அவளின் ருத்ர தாண்டவத்தில் அனைவரும் வாயடைத்து நிற்க,
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அப்பா வயசுல இருக்குற ஒருத்தரை அடிக்கக் கையோங்குற அளவுக்கு வந்திருப்ப?” என்றார் மேகலை கோபமாய்.
“ஏன்? பொண்ணு வயசுல இருக்குற என்கிட்ட கேவலமா பேசுனப்போ அமைதியா தான இருந்திங்க. இப்ப மட்டும் என்ன? நீங்கல்லாம் என்ன விதமான மனுஷ ஜென்மங்க?” என்றாள்.
“எல்லாம் இவளால வந்தது” என்ற மகாதேவன் சிவாவை இழுத்து தள்ளி விட்டு சுபத்ராவை அடிக்க செல்ல,
கை சட்டையை மேலே ஏற்றிய படி, வேகத்தோடு வரும் போதே, வேட்டியை மடக்கி கட்டி கொண்டே வந்த ஆதி கேசவனோ, வந்த வேகத்தில் அவரை எட்டி உதைத்திருந்தான். அவனின் கண்மண் தெரியாத கோபமெல்லாம் மகாதேவன் மேல் தான்.ஏற்கனவே முந்தைய நாள் நடந்த கூத்தை தெரிந்து கொண்டதில் இருந்து பொறுமையை இழுத்துப் பிடித்திருந்தவன் சுபத்ராவை முதல் முறை அறையும் போதே வந்திருந்தான். எது வரைக்கும் போவார் என்று பொருத்திருந்தவனுக்கு அதற்கு மேல் பொறுமையில்லை.
“அச்சோ ஆதி” என்று ரேணுகா பதற,
“அண்ணா” என்ற விசாகனோ அண்ணனின் செயலில் அதிர்ந்து நின்றான்.
“ஆதி” என்ற மகாதேவன் தட்டுத் தடுமாறி எழுந்திருக்க,
“ஏங்க வேண்டாம்” என்று வேகமாய் வந்து கையைப் பிடித்திருந்தாள் சிவா.
“கையை விடுடி” என்று அவன் கத்திய கத்தலில் அவளுக்கு நடுக்கம் கொடுக்க, சட்டேன்று விட்டு விட்டாள்.
“யார் மேல கையை வைக்கிற? நேத்து இவளை என்னமோ சொன்னியாமே? எங்க இப்போ என் முன்னாடி சொல்லு பார்ப்போம்” என்று அவன் மீண்டும் அடிக்க ஆரம்பிக்க, அவன் அடித்த இரண்டு அடிக்கே துவண்டிருந்தார் மகாதேவன்.
“ஆதி என்ன பண்ணிட்டு இருக்க? அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை. உன்னோட மாமா ” என்றார் விசாலாட்சி கோபமாக.
“வாயை மூடப் போறிங்களா இல்லையா? யாரு இந்தாளா மாமா? வெட்கமே இல்லாம அடுத்தவன் பொண்டாட்டியை வலுக்கட்டாயமா தாலி கட்டி இத்தனை வருஷம் குடும்பம் நடத்தியிருக்காரு, இல்லையில்ல கொடுமைப் படுத்தியிருக்கார். இந்த ஆளை மாப்பிள்ளைன்னு வேற சொல்லி சீராட்டிட்டு இருக்கீங்க?” என்று அவன் கத்திய கத்தில் சுற்றி இருந்த யாரும் வாயைத் திறக்காமல் கப்சிப் என்று அடங்கிப் போக, சிவாவோ அவனை அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள்.
“என்னடி முழிக்கிற? எனக்கு எப்படி தெரியும்னா? அதுவும் இந்தாளு தயவுல தான் தெரிய வந்துச்சு” என்றான் கோபமாய்.
சிவா தலையை குனிந்து கொள்ள, ரேணுகாவிற்கோ ஒன்றும் புரியவில்லை.
“சிவா ஆதி என்ன சொல்றான்?” என்றார் புரியாமல்.
“என்ன ஆதி இந்த புதுக் கதையை உன் பொண்டாட்டி சொன்னாளா? அதான் பத்தொம்பது வருஷத்துக்கு முன்னாடியே அவனைத் தீர்த்து விட்டுட்டு அறுத்துக் கட்டிட்டோமே?” என்றார் விசாலாட்சி கோபமாக.
“இந்த தீர்த்து விடுறது, அறுத்துக் கட்டுறது எல்லாம் சட்டத்துகிட்ட செல்லுபடி ஆகாது. சட்டப்படி பார்த்தா சுபத்ரா அத்தை இன்னமும் கிருஷ்ணன் மாமா பொண்டாட்டி தான். அவர் இவங்களை கல்யாணம் பண்ணப்பவே சட்டப்படி பதிவு பண்ணியிருக்காரு. அது தெரியாம,சட்டப்படி விவாகரத்து பண்ணாம, நீங்க பஞ்சாயத்து பண்ணி பேசி முடிச்சதெல்லாம் சட்டம் ஏத்துக்காது. ஏன் உங்க மருமகனுக்கு இதெல்லாம் தெரியப் போய் தான, சொத்துக்கு இவ பங்குக்கு வந்துடக் கூடாதுன்னு இவகிட்ட விவாகரத்து பத்திரத்தோட சேர்த்து விடுதலைப் பத்திரத்துலையும் கையெழுத்து வாங்க சொன்னாரு” என்றான் ஆதி எகத்தாளமாய்.
“என்ன நடக்குது ஆதி இந்த வீட்ல?” என்றார் ரேணுகா. அவருக்கு எதை நம்புவது எதை விடுவது என்று தெரியவில்லை.
“இன்னும் உங்களுக்குப் புரியலையாம்மா? சுபத்ரா அத்தைக்கு சட்டப்படி இவங்க விவாகரத்து வாங்கலை. அப்போ அவங்க பேர்ல இருக்குற சொத்துக்கு சட்டப்படி வாரிசு தீர்த்தா தான்.
அது இவருக்குத் தெரிஞ்சிருக்கு. அதான் இவளுக்கு சொத்து போய்டக் கூடாதுன்னு என்னை வச்சு விடுதலைப் பத்திரத்துல கையெழுத்து வாங்குறது தான் இவர் திட்டம்” என்றான் ஆதி தெளிவாக.
“அண்ணா என்ன சொல்றிங்க?” என்ற விசாகனுக்கும் நம்ப முடியவில்லை.
“நிஜம் தான்டா! இதோ இங்க நிக்கிறாங்களே நம்ம பாட்டி, அவங்களும் அவங்க வீட்டுக்காரரும் சேர்த்து என்ன பண்ணியிருக்காங்கன்னா தன்னோட மகளை ஆஸ்தி அந்தஸ்து இல்லைன்ற ஒரே காரணத்துக்காக காதலிச்சு கல்யாணம் பண்ண புருஷன் கிட்ட இருந்து பிரிச்சு, இதோ இப்படியாப்பட்ட ஒரு யோக்கியமான நல்ல மனுஷனுக்கு ரெண்டாவதா கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. அதாவது கள்ளக் காதல் மாதிரி கள்ளத் திருமணம். ஜீவனையும் அமிர்தாவையும் கள்ள உறவில் பிறந்த குழந்தைகள்னு தான் சட்டம் சொல்லும். ஏன் நம்ம மாமாவே கள்ளப் புருஷன் லிஸ்ட்ல தான் வருவாரு” என்றான் ஆதி எகத்தாளமாய்.
“ஆதி” என்ற சுபத்ராவிற்கு வார்த்தைகளே வரவில்லை. கண்ணீர் மட்டும் தான் வந்தது.
“உங்களைப் பார்த்தா பாவமா தான் இருக்கு. ஆனா ஒரு பக்கம் பார்த்தா பாவம் பார்க்க தோணலை அத்தை” என்றான் ஆதி.
“சிவாம்மா” என்று ரேணுகா அவள் கையைப் பிடித்துக் கொள்ள,
“இது ஏற்கனவே எனக்குத் தெரியும் ரேணுமா” என்றாள் ஒரு ஜீவனற்ற வார்த்தையுடன்.
சுபத்ராவை நேருக்கு நேர் பார்த்தவள்,
“எனக்கு உரிமை இருக்கப் போய் தான் இதோ இவங்க பின்னாடி நாய் மாதிரி வந்தேன் ஒரு வயசு வரைக்கும். அப்பல்லாம் இதோ இந்த கிழவி என்னை பிச்சைக்காரனுக்கு பிறந்தவளுக்கு என் மக அம்மாவான்னு கேட்கும்? எனக்கு அந்த வயசுல புரியலை ரேணுமா, அப்பறம் என் அப்பா சொல்லித்தான் புரிஞ்சது, இந்த கோடீஸ்வரன் வீட்டு சுபத்ராவுக்கு என் அப்பா வாழ்க்கையையே பிச்சையா போட்ருக்காருன்னு.
அவர் நினைச்சிருந்தா அப்பவே சட்டப்படி போய் அவரோட மனைவியை மீட்டிருக்க முடியாதுன்னா நினைக்கறிங்க? இல்ல அவர் பார்த்து ஒரு கப்ம்ளைன்ட் பண்ணியிருந்தா இவங்க ரெண்டு உள்ள போயிருக்கனும். என்ன? அப்படி கம்ப்ளைன்ட் பண்ணியிருந்தா ரெண்டாவது கல்யாணமே நடக்கலைன்னு பொய் சொல்லி உங்க மாமனார் அப்பவே எங்கப்பாகிட்ட இருந்து விவாகரத்து வாங்கியிருப்பார் பாவம்.
எத்தனையோ முறை என் அப்பாகிட்ட இதை கேட்டிருக்கேன். அதுக்கு அவர் என்ன சொல்லுவார் தெரியுமா? சட்டப்படி போனாலும் சட்டம் இல்லாம போனாலும் நம்பிக்கை இல்லாத ஒரு உறவு எப்பவும் நீடிக்காதும்மா. என் பேர்ல கோபப்பட்டு போயிருந்தாலும் இரண்டாவது கல்யாணம் அவளுக்கு கட்டாயக் கல்யாணமாத்தான் நடந்திருக்கும்.
அப்படி ஒரு இக்கட்டான நிலமையில கூட என்னோட நினைப்பும் நான் பார்த்துப்பேன்ற தைரியமும் வராத ஒருத்தியை சட்டத்தை காரணம் காட்டி இழுத்துப் பிடிக்கிறதுல என்ன ஆகிடப் போகுதுன்னு தான் விட்டுட்டேன்னு சொல்லுவார். இவங்க சட்டப்படி விவாகரத்து கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பார். கேட்காதது இவங்க தப்பு.” என்றாள் கண்ணீருடன் கமரிய குரலில்.
அவள் கண்ணீர் விடுவதைப் பார்த்த ஆதியோ,
“தீர்த்தா என் பொண்டாட்டி யார் முன்னாடியும் அழறது எனக்குப் பிடிக்காது” என்றான் பட்டென்று. அவனின் வார்த்தைகளில் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள் அவனைத்தான் பார்த்திருந்தாள்.
விசாலாட்சி நிலை குத்திய பார்வையுடன் இருக்க,
“பயப்படாதிங்க, இனியெல்லாம் எங்கப்பா சொந்தம் கொண்டாடிட்டு வர மாட்டார். ஆனா அடிக்கடி சொல்லுவிங்களே, எங்கப்பா இன்னொரு பொம்பளையை வச்சுகிட்டார், சேர்த்துகிட்டார் அப்படி இப்படின்னு. அப்படி ஒரு எண்ணம் சுட்டுப் போட்டாலும் அவருக்கு வராது” என்று விசாலாட்சியை பார்த்து சொன்னவள், முதன் முறையாக சுபத்ராவிடம் சென்றிருந்தாள்.
“நீங்க எதுக்கு எங்கப்பாவை சந்தேகப்பட்டிங்கன்னு எனக்குத் தெரியாது. இல்லை இதெல்லாம் உங்க வீட்டு ஆளுங்க சதி வேலையான்னு எனக்கு தெரியாது. ஆனா நீங்க நினைச்ச மாதிரி, நினைக்கிற மாதிரி அவர் கிடையாது. அவரோட மகளா இதை உங்களுக்கு உறுதிப்படுத்த வேண்டியது என்னோட கடமை. இன்னைக்கு தான் சந்தர்ப்பம் கிடைச்சது” என்றாள் இறுகிப் போன குரலில்.
“என்மேல நம்பிக்கை இருந்தா இப்பவாவது வாயைத் திறந்து என்ன நடந்ததுன்னு சொல்லுவிங்கன்னு நினைக்கிறேன் சுபா அத்தை. இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் குனிஞ்சு குனிஞ்சு கூன் வளைஞ்சே நிற்க போறீங்க? தீர்த்தா கழுத்துல நான் தான் தாலி கட்டணும்னு அன்னைக்கு பார்வையிலேயே பிடிவாதம் பிடிச்சு நின்னிங்க. நானும் கட்டுனேன்.அது ஏன்னு எனக்குத் தெரியும். ஆனா வீட்ல இருக்குறவங்களுக்கு தெரியனும்ல” என்றான் ஆதி.
சுபத்ரா மகாதேவனைப் பார்க்க, அவரோ அந்த நிலையிலும் அவரை முறைத்திருந்தார்.
“அங்க என்ன பார்வை?” என்றான் ஆதி.
ஒரு முடிவுடன் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்திருந்த சுபத்ரா,
“உன் தாத்தாவும் இவரும் எந்த எல்லைக்கும் போக தயாரா இருந்தாங்க ஆதி. அதான் பெத்த பிள்ளை என் கூட இல்லைன்னாலும் உயிரோடவாவது இருக்கட்டும்னு விட்டுட்டேன்” என்றார் கண்ணீருடன்.
“ஆனா ஏன் இப்போ வரைக்கும் அமைதியா இருந்திங்க? அட்லீஸ்ட் என்கிட்டயாவது சொல்லியிருக்கலாமே?” என்றான் ஆதி கோபம் குறையாத குரலில்.
“அப்போ வாயைத் திறந்தா சிவாவைக் கொன்னுடுவேன்னு மிரட்டுனவர், உன்கிட்ட இப்போ எதையாவது சொன்னா ஜீவனையும் அமிர்தாவையும் கொன்னுடுவேன்னு மிரட்டும் போது, நான் என்ன செய்ய முடியும் ஆதி. அது மட்டுமில்லாம, நீ கோபத்துல இவரை ஏதாவது செய்யப் போய், அதனால உன் வாழ்க்கை ஏன் பாதிக்கப்படனும்னு தான் விதி விட்ட வழின்னு அமைதியா இருந்துட்டேன்” என்றவரைப் பார்த்து ஆதியால் பரிதாபம் மட்டுமே பட முடிந்தது.
மகள் வாயால் நடந்த விஷயங்களைக் கேட்ட விசாலாட்சிக்கே மனம் சில இடங்களில் துடித்து தான் போனது. பிரம்மை பிடித்தவர் போல் அமர்ந்திருக்க,
“அதிர்ச்சி எல்லாம் ஆகாதிங்கம்மா..! என் வாழ்க்கை எப்படி நாசமா போயிருந்தாலும், உங்க வீட்டு கௌரவம் அப்படியே தான இருக்கு. அந்த வகையில நீங்க சந்தோஷமா தான் இருக்கணும்” என்ற சுபத்ரா,
“ஆனா ஒன்னு எந்த வீட்டு கௌரவம், அந்தஸ்து எல்லாம் பாதிக்கக் கூடாதுன்னு பெத்த நானே குழந்தையை வேண்டாம்னு குடுத்துட்டு வர்ற அளவுக்கு பண்ணாங்களோ, அம்மான்னு அத்தனை தடவை பின்னாடி வந்த குழந்தையை பார்க்க விடாம துரத்தி அடிச்சாங்களோ, அந்த பிள்ளை தான் இந்த வீட்டையே ஆளனும்னு நினைச்சேன்.
அவ முகத்துல தான் தினமும் இவங்க முழிக்கணும்னு நினைச்சேன். அவளால தான் இவங்க வம்சமே வளரணும்னு நினைச்சேன். அவளை இந்த வீட்ல தினமும் பார்க்குறது தான் இவங்களுக்கு தண்டனைன்னு நினைச்சேன்.
அது தான் என்னோட இத்தனை வருஷ பொறுமைக்கு பரிசுன்னு நினைச்சேன். அது உனக்கு மனைவியா இருந்தா தான் நடக்கும்னு எனக்குத் தெரியும். அதான் உன்னைத் தாலி கட்ட சொன்னேன் ஆதி. அது உனக்கும் தெரியும்” என்றார் நிதானமாய்.
கிருஷ்ணன் சொன்ன அதே வார்த்தைகளை சுபத்ராவும் சொல்லக் கேட்ட சிவாவிற்கு மன உணர்வுகளை அடக்குவது தான் பெரும்பாடாய் இருந்தது.