“ரேணுமா நேரம் இல்லைன்னா கிளம்ப சொல்லுங்க. நான் பஸ்லயே போய்க்குவேன்” என்றாள் பட்டென்று. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
அவளை திரும்பிப் பார்த்தவன், எதுவும் பேசாமல் சாப்பிட, அவளுக்கோ சாப்பாடு இறங்க மறுத்தது.
“மாமா நீங்க எங்களை மதுரைக்கு கூட்டிட்டு போய் எவ்ளோ நாள் ஆச்சு. இந்த வாரமாவது கூட்டிட்டு போகணும்?” என்று அமிர்தாவும் ஜீவனும் சொல்ல, தாரணியும் சேர்ந்து கொண்டாள்.
“சரி சரி கூட்டிட்டு போறேன்” என்று அவன் வாக்குக் கொடுக்க, பொறுமையாய் இருந்தவளுக்கு காரணமே இல்லாமல் கோபம் வந்தது. சாப்பிடாமல் அப்படியே கையை கழுவி விட்டு எழுந்து கொள்ள,
“என்ன சிவாம்மா வச்சது அப்படியே இருக்கு” என்றார் ரேணுகா கவலையாய்.
“எனக்கு பசியில்லை ரேணுமா. நான் கிளம்புறேன்” என்றவள், யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் கிளம்பிவிட்டாள்.
“விடுங்கம்மா,சரியாகிடுவா” என்பதோடு அவனும் முடித்துக் கொண்டான்.
அப்போது விசாலாட்சி வர,
“என்ன ஆதி கிளம்பிட்டியாப்பா?” என்றார் பாசமாய்.
“ம்ம்” என்பதோடு அவரிடம் மேற்கொண்டு அவன் எதுவுமே பேசவில்லை. விசாலாட்சிக்கு மனதிற்குள் நறுக்கென்று இருந்தது. அன்று மாந்தோப்பு சென்று பேசிவிட்டு வந்ததில் இருந்தே ஆதி சரியில்லையோ என்ற எண்ணம் அவருக்கு. வீட்டில் யாரிடமும் அவன் சரியாக பேசுவதில்லை. கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே அவனிடமிருந்து பதில் வந்து கொண்டிருந்தது.
“பாட்டிகிட்ட இப்பல்லாம் நீ சரியா பேசுறதே இல்லை ஆதி. அந்த அளவுக்கு பாட்டியை பிடிக்காம போயிடுச்சா? அன்னைக்கு நான் சொன்னதை யோசிச்சு பார்த்தியா ஆதி. இல்ல அது தான் உனக்கு கோபமா?” என்றார். மற்றவர்களுக்கு எப்படியோ அவருக்கு ஆதி உயிருக்கு உயிரான பேரன் அல்லவா.
“அம்மா டைம் ஆச்சு, நான் கிளம்புறேன்” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டான். எப்படியும் பக்கத்தில் தான் நடந்து போய் கொண்டிருப்பாள் என்று எண்ணி அவன் சிவாவின் பின்னோடு செல்ல, வழி எங்கிலும் அவளைக் காணவில்லை.
பேருந்து நிறுத்தத்தில் காவியாவுடன் நின்றிருந்தாள் சிவ தீர்த்தா. அவர்கள் அருகில் ஜீப்பை நிறுத்தியவன், வாட்சையும் அவளையும் மாறி மாறி பார்க்க,
“சிவா அண்ணா தான் நிக்கிறாங்கல்லா கிளம்புடி” என்றாள்.
“அங்க நான் டைம்க்கு இருக்கணும். லேட்டா போனா நல்லா இருக்காது. வர முடியுமா முடியாதா?” என்றான் கடுமையான குரலில். முகத்தை தூக்கி வைத்தபடியே ஏறிக் கொண்டாள்.
“காவியா நீ மா” என்றான்.
“அண்ணா நான் இந்த பக்கம் போகணும். நீங்க கிளம்புங்க, எனக்கும் பஸ் வந்திடுச்சு” என்றவுடன் சிவாவை மட்டும் ஏற்றிக் கொண்டு கிளம்பியிருந்தான்.
அவன் ஏதாவது கேட்பான் என்று அவள் நினைத்திருக்க அவனோ வாயைக் கூட திறக்கவில்லை. காரணமேயில்லாமல் அழுகையாய் வந்தது அவளுக்கு.
‘இப்ப எதுக்கு இப்படி பீல் பண்ணிட்டு இருக்க?ஏதாவது காராணம் இருக்கா?’ என்றது மனம்.
‘காரணம் இல்லை, ஆனா கடுப்பாகுதே’ என்றவள் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வர, அவளுக்கும் தான் அன்று நேரமாகியிருந்தது.
“அரைமணி நேரம் லேட். இன்னைக்கு கிளாஸ்ல என்னை வச்சு செய்ய போறாங்க இன்சார்ஜ்” என்று எண்ணிக் கொண்டவள், அவனைப் பார்க்க, அவன் பார்வையோ சாலையில் தான் இருந்தது.
அவனைப் பார்த்திருந்தவளுக்கு, எரிச்சல் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைய,
‘வர வர என் கண்ணுக்கு இவங்க ரொம்ப மேன்லியா தெரியறாங்களே? என்ன காரணமா இருக்கும்?’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவள் கல்லூரி வந்து விட்டிருந்தது.
“ஆத்தி டைம் ஆச்சு” என்று வேகமாய் இறங்கியவள், அவனைத் திரும்பியும் பார்க்காது செல்ல, இப்போது அவன் தான் கடுப்புடன் அவளைப் பார்த்திருந்தான்.
சென்று கொண்டிருந்தவளுக்கு என்ன தோன்றியதோ, திரும்பி அவனைப் பார்த்து தலையசைத்து விட்டு சென்றிருக்க, அவன் முகத்தில் சிரிப்பு தன்னால் விரிந்திருந்தது.
‘இவளுக்குக் கூட பொறாமை வருமா? வீட்ல தாரணியை என்ன முறை முறைக்கிறா? காலையில இருந்து விடாம சைட் அடிக்கிறா. ஆனா வாயைத் திறந்து பேசுறாளா பாரு?’ என்றுவனுக்கு சிரிப்பு வேறு.
ஜீப்பை ஓரமாய் நிறுத்திவிட்டு இறங்கியவன்,
‘லூசு.. அக்ரி கான்பரன்சே இங்க தான் நடக்குது. அது கூட தெரியாம இவள்லாம் ஒரு பைனல் இயர் ஸ்டூடன்ட் வேற’ என்று சிரித்துக் கொண்டவன், இயல்பு போல் சிகையை சரி செய்து கொண்டு உள்ளே சென்றிருந்தான்.
கான்பரன்ஸ் ஹாலில் சென்று அமரும் வரைக்குமே சிவ தீர்த்தாவிற்கு விஷயம் தெரியாது.
‘எப்படியோ லேட்டா வந்ததுல இருந்து தப்பிச்சோம்டா சாமி’ என்ற மனநிலையில் அவள் அமர்ந்திருந்தாள்.
அங்கு பேச அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராய் மேடையேற, ‘AK கோக்கனட் ப்ராடக்ட் லிமிடெட் நிறுவனர் மிஸ்டர்.ஆதி கேசவன்’ என்று அழைக்கும் வரை அவளின் கவனம் அங்கு இல்லை. அதிலும் கம்பெனி பெயர் எல்லாம் அவளுக்குத் தெரியாது. ஆதி கேசவன் என்ற பெயரில் தான் மேடையைப் பார்த்தாள்.
“இவங்க எங்க இங்க?” என்று அவள் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, கூட்டத்தில் அவளைத் தேடும் வேலையை எல்லாம் அவன் செய்யவில்லை. சொல்லப் போனால் அவள் அங்கு தான் இருக்கிறாள் என்று கூட அவனுக்கும் தெரியாது. அக்ரியின் அனைத்து துறை சார்ந்த மாணவ மாணவிகளும் அங்கு இருந்தனர்.
“அக்ரி கான்பரன்ஸ் போறேன்னு தான சொன்னாங்க. அது நம்ம காலேஜ்ல தான் நடக்குதுன்னு ஏன் எனக்கு ஸ்ட்ரைக் ஆகாம போச்சு?” என்று நொந்து கொண்டாள் சிவ தீர்த்தா.
வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் அவர்கள் நிறுவனம், அவற்றின் வளர்ச்சி, செயல்பாடு ,அவர்களின் பங்களிப்பு என்று பேசிக் கொண்டிருக்க, அவளுக்கோ தூக்கமாய் வந்தது. ஒரு சிலரின் ஆக்கப்பூர்வமான பேச்சையும் கேட்டிருந்தாள்.
அடுத்ததாக ஆதி கேசவன் பேச வர, அவனைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும், அவன் மிடுக்கும் தோரணையும் அவள் பார்வையை அவனை நோக்கித் தன்னால் ஈர்த்திருந்தது.
மைக்கின் முன்னால் அவன் பேச ஆரம்பித்த விதமே அவனுக்கு இது முதல் மேடை இல்லை என்பதை தெளிவாய் உணர்த்தியது. தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைப் பற்றி அவன் தெளிவாய் பேசிக் கொண்டிருக்க, அனைவரும் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தனர். அதில் இருக்கும் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதிக்கான வாய்ப்பு என்று அவர்களுக்கு தெளிவான ஒரு உரையை கொடுத்துக் கொண்டிருந்தான்.
‘இதைத்தான் காலையில உட்கார்ந்து லேப்டாப்ல பார்த்துட்டு இருந்தாங்களா?’ என்று எண்ணிக் கொண்டவளும் அவனின் பேச்சை ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தாள். கேட்டாள் என்பதைக் காட்டிலும் அவனை ரசித்துக் கொண்டிருந்தாள் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். ஏதோ இன்று தான் அவனை முதன் முதலில் பார்ப்பது போன்று பார்த்திருந்தாள்.
சொல்லப் போனால் இன்று தான் அவன் என்ன செய்கிறான் என்றே அவளுக்குத் தெரிந்திருந்தது. தோப்பு, தோட்டம்,வயல், மில் எல்லாம் இருப்பது அவளுக்குத் தெரியும். தனியாக ஒரு கம்பெனி வைத்திருக்கிறான் என்றும் தெரியும். ஆனால் அது எதை சார்ந்தது, என்ன தொழில் என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது.
“படிச்சு முடிச்சு இந்த துறையில சொந்தமா தொழில் தொடங்கனும்னு நினைக்கிறவங்க எப்ப வேணும்னாலும் என்னை காண்டாக்ட் பண்ணலாம்” என்று அவன் பேசி முடித்திருக்க,
“என்ன சிவா? என்ன கருத்தரங்கு போட்டாலும் கேள்வியா கேட்டு பேச வந்தவங்களை சாகடிப்பா. இன்னைக்கு அமைதியா இருக்க?” என்று அருகில் இருந்த நண்பர்கள் வட்டம் கேட்டு வைக்க,
“ஹி..ஹி.. ஒரு சந்தேகமும் இல்லை” என்றாள் வலிய சிரித்தபடி. ஒரு வழியாக அந்த கருத்தரங்கு நிறைவுக்கு வர மதியத்திற்கு மேல் ஆகியிருந்தது. ஆதியும் பேசிவிட்டு கீழே முன் வரிசையில் சென்று அமர்ந்திருந்ததால், அவளை பார்க்கவில்லை.
முடிந்து அனைவரும் கிளம்பி சென்ற பிறகு இவர்களும் கலைந்து வெளியே செல்ல,
“ரொம்ப அருமையா பேசுனிங்க சார். ரியலி ஐ லைக் யுவர் ஸ்பீச்” என்று ஒரு ஆசிரியை அவனுக்கு கைகொடுக்க, தானும் கை குலுக்கியிருந்தான். அந்த நேரம் பார்த்து தான் சிவா சரியாக வெளியே வந்தாள். வந்தவளின் கண்ணில் பட்ட காட்சி என்னவோ இது தான். அவளின் கண்களோ முறைத்துக் கொண்டிருந்தது. மற்றவர்களுக்கு தெரியாவிட்டாலும் ஆதிக்கு அது நன்றாகவே தெரிந்தது.
ஒரு நமட்டு சிரிப்புடன் கையை விலக்கியவன்,
‘இவ்வளவு நேரம் இங்கயா இருந்தா? நான் பார்க்கலையே?’ என்றவன் யோசனையாக அவளைப் பார்க்க, போனவள் போன வேகத்தில் திரும்பி வந்திருந்தாள்.
“என்னாச்சு சிவா? இங்கயே ஏன் நிக்கிற?” என்றார் அந்த ஆசிரியை.
“ஆப்டர்நூனோட கிளாஸ் ஓவர் மேம்” என்றாள் கடுப்பாக.
“யா..ஐ க்னோ.. அதான் கான்பரன்ஸ் முடிஞ்சதே, கிளம்பாம என்ன பண்றன்னு தான் கேட்டேன்” என்றார் அவரும்.
“நத்திங்க மேம்” என்றவள் அடுத்த நிமிடம் நடையைக் கட்ட, அவனுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை.
“என்னாச்சு ஆதி சார்?” என்று அந்த ஆசிரியை கேட்க,
“ஷீ இஸ் மை வொயிப் மேம்” என்றான் சிரிப்புடன். பார்வை என்னவோ சென்று கொண்டிருந்த சிவ தீர்த்தா மேல் தான் இருந்தது.
“நிஜமாவா?அப்பறம் ஏன் சிவா எதுவும் பேசலை” என்றவருக்கு வியப்பு.
“காலேஜ்ல சொல்ல வேண்டாம்னு நினைச்சிருப்பா” என்றான் இயல்பாய்.
“நோ..நோ! சிவா மேரிட்னு எங்க எல்லாருக்கும் தெரியும். காலேஜ் பர்ஸ்ட் டே அன்னைக்கே கிளாஸ்ல இன்பார்ம் பண்ணிட்டா. ஆனா நீங்கதான் சிவா ஹஸ்பண்ட்னு தெரியாது ஆதி சார். எனிவே ரொம்ப சந்தோசம், ரொம்ப திறமையான பொண்ணு” என்று அவளையும் பாராட்டிவிட்டு சென்றிருந்தார்.
அவர் கூறியதை கேட்ட அவனுக்கு ஒரு விதத்தில் ஆச்சர்யம் தான்.’பரவாயில்லையே மேரேஜ் ஆனதை எல்லாருக்கும் சொல்லியிருக்கா’ என்று நினைத்துக் கொண்டே சென்றான்.
அவன் வரும் போது கண்டது பார்க்கிங்கிற்கு அருகில் இருந்த கல் மேடையில் நகத்தை கடித்தபடி இருந்தவளைத் தான். வந்து வண்டியை எடுத்தவன் அவளுக்கும் டோரைத் திறந்துவிட, அமைதியாய் ஏறிக் கொண்டாள். சற்று தூரம் செல்லும் வரை அவளின் அமைதியை பொறுத்தவன், எரிச்சலுடன் வண்டியை நிறுத்தியிருந்தான்.
“இப்ப என்ன தான் தீர்த்தா பிரச்சனை உனக்கு? எதுக்கு காலையில இருந்து முகத்தை இப்படி வச்சிருக்க? என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு? நெருங்கி வந்தாலும் முறைக்கிற? விலகி இருந்தாலும் முறைக்கிற? நான் யாரைப் பார்த்தாலும் முறைக்கிற? என்னை யார் பார்த்தாலும் முறைக்கிற? என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. அதை நீ ரொம்ப சோதிக்கிற?” என்றான் கோபமாய்.
அவளுக்கோ உள்ளுக்குள் பரிதவிப்பாய் இருந்தது. அவனுடன் இயல்பாய் பேச சொல்லி ஒரு மனம் தவிக்க, பேச முடியாத தயக்கம் அவளுக்கு.
அவள் முகத்தையே பார்த்து ஏமாந்து போனவன் கோபத்துடன் வண்டியை கிளப்பியிருந்தான்.