ஒரு வாரமாக வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருக்கிறான் ஆதிகேசவன். அதிகாலையில் சென்று விடுவதும், இரவு வெகு நேரம் கழித்தே வீடு திரும்புவதுமாய் இருக்க, சிவ தீர்த்தாதான் துவண்டு போனாள். அவளை கல்லூரியில் இறக்கி விட்டு, அழைக்கும் வேலையையும் ஒரு வாரமாக பாண்டி தான் செய்து கொண்டிருந்தான்.

“அப்படி என்னண்ணா அவங்களுக்கு தலைபோற வேலை” என்று பாண்டியிடம் கூட கடுப்பாக கேட்டிருந்தாள்.

“மில்லுல ஏதோ பிரச்சனைன்னு சொன்னான்மா” என்பதோடு பாண்டியும் முடித்துக் கொள்ள, ரேணுகாவிடமும் புலம்பித் தீர்த்திருந்தாள்.

“எப்பவும் இப்படித்தான் இருப்பான் சிவா. நீ வந்ததுக்கு அப்பறம் தான் அப்பப்ப வீட்ல இருந்தான்” என்ற ரேணுகாவை வெட்டவா? குத்தவா என்ற ரீதியில் பார்த்து வைத்தாள் சிவ தீர்த்தா.

“ஒருத்தி இருக்கான்ற நினைப்பு இருக்கா இல்லையா இவங்களுக்கு?” என்று புலம்ப மட்டும் தான் முடிந்தது இவளால்.

இடையில் ஒருநாள் திடீரென்று கல்லூரிக்கு வந்து அவளை அழைத்து சென்றவன், பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றான்.

“ஒரு பார்மாலிட்டி இருக்கு. சைன் பண்ணனும்” என்றவன் அரைமணி நேரத்தில் மீண்டும் அவளை கல்லூரியில் விட்டு விட்டுச் சென்றிருந்தான். அவளுக்குத் தான் தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.

அன்று ஏனோ அவளுக்கு மனம் முழுவதும் பாரமாய் இருப்பதைப் போன்ற ஒரு உணர்வு. காரணமே இல்லாமல் கோபமும் வெறுப்புமாய் வந்தது. கல்லூரியிலும் அவள் கவனம் எந்த பாடத்திலும் செல்லவில்லை.

அவன் வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு, தன்னை அழைக்க வந்த விசாகனைக் கண்டு உள்ளுக்குள் சற்று ஆச்சரியமும் அதிர்ச்சியும்.

“பாண்டி அண்ணா, ஆதி அண்ணாகூட  போயிருக்காங்க. அண்ணாதான் என்னை அனுப்பினாங்க. சந்தேகமா இருந்தா போன் பண்ணி கேட்டுக்கலாம்” என்றான் விசாகன் அவள் முகம் பார்க்காமல்.

சரியாக அதே நேரம் ஆதியிடமிருந்து அவளுக்கு அழைப்பும் வந்திருந்தது.

“தீர்த்தா விசாகன் வருவான். அவன் கூட வீட்டுக்கு போய்டு. எனக்கு வேலையிருக்கு” என்றவன் அழைப்பை துண்டித்திருக்க, சிவாவிற்கோ எரிச்சலும் அழுகையும் வர, அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் விசாகனுடன் கிளம்பிவிட்டாள்.

என்னதான் கோபம் கொஞ்சம் குறைந்திருந்தாலும், விசாகனுடன் இப்போது வரை அவள் பேசுவதெல்லாம் கிடையாது. அவனுக்கோ அவள் முகம் பார்த்து பேச தயக்கம்.

“ஏன்? எல்லா வேலையும் உங்க அண்ணா தான் பார்க்கனுமா? நீங்க போய் ஹெல்ப் பண்ண மாட்டிங்களா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஊரைச் சுத்திகிட்டு இருக்குறதா உத்தேசம்?” என்றாள் சிவா.

திடுமென அவள் பேசியதில் திகைத்தவன், அவள் பேசிய பேச்சில் அவளை முறைத்தான்.

“என்ன முறைப்பு வேண்டி கிடக்கு? உண்மையைத் தானே சொன்னேன்? உருப்படாத நாலு வெட்டிப் பயலுகளோட ஊரைத் தான சுத்திட்டு இருக்கீங்க. இப்படியே இருந்தா நாளைப் பின்ன யார் உங்களுக்கு பொண்ணுத் தருவா?” என்றாள்.

“எனக்கு கல்யாணம் பண்ற ஐடியா எல்லாம் இல்லை” என்றான் பட்டென்று.

“ஏன் சாமியாரா போக போறிங்களா?” என்றாள் சிரிக்காமல்.

“அது என் இஷ்ட்டம்” என்றான்.

“அது உங்க இஷ்ட்டம் தான். ஆனா ஆதி மாமா மட்டும் தான் வேலை செய்யணும்னு இல்லையே? நீங்களும் கூடமாட ஒத்தாசை பண்ணா அவங்களுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்ல” என்றாள் சிவா விடாமல்.

‘ஆதி மாமாவா?’ என்று மனதிற்குள் வியந்தவனுக்கு, ‘நல்ல முன்னேற்றம் தான்’ என்று தோன்றியது.

“சரிங்க, இனிமே அண்ணனுக்கு ஏத்த தம்பியா பொறுப்பா இருக்கேன்” என்றான் விசாகன் சிரிக்காமல்.

“நான் உங்களை விட சின்ன பொண்ணு தான். அதனால இந்த மரியாதை எல்லாம் தேவையில்லை. சிவான்னே கூப்பிடலாம்” என்றாள், போனால் போகுது என்பதைப் போல்.

“அது சரியா வராது” என்றான் தயக்கத்துடன்.

“உங்க இஷ்ட்டம்” என்றவள் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

“தேங்க்ஸ்” என்றான் திடுமென்று.

“எதுக்கு?”

“இல்ல, அன்னைக்கு உங்களால தான் எங்க வீட்ல எங்க அம்மா இத்தனை நாளா என்ன ஒரு நிலையில இருந்திருக்காங்கன்ற விஷயமே புரிஞ்சது. அன்னைக்கே நன்றி சொல்லனும்னு நினைச்சேன். எங்க நான் பேசினா பிடிக்காதோன்னு தான் சொல்லலை” என்றான் விசாகன்.

“அதுக்காக உங்கமேல கோபம் போய்டுச்சுன்னு எல்லாம் அர்த்தமில்லை. கொஞ்சம் கோபம் இருக்கத்தான் செய்து. அவங்களுக்காகவும், ரேணுமாக்காகவும் தான் பேசுறேன்” என்றாள்.

“ம்ம்” என்ற விசாகனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.

சிவ தீர்த்தா, விசாகனுடன் வந்து இறங்குவதைக் கண்ட மகாதேவன்,

“என்ன அத்தை? இந்த பொண்ணை ஆதி வாழ்க்கையை விட்டு அனுப்பனும்னு நீங்க நினச்சுட்டு இருக்கீங்க. இங்க என்னடான்னா இப்போ விசாகன் கூட ஜோடி போட்டுட்டு வருது. ஏற்கனவே இந்த பொண்ணு பின்னாடி சுத்துனவன் தான விசாகன். இதெல்லாம் நல்லாவா இருக்கு?” என்றார்.

மணிமேகலைக்கும் ஏனோ அவர்கள் இருவரும் ஒன்றாய் வந்தது பிடிக்கவில்லை. அதிலும் சிவா இறங்கியவுடன்,

“தேங்க்ஸ்” என்று சொல்ல, விசாகனும் ஒரு சிரிப்புடன் தலையசைத்து ஏற்றிருந்தான்.

வீட்டிற்குள் வந்த சிவாவைப் பிடித்துக் கொண்டார் விசாலாட்சி. காரை நிறுத்திவிட்டு பின்னோடு வந்திருந்த விசாகன் அவர்களை புரியாமல் பார்த்திருந்தான்.

“விசாகா என்ன இதெல்லாம்?” என்று பாட்டி கேட்க,

“எதைப் பத்தி கேட்குறிங்க?” என்றான் நிஜமாலுமே புரியாமல்.

“இவளை எதுக்கு நீ கூட்டிட்டு வர்ற? இதென்ன புதுப் பழக்கம்? இந்த மகாராணிக்கு அவன் ஒருத்தன் டிரைவர் வேலை பார்க்குறது பத்தாதா?” என்றார் காட்டமாய்.

“அண்ணா தான் கூட்டிட்டு வர சொன்னாங்க. அதான் கூட்டிட்டு வந்தேன். இதுல என்ன தப்பைக் கண்டிங்க?” என்றான் சற்று குரலை உயர்த்தி.

“தப்புத்தான். இத்தனை நாள் உன்னை முறைச்சுகிட்டு இருந்தவ, இன்னைக்கு திடீர்ன்னு உன்கிட்ட பேச என்ன காரணம்?” என்றார் விசாலாட்சி.

“என்ன காரணம்?” என்றாள் சிவா அவரை நேர் பார்வையுடன்.

“அதை உன்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை. விசாகா இனி இவகூட பேசுறதோ இல்ல, இவளைக் கூப்பிடப் போறதோ இப்படி எந்த வேலையும் வச்சுக்கக் கூடாது” என்றார்.

“நான் என்ன காரணம்னு கேட்டேன்” என்றாள் சிவா மீண்டும் அழுத்தம் திருத்தமாக.

“அவசியம் சொல்லனுமா?” என்றார் மகாதேவன்.

“நான் உங்ககிட்ட பேசலை. யார் சார் நீங்க? நீங்க எதுக்கு என் விஷயத்துல தலையிடுறிங்க?” என்றாள் சிவா.

“இப்ப என்னடி பிரச்சனை?  ஆதியை மயக்கலாம்னு பார்த்த?அவனும் கொஞ்ச நாள் மயங்கிப் போய் கிடந்தான். ஏதோ இப்போத்தான் தெளிஞ்சு  என் பேரன்  என் பேச்சை கேட்டு நடந்துக்கிறான். அதனால தான் நீ இருக்குற இந்த வீட்டுப் பக்கம் கூட அவன் அதிகம் வர்றதில்லை. அதனால மறுபடியும் உன் பின்னால ஏற்கனவே சுத்துன இவனை மயக்கலாம்னு பார்க்குற?” என்றார் விசாலாட்சி.

“பாட்டி வார்த்தையை அளந்து பேசுங்க” என்று விசாகன் குரலை உயர்த்தியிருந்தான்.

“என்ன விசாகா? குரல் உசருது? இவளுக்காக என்னையே எதிர்த்து பேசிட்டு இருக்க? இவ்வளவு தைரியம் எங்க இருந்து வந்தது?” என்றார் விசாலாட்சி.

“வீடா இது? உங்களுக்கு நல்லவிதமா பார்க்கவோ, பேசவோ வராதா? சிவா இப்போ எனக்கு அண்ணி. அந்த அறிவாவது இருக்கா இல்லையா?” என்றான் விசாகன் கோபம் குறையாத குரலில்.

அப்போது அங்கே வந்த ரேணுகாவிற்கோ எதுவும் புரியவில்லை.

“என்னாச்சு விசாகா? ஏன் கத்திட்டு இருக்க? சிவா நீயேன்டா அப்படியே நிக்கிற?” என்றார்.

“அதுவா ரேணுமா, உங்க சின்னப் பையன் தான் இன்னைக்கு கூப்பிட வந்தாங்க. நான் அவங்களோட சேர்ந்து வந்ததால உங்க சின்னப் பையனையும் மயக்கப் பார்க்குறேனாம். உங்க மாமியார் சொல்லிட்டு இருக்காங்க” என்றாள் இறுகிப் போன குரலில்.

ரேணுகாவிற்கோ எரிச்சலும் கோபமுமாய் வந்தது. சில நாட்களாக வீட்டில் நடக்கும் எதுவும் அவருக்கு விளங்கவும் இல்லை. மகாதேவன் நடவடிக்கைகள் எதுவும் சரியாகவும் படவில்லை அவருக்கு.

“அத்தை நீங்க சிவாவை அசிங்கப் படுத்துறதா நினைச்சு உங்க தராதரத்தை நீங்களே கெடுத்துகிட்டு இருக்கீங்க. என் மருமகளைப் பத்தி பேச உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது” என்றார் கோபமாய்.

“அம்மா ஒன்னும் தப்பா சொல்லலையே அண்ணி. இதென்ன பழக்கம்? கொழுந்தன் கூட ஜோடி போட்டுட்டு வர்றது? ஊருக்குள்ள நாலு பேர் நாலு விதமா பேச மாட்டாங்களா?” என்றார் மணிமேகலை.

“இதெல்லாம் இவ குடும்பத்துக்கு என்ன புதுசா? இவ அப்பன் தம்பி பொண்டாட்டியை வச்சிருக்கான். இவளும் அப்படி இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?அப்பன் புத்தி தான் இவளுக்கும் இருக்கும்” என்றார் விசாலாட்சி.