இவளுக்கெல்லாம் என்ன நான் பதில் தருவது என அலட்சியமும் கோவமுமாக பார்த்தான் விஷ்வா.
என்ன பேசுகிறாள் இவள் என அப்போதுதான் கவனித்த வேதாவுக்கு தலை அதீதமாக கிறு கிறுக்க துவங்கியது.
“இங்கேருந்து போலாம் விஷ்வா” என மெல்லிய குரலில் சொன்னாள்.
மனைவியின் கையை பிடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டான் விஷ்வா. காரில் செல்லும் போது மடியில் முகம் புதைத்துக் கொண்டவாறுதான் பயணித்தாள் வேதா.
அவளுக்கு உடல் உபாதை என புரியவில்லை அவனுக்கு, நடந்த நிகழ்வில் ஏதோ உணர்ச்சி வயப் பட்டிருப்பதாகவே நினைத்தான். ஆகவே இறுக்கத்துடன் அமைதியாகவே காரை செலுத்தினான்.
அறைக்கு வந்த பின் அவள் சுருண்டு படுத்துக் கொள்ள, “ஏய் என்ன இப்போ உனக்கு? ரொம்ப லேட்டா சொல்றானே, முன்னாடியே சொல்லலைன்னு கவலையா?” என சுடு சொற்களை வீசினான்.
அவன் கேட்டது காதில் விழுந்தாலும் அவளால் தலை தூக்க முடியவில்லை. கோவம் குறையாதவனோ குளியலறைக்குள் புகுந்து விட்டான். ஷவருக்கு அடியில் சில நிமிடங்கள் அப்படியே நின்றான். மூளையின் சூடு சற்றே தணியவும்தான் அவனால் நடந்ததை அலசி பார்க்க முடிந்தது.
வேறு ஆடை மாற்றிக் கொண்டு அவளை நோக்கியவனுக்கு அவள் படுத்திருந்த விதம் உறுத்த, “வேதா ஹேய் என்ன உனக்கு?” என கேட்டுக் கொண்டே அவளிடம் சென்றான்.
அவள் உறங்கவில்லை, மயங்கியிருக்கவும் இல்லை என்பது புரியவும் அவளை எழுப்ப பார்த்தான். அவனிடமிருந்து விடுபட்டு அவள் படுத்துக் கொண்டதை கவனித்தவனுக்கு அவளுக்கு ஏதோ என புரிப்பட்டது.
சற்று நேரத்தில் விடுதி நிர்வாகத்தினரே அவன் கேட்டுக் கொண்டதன் பெயரில் மருத்துவரை வரவழைத்தனர்.
சாப்பிட்ட ஸ்னாக்ஸ் சொல்லி அதன் பின்னர்தான் தலை சுற்றலாக இருப்பதாக மருத்துவரிடம் கூறினாள் வேதா. அந்த உணவின் தன்மை காரணமாக செவிப்பறைக்குள் அழுத்தம் அதிகரிக்கும், சமநிலை தவறிப் போவதால் தலை சுற்றும் என காரணம் சொல்லி மருந்து எழுதி தந்து விட்டு போனார் மருத்துவர்.
விடுதி பணியாளர் ஒருவனிடமே மாத்திரை வாங்கி வரச் சொல்லி அவளுக்கு போடக் கொடுத்தான். அவளால் தானாக விழுங்க கூட முடியவில்லை, அவனது உதவியை ஏற்க அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை.
அவள் சரியாகி எழும் போது இரவு நேரம் பதினொன்று ஆகி விட்டது. தன்னருகில் படுத்திருந்தவனை தீண்டாமல் எழுந்து குளித்து விட்டு வந்தாள்.
“இப்போ பெட்டரா வேதா?” என அவன் கேட்டதற்கு மௌனம் காத்தாள்.
அவன் முன்னரே சாப்பிடிருந்தான். அவளுக்கான உணவு இருக்க, அவன் சாப்பிட்டானா என்பதை எல்லாம் அறிந்து கொள்ளாமலே சாப்பிட்டாள்.
அவள் உண்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், “எதாவது தொந்தரவுன்னா வாயை தொறந்து சொல்ல மாட்டியா? நானா கவனிச்சு கேட்கலைனா இப்போ வரை படுத்துதான் கிடந்திருப்ப, நான் பேசினதுல கோவம்னு காரணம் சொல்லாத, கார்ல வரும் போதும் நீ என்கிட்ட ஏதும் சொல்லல” என அவளை குறை சொன்னான்.
இங்கு என்னைத் தவிர வேறு ஆள் இல்லை என்பது போலவே நடந்து கொண்டவள் கைப்பேசியை எடுத்துக் கொண்டு போய் சோஃபாவில் அமர்ந்து விட்டாள். ஸ்வப்னா இவளது நலனை கேட்டு நிறைய செய்திகள் அனுப்பியிருந்தாள், ஒரு தவறிய அழைப்பு கூட இருந்தது.
இவள் பதில் செய்தி அனுப்பவுமே அழைத்து விட்டாள் ஸ்வப்னா. பாவம் கணவன் மனைவிக்குள் சண்டையோ என்னவோ என பயந்து போயிருப்பாள் போலும்.
“ரூபன் ப்ரொபோஸ் பண்ணினதுக்கு இவர் ஏன் என்கிட்ட கோச்சுக்க போறார்? அவ்ளோ அளவுக்கு அறிவில்லாதவர் இல்லைடி என் ஹஸ்பண்ட்” என வேதா சொல்லிக் கொண்டிருக்க, பற்களை கடித்தான் விஷ்வா.
“சேச்ச, எனக்கு முடியலை அதான் உன் கால் அட்டென்ட் பண்ணல, அவரும் என்னை கவனிக்கிறதுல பிஸியாகிட்டார், எனக்கொன்னுன்னா அப்படியே துடிச்சி போயிடுவார்” என அவள் சொல்லவும் தாடையை தடவிக் கொண்டே அவளை பார்த்தான்.
நாளை பேசுகிறேன் என சொல்லி அழைப்பை துண்டித்தவள் ஹெட் செட் மாட்டிக் கொண்டு பாடல்கள் கேட்க ஆரம்பித்து விட்டாள்.
வேகமாக அவளிடம் வந்தவன் ஹெட் செட்டை பட்டென பறித்து வைத்துக் கொண்டு, “ஒருத்தன் ரிங் நீட்டிகிட்டு ஈஈன்னு உன் முன்னாடி நிக்கிறான், என்ன நினைச்சுகிட்டு பே’ன்னு நின்ன நீ? நான் வரலைனா உன் விரலை புடிச்சு மாட்டி விட்ருப்பான் போல” என கோவமாக சொன்னான்.
“என்ன நினைச்சிருப்பேன்? ம்ம்… அடடா! இவ்ளோ நல்ல பையன் இவ்ளோ லேட்டா ப்ரொபோஸ் பண்றானே…” என அவள் சொல்லி கொண்டிருக்க, அவளது தாடையை பற்றியவன் விரல்களால் கன்னங்களை அழுத்தி அவளை பேச விடாமல் செய்தான்.
அவனது கையை வேகமாக தட்டி விட்டவள், “அப்படித்தானே நீங்களும் கேட்டீங்க!” என இரைந்தாள்.
“அவன் முன்னாடி அமைதியா நின்னா வேற எப்படி எடுப்பாங்கடி?”
“அப்போ அப்படித்தான்!” என கோவமாக அவள் சொல்லும் போதே கண்ணீர் வந்தது. துடைத்துக் கொண்டவள், “ஒரு வார்த்தை பேசக்கூடாது, இல்லைனா இப்பவே ஊருக்கு கிளம்பிடுவேன்” என சொல்லி, சோஃபாவிலேயே சுருண்டு கொண்டாள்.
அவளை முறைத்துக் கொண்டே படுக்கையில் படுத்து விட்டான் அவன். நல்ல பெரிய சோஃபாதான், அவளுக்கு படுக்க தாராளமாக இருந்தது. ஆகவே அவளை அப்படியே விட்டு விட்டான்.
மறுநாள் காலையும் கோவத்தை சுமந்து கொண்டேதான் விழித்தனர். அவள் காபி வரவழைத்தாள், சற்று நேரம் சென்று அவன் சாப்பாடு வரவழைத்தான். ஒரு அறைக்குள்ளேயே எவ்வளவு நேரம்தான் பேசிக் கொள்ளாமல் உர் என்றே இருப்பது. இருவருக்கும் சிரமமாக இருந்த போதும் இருவருமே முதலில் பேச்சு எடுக்க போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.
அவன் டிவியில் நருடோ அனிமேஷன் பார்க்க, அவளோ கைப்பேசியில் வீடியோ கேம் விளையாடினாள்.
இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வறை உபயோகிக்க வந்து நின்றனர். அவன் அவளுக்கு வழி விட்டு சென்று விட்டான். அவளுக்கு மாதாந்திர தொந்தரவு வந்திருந்தது. சென்ற வாரம்தான் வந்திருக்க, இப்போது அவள் எதிர்பார்த்திருக்கவே இல்லை. இப்படி மிக குறுகிய கால இடைவெளியில் முன்னெப்போதோ ஒரு முறை வந்திருக்கிறது.
சானிடரி நாப்கின் கைவசம் இல்லை, அவனிடம் உதவி கேட்க விருப்பம் இல்லாமல் தானே கடைக்கு கிளம்பலாம் என முடிவு செய்தாள். அது கொஞ்சம் ரிஸ்க் என தோன்றியதால் பணியாளரிடம் கூறி வாங்கி வர சொல்லலாமா என யோசித்தாள்.
ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் பேசியவள் தன் நிலையை சொல்ல, டிவியிலிருந்து அவளிடம் கவனத்தை வைத்தவன், “ஹேய் வை, நான் வாங்கிட்டு வர்றேன்” என எழுந்தான்.
உன் உதவியை பெறுவதா என அவள் அவனை வீம்பாக பார்க்க, அவனே கைப்பேசியை வாங்கி தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி நன்றி உரைத்து விட்டு வைத்தான்.
“எனக்கு யார் ஹெல்ப்பும் தேவையில்லை!” என அவள் கடு கடுக்க, “என்கிட்டருந்து நல்லா வாங்கி கட்டிக்காத வேதா” என எச்சரிக்கை போல சொல்லி விட்டு வெளியேறினான்.
கால் மணி நேரத்தில் அவன் திரும்ப வர, முணு முணுத்துக் கொண்டே அவனது உதவியை ஏற்றுக்கொண்டாள்.