இரவு வீட்டுக்கு போகும் போது மறக்காமல் அவன் வாங்கிக் கொடுத்த சுவீட்டை எடுத்துக் கொண்டு சென்றாள் மங்கை. “என்ன டி சுவீட் எல்லாம்?”, என்று கேட்டாள் கோமளம்.
அவன் தன்னை அலுவலகத்தில் வைத்து பார்த்து கொடுத்தான் என்று சொன்னால் அனைவரும் தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணி “நான் இப்ப வரும் போது பார்த்தி உன் கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்தாங்க மா. அவங்களுக்கு வேலை கிடைச்சிருச்சாம்”, என்றாள்.
“நல்ல விஷயம் தான். இனியாவது அவங்க எல்லாரும் நல்லா இருக்கட்டும்”, என்று சொன்ன கோமளம் அந்த பையை வாங்கிக் கொண்டு சென்றாள். மகள் முதல் முறை பொய் சொல்கிறாள் என்று அந்த தாய்க்கு தெரிய வில்லை.
அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சந்திரன் முகம் ஒரு மாதிரி இருந்தது. அதை யாரும் கவனிக்க வில்லை. இரவு உணவு முடிந்ததும் பார்த்திபன் வாங்கி கொடுத்தக் ஸ்வீட்டில் இருந்து ஒன்றை கொண்டு வந்து கணவருக்கு கொடுத்தாள் கோமளம்.
“என்ன கோமு சுவீட் எல்லாம்? என்ன திடீர்னு?”, என்று குழப்பமாக கேட்டார் சந்திரன்.
“நம்ம பார்த்தி தம்பி கொடுத்ததுங்க”
“பார்த்தியா? எதுக்கு?”, என்று கேட்டவரின் குரலில் கவனம் ஏறியது.
“பார்த்திக்கு நல்ல கம்பெனில வேலை கிடைச்சிருக்காம்”, என்று மட்டும் சொன்னாள் கோமளம். அது மட்டும் தான் அவளுக்கு தெரிந்திருந்தது.
அதற்கு மேல் எதையும் மங்கை அன்னையிடம் சொல்லி இருக்க வில்லை. அதுவும் அவள் தான் வேலை கிடைக்க காரணம் என்றெல்லாம் மூச்சே விடவில்லை. மறைக்க வேண்டும் என்று அவள் நினைக்க வில்லை தான். ஆனால் சொல்ல பயமாக இருந்தது. காதல் வந்தால் முதலில் பிறப்பது கள்ளமும் திருட்டு தனமும் தானே? மங்கை மட்டும் விதிவிலக்கா என்ன?
சந்திரனும் பார்த்திபனின் வேலை பற்றி விசாரித்ததோடு சரி,வேறு எதுவும் கேட்க வில்லை, ஆனால் ஏதோ யோசனையில் இருந்தார். மனைவி கண்டு பிடிக்கும் முன் முகத்தை மாற்றி இருந்தார். ஏனென்றால் தனக்கு தெரிந்த விஷயம் மனைவிக்கு தெரிந்தால் கோமளம் அதை சாதாரணமாக கடந்து விடுவாள் என்று அவருக்கு நம்பிக்கை இல்லை. அவருக்கே அதை நினைத்து அவ்வளவு கவலையாக இருந்தது.
இன்று அவர் வேலை முடிந்து வீடு திரும்பும் போது கிருஷ்ணன் என்ற ஒருவர் அவரிடம் பேசினார். கிருஷ்ணனிடம் தான் அவரும் சரி,சேதுவும் சரி பால் வாங்குவார்கள் என்பதால் கிருஷ்ணன் ஏதோ பேச வந்ததும் சந்திரன் நின்று விட்டார்.
“உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் தம்பி”, என்றார் கிருஷ்ணன்.
“சொல்லுங்கண்ணே? என்ன விஷயம்?”
“உங்களுக்கும் உங்க பக்கத்து வீட்டுக்கும் ஏதாவது பிரச்சனையா தம்பி?”, என்று கேட்டதும் சந்திரன் புருவம் உயர்ந்தது.
“இங்க வரைக்கும் நியூஸ் வந்துருச்சா?”, என்று எண்ணிக் கொண்டு “சண்டை எல்லாம் இல்லையே அண்ணே”, என்றார் சந்திரன். சேது வீட்டு விஷயத்தை பற்றி கேட்கிறார் என்று எண்ணி அதை அவரிடம் சொல்ல மனதில்லை என்பதால் அப்படிச் சொன்னார்.
“ஆனா நாங்க வேற மாதிரி கேள்வி பட்டோம் தம்பி”, என்றவர் விஷயத்தைச் சொல்ல தயங்கினார்.
“என்னன்னு சொல்லுங்க அண்ணே”, என்று சொன்ன சந்திரனின் புருவம் உயர்ந்தது.
“உங்க பொண்ணுக்கும் சேது அண்ணன் பையனுக்கும் ஏதோ தப்பா..”, என்று ஆரம்பித்து அவருக்கு தெரிந்ததைச் சொல்ல “அண்ணே”, என்று பதறிப் போய் கத்தி விட்டார்.
“நான் சொல்லலை தம்பி. அந்த பையனோட சித்தி தான் ஊர் முழுக்க பரப்பி விடுறா போல? கொஞ்சம் கவனமா இருங்க. பொம்பளைப் பிள்ளை விஷயம். உங்க காதுல போட்டு வச்சா கவனமா இருப்பீங்கள்ல. அதான் சொன்னேன். என்னை எதுவும் தப்பா நினைக்காதீங்க”
“உங்களை தப்பா நினைக்க என்ன இருக்கு? எங்க நல்லதுக்கு தானே சொல்றீங்க? எங்க பொண்ணு மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு அண்ணே. அந்த பையனும் சொக்க தங்கம். அந்த பொம்பளை தான் கொஞ்சம் சரி இல்லை. அதான் சேது அதை தள்ளி வச்சிட்டார். அந்த கோபத்துல தான் அந்த அம்மா இப்படி எல்லாம் பேசுது போல?”
“இந்த உலகமே அப்படி தானே தம்பி? நம்ம மேல பழி வரக் கூடாதுன்னு அடுத்தவங்க மேல சாக்கடையை அள்ளி தான் தெளிப்பாங்க. சரி கவனமா பிள்ளையை இருக்கச் சொல்லுங்க. பொம்பளை பிள்ளை விவகாரம் பாத்தீங்களா?”, என்று அவர் சொல்லி விட்டுச் சென்று விட சந்திரனுக்கு இந்த விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. கூடவே அடுத்து என்ன செய்ய என்ற பயமும்?
என்ன இருந்தாலும் அவரின் செல்ல மகளைப் பற்றி அல்லவா தவறான பேச்சு வந்திருக்கிறது? மங்கை அவரது உயிர். அவளுக்கு ஒன்று என்றால் நிச்சயம் அவரால் அதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. அவள் மேல் அவருக்கு மழையளவு நம்பிக்கை இருக்கிறது தான். ஆனால் அவருக்கு தெரிவது ஊருக்கு தெரியாதே?
கனகா இப்படி எல்லாம் சொன்னால் தன்னுடைய மகளைப் பற்றி அனைவரும் என்ன நினைப்பார்கள் என்று ஒரு தந்தையாக மகள் வாழ்க்கையை எண்ணி கவலையாக இருந்தது. இந்த பிரச்சனையை எப்படி சரி செய்ய என்று எண்ணியவருக்கு ஏற்கனவே வீட்டிலும் லதா மற்றும் நந்தன் பேசியது நினைவில் வந்தது.
அவர்களிடம் மகளைப் பற்றி அப்படி பேச்சு வந்தால் அவளை அவனுக்கே திருமணம் முடித்து வைப்பேன் என்று பேசியதும் நினைவில் வந்தது.
அந்த எண்ணம் வந்ததும் அவர் மனதுக்குள் ஒரு பரபரப்பு. பார்த்திபனுக்கு மகளை மணம் முடித்தால் தான் என்ன என்று தோன்றி விட்டது. பார்த்திபன் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அழகான ஆண்மகன். அதுவும் தங்களின் கண் முன் வளர்ந்தவன். அவன் கயலைப் பார்த்துக் கொள்வதிலே அவனது பொறுப்பு அவருக்கு தெரியும்.
அவனிடம் இது வரை இருந்த குறை. சரியான வேலை இல்லாதது தான். இப்போது அவனுக்கு ஒரு நல்ல வேலையும் கிடைத்து விட்டது? இனி எதற்கு யோசிக்க வேண்டும்? அவனை விடவா மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளை அமைந்து விட போகிறான்?
ஒரு வேளை இது தான் கடவுள் சித்தமோ? அதனால் தான் இப்படியான பேச்சுகள் தன்னாலே வந்ததோ என்று எண்ணினார்.
தள்ளி போட தள்ளி போட மங்கை மற்றும் பார்த்திபன் பற்றிய பேச்சு வேறு மாதிரி செல்லலாம்? அதற்கு முன் இதில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என்று தன்னையே எச்சரித்துக் கொண்டார்.
முதலில் மனைவியிடம் பேசவா, இல்லை அதற்கு முன் சேதுவிடம் பேசவா என்று குழம்பினார். ஆனால் மகளிடம் கேட்க வேண்டும் என்றெல்லாம் அவருக்கு தோன்ற வில்லை. ஏனென்றால் அவர் சொன்னால் அவள் நிச்சயம் கேட்டுக் கொள்வாள் என்று தெரியும். ஆனால் அந்த நம்பிக்கை ஒரு நாள் உடையும் என்று அவருக்கு தெரியாதே. அவர் பேச்சையும் அவரது செல்ல மகள் மறுப்பாள் என்று அவர் கனவா கண்டார்?
முதலில் சேதுவிடம் பேச வேண்டும். அவர் சம்மதம் என்று சொன்ன பிறகு மனைவியிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தவர் அமைதியாக தூங்கச் சென்றார். கோமளத்துக்கும் அவர் மனதில் இருக்கும் குழப்பம் தெரியாமல் போனது.