நீயென் நாயகி -12

அத்தியாயம் -12

அந்த மாலை வேளையில் ரெஸார்ட்டில் இருந்த வேதாவின் நண்பர்கள் எல்லாம் குதூகலித்துக் கொண்டிருந்தனர். வேதா அவளது நெருங்கிய தோழி ஸ்வப்னாவுடன் தனியாக நின்றிருந்தாள்.

காலையில் இங்கு வந்ததிலிருந்து வேதாவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். நிறைய விளையாட்டுக்கள், கலாட்டாக்கள் என நேரம் ஓடியதே தெரிந்திருக்கவில்லை.

இப்போது சற்று முன்புதான் ஸ்வப்னாவுக்கு ஒரு விஷயம் தெரிய வர அதை சொல்லத்தான் வேதாவை ஓரம் கட்டியிருந்தாள் அவள்.

வேதாவுக்கும் விஷ்வாவுக்கும் திருமணம் நின்றது அங்கு வந்திருந்த அனைவருக்கும் தெரியும், சிலர் திருமணத்தில் பங்கு பெற ஊருக்கு வந்து வேதாவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு திரும்பியிருந்தனர்.

திடீர் திருமண கதையெல்லாம் ஸ்வப்னாவுக்கே இன்று காலையில்தான் தெரியும். இப்போதைக்கு மற்ற யாரிடமும் சொல்ல பிரியப் படவில்லை வேதா. அனைவருமே வேதாவுக்கு நெருக்கம் கிடையாது, திருமணமான விதத்தை மறைத்து விட்டு என்ன பொய் சொல்வது என அவளுக்கும் சங்கடம், ஒரு வேளை உண்மை தெரிந்தால் யாரும் கேலி செய்து விடுவார்களோ என நினைத்தாள். ஏனெனில் கலாய்க்கிறேன் என்ற பெயரில் எதிரில் இருப்பவரை நோகடிக்கும் தன்மை கொண்ட சில அரைவேக்காட்டு ஆசாமிகளும் அந்த குழுவில் இருந்தனர்.

மொத்தத்தில் தன் திருமண விஷயத்தை பகிர்ந்து, அதனால் ஏற்படும் எதிர்வினைகளை எதிர்கொள்ள இந்த நாள், இந்த நேரம் அவள் தயாராக இல்லை. ஆகவே ஸ்வப்னாவிடம் கூட யாரிடமும் வெளிப் படுத்த வேண்டாம் என்றே கேட்டுக் கொண்டிருந்தாள்.

தற்போது பிரச்சனை என்னவென்றால் அவர்களின் பேட்ச் மேட் ரூபன் என்பவனும் வந்திருக்கிறான். மிகுந்த அமைதி, படிப்பாளி மற்றும் பண்பான நல்ல பையன். சென்னையில் நல்ல வேலையில் இருக்கிறான். படித்த காலத்திலேயே வேதாவை விரும்பியிருக்கிறான். சொல்ல தயக்கம் கொண்டு சொல்லாமலே விட்டிருக்கிறான்.

அவனுடைய நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு விவரம் தெரிந்த பிறகுதான் இந்த ‘கெட் டூ கேதர்’ ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. ஸ்வப்னாவிடம் உண்மையை சொல்லாமல் நயந்து பேசி அவள் மூலமாகவே வேதாவை வரவழைத்து விட்டனர்.

சற்று முன்பு சாப்பிட்ட ஸ்னாக்ஸ் வேதாவின் உடலில் ஏதோ மாற்றத்தை உண்டாக்கியிருக்க, இப்போது தோழி சொன்ன விஷயமும் சேர்ந்து கொள்ள அவளுக்கு  தலை சுற்றுவது போலிருந்தது.

“சத்தியமா எனக்கு முன்னாடியே தெரியாதுடி, இப்ப இவனுங்க ஏதோ  சர்ப்ரைஸ் ப்ரொபோசல்னு பேசிக்கிறது காதுல விழுந்துதான் என்னங்கடான்னு விசாரிச்சேன். உன் மேரேஜ் நின்னு போன அன்னிக்கு ரூபன் ரொம்ப ஃபீல் பண்ணினானாம், இவனை விட பெட்டர் சாய்ஸ் உனக்கு கிடைக்க மாட்டான் அப்படி இப்படினு ஏதேதோ சொல்லி என்னை சைலன்ட் ஆக்க பார்க்கிறானுங்க. நீ மேரீட்னு உண்மையை சொல்ல வாய் துடிச்சுது, ஆனா நீ என்ன சொல்லுவியோன்னு உன்னை நினைச்சு பயம், நீயே சொல்லிடு வேதா, டிலே பண்ணாத” என பட படத்தாள் ஸ்வப்னா.

அதற்குள் ஏதோ பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அவர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் நடனம் ஆடத் தெரிந்தவர்கள் ஆட, நடு மையமாக வெட்கமும் சிறு பயமுமாக நின்றிருந்தான் ரூபன்.

காலம் கடந்து விட்டதை நினைத்த ஸ்வப்னா விழிகள் தெறிக்க வேதாவை பார்த்தாள். வேதாவுக்கு ரூபனை நினைத்து பாவமாகி விட்டது. மூளையோ வேலை செய்ய மறுத்தது.

காலையிலிருந்து வித விதமாக புகைப்படங்கள் எடுத்து விஷ்வாவுக்கு அனுப்பிக் கொண்டுதான் இருந்தாள் வேதா. அவனும் அவனது இரண்டு நண்பர்களுடன் வெளியில் சென்றிருந்தான். அவன் தன் திருமணத்தை அவர்களிடம் மறைக்கவெல்லாம் இல்லை. உண்மை நிலவரத்தை சொல்லி விட்டான்.

இப்படியா அடாவடி செய்வாய் என விஷ்வாவை திட்டி, இனியாவது ஒழுங்காக வாழ் என அறிவுரையும் சொன்னார்கள் அவனது தோழர்கள்.

அடிக்கடி கைப்பேசியை பார்ப்பதும் அவனுக்குள் சிரித்துக் கொள்வதுமாக இருந்த விஷ்வாவை அவர்கள் ஓட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். லாங் டிரைவ் சென்று கொண்டிருந்த வேளையில் விஷ்வாவின் நண்பன் வேதா இருந்த ரெஸார்ட்டிற்கே காரை கொண்டு வந்து நிறுத்தி விட்டான்.

“உன் அலம்பல் ஓவரா இருக்கு மச்சான், நாங்க கிளம்பறோம், கொஞ்ச நேரத்துல இங்க பார்ட்டியும் முடிஞ்சிடும், நீ உன் ஆளோட சிரிச்சுகிட்டே ஒரு லாங் டிரைவ் போ” என சொல்லி கார் சாவியையும் அவனிடம் கொடுத்து விட்டு மற்ற இருவரும் கிளம்பி விட்டனர்.

விஷ்வாவுக்கும் நல்ல யோசனையாக இருந்தது. வெளியூரிலிருந்து நிறைய நபர்கள் வந்திருப்பதால் மாலை வரைதான் நிகழ்ச்சி நடக்கும் என வேதாவும் சொல்லியிருக்க, இன்னும் சற்று நேரத்தில் அவளும் புறப்பட்டு விடுவாள் என நினைத்துக் கொண்டே உள்ளே வந்தான்.

வேதாவின் முன் மண்டியிட்டு மோதிரத்தை எடுத்து நீட்டி கல்யாணம் செய்து கொள்கிறாயா என கேட்டு அவளின் பதிலுக்காக பார்த்திருந்தான் ரூபன். அவனை ஏற்றுக்கொள் என வேதாவிடம்  சொல்லி சுற்றி உள்ளவர்கள்  ஆரவாரம் செய்தனர்.

“ரூபன் எந்திரி…” என்றாள் வேதா.

“உன் மேரேஜ் நின்னது, இல்லை… வேற எந்த பாஸ்ட்டா இருந்தாலும் எனக்கு கவலை இல்லை வேதா, நான் உனக்கு பெஸ்ட் பார்ட்னரா இருப்பேன்” என கண்களில் காதலை நிறைத்துக் கொண்டு சொன்னான் ரூபன்.

அவனை காயப்படுத்தி விடாமல், மற்றவர்கள் முன்பு அவன் அவமானமாக உணர்ந்து விடாமல் இதை எப்படி கையாண்டு சரி செய்வது என வேகமாக யோசித்தாள் வேதா.

எப்போதோ அங்கு வந்து சேர்ந்திருந்தான் விஷ்வா. அவனிடம் மறுப்பாக ஏதும் சொல்லாமல் தவிப்போடு நிற்பவளின் மன உணர்வுகளை விஷ்வாவால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. மனதிற்குள் கலவரமாக உணர்ந்தவன் அவளை நோக்கி நடந்தான்.

தன் தோள் மீது கை போட்டு யாரோ அணைவாக பிடித்துக் கொள்ளவும் திடுக்கிடுதலோடு பார்த்த வேதா, விஷ்வாவை கண்டு விட்டு லேசாக தளர்ந்து போய் ஹையோ என மானசீகமாக அலறினாள்.

உச்ச பட்ச திகைப்போடு எழுந்து நின்றான் ரூபன். ‘யார்டா நீ?’ என்பது போல கோவத்தை மறைத்துக் கொண்டு பொய்யான புன்னகையோடு அவனை பார்த்தான் விஷ்வா.

“இவர்தான் என் ஹஸ்பண்ட் ரூபன், எங்களுக்கு… திடீர்னு கல்யாணம் ஆகிடுச்சு, அது…” வார்த்தைகளை தேடினாள் வேதா.

யாருக்கும் என்ன சொல்லவென தெரியவில்லை. இவன்தான் வேதாவை மணக்காமல் ஓடிச் சென்றவன் என்பது அன்று திருமணத்திற்கு வராதவர்களுக்கு கூட வந்தவர்களால் சொல்லப் பட்டது.

விஷ்வாவை எதிர்க்காமல் அவனுடன் இணக்கமாக வேதா நின்றிருக்க, அனைவரும் எதுவும் பேசாமல் தள்ளியே நின்றிருந்தனர்.

ரூபனின் முகம் கறுத்துப் போய் விட்டது. அவ்விடத்திலிருந்து நீங்கும் வழி தெரியாமல் வெறுமையாகி விட்ட மூளையோடு தரையைப் பார்க்க நின்றிருந்தான்.

“ரூபன் ஸாரி, என் தப்புதான், நான் முன்னாடியே சொல்லிருக்கணும், எக்ஸ்ட்ரீம்லி ஸாரி, பேட்’டா ஃபீல் பண்ணாத”  என சமாதானமாக சொன்னாள் வேதா.

“ஸாரி வேதா, ஸாரி…” என்ற ரூபனின் முகமும் குரலும் ஏகத்துக்கும் கலங்கிப் போயிருந்தது.

நடப்பதை உணர்ந்து சுதாரித்திருந்த ரூபனின் நண்பன் ஒருவன் , “டேய் டேய், ஈஸி ஈஸி” என சொல்லி அவனை அங்கிருந்து அழைத்து செல்ல பார்த்தான்.

“கல்யாணம் ஆகியிருந்தா அதைப் போய் எங்கள்ட்டேருந்து ஏன் மறைக்கணும் வேதா? உன்னால ஒரு இன்னொசன்ட் ஹர்ட் ஆகி போறான்” என குற்றம் சுமத்தினாள் ஒரு பெண்.

“ஹலோ மிஸ், அது அவ பெர்சனல். எங்களுக்கு கல்யாணம் ஆகலைனா கூட இந்த ப்ரொபோஸலை அக்செப்ட் பண்ணிருக்க மாட்டா. ஏன்னா…” என்றவன் அடுத்து வேதாவே தன்னை விரும்பியதை சொல்வாள் என அவளை பார்த்தான்.

வேதாவின் சிந்தனை முழுதும் அப்பாவி ரூபனே இருந்தான்.