ஜெயன் கல்லூரிக்கும், விஜயன் ஆபீஸுக்கும் கிளம்பி சென்றதும், கீதா தன் அத்தையிடம் “அத்தை மாமா கொஞ்ச நாள் கழித்து வாழ ஆரம்பிக்கலாமுன்னு சொன்னதும் நானும் அவரோட பேசி பழக நேரம் கொடுக்கறார் போல அப்படின்னு நெனச்சேன்.”
“ஆனா மாமா என் மேல இருக்கிற கோவத்துல சொல்லியிருக்காரு.”
“ நீங்களே நிர்மலாவுக்கு வேற நல்ல மாப்பிள்ளையா பாத்துக்க சொல்லிடுங்க.”
“அவள அடக்கி என் காலுக்கு கீழ வைக்கனுமுன்னு ரொம்ப நாளா ஆசைபட்டேன். அவள அடக்க பாத்தா நான் வாழாம போயிடுவேன் போல.”
“நமக்கு வேணாம் அந்த அதிர்ஷ்டமில்லாதவ. ஆனா ஜெயனுக்கு நான்தான் பொண்ணு பார்ப்பேன்.” என்றவள் தன் மனதினுள்
“எல்லாத்துலையும் எனக்கு கீழ இருக்கறவளா பாத்து கட்டி வைப்பேன். ஆனா அவங்கள சந்தோசமா வாழ விடமாட்டேன். வாரிசு வரவிடமாட்டேன். இங்க எல்லாமே எனக்கு மட்டும்தான். எல்லாரும் சம்பாரிக்கிறதும் எனக்குதான்.”
“நாந்தான் இங்க ராணி. என்னைய மீறி எதுவும் நடக்ககூடாது. சமையலில் இருந்து பேசறது, நீங்க என்ன கேக்கனுங்கிறது வரை எல்லாமே என்னோட முடிவாகவே இருக்கனும். எனக்கப்புறம் என்னோட வாரிசுகள்தான் இங்க ஆளனும். விட மாட்டேன் மாமா.”
“ நிர்மலாவை காப்பாத்திட்டிங்கன்னு சந்தோசபட்டுக்காதிங்க மாமா. பொண்டாட்டிய விட கொழுந்தியா முக்கியமா போயிட்டாளா? அவளுக்காக என்னைய பகைச்சுக்காதிங்க. உங்களையும் காலுல போட்டு மிதிப்பேன்.”
“ அவளையாவது கட்டி வச்சிருக்கலாம், அப்படியாவது எந்தம்பி கொஞ்ச நாளாவது சந்தோசமா வாழ்ந்திருப்பானேன்னு உங்கள பொலம்ப விடலன்னா நான் கீதா இல்லை” என சபதம் செய்தாள் கீதா.
பஸ்ஸுல உட்கார்ந்து ஜெயனும் நடந்ததை மனதினுள் ஓட்டி பார்த்தான். தன் அண்ணன் மனைவியின் உருவம் மட்டுமல்ல உள்ளமும் அசிங்கமானது என புரிந்தது.
உருவத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுவது தவறென புரிந்து, தான் அன்பாக பேசினாலும் அண்ணி இனிக்க பேசி, கடும் விஷத்தையே தனக்குத்தர தயாராக இருப்பது புரிந்தது. காரணம்தான் தெரியல.
அண்ணனுக்கு ஏதோ புரிந்திருக்கும் போல, அதனாலேயே நாலுநாள் லீவு மிச்சமிருக்கும்போதே தன்னை வம்படியாக ஹாஸ்டல் அனுப்புகிறார் என நினைத்தான். அண்ணன் சொன்னதும் நினைவு வந்தது. “ஜெயா திடீரென போன் வந்தாலும், யாராவது வந்து கூப்பிட்டாலும் ஊருக்கு மட்டும் எனக்கு தெரியாம நீ போகாதே. போனா உன் கதை கந்தலாயிடும்.”
“என் போனை நான் ஆப் பண்ண போறேன். ஆனா இந்த புது நம்பர்ல எப்பவும் பேசலாம். என்னோட ப்ரெண்ட்ஸ் ஓரிருவர் தவிர உனக்கு மட்டுந்தான் சொல்றேன்.”
“வீட்டுல யாரு கேட்டாலும் என் புது நம்பர சொல்லாத. உனக்கும் தெரியாதது போல, என்னிடம் பேச துடிப்பது போல, பேச முடியாம வருந்தறது போல நடி.”
“சுசிலாவே நடிகையர் திலகத்துக்கு டப் குடுப்பாங்க. இப்ப இன்னுமொரு நடிகை கூட சேர்ந்திருக்காங்க.”
“ஆனா ஒன்னு மட்டும் புரியல. இவங்க ரெண்டு பேருமே அடுத்தவங்க குடிய கெடுக்கறவங்க. இவங்க எப்படி ஒன்னு சேர்ந்திருப்பாங்க? எவ்வளவு நாளுக்கு இவங்க கூட்டணி நிலைக்கும்? இதுல இன்னும் யாரெல்லாம் நிம்மதிய, வாழ்க்கைய தொலைக்கப் போறாங்க? இப்போதைக்கு உன்னைய டார்கெட் பண்றாங்க. அது புரியுது. நான் சொன்னது புரிஞ்சிதா? கவனமா இருடா ஜெய்.” என கூறி கிளம்பி இருந்தான் விஜயன்.
ஹாஸ்டல் வந்தவனை வழக்கம் போல மகேஷ் கலாய்த்தான்.
“என்ன மச்சி அதுக்குள்ள வந்துட்ட? எங்க தங்கச்சிய பார்க்காம இருக்க முடியலயா? ரூட் கிளியர் ஆகவும் ஒன்னும் புரியல, அப்படிதானே?”
“டேய் உன்ன மக்குன்னு சொல்றதுல தப்பே இல்ல. என்ன பேசறன்னு புரிஞ்சிதான் பேசறயா? டைனிங் ஹால்ல உட்கார்ந்து இருக்கோம் நியாபகம் இருக்கா?” என கண்ணன் கண்டிக்க
“சாரி ஜெய். ஒரு வாரம் கழிச்சி உன்ன பாத்ததுல நான் எமோஷனல் ஆயிட்டேன்.” என்ற மகேஷ்
“சாரி கடவுளே இனிமே பக்கம் பார்த்து பேசறேன்.” என கண்ணனிடம் மன்னிப்பும் கேட்டான்.
“மகேஷு என்னடா ரகசியம் எங்களுக்கு தெரியாம?” சதீஸும், செல்வனும் விசாரிக்க, ஜெயன் வீட்டிலிருந்து கொண்டுவந்த பலகார பேக்கிங்-ஐ கொடுத்து விட்டு ஏதும் பேசாமல் தன்னுடைய அறைக்கு சென்றான்.
“நீதானே உளறின. நீயே சமாளி” என்பது போல கண்ணன் திரும்பிக் கொண்டான்.
ஒரு சில நிமிடங்களுக்கு மேல் பொறுக்க முடியாமல், “என்னை ஏன்டா தொந்தரவு பண்றிங்க? நீங்களே அவன கவனிங்க. கண்டுபிடிக்க முடியுதான்னு பாருங்க” என கத்திவிட்டு எழுந்து ஓடினான்.
யாரிடமெல்லாம் ஜெய் பேசுவான் என மூளையை கசிக்கி யோசித்த இருவரும், மறுபடியும் மகேஷிடம் வந்து நின்றனர்.
“ அவன் யாரிடமும் அதிகமா பேச மாட்டான். காயுகிட்ட மட்டும்தான் பேசுவான். ஆனா நீ காயுவ சிஸ்டர்னு சொல்ல மாட்ட. அவளே உன்ன கலாய்ச்சிடுவா. அப்ப யாரு? விஜி அண்ணாவுக்கு தெரியுமா?” என கேக்க
“இவங்க இருக்கறது தெரியாம நீ கிண்டலாக சொன்னது இப்ப எங்க வந்து நிக்கிது பாத்தியா? இடம் பாத்து பேசுன்னு உனக்கு ஆயிரம் முறையாவது சொல்லிருப்பேன், கேட்டியா நீ?” என்று திட்டிய கண்ணன், தன் நண்பர்களிடம் “அது நம்ப ஜெய் மனசுல ஒரு பொண்ணு இருக்குமோன்னு இவனுக்கு சந்தேகம் வந்துடுச்சி. அவன் பாக்கற பொண்ணு நமக்கு சிஸ்டர் முறைதான வரும். அதான் இந்த மக்கு மகேஷ் இப்படி சொல்றான். அவன கவனிச்சா அப்படி ஏதும் எண்ணம் இருக்கிறது போல தெரியல. யாரோடவும் அவன் பேசறதில்லை.”
“கல்யாணத்துல அவங்க அண்ணி கேட்ட கேள்விகளை பாத்தா பயமா இருக்கு. நீங்கபாட்டுக்கு ஏதாவது கிண்டல் பண்ணி அவன் வாழ்க்கையை நாசம் பண்ணிடாதிங்க.”
“டேய் மக்கு மண்ணாங்கட்டி… உனக்கு இருக்குடா ஒரு நாளு, அன்னைக்கு வச்சி செய்யறேன் உன்னை. நீயும் உன் சந்தேகமும்….”
“மத்தவங்க பர்சனல் தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கிற நீங்க, இதே அளவு ஆர்வத்தோட படிச்சிங்கன்னா ஐஏஎஸ்-ஏ பாஸ் பண்ணிடலாம். போய் படிக்கிற வேலைய பாருங்கடா முட்டாப் பசங்களா…” என திட்டிவிட்டு அரைகண்ணில் அவர்களை நோட்டம் விட்டான்.
மகேஷ் அப்பாடா எனும் விதமாகவும், சதீஷ், செல்வம் இருவரும் கோபமாகவும் கண்ணனை பார்த்தனர். பின் முகத்தை திருப்பிக்கொண்டு படிக்கச் சென்றனர்.
கண்ணனும், ஜெயனும் தனிமையில் மகேஷை பாசமாக???? கவனித்தனர். அவர்களிடம் ஊரில் நடந்ததை ஜெயன் சொல்ல, மகேஷும், கண்ணனும் விஜயனுடன் பேசினர். மகேஷின் நண்பர்கள் மூலமாக ஊரில் நடப்பதை கண்காணித்தனர்.
சுஜா இல்லாமல் போரடித்தது காயுக்கு. அவளையும் தங்கள் திட்டத்திற்கு பயன்படுத்த நினைத்த விஜயன், சொல்லாமல் கொள்ளாமல் ஜெயனை பார்க்க வார நாளில் வந்தான். நிர்மலாவை காயுவிடம் அறிமுகபடுத்தினான். பின் நிர்மலாவிடம் அங்கு நடக்கும் எல்லாவற்றையும் காயுவிடம் பகிரும்படி சொல்லிச்சென்றான்.
ஜெயனிடமும் பல்கலைக்கழகத் தேர்வுகள் முடியும் நாளை மாற்றி, சொல்லச் சொன்னான்.
சுசிலா போன் செய்து, “ஜெயா விஜி போனே எடுக்கல. என்னாச்சோ தெரியல. எனக்கு கெட்ட கெட்ட கனவா வருது. பயமா இருக்குடா.”
“அவன் உயிரோட இருப்பானாடா? உயிரோட இருந்தா என்கிட்ட பேசாம இருக்க மாட்டானே.”
“குடுகுடுப்பைகாரன் வேற அடிக்கடி நம்ம வீட்டுப் பக்கம் வந்து குறி சொல்லிட்டு போறான்டா தம்பி.”
“மாமங்கிட்ட பேச முடியல, மாமாவுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ?ன்னு கீதா சாப்பிடாம அழுது அழுது இளைச்சி போயிட்டாடா. ஆளே அடையாளம் தெரியாம ஆயிட்டா. அவன் ஆபீஸ் பேரு என்னன்னு தெரிஞ்சாலும் போய் பாத்துட்டு வரலாம்.”
“உன்னையும் பாக்கனும்போல இருக்கு தம்பி. பரிட்சை முடிஞ்சதும், அன்னைக்கே கிளம்பி வந்திருப்பா. நீ என் கண்ணுலயே நிக்கிற. நீயாவது அம்மாகிட்ட தினமும் பேசுப்பா. அண்ணன் எங்கிருப்பான்னு ஏதாவது தெரிஞ்சா சொல்லுப்பா. அண்ணி சாப்பிடாம அழுதுக்கிட்டே இருக்கா.”
“நிர்மலாவுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க. அக்கா புருஷன் வராம, அக்கா தனியா நின்னா நான் மேடை ஏற மாட்டேன்னு அந்த பொண்ணும் அழுவுது. கடவுள் யேந்தான் என் குடும்பத்தை இப்படி சோதிக்கிறான்னு தெரியல.” என நீலி கண்ணீர் வடிக்க பேச்சற்று நின்றனர் நண்பர்கள்.
சற்றுமுன் தான் காயு நிர்மலாவுடன் பேசி இருந்தாள். ஜெயனுக்கும், நிர்மலாவுக்கும் பத்து நாட்களில் கல்யாணம் செய்ய ரகசியமாக முடிவு செய்து, கல்யாண வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதாக சொன்னாள்.
முகுர்த்தம் ஜெயன் சொன்ன கடைசி தேர்விற்கு மறுநாள் வைத்திருந்தனர்.
விஜயனுக்கு தகவல் சொல்ல, அவன் ஒரு திட்டம் போட்டுத்தர அனைவரும் அதை செயல்படுத்த தயாராயினர்.
ஜெயனை இனி கல்லூரி, ஹாஸ்டல் தவிர வேறெங்கும் செல்ல தடை விதித்தனர். கடைசி தேர்வுக்கு முன்னரே ஜெயனின் பொருட்களை பிரித்தனர்.
டிரஸ் எல்லாவற்றையும் ஒரு ட்ராவல் பேக்கில் பேக் செய்தனர். தேவையான புத்தகங்கள், மற்ற பொருட்களை நண்பர்கள் பொருளுடன் கலந்தனர். தேவையில்லாதவற்றை கொஞ்சம் கொஞ்சமாக டிஸ்போஸ் செய்தனர்.
தேர்வு முடிந்து வந்தவுடன் ஜெயன் ஹாஸ்டலை காலி செய்துவிட்டு, ட்ராவல் பேக்குடன் கிளம்பி வெளியே வர விஜயன் ஏற்பாட்டின்படி வந்த காரில் பெங்களூர் போய் சேர்ந்தான்..
கீதாவின் ஆலோசனைபடி கல்யாண மாப்பிள்ளையை கூட்டிச்செல்ல வந்தவர்கள் ஜெயன் ஹாஸ்டலை மூன்று நாட்கள் முன்பே காலி செய்ததை அறிந்து அதிர்ந்தனர்.
அருகில் இருந்தவர்களை விசாரிக்க, தேர்வுகள் மூன்று நாட்களுக்கு முன்னதாக முடிந்ததாக சொல்ல வாயடைத்து நின்றனர். அவன் நண்பர்களும் ஹாஸ்டலை காலி செய்து தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பி இருந்தனர்.
போலீஸில் ஜெயனை காணவில்லை என புகார் கொடுத்தனர். அவர்கள் “நீங்க யார்? காணாமல் போனவருக்கு நீங்கள் என்ன உறவு?” என கேட்க, வந்தவர்களோ “நாங்க சொந்தகாரங்க. அந்த பையனுக்கு நாளைக்கு காலையில கல்யாணம். அதான் பொண்ணுவீட்டு சார்புல மாப்பிள்ளை அழைப்பை இங்கிருந்தே ஆரம்பிக்க வந்தோம்” என்றனர்.
“அப்போ மாப்பிள்ளைக்கு கல்யாணத்துல விருப்பமில்லையோ? அதான் ஓடி போயிட்டானோ?” என கேட்ட இன்ஸ்பெக்டர் (ஈஸ்வரின் நண்பர்) போலீஸ்காரர் ஒருவரை அழைத்து “காலேஜ் போய் பையனோட போன் நம்பர், ப்ரெண்ட்ஸ் போன் நம்பர் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வாங்க” என அனுப்பினார். பின்
“ஆமா பையனுக்கு இருபத்தொரு வயசுதான் ஆகுது. டிகிரி முடிக்கிறதுக்குள்ள ஏன் கல்யாணம் வச்சிங்க? உண்மைய சொல்லுங்க, இல்லையினா உங்கள தூக்கி உள்ள வச்சி லாடம் கட்டிடுவேன்” என்று எகிற எல்லோரும் திருதிருவென முழித்தபடி ஒருவரை பார்த்தனர்.
கீதாவின் அப்பா பயந்தபடி முன்னால் வந்து “என் பொண்ண ஜெயந்தனோட அண்ணனுக்கு ஒரு மாசம் முன்னாடி கல்யாணம் பண்ணிக்குடுத்தோம். என் பொண்ணு யேந்தம்பி பொண்ண கொழுந்தனுக்கு கட்டி வைக்க ஆசைபட்டுச்சி. ஆனா யேன் மாப்பிள்ளைக்கு தம்பி கல்யாணத்துல சம்மதம் இல்லை. ஆனாலும் கல்யாணம் முடிஞ்சிட்ட எல்லாம் சரி ஆயிடும் அப்படின்னு யேன் மவ சொல்லிட்டா.”
“பையனுக்கும், அவனோட அண்ணன், அதான் என் மாப்பிள்ளைக்கும் தெரியாம ரகசியமா ஏற்பாட்டை செஞ்சோம். ஆனா அவங்க முந்திகிட்டாங்க.” என பயத்தில் உளற கோபத்துல மேஜையை தட்டின இன்ஸ்பெக்டர்,
“ பொண்ணுங்களுக்கு கட்டாய கல்யாணம் பண்றாங்கன்னு பார்த்தா, நீங்க பையன தூக்கிக்கிட்டு போய் கல்யாணம் பண்ண பாக்குறீங்க? யோவ் ஏட்டு, இந்த ஆள தூக்கி உள்ள வைங்க முதல்ல. நான் ரௌண்ட்ஸ் போய்ட்டு வந்து கவனிச்சிக்கிறேன், மவ சொல்லுச்சி, மாடு சொல்லுச்சின்னு ஏதாவது பேசட்டும். அந்த கழுதையையும் இழுத்துட்டு வந்து சாந்தி மேமை கவனிக்க சொல்லலாம்” என வெளியேறினார் இன்ஸ்பெக்டர்.
“ஐயோ சாந்தி மேம்கிட்டயா? அந்த பொண்ணு உசுறு தப்புமா? அந்தம்மா தப்பு செஞ்சவங்கள நார், நாரா கிழிச்சி தொங்கவிட்டுடுமே. இதுல திட்டம் போட்டுக்குடுத்தது தன் மகதான் வேற தெளிவா இந்தாள் சொல்றானே.” என அங்கிருந்த ஓரிருவர் புலம்ப,
“சார் தப்பு தப்பா திட்டம் போட்டுட்டோம். எங்கள மன்னிச்சி விட்டுடுங்க சார். இனிமேல் இந்த மாதிரி கட்டாய கல்யாணத்திற்கு உதவி செய்யமாட்டோம்” என வந்தவர்கள் ஏட்டின் காலில் விழ, அவரோ “எங்க சார் ரொம்ப கண்டிப்பானவர். கேஸ் போடாம விட மாட்டார். தப்ப யார் செஞ்சாலும் சட்டப்படி தண்டனை வாங்கித் தந்திடுவார். இந்தாள்கூட வந்து நீங்களும் மாட்டிக்கிட்டிங்க.” என்றவர் தன் போன் எடுத்து “சார் அந்த பெரியவரை தவிர எல்லாரும் மன்னிப்பு கேக்கறாங்க. இனிமே இப்படி செய்யமாட்டோமுன்னு சத்தியம் பண்றாங்க. என்ன சார் பண்றது?” என கேக்க
உள்ளே வந்தவர் “உங்க தப்பை எழுதி, இனி இதுபோல் பண்ண மாட்டோமுன்னு எழுதி கையெழுத்து போட்டுக் குடுத்துட்டு போலாம்.” என்க
“எங்கூட்டு பிரச்சனைய நான் பாத்துக்கிறேன். நானெதுக்கு எழுதி கையெழுத்து போடனும்? டேய் முடியாதுன்னு சொல்லுங்கடா. நான் பாத்துக்கிறேன” என சொல்லி கீதாவின் அப்பா திரும்பி பார்க்க, கூட வந்தவர்கள் அனைவரும் பரிட்சை எழுதுபவர்கள் போல பேப்பரும் கையுமாக இருப்பதை பார்த்து அதிர்ந்து,
“நீங்க எல்லாம் எழுதி குடுத்துட்டு போனா யேம் பொண்ணு ஆசைய எப்படி நிறைவேத்தறது? அவ ஏமாந்து போயிடுவா….” என பதறினார்.