குருமூர்த்தியோ, “முதல் தப்புக்கு தான் இந்த பனிஷ்மென்ட். அடுத்து செய்றதுக்கு வேற இருக்கு” என்றவர், அவன் கோவத்தை கண்டு கொள்ளாமல், “ஷூட்டிங் ஆரபிக்கலாம்” என்று அதற்கான இடத்திற்கு செல்ல,
“எனக்கு ரெஸ்ட் வேணும்” என்றான் இவன் நகராமல்.
“தம்பி. கொஞ்ச நேரம், அப்புறம் ரெஸ்ட் எடுக்கலாம்” என்று மாசிலாமணி சொல்ல,
“முடியாது மணிண்ணா. இனி என்னவா இருந்தாலும் நாளைக்கு தான்” என்றான்.
சோர்வாக இருக்கிறான் என்று புரிந்து போதும், “தம்பி. ஷூட் மட்டும் பண்ணுங்க. சிலம்பம் நாளைக்கு பார்த்துக்கலாம்” என்று மணி சொல்ல, அவன் அதற்கும் மறுக்கவே செய்தான்.
மணி பொறுமையாக அவனிடம் பேச, “ண்ணா. இதென்ன மிலிட்டரியா? ரொம்ப எல்லாம் என்னால கஷ்டப்பட்டு செய்ய முடியாது” என்றான்.
குருமூர்த்தி, “இந்த திமிர்த்தனம் சவால் விடும் போது இருந்திருக்கணும்” என்றார் சத்தமாக.
“திமிரா? என்ன திமிர் காட்டிட்டேன்? இனி காட்டவா?” என்று எகிறினான் இந்த நல்லவன்.
“எங்க காட்டு பார்ப்போம்?” என்று குருமூர்த்தி இவனிடம் வேகமாக வர,
“கண்டிப்பா காட்டுவேன், என்ன பண்ணிடுவீங்க நீங்க” என்று நெஞ்சை நிமிர்த்தினான்.
“அண்ணா, அவர் சோர்வா இருக்கிறார். இன்னைக்கு மட்டும் விட்டுடலாம்” என்று மாசிலாமணி இருவருக்கும் இடையில் வந்தார்.
“என்ன பண்ணி கிழிச்சிட்டார் அப்படி? இதோ ஆரம்பிச்சு மூணு மணி நேரம் கூட ஆகலை. அதுக்குள்ள ரெஸ்ட் வேணுமா?” என்று குருமூர்த்தி பேச,
“ஆமா எனக்கு வேணும் தான். இப்போ என்னாங்குறீங்க நீங்க?” என்றான் இவன்.
“தம்பி. நான் பேசுறேன். நீங்க இருங்க” என்று அவனை அமைதிப்படுத்திய மாசிலாமணி, “சின்ன பையன்ண்ணா. ஒரேடியா நெருக்கினா முறுக்கத்தான் செய்வான்” என்றார் குருமூர்த்தியிடம் மெல்ல.
“யார் இவர் சின்ன பையனா? வாய் மட்டும் எவ்வளவு பேசுறார்?” என்று குருமூர்த்தி கேட்க,
“வாய் பேசுறேனா? அதை நீங்க சொல்றீங்க?” என்று நக்கலாக கேட்டான் இந்த நல்லவன்.
“தம்பி. என்ன இது? பேசாம இருங்க” என்று மாசிலாமணி சொல்ல,
“கேட்க மாட்டார் மணி. பெரியவங்க சொல் பேச்சு கேட்கிற பழக்கமே துரைக்கு இல்லை” என்றார் குருமூர்த்தி.
அந்த வார்த்தைகள் இவனை குத்திவிட, நேருக்கு நேர் குருமூர்த்தியை முறைக்கவே செய்தான். “தம்பி. இது தப்புப்பா. வாங்க. இப்படி உட்காருங்க” என்று மாசிலாமணி அவனை அங்கிருந்து நகர்த்த,
“சண்டையில மட்டும் மேன் டூ மேன் கேட்க கூடாது. எல்லா நேரமும் ஜென்டில் மேனா நடந்துக்கணும். ஜெயிச்சா வேற தோத்துட்டா உடன்படிக்கைக்கு ஏத்த மாதிரி நடந்துகிறதும் மேன்ல தான் வரும்” என்று அவர் மேலும் பேசிவிட,
“நீங்க முதல்ல ஜென்டில் மேனா. உங்க பொண்ணை விட்டு என்கிட்ட சண்டை போட்டீங்க” என்று இவன் கேட்க,
“என் பொண்ணை வைச்சு என்னை சீண்டினா நான் சும்மா விடுவேனா? என் பொண்ணை வைச்சே தான் பதில் கொடுப்பேன்” என்றார் குருமூர்த்தி.
“சாதாரணமா டீஸ் பண்ணதுக்கு இது ஓவர்? அதோட நீங்க பண்ணது ஏமாத்து வேலை. உங்க பொண்ணுக்கு சண்டை எல்லாம் கத்து கொடுத்து என்கிட்ட மோத விட்டிருக்கீங்க”
“உங்களுக்கு கூட கராத்தே, டேக்வாண்டோ தெரியுதே. அப்புறம் என்ன?”
“அது சும்மா கத்துக்கிட்டது”
“அதென்ன சும்மா கத்துகிறது, நல்லா கத்துகிறது. நீங்க மட்டும் முழுசா அதை கத்துகிட்டு இருந்தா உங்க ப்ரெண்ட் இன்னைக்கு உயிரோட இருந்திருப்பார்” என்றுவிட்டார் குருமூர்த்தி.
இவனுக்கு கண்கள் எல்லாம் சிவந்து போனதுடன், தளர்ந்தும் போனான். “அண்ணா. அவங்க சண்டையா போட்டாங்க. துப்பாக்கி வைச்சு முடிச்சவங்ககிட்ட போய் தம்பி என்ன பண்ணியிருக்க முடியும். நீங்க பேசுனது தப்புண்ணா” என்றார் மாசிலாமணி.
“சரி நான் பேசுனது தப்புன்னே வைச்சுக்கோ. உங்க தம்பி ஷூட் பண்ண வர சொன்னா முடியாதுன்னு தானே சொல்றார். அப்புறம் இவருக்கு என்ன கோவம் வேண்டிக்கிடக்கு?”
“மணி அண்ணா நாம போலாம். ஆனா இவர் வர கூடாது. இவர்கிட்ட இருந்து நான் எதையும் கத்துக்க மாட்டேன்” என்று வேகமாக பயிற்சி கூடத்துக்கு சென்றான்.
மாசிலாமணி தனியே தான் சொல்லி கொடுத்தார். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் சுட்டு கொண்டிருந்தான். அவன் கோவம் எல்லாம் குண்டு பாய்வதில் தெரிந்தது.
“போதும் தம்பி” என்று மாசிலாமணி சொல்ல, இவன் கேட்க வேண்டுமே?
குருமூர்த்தி இவனை என்ன செய்ய என்று நெற்றியை நீவிவிட்ட நேரம் அவரின் போன் ஒலித்தது.
சிறிதாக டீ தூள் தயாரிக்கும் நிறுவனம் வைத்திருந்தார் குருமூர்த்தி. அங்கிருக்கும் மேலாளர், “சார். இங்க அடிதடி ஆகிடுச்சு. போலீஸ் வந்து குணாவை கூட்டிட்டு போயிட்டாங்க. இங்க ஒரே கலவரமா இருக்கு சார்” என்றார்.
“குணாவா? அவனால சும்மா இருக்க முடியாதா? பெரிய காயமா என்ன? யார் கூட சண்டை போட்டான்?” என்று கேட்க,
“குணா கொஞ்சம் கோவக்காரன் தான். ஆனா இன்னைக்கு அவன் மேல தப்பு இல்லை. வெளியே இருந்து வந்தவங்க தான் அதிகமா பேசிட்டாங்க சார்” என,
“சரி நான் வரேன்” என்று வைத்த நேரம், காவல் நிலையத்தில் இருந்து போன் வந்துவிட்டது.
“உங்க ஸ்டாப் குணா எங்ககிட்ட இருக்கார். அவர் அடிச்சது அரசு அதிகாரியை சார். நீங்க உடனே வந்தாகணும்” என்றனர்.
குருமூர்த்தி சென்றாக வேண்டிய கட்டாயம். முதலாளி இவர் தான். அதனுடன் குணா அங்குள்ள பழங்குடி மக்களை சார்ந்தவன். அவர்கள் மக்களுக்கு ஏதாவது ஒன்றென்றால் உடனே கூட்டம் சேர்ந்துவிடும் அபாயம் உண்டு.
இதற்கு முன்னும் குணா அலுவலகத்திற்குள்ளே சண்டையிட்டு, பஞ்சாயத்து நடந்திருக்கிறது தான். ஆனாலும் இன்றயை சூழ்நிலை வேறு.
இந்த அடங்காதவனை பாதுகாக்கும் பொறுப்பு இவருக்கானது. பாதுகாப்பு பலமாக இருந்தாலும், ஏனோ ஓர் உறுத்தல்.
“அண்ணா. நாம வெளியே போய்ட்டு வந்துட்டு தான் இருக்கோம். அதோட இதுக்கு போகலைன்னா வம்பு தான்” என்றார் மாசிலாமணி.
குருமூர்த்தி, “சரி மணி. நீ நம்ம ஆபிசுக்கு போயிடு. நான் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு அங்க வந்திடுறேன்” என்றார்.
“சரிங்கண்ணா. நான் உடனே கிளம்புறேன்” என,
குருமூர்த்திக்கு திரும்ப போன். குணா அடித்த ஆள் சீரியசாக இருப்பதாக சொன்னார்கள்.
“நான் நம்ம லாயர் சார்கிட்ட பேசுறேன்” என்ற குருமூர்த்தி, இன்னும் சுட்டு கொண்டிருந்தவனை, மாசிலாமணியிடம் கண் காட்டிவிட்டு கிளம்பினார்.
“தம்பி. நாங்க கொஞ்சம் அர்ஜென்ட்டா வெளியே போகணும். நீங்க உங்க ரூமுக்கு போங்க” என்று இந்த அடங்காதவனிடம் சொல்ல,
“நீங்க கிளம்புங்க. நான் போயிக்கிறேன்” என்றான் அவன்.
“தம்பி சொன்னா புரிஞ்சுக்கோங்க. உள்ள போங்க” என்று அவர் சொல்லி கொண்டிருந்த நேரம், வாசலில் குணா குடும்பம் வந்துவிட்டது.
மகனை போலீஸ் பிடித்து போய்விட்டார்கள் என்று அவர்கள் பதட்டம் கொள்ள, மாசிலாமணிக்கு வாட்ச்மேனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“இதோ வந்துட்டேன்” என்ற மாசிலாமணி, “தம்பி சீக்கிரம் உள்ள போங்க” என்று அவனை ரூம் பக்கம் கைபிடித்து இழுத்துவிட்டு இவர் போக, அவனோ அறைக்குள் போகாமலே திரும்ப வந்துவிட்டான்.
ஏற்கனவே முழு குற்ற உணர்ச்சியில் தவித்து கொண்டிருப்பவனை குருமூர்த்தி இன்னும் பலமாக தாக்கிவிட்டார்.
அவன் இயலாமையை, கோவத்தை சுடுதலில் காட்டவே விரும்பினான்.
எதிரில் இருக்கும் குறி அவன் நண்பர்களை கொன்றவர்களாக அவன் கண்ணுக்கு தெரிய, நிறுத்த முடியவில்லை அவனால். சரியும் தவறுமாக சுட, “ரூமுக்குள்ள போகாம இங்க என்ன பண்றீங்க?” சம்யுக்தா வந்தாள்.
குணா குடும்பம் வந்ததுலே ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்ட சம்யுக்தா, என்னவோ என்று ஹாலுக்கு வந்தவளிடம், “பாட்டி எங்க?” என்று கேட்டார் மாசிலாமணி அவசரமாக.
“பாட்டி இப்போதான் கோவிலுக்கு போனாங்க” என,
“கோவிலுக்கா? உடனே பாட்டியை வர சொல்லுங்க பாப்பா. நாங்க வெளியே போகணும். வர லேட் ஆகும்ன்னு நினைக்கிறேன். அந்த தம்பி, அவர் ரொம்ப பாதுகாப்பா இருக்கணும். உங்களுக்கு புரியுது இல்லை. பாட்டிகிட்ட சொல்லிடுங்க. ஆளுங்க இருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க. நீங்களும் வீட்டை விட்டு எங்கேயும் போகாதீங்க” என்று வேகமாக சொல்லி விட்டு சென்றார்.
வீடு மிகவும் அமைதியாகிவிட, ஏதோ கீழே விழும் சத்தம். சம்யுக்தா சத்தம் வந்த திசைக்கு செல்ல, ஸ்டூல் கீழே விழுந்திருந்தது.
அந்த கருப்பு கண்ணாடி அறைக்குள், சத்தமில்லாமல் சுடும் முறை தான் என்பதால் சம்யுக்தா கதவை திறந்து கொண்டு சென்றவள், அவனை பார்த்து அதிர்ந்தாள்.
“நீங்க ரூமுக்குள்ள தான் இருக்கணும். போங்க” என்று பெண் சொல்ல, அவன் இவளை திரும்பி கூட பார்க்க வேண்டுமே?
“உங்களை தான். ஷூட் பண்றதை நிறுத்துங்க முதல்ல” என்று அவனுக்கு எதிரில் சென்று நிற்க,