மகா தேவன் பேசி விட்டு சென்றதும் சுபத்ராவின் நினைவுகளோ கடந்த காலத்தை நோக்கி சென்றிருந்தது.
பஞ்சாயத்தில் குழந்தையை கொடுத்து விட்டு வந்திருந்த சுபத்ரா வீட்டில் ரத்தினத்தின் காலைப் பிடித்து அழுது கொண்டிருந்தார்.
“அப்பா என் குழந்தை எனக்கு வேணும். தயவு செஞ்சு என் குழந்தையை மட்டும் வாங்கிக் குடுத்துடுங்க” என்று கதற,
“அவனோட வாரிசு இந்த வீட்ல வளர்றது சரியா வராது சுபத்ரா. உனக்கு இன்னொரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்கும் போது அந்த குழந்தை இடைஞ்சலா இருக்கும். அதையெல்லாம் யோசிச்சு தான் அவன் குழந்தையைக் கேட்ட உடனே குடுக்க சொன்னேன்” என்றார் ரத்தினம்.
“எனக்கு இன்னொரு வாழ்க்கை எல்லாம் வேண்டாம். என் குழந்தை தான் வேணும்” என்றார் சுபத்ரா.
“அதுக்காம்மா அப்பா இவ்வளவு தூரம் கஷ்ட்டப்பட்டேன். வீட்டை விட்டு ஓடிப்போய், நீ குடும்ப மானத்தை வாங்குனப்ப கூட ஏன் அமைதியா இருந்தேன்னு நினைக்குற? மதுரையில அவன் கூட குடும்பம் நடத்துன நீ, எப்படி திடீர்ன்னு இந்த ஊருக்கே திரும்பி வந்த? இங்க வந்து விவசாயத்துல அவன் தொட்டதெல்லாம் ஏன் விளங்காம நஷ்ட்டமா போச்சுன்னு நினைக்குற? இவ்வளவு ஏன் இன்னொரு பொண்ணு கூட தொடர்பு இருக்குன்னு நீயே நம்பி எப்படி அவனை விட்டுட்டு வந்த?” என்றார் ரத்தினம். அவரின் பேச்சிற்கு பின்னால் இருந்த மறைபொருளை உணர்ந்து கொள்ளவே சுபத்ராவிற்கு நேரம் பிடித்தது.
“அப்பா”
“அப்பாவே தான்மா! எல்லாத்துக்கும் காரணம் இந்த அப்பாவே தான். பாரு இப்ப நீயே புருஷனும் வேணாம் புள்ளையும் வேணாம்னு சொல்லிட்டு வந்துட்ட பார்த்தியா? இது தான எனக்கு வேணும். முதல்ல அவனோட சேர்த்து உன்னையும் வெட்டிப் போடணும்னு தான் ஆத்திரம் வந்துச்சு. வெட்டிட்டா மட்டும் போன மானம் திரும்பியா வந்துட போகுது? ஊருக்குள்ள எனக்குன்னு ஒரு பேர் இருக்கு. அதைக் கெடுத்துக்க முடியுமா?” என்றார் ரத்தினம்.
“நான் அப்படி என்னப்பா தப்புப் பண்ணிட்டேன்.பெத்த மகளோட வாழ்க்கையைக் கெடுக்க எப்படி உங்களுக்கு மனசு வந்தது?” என்றார் சுபத்ரா ஆவேசமாய்.
“கோபத்தை குறை சுபத்ரா. கூடிய சீக்கிரம் உனக்கும் மகாதேவனுக்கும் கல்யாணம்” என்றார்.
“முடியாது” என்றார் தீர்க்கமாய்.
“முடியனும். இந்த ரத்தினம் நினைச்சது நடந்தே தீரனும்” என்றார் உறுதியாய்.
“முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவிங்க?” என்றார் சுபத்ரா கோபமாய்.
“உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா இத்தனை நாள் பண்ணனுமான்னு யோசிச்சதை எல்லாம் இனி யோசிக்காம பண்ணிட்டு போயிட்டே இருப்பேன். அந்த ஒன்னுமில்லாதவனையும், அவனோட குழந்தையையும் விட்டு எந்த அளவுக்கு விலகி இருக்கியோ அந்த அளவுக்கு அவங்க உயிரோடவாவது இருப்பாங்க. அப்பா செய்ய மாட்டேன்னு நினைக்காதம்மா. என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சும் இனி முட்டாள் தனமா எதையும் செய்ய மாட்டேன்னு நினைக்கிறேன்” என்றார்.
“அப்பா”
“அவனுக்கு இன்னொரு பொண்ணு கூட தொடர்பு இருக்குன்னு உன்னை நம்ப வச்ச எனக்கு ஊரையும் நம்ப வைக்க ரொம்ப நாள் ஆகாது. அப்பறம் சொல்ல மறந்துட்டேன் பாரு, அவனுக்கு ஒரு தம்பி இருக்கான்ல, பேரு கூட அறிவழகன். இராணுவத்துக்கு போகணும்னு முயற்சி பண்ணிட்டு இருக்கானாமே? இந்த நேரத்துல அந்த பையனும் ஸ்டேஷன், கேஸ்ன்னு அலைஞ்சா அவன் வாழ்க்கை என்னாகும்? அவனை இந்த பிரச்சனையில இழுக்க வேண்டாம்னு நினைச்சு தான் அமைதியா இருக்கேன்” என்றார் ரத்தினம்.
“அப்பா” என்ற சுபத்ராவிற்கு தந்தையின் உண்மை முகத்தைக் கண்டு அதிர்ச்சியே.
“இப்படி கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கிறதுக்கு என்னை மொத்தமா கொன்னே போட்ருக்கலாம்” என்றார் அழுகையுடன்.
“அப்படித்தான் நினைச்சேன். ஏன் உங்கண்ணன் அண்ணாமலை கூட உன்னை வெட்டனும்னு தான் துடிச்சுட்டு இருந்தான். அப்பறம் தங்கச்சி உண்டான செய்தி தெரிஞ்சவுடனே கொலை பண்ற அளவுக்கு இருந்த அவனோட கோபம், வெறும் கோபமா மட்டும் மாறிடுச்சு. இப்ப கூட உனக்காக இரக்கப்படாதவன், உன் குழந்தைக்கு இரக்கப் படுறானே. என்கிட்டையே வந்து சொல்றான், அந்த குழந்தை நம்ம வீட்டு வாரிசா இங்கயே வளர்ந்துட்டு போகுது. அந்த கிருஷ்ணன் பயலை மட்டும் வெட்டி விட்றலாம்னு. இன்னும் கொஞ்ச நாள் போனா, மொத்தமா தங்கச்சிக்காக மாறினாலும் மாறிடுவான். அதுக்கு நான் விட்ருவேனா என்ன?” என்றவரின் குரலில் அப்படி ஒரு குரோதம்.
சுபத்ரா அதிர்ந்து போய் நிற்க,
“நல்லா முடிவு பண்ணிக்கம்மா! உன்னோட குழந்தை உன்கூட இருக்கனுமா? இல்லை உயிரோட இருக்கனுமான்னு?” என்றவர்,
“உன்னோட உயிரை மாய்ச்சுக்குற வாய்ப்பு கூட உனக்கு கிடையாது. அப்படி ஏதாவது பண்ணனும்னு நினைச்ச, அந்த ஒன்னுமில்லாதவனையும், அவனோட பொண்ணையும் பின்னாடியே அனுப்பி வச்சிடுவேன். நீ மகாதேவனை கட்டிக்கிட்டு வாழனும். அதைப் பார்த்தே அவன் தினமும் சாகனும். அப்பா சொன்னது எல்லாம் உனக்கு தெளிவா புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்” என்ற ரத்தினத்தை தான் தீர்க்கமாய் பார்த்திருந்தார் சுபத்ரா.
கிருஷ்ணனை சந்தேகப்பட்டு வாழ்க்கையை தொலைத்ததையும், குழந்தையை கொடுத்துவிட்டு வந்ததை எண்ணியும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் சுபத்ரா. காலம் கடந்து வந்த தெளிவிற்கும், அறிவிற்கும் அங்கே வழியின்றி போனது. சுபத்ரா தந்தையால் ஆட்டுவிக்கப்படும் கைப்பாவையாகியிருந்தார்.
நடந்ததை நினைத்து பார்த்த சுபா, தன் வாழ்க்கையில் அத்தனை ஆட்டத்தையும் ஆடி முடித்திருந்த ரத்தினம் இன்று படுத்த படுக்கையாய் இருப்பதை எண்ணி வெறுப்புடன் சிரித்துக் கொண்டார்.
மாமனின் அத்தனை திட்டத்திற்கும் பின்னால் இருந்தது மகாதேவன் தான் என்ற உண்மை கூட சுபாவிற்கு காலம் கடந்து தான் தெரிந்திருந்தது. வெளியில் ஒரு முகம் உள்ளுக்குள் ஒரு முகம் என்று இரட்டை வேஷம் போடும் மகாதேவனுடனான வாழ்க்கை என்னவோ நரகம் தான் அவருக்கு. இதை தனக்கான தண்டனையாகவே ஏற்றுக் கொண்டார்.