப்படுத்த வழிதெரியாது கண்மூடி சீட்டில் அமர்ந்திருந்தான்.

இன்று, அத்தான் என்று தன்னை சுபாஷிணி அழைத்ததும் தீப்பார்வை பார்த்தவன், எத்தனை நாட்களோ, “அத்தான்னு கூப்பிடு சுபா” என்று சுபாஷிணியிடம் சொல்லி, அவள் கூப்பிடுவதில் புளகாங்கிதம் அடைந்தும் இருக்கிறான்.

எல்லாம் ஒரு காலகட்டம் வரைக்கும் தான். அதன் பின்னர் அத்தனையும் தலைகீழாக மாறிப்போனது.

பூரணி அம்மாவின் மகனும், சேனாதிபதியின் தாய்மாமனுமான பரந்தாமனின் கனவு, இலட்சியம் எல்லாம் திரைப்படத்துறையில் இயக்குநராக வேண்டும் என்பதே.

அதற்காகவே அவர் தாயின் ஆசையை மறுத்து சென்னை மாநகரை தஞ்சமடைந்தது. அப்படி இப்படி என்று கஷ்டப்பட்டு, சென்னைக்கு வந்த சில வருடங்களில் உதவி இயக்குனராகி இருந்தார் பரந்தாமன்.

அதன் பிறகு சில வருடங்களில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க, அவரது முதல் படமே வெற்றிப் படமாகவும் அமைந்தது.

 தான் வந்த காரியம் வெற்றியடையாமல் வீட்டுக்கு திரும்ப போவதில்லை என்ற எண்ணத்தில், சென்னையே தஞ்சமென கிடந்த மனிதர், படம் வெற்றியடையவும், அத்தனை வருடத்தில் முதன்முறையாக ஊருக்கு வந்திருந்தார்.

அதுவும், தனியாக ஒன்றும் வரவில்லை. தான் காதலித்த விசாலியையும் திருமணம் செய்து, கூடவே அழைத்துக் கொண்டு வந்திருந்தார். விசாலி ஒரு துணை நடிகை. விசாலியின் தாயாருமே அந்த காலத்தில் ஒரு துணை நடிகையாக இருந்தவர் தான். விசாலியின் அண்ணன், துணை நடிகர்களை ஏற்பாடு செய்யும் ஒரு ஏஜெண்ட்.

மகனின் வெற்றியில் மகிழ்ந்திருந்த பூரணி அம்மாவிற்கு, தன்னிடம் சொல்லாமலேயே திருமணத்தை முடித்துக்கொண்டு வந்து நின்ற மகனின் செயல் பெருத்த ஏமாற்றத்தையேக் கொடுத்தது.

 பலவருடங்களாக ஊர்பக்கமே வராத மகனுக்கு, தங்கள் ஊர்பக்கமாக உள்ள ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தாலாவது, ஊரோடான அவனது பிணைப்பு குறைந்து போகாது என்ற எண்ணத்தில் இருந்தவருக்கு, மகனின் செயல் ஏமாற்றத்தை கொடுக்காமல் என்ன செய்யும்?

என்றாலும், மகனின் விருப்பம் அந்த பெண்ணாக இருக்கும் போது, நாம் என்ன செய்ய முடியும்? என்று தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டார் பூரணி.

தன்தொழிலும், மனைவியின் விருப்பமும் சென்னையில் இருக்க, வந்த மறுநாளே பரந்தாமன் கிளம்பியும் சென்றிருந்தார். ‘இனி மகனோடான உறவு அவ்வளவு தானோ?’ என்ற எண்ணம் அந்த வயதானவரின் மனதில் அப்போது எழுந்ததை தவிர்க்கவே முடியவில்லை.

அடுத்த பத்தாவது மாதமே பரந்தாமன் தம்பதியருக்கு சுபாஷிணி பிறந்தாள். தகவல் அறிந்ததும் ஆறுவயது பேரன் சேனாதிபதி, மகள் தமிழரசி சகிதம் பேத்தியைப் பார்க்கச் சென்னைக்கு சென்ற பூரணி, மகனைத் தங்களோடு சேர்த்திழுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினார்.

ஆம்… பன்னீர்ரோஜா பூ வுக்கு கை கால் முளைத்தது போல தொட்டிலில் கிடந்த தன் பேத்தியைத் தூக்கி கொஞ்சித் தீர்த்தவர், சிறு பொம்மை போல கையைக் காலை ஆட்டியபடி இருந்த குழந்தையை, ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த சேனாதிபதியின் மடியில் வைத்து, “உன் வருங்கால பொண்டாட்டியை கவனமா பிடிச்சுக்கோ பேராண்டி” என்று சொல்லியிருந்தார்.

அதாவது, என் பேரனும் பேத்தியும் தான் வருங்கால மணமக்களாக வேண்டும் என்ற தன் ஆசையை மகனிடம் அந்த இடத்திலேயே சொல்லியிருந்தார்.

தாயின் வார்த்தைகளில் பரந்தாமனுக்கு முகமெல்லாம் புன்னகையே. ஆனால், அவர் மனைவி விசாலி, “இப்பவே இது என்ன பேச்சு?” என்று அப்போதே தன் அதிருப்தியை பதிவு செய்திருந்தார்.

‘பொண்டாட்டி’ என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியும் வயதா அது? இருந்தாலும், ‘தனக்கு மட்டுமே அந்த அழகு பொம்மை சொந்தம் என்று பாட்டி சொல்கிறார் போலும்’ என்ற சந்தோஷத்தில் வேகமாக தலையாட்டி வைத்தான் சிறுவன் சேனாதிபதி.

அதன் பிறகு வந்த நாட்களிலும் மகனை அப்படியே விட்டுவிடவில்லை பூரணி. வருடத்திற்கு ஒருமுறை எப்படியாவது குடும்பத்தோடு மகனை ஊருக்கு வரவைத்து விடுவார். அது பெரும்பாலும் சித்திரை மாதம் தங்கள் குடும்பக்கோவில் திருவிழா நாளாகிப்போனது.

பரந்தாமனுக்கும் ஒருமுறை கோவிலுக்கு வந்துவிட்டு போய் தொடங்கிய படம் ஒன்று சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, அதன்பிறகு வருடந்தோறும் தாய் அழைப்பதற்கு முன்னே ஊருக்கு செல்ல மனிதர் தயாராகிவிடுவார்.

 ஆக, விசாலிக்கு விருப்பம் இல்லை என்றாலும் வருடத்தில் ஒரு ஐந்து நாட்கள் மாதவபுரத்தில் தங்கவேண்டிப் போனதென்னவோ நிஜம்.

அந்த நாட்களில் சிறுவன் சேனாதிபதி சிறுமி சுபாஷிணியோடே இருப்பான். அவளுக்கு விளையாட்டு காட்டுவது, அவளோடு விளையாடுவது, நண்பர்களோடு தான் விளையாடும் இடங்களுக்கு அவளைக் கூட்டி செல்வது என்று சுபாஷிணி வளர வளர சேனாதிபதியின் செயல்களும் வருடந்தோறும் மாறிக்கொண்டே இருந்தது.

சிறுவயதில் சுபாஷிணியிடம் சேனாதிபதியை அத்தான் என்று பூரணி சொல்லிக் கொடுக்க, அதற்கும் கூட மறுப்பு தெரிவித்தார் விசாலி. இங்கிருக்கும் போதெல்லாம் சேனாதிபதியை அத்தான் என்று சொல்லி அழைக்கும் சுபாஷிணி, ஊருக்கு போய்விட்டு அடுத்த வருடம் வரும் போது அத்தான் என்ற வார்த்தையை மறந்துவிட்டு வருவாள்.

அதன்பிறகு சேனாதிபதி சொல்லிக் கொடுப்பான். தன்னோடு பந்து விளையாடும், தன்னை தோள்களில் உப்பு மூட்டை சுமக்கும் தோழனின் முகம் வாடிப்போவது பொறுக்காமல் சுபாஷிணியும் அவன் சொல்லிக் கொடுக்கும் வார்த்தையை அப்படியே பிடித்துக் கொள்வாள்.

மருமகள் என்ன சொன்னாலும், ‘உன்பொண்டாட்டி’ என்ற அடைமொழியோடு பேத்தியைப் பற்றி பேரனிடம் பேசுவதை மட்டும் பூரணி நிறுத்தவேயில்லை.

சிறுவயதிலேயே கேட்ட அந்த வார்த்தை, சேனாதிபதியின் மனதில் பசுமரத்தாணியாக பதிந்து போக, தன் பருவ வயதில், இவள் எனக்கானவள் என்ற எண்ணம் அழுத்தமாக வேரூன்றி கிளைபரப்பி நின்றது அவனிடம்.

எல்லாம் சுபாஷிணி ஏழாம் வகுப்பு படிக்கும் வரைக்கும் தான். அதன்பிறகு மகள் வயதுக்கு வந்ததை காரணம் காட்டி, விசாலி மாதவபுரத்திற்கு வர மறுக்க, பரந்தாமனுக்கும் தன் திரைத்துறை வாழ்க்கையில் நடந்திருந்த சரிவுகள் ஊரைப்பற்றி சிந்திக்க விடாமல் செய்திருந்தது.

அதன்பிறகு வந்த நான்கு வருடங்கள், பரந்தாமன் குடும்பத்தின் வருகையின்றியே மாதவபுரத்தில் இவர்களின் சித்திரைத் திருவிழா முடிந்திருந்தது.

பூரணி தான், மனது கேளாமல் அவ்வப்போது சென்னைக்கு சென்று மகனின் குடும்பத்தை பார்த்துவிட்டு வருவார்.

பேரனை சென்னைக்கு தன்னோடு அழைத்தால், சுபாஷிணி வயதுக்கு வந்த சமயத்தில் இவர்கள் சென்றபோது, அண்ணனின் மனைவி தங்களிடம் நடந்து கொண்ட முறையைச் சொல்லி, மகனை அனுப்ப மறுத்துவிடுவார் தமிழரசி.

எப்போதும் தன்னோடு ஒத்துப்போகும் மகளும், அண்ணன் மனைவியின் செயலில் முறுக்கி கொள்ள ஆரம்பிக்கவும், தன் ஆசை நிறைவேறாதோ என்ற பயம் ஏற்பட்டது பூரணி அம்மாவுக்கு.

அவரின் கவலையை தீர்ப்பது போல கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு ஊருக்கு வருவதாக தாய்க்கு தகவல் சொன்னார் பரந்தாமன்.

அதுவும் ஒரு சித்திரை மாதம் தான். தங்கள் ஊரிலிருந்து இரண்டே கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கன்னியாகுமரியில் தன் படத்திற்கு ஷுட்டிங் வைத்திருப்பதாகவும், அதற்காக படக்குழுவோடு வருவதாகவும், கூடவே குடும்பத்தை அழைத்துவர திட்டமிட்டிருப்பதாகவும் தாயிடம் சொல்லியிருந்தார் பரந்தாமன்.

 பரந்தாமன், சொந்தமாக படத்தை தானே தயாரித்து, இயக்கிய காலகட்டமது. கேட்ட தகவலில் எல்லோரையும் விட அதிகமாக ஆர்ப்பரித்தது சேனாதிபதி தான்.

அப்போது, நாகர்கோவிலில் உள்ள ‘தெற்கு திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில்’ ஏம் ஏ சோஷியாலஜி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தான் சேனாதிபதி‌.

மாமன்மகள் மீதான காதல் உணர்வு அவன் இளநெஞ்சில் ததும்பி அலையடித்துக் கொண்டிருந்த காலம் அது. இம்முறை எப்படியாவது சுபாஷிணியிடம் தன் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்று, பயங்கர முன்னேற்பாடோடு இருந்தான் சேனாதிபதி.

பரந்தாமன் சொன்ன தேதியில், இளமையின் மொத்த வனப்பையும் தன்னுள்ளே சுமந்து கொண்டு, மாதவபுரத்தில் வந்து இறங்கினாள் சுபாஷிணி.

கூடவே ஒட்டுப்புல்லாக அவளுடைய தாய் மாமன் மகனும், மகளும் அவளோடு ஒட்டிக்கொண்டு சென்னையிலிருந்து வந்திருந்தார்கள்.

தன் காதலைச் சொல்வதற்கு சரியான நேரம் பார்த்து காத்திருந்தான் சேனாதிபதி. ஆனால்…

“சார், இந்த ஹோட்டல்ல சாப்பிட்டுரலாமா சார்?” ட்ரைவர் ராஜின் கேள்வியில் கலைந்தான் சேனாதிபதி.

அங்கே சாலைக்கு இடது பக்கத்தில் ‘சரவணபவன்’ என்று கொட்டைஎழுத்தில் இருந்த பெயர்பலகை மின்விளக்கின் உபயத்தால் பளிச்சிட, “ம்ம்… உள்ள கொண்டு போய் வண்டியை நிறுத்துங்க ராஜ்” என்று அனுமதித்தான் சேனாபதி.