அத்தியாயம் 8 

மழை நீரில் மட்டுமா நனைவேன் 

உன் நினைவுகள் தொடும் 

போதும் நனைகிறேன் நான்!!!

அடுத்த நாள் காலையில் நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற சிறு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்போடு கிளம்பி தயாரானான் பார்த்திபன். அப்போது ‘ஆல் தி பெஸ்ட் பார்த்தி’ என்று ஒரு குருந்தகவலை அவனுக்கு அனுப்பி இருந்தாள் மங்கை.

ஏனோ அதை பார்த்ததும் அந்த நாளே இனிய நாளாக மாறியது போன்ற உணர்வு அவனுக்கு. ஒரு நம்பிக்கையோடு தான் அந்த கம்பெனிக்கு சென்றான். அவள் சொன்னது போலவே அந்த கார்டை கொண்டு போய்க் கொடுக்க செக்யூரிட்டியோ “நீங்க வருவீங்கன்னு சார் சொன்னாங்க தம்பி. நீங்க உள்ள போங்க”, என்றார்.

அன்று இரண்டு மணி நேரம் கஷ்டப்பட்டு இன்டர்வியூ அட்டென்ட் செய்து மேலும் முக்கால் மணி நேரம் காத்திருந்தும் கிடைக்காத வேலை மங்கையால் சொடக்கு போடும் நேரத்தில் கிடைத்தது.

அதுவும் அவன் எதிர் பார்க்காத சம்பளம், அவன் ஆசைப் பட்ட இடத்தில் வேலை, அதுவும் அவனுக்கு பிடித்த ஆட்டோ மொபைல் துறையிலும் கிடைத்து விட அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது. அவன் படிப்புக்கு ஏத்த அக்கவுண்டஸ் வேலை தான் என்பதால் அதை எண்ணியும் பயம் வர வில்லை.

ஆனாலும் அங்கிருந்த இன்ஜினியர்களை பார்க்கும் போது “நானும் இன்ஜினியரிங் படித்திருந்தால் அவர்களை போலவே இருந்திருப்பேன்”, என்ற ஏக்கமும்  அவனுக்கு வரத் தான் செய்தது. கிடைத்ததை வைத்து சந்தோஷப் பட வேண்டும் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவன் கையில் அப்பாயின்மெண்ட் ஆர்டர் கொடுக்கப் பட அதை வாங்கும் போது அவன் உடலே சிலிர்த்து புல்லரித்தது. நல்ல வேலை, நல்ல சம்பளம் என அதில் இருக்க இத்தனை நாள் காத்திருப்பு நிறைவேறியது போல இருந்தது அவனுக்கு.

“ரொம்ப நன்றி சார்”, என்று சொல்லி விட்டு விடை பெற்றான்.

வெளியே வந்ததும் தந்தைக்கு தான் அழைத்தான். நடந்த விஷயங்களை அவரிடம் அப்படியே சொல்ல “முதல்ல அந்த பொண்ணுக்கு போய் நன்றி சொல்லு பார்த்தி. நம்ம அவளுக்கு கடமை பட்டிருக்கோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு. நம்ம கஷ்டம் எல்லாம் போயிருச்சு டா பார்த்தி. சரி பத்திரமா வீட்டுக்கு போ. சாப்ட்டுட்டு தூங்கு”, என்றார் சேது.

“சரிப்பா”

“வீட்டுக்கு போகும் போது மங்கைக்கு சுவீட் வாங்கிட்டு போடா”, என்று சொல்ல சந்தோஷமாக சரி என்று சொன்னான்.

போனை வைத்து விட்டு பேக்கரிக்கு சென்றவன் மில்க் சுவீட் வாங்கிக் கொண்டு தங்கைக்கு பிடித்த இனிப்புகளையும் வாங்கிக் கொண்டு மங்கையைக் காண அவளது டிரைவிங் ஸ்கூல்க்கு சென்றான். அவளுக்கு முதலில் போனில் அழைக்க தான் எண்ணினான். ஆனால் போனில் நன்றி சொல்லி விட்டால் நேரில் பார்க்க காரணம் இருக்காது என்பதால் மனதை அடக்கினான்.

அவன் அங்கே போன போது அவள் ஒரு நபருக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருப்பதாக ஜோதி சொல்ல அவளுக்காக காத்திருந்தான் பார்த்திபன்.

அவன் வெகு நேரம் அமர்ந்திருப்பதைப் பார்த்து “மங்கைக்கு கால் பண்ணி நீங்க வந்துருக்கீங்கன்னு  சொல்லவா சார்?”, என்று கேட்டாள் ஜோதி.

“இல்லை மேடம், மங்கை கிளாஸ் முடிச்சிட்டே வரட்டும். நான் வெயிட் பண்ணுறேன்”, என்றவன் அமைதியாக அமர்ந்து விட்டான்.

ஒரு மணி நேரம் கழித்து அங்கே வந்த மங்கைக்கு அவன் முகத்தில் இருந்த சந்தோஷமே நடந்ததை விளக்கி இருக்க அவளும் அவனைக் கண்டு புன்னகைத்து விட்டு அவனை அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“ரொம்ப தேங்க்ஸ் மங்கை. உண்மையிலே எனக்கு என்னோட சின்ட்ரல்லா நீ தான்னு தோணுது? இந்தா சுவீட்”, என்று கொடுத்தான்.

“எதுக்கு இந்த பார்மாலிட்டிஷ் எல்லாம்?”, என்று சொன்னவள் அதை மறுக்க அவனோ முகம் சுருங்கி அவளைப் பார்த்தான்.

“ஐயோ அதுக்கு எதுக்கு உங்க முகம் டல்லாகுது? கொடுங்க வாங்கிக்கிறேன்”, என்று சொன்னவள் அதை வாங்கிக் கொண்டாள்.

“இப்பவே ஒண்ணு எடுத்து சாப்பிடலாம்ல? உனக்கு பிடிக்குமேன்னு ஆசையா வாங்கிட்டு வந்தேன்”, என்று சொல்ல அதை ஆர்வமாக பிரித்தாள்.

சிறு குழந்தை போல பிரித்துப் பார்க்கும் அவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை உணர்ந்தாலும் அவள் கவரை பிரித்து அதில் இருந்த அவளுக்கு பிடித்த சுவீட்டை எடுத்து ஒரு கடி கடித்தாள்.

அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களோ அந்த சுவீட் அவள் உதட்டிலும் பல்லிலும் பட்டு அவள் தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு செல்வதையே இமைக்காமல் பார்த்தது. அதைக் கண்டு அவனும் எச்சில் விழுங்கிக் கொண்டான்.

ஏனோ அந்த சுவீட்டாக தான் இருக்க கூடாதோ என்று தோன்றி வைத்தது. அவன் தன்னையே பார்க்கவும் “நீங்களும் ஒண்ணு சாப்பிடுங்க”, என்றாள் மங்கை.

“அதை பார்சல் பண்ணிட்டல்ல, இன்னும் ஓபன் பண்ண வேண்டாம். ஃபிரெஷ்னஸ் போயிரும்”, என்று சொன்னாலும் அவள் கையில் இருப்பதை தருவாளா என்று ஆசையாக இருந்தது.

அதுவும் அவள் உதடு பட்ட சுவீட் கிடைத்தால் இந்த ஜென்மமே நிறைவடைந்து விடுமே என்று உள்ளுக்குள் ஏங்கினான்.

அவன் பார்வை அவள் மீது மயக்கமாக படிவதைக் கண்டவளுக்கு அடிவயிற்றில் சில மின்னல்கள் உதயமானது.

அவன் பார்வையைக் கண்டவளுக்கு கையில் இருந்த சுவீட்டை மீண்டும் சாப்பிட கூட அவ்வளவு தயக்கமாக இருந்தது.

“அது தான் வேண்டாம். இதுல பாதி தரவா? இந்த சுவீட் பெருசா தான் இருக்கு”, என்று சொல்ல “நீ கம்பல் பண்ணுறதுனால சாப்பிடுறேன். உன் கைல இருக்குறதா இருந்தா கொஞ்சம் கூட வேண்டாம். முழுசாவே கொடுத்ததுரு”, என்று வெளிப்படையாகவே சொல்ல “பார்த்தி”, என்று சிணுங்கியவள் அதில் பாதியை பிய்த்துக் கொடுத்தாள்.

அதை சந்தோஷமாக வாங்கியவன் அவளது உதடு பட்ட இடம் இருக்கிறதா என்று வேற ஆராய அவளுக்கு தான் வெட்கமாக இருந்தது.

அவனுக்கும் தன்னை பிடிக்கிறது என்று அவளுக்கு புரிந்தாலுமே அவன் வெளிப்படையாக பேசுவது அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. நிச்சயம் அவன் பேச்சு பிடிக்க வில்லை என்று சொன்னால் அது பொய் தான். அதே மாதிரி அநாகரிகமாகவும் அவளுக்கு படவில்லை. அவன் பார்வையும் பேச்சும் ரசிக்கும் படியாக மட்டுமே இருக்க அவளுக்கும் அது அவ்வளவு பிடித்தது.

இருவருமே தடுமாறி போய் அமர்ந்திருக்க அந்த அமைதியை தாங்க முடியாமல் “கம்பெனில என்ன நடந்துச்சு?”, என்று கேட்டாள்.

நடந்ததை எல்லாம் விவரமாக சொன்னவன் “வர ஒண்ணாம் தேதில இருந்து ஜாயின் பண்ணச் சொல்லிட்டாங்க”, என்றான்.

“ரொம்ப சந்தோஷம் பார்த்தி. அப்ப டிரைவிங் கிளாஸ்?”, என்று காரியமே கண்ணாக அவள் கேட்க “ஆமால்ல? இப்ப என்ன பண்ண?”, என்று அவளிடமே கேட்டான்.

“தினமும் வேலை முடிஞ்சதும் வறீங்களா? நான் டைம் பாத்துட்டு சொல்றேன்”, என்று சொல்ல “சரி மங்கை வேலை ஆறு மணிக்கு முடிஞ்சிரும். அப்புறம் நான் எப்ப வரணும்னு சொல்லு. நான் வரேன். நாளைல இருந்து ஜாயின் பண்ணிக்கிறேன்”, என்று சொன்னான். அவளும் சம்மதமாக தலையசைத்தாள்.

அடுத்து அவளுக்கு வேலை வர “சரி மங்கை நீ பாரு. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.