காலையில் சற்று தாமதமாகத்தான் எழுந்திருந்தாள் சிவ தீர்த்தா.
‘என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்’ என்றவள் அருகில் பார்க்க, ஆதியையும் காணவில்லை.
“அவங்க தான் சீக்கிரமே எழுந்து ஒரு ரவுண்ட் போய்டுவாங்களே? இப்படி தூங்கிட்டியே தீர்த்தா” என்றவள் வேகமாய் குளித்து முடித்து கீழே வந்தாள்.
“சாரி ரேணுமா, இன்னைக்கு தூங்கிட்டேன்” என்று பாவமாய் சொன்னபடி நின்ற மருமகளைப் பார்த்து பூரித்து நின்றார் ரேணுகா. அனுபவஸ்தரான அவருக்கு அவளின் மலர்ந்த முகத்தில் இருந்தே அனைத்தும் விளங்கியிருந்தது.
“எப்பவும் கை நிறைய வளையல் போட்டிருப்ப? வளையல் எங்கடா?” என்றார் சிரிப்பை மறைத்து.
“அச்சோ ஆமால்ல..! அது உடைஞ்” என்று வாய் வரை வந்த வார்த்தைகளை முழுங்கியவள்,
“இதோ வந்துடுறேன் ரேணுமா” என்றவள் மீண்டும் வேகமாய் அறைக்கு செல்ல, இப்போது நன்றாகவே சிரித்திருந்தார் ரேணுகா.
“சிவா இப்படி சொதப்பிட்டியே? மானமே போச்சு” என்று தலையில் அடித்துக் கொண்டவள், அவள் அணிந்திருந்த செம்பருத்தி நிற புடவைக்கு மேட்சாக வளையல்களை போட்டுக் கொண்டாள்.
“இப்போ ஓகே வா ரேணுமா” என்று வந்து நின்றவளைப் பார்த்தவர்,
“இன்னைக்கு காலேஜ் இல்லையாடா? புடவை கட்டியிருக்க?” என்றார்.
“இன்னைக்கு லீவ் தான் ரேணுமா” என்றவள், அவருடன் சேர்ந்து சமைக்கப் போக,
“நான் பார்த்துக்கிறேன்டா” என்றார்.
“பார்த்துக்கோங்க, நானா வேண்டாம்னு சொன்னேன். நான் செய்றேன் நீங்க பாருங்க” என்றபடி அவள் கடகடவென்று சமைக்க ஆரம்பிக்க, எப்போதும் போல் அவள் வேகத்தில் தான் அவருக்கு ஆச்சர்யம். அவள் சமைத்து முடிக்கும் தருவாயில் ஆதியும் வந்து விட்டிருந்தான்.
அண்ணனிடம் வந்த விசாகன்,
“அண்ணா இன்னைக்கு நான் என்ன பண்ணனும்?” என்றான்.
“என்ன விசாகா திடீர்ன்னு கேட்குற?” என்றான் ஆதி புரியாமல்.
“இல்ல, இத்தனை நாள் அப்பப்போ நீங்க சொன்ன வேலையை செஞ்சேன். எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும்? இனி நானும் மில்லுக்கு வரேன்ண்ணா” என்றான்.
“நிஜமாத்தான் சொல்றியா விசாகா? பொறுப்பை ஒப்படைச்ச பிறகு, அப்படி இப்படின்னு சுத்திட்டு இருக்கக் கூடாது” என்றான் தீர்மானமாய்.
“பொறுப்பெல்லாம் உடனே வேண்டாம். தினமும் உங்க கூடவே வர்றேன். கொஞ்ச நாள் கத்துக்கிறேன்” என்றான்.
“சரிடா? ஆனா திடீர்ன்னு என்ன ஞான உதயம்?” என்றான் ஆதி.
“நான் உள்ளதைத்தான சொன்னேன் விசாகா. எல்லாத்தையும் ஆதியே பார்த்துட்டு இருந்தா நாளைக்கு உன்னை நம்பி யார் பொண்ணு கொடுப்பா?” என்றார் மணிமேகலை.
“அந்த கவலை எதுக்கு உங்களுக்கு? உங்கிட்ட யாரும் பொண்ணு கேட்கலை” என்றான் விசாகன்.
“ஆதிக்குத் தான் தாரணின்னு சொல்லி சொல்லியே என்னை ஏமாத்திட்டு, இப்போ நீயும் மாட்டேன்னு சொன்னா, நான் என்ன பண்றது?” என்றார் மேகலை கோபமாக.
“நிறுத்துறிங்களா” என்று ஆதி கத்திய கத்தலில் சிவாவும் ரேணுகாவும் வெளியே வந்திருந்தனர்.
“என்னாச்சு ஆதி?” என்றார் ரேணுகா.
சிவாவோ, விசாகன் முன் தின பிரச்சனையைத் தான் சொல்லிவிட்டானோ என்று பயத்துடன் பார்த்திருந்தாள்.
“அம்மா, இவங்க பொண்ணை விசாகனுக்கு கட்டணுமாம். அதுக்கு விசாகன் பங்கை பிரிச்சு அவன் பேர்ல எழுதி வைக்கணுமாம்” என்றான் ஆதி.
“என்ன மேகலை இதெல்லாம்? ஒத்துமையா இருக்குற அண்ணன் தம்பிக்குள்ள எதுக்கு இந்த வேலை பார்த்துட்டு இருக்க?” என்று ரேணுகா கடுமையாய் கேட்டிருந்தார்.
“அண்ணி நான் சாதாரணமாத்தான் சொன்னேன்” என்றார் மேகலை.
“ஏன் ஆதி அவங்க கேட்குறதுல என்ன தப்பு?” என்றபடி மகாதேவன் வர, இதெல்லாம் இவர் வேலை தான் என்று தெளிவாய் தெரிந்து போனது அங்கிருந்த அனைவருக்கும்.
பல்லைக் கடித்து பொறுமையைக் கடைபிடித்தவன்,
“அப்படிங்களா மாமா, நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்” என்பதோடு முடித்துக் கொண்டான். விசாலாட்சிக்கு கூட ஆச்சர்யம் தான், ஆதி இப்படி அமைதியாய் இருப்பது கண்டு.
“அப்பறம் மாப்ள இந்த செக்ல சைன் வேணும். லோடு ஏத்தி விட்ட சம்சாரிகளுக்கு பணம் குடுக்கணும்” என்றார் மகா தேவன்.
“சைன் பண்ணிடலாம்” என்றவன்,
“தீர்த்தா இங்க வா, இதுல சைன் பண்ணு” என்றான் ஆதி.
அவளோ அவனைப் புரியாமல் பார்த்து நிற்க, மகாதேவனுக்கோ அதிர்ச்சி.
“வாம்மா, வந்து சைன் பண்ணு” என்றான் மீண்டும்.
“நான் எப்படி?” என்றாள் திணறியபடி.
“என்ன ஆதி விளையாட்டு இது? நீ சைன் பண்ண வேண்டிய செக்ல ஏன் அந்த பொண்ணை பண்ண சொல்ற?” என்றார் மகாதேவன்.
“ஏன்னா? என் சம்பந்தப்பட்ட எல்லாமே இப்போ அவளோடது தான். அத்தாரிட்டி புல்லா அவ பேர்ல தான் இருக்கு, அதான்” என்றான் நிதானமாய்.
அவன் சொன்னதைக் கேட்டு மற்றவர்கள் அதிர்ந்தார்களோ இல்லையோ, சிவ தீர்த்தா முற்றிலும் அதிர்ந்திருந்தாள்.