அதற்கும் ஸ்ரீதரன் மறுக்க, “ஸ்ரீ… அத்தையை வீட்டுக்கு கூட்டிட்டு போ அவங்க குளிச்சிட்டு வரட்டும். நீயும் குளிச்சிட்டு ரெண்டு பெரும் சாப்பிட்டு வாங்க…” என்று சந்தியா இடையிட்டு சொன்னாள்.
“ஆனா சந்து…” என அப்போதும் தயங்கினான்.
“நானும் கொஞ்சம் பேசணும்டா. நீ கிளம்பு. நான் பேசிக்கிறேன்” என்று அவனை அனுப்பினாள்.
ஸ்ரீ அங்கிருந்து நகர்ந்ததும், வீரா வந்து அவளருகே அமர்ந்து கொண்டான்.
“சொல்லுங்க என்ன பேசணும் உங்களுக்கு?” அவன் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல் கேட்டாள்.
“ம்ப்ச்… நீ இவ்வளவு கோபப்பட்டு முதல் முறை பார்க்கிறேன்…” என்றான் சலிப்பாக.
“கோபமா? எனக்கெதுக்கு கோபம்? உங்க ரூம்… உங்க தம்பி… இவ்வளவு தெளிவா பேசறவர் கிட்ட கோபப்பட எனக்கு என்ன உரிமை இருக்குன்னு நினைக்கறீங்க?” காட்டமாக கேட்டாள்.
“என்ன வேணா பேசிக்க… ஆனா உங்க அப்பா வீட்டுக்கு போறேன்னு மட்டும் சொல்லாத… என்ன சண்டையா இருந்தாலும் கூட இருந்தே போடு” கொஞ்சம் தணிந்தே தான் பேசினான்.
“கூட இருந்தாலும் இத்தனை நாளும் ஆளுக்கு ஒரு சுவரை பார்த்துட்டு தானே இருந்தோம்… அதோட என்னை பார்க்க வேற உங்களுக்கு எரிச்சல் எரிச்சலா வரும். அதுக்கு நான் கூட இருந்தா என்ன? தனியா இருந்தா என்ன? நீங்க வேற எனக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டதா கவலை பட்டீங்க. என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டதே வேற பெரிய முட்டாள்த்தனம்ன்னு ரொம்ப வருத்தம் வேற உங்களுக்கு. அதெல்லாம் எதுக்கு சொல்லுங்க…” தன்னால் முடிந்தவரைத் திருப்பி கொடுத்தவளை ஆயாசமாகப் பார்த்தான். கோபத்தில் இப்படி எல்லாமா பேசி தொலைத்தோம் என மனம் சுருங்கிப் போனது.
“ம்ப்ச் ஏன்டி நீயும் படுத்தற? சரி ஒத்துக்கிறேன் நான் செஞ்சது ரொம்ப தப்பு தான்… அது எனக்கும் புரியுது. அதுக்காக இப்ப என்ன பண்ண முடியும் சொல்லு? இனி சரியா நடந்துக்கிறேன். மீறி ஏதாவது தப்பு செஞ்சாலும் எடுத்து சொல்லு புரிஞ்சுக்கறேன்… ஆனா உன்னை விட்டுட்டு எல்லாம் இருக்க முடியாது…” அவன் மனமார தான் சொன்னான் ஆனால் சந்தியாவால் தான் ஏற்க முடியவில்லை.
முகத்தை திரும்பியபடி தான் இருந்தாள். “என்னடி அதுதான் இவ்வளவு சொல்லறேன் இல்லை… கொஞ்சம் வீம்புக்கு இருந்தேன் தான்! அதெப்படி நீ என்னை கட்டுப்படுத்தலாம்ன்னு… இத்தனை நாளும் தட்டிக்கேட்க ஆளில்லாம இருந்துட்டு இப்ப திடீர்ன்னு நீ தட்டிக்கேட்கவும் ஒரு கோபம்… புரிஞ்சுக்கோவேன்…”
“என்ன புரிஞ்சுக்கணும்ன்னு சொல்லுங்க… இதோ இப்ப என் வயித்துல இருக்க குழந்தைக்காகத் தான் இந்த சமாதானப்படலமா?”
அவளின் அபாண்டமான குற்றச்சாட்டிற்கு அவன் எந்த பதிலும் தரவில்லை. சில நொடிகள் மௌனம் அவ்விடம்!
இவள் மெதுவாக அவன் முகம் நோக்க, “வெல்! என்னோட பொறுமை எந்தளவுன்னு நீ செக் செய்திருந்தா… பரவாயில்லை நான் பாஸாகி இருக்கேன். ரொம்ப எல்லாம் கோபமில்லை… ஓரளவு கண்ட்ரோல் செய்யுமளவு தான்…” என்றதும் அவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.
“அப்பறம் மேடம் காலையில எழுந்ததிலிருந்து, நான் குட்டிபோட்ட பூனை மாதிரி உன்னையே தான் சுத்திட்டு இருந்தேன். அது உனக்கே தெரிஞ்சிருக்கும். அப்ப எனக்கு இந்த விஷயம் தெரியாதுன்னு உனக்கு நல்லாவே தெரியும்” என்று சொல்லி நிறுத்த, அது சரிதான் என்றாலும் மனம் அத்தனை எளிதில் சமாதானமாக மறுத்தது.
அவள் முகத்திலிருந்த சுணக்கத்தைப் பார்த்து, “ரொம்ப ரொம்ப கஷ்டப் படுத்தி வெச்சிருக்கேன் போல… சரி பதிலுக்கு நானும் கொஞ்சம் கஷ்ட பட்டுக்கறேன். எப்ப உனக்கு என்கிட்ட வரணும்ன்னு தோணுதோ அப்பவே வா…” என்றவன் அவளின் கரம் பற்றி தன் கரங்களுக்குள் பொதித்து வைத்துக்கொண்டு, “அப்பறம் ஜுனியர் வரதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்…” என சொல்லி அவளையே பார்க்க, அவள் பார்வையை தழைத்துக் கொண்டாள்.
மெல்ல அவளின் காதருகே குனிந்து, “அடிப்பாவி அதுதான் பனிஷ்மெண்ட் ஏத்துக்கிறேன்னு சொல்லறேனில்லை… அதுக்காக கூட ஒரு முத்தம் வாங்கிக்க மாட்டியா” என குற்றம் சாட்டும் தொனியில் கேட்க, “ம்ப்ச்… மாட்டேன் போங்க…” என்று சிலுப்பினாள்.
“ஆமா நீ சொல்லறது கேட்பேன்னு நினைச்சுட்டே இரு…” என்றவன் அவன் விருப்பப்பட்டதை நிறைவேற்றிக் கொண்டே விலக, ட்ரிப்ஸ் ஏறாத மற்றொரு கை கொண்டு முகத்தை வேகமாகத் துடைத்துக் கொண்டவளை வினோதமாகப் பார்த்தவன், “ஓஹோ…” என்றான் கேலியாக.
‘ஒரே நாளுல சமாதானம் செஞ்சுடுவான் போல…’ என சந்தியாதான் உள்ளுக்குள் அலறும்படி இருந்தது அவனது செய்கை.
அந்தளவு ஒரே நாளில் ஓராயிரம் அதிர்ச்சி தந்து கொண்டிருந்தான் அவளின் கணவன்.
வீம்புக்கென்றே தான் சந்தியாவும் ஸ்ரீதரனும் நாராயணனுடன் சென்று இருந்தனர். இரண்டு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாத அண்ணியைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டான் ஸ்ரீதரன்.
“சிங்கத்தை சாச்சிடுவேன்னு பார்த்தா… இப்படி நீ மல்லாக்க சாஞ்சு போயி கிடக்குற…” என சந்தியாவைப் பார்த்து முறைத்தவனிடம், “ம்ப்ச்… நான் அங்கே போகணும்ன்னு சொன்னேனா? நீயே ஏன்டா?” என்றாள் அலுப்பாக.
“ஆஹாஹா… தெரியாது பாரு… அதுதான் உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுதே… வாசலை பார்த்துப் பார்த்து உட்கார்ந்துக்கிறது. போன் அடிச்சா ஓடி போயி எடுக்கிறது… உன்னை நம்பி அண்ணன்கிட்ட வீராவேசமா சொல்லிட்டு வந்திருக்கேன். இப்படி கவுத்து விடறியே” எனத் தலையிலேயே அடித்துக் கொண்டான்.
“விடுடா… இப்ப போக வேண்டாம்…” என இளையவனிடம் சொன்னவளின் குரலில் கொஞ்சமும் உறுதியில்லை. அவளும் தான் என்ன செய்வாள். கணவனின் பிழைகளைத் தாண்டியும் அவனை அவளால் நேசிக்க முடியும்போது! அந்தளவு அவளின் உயிரில், உணர்வில், வாழ்வில் கலந்திருந்தான் அவன்! அவளையும் அறியாமல்…
“போதும் போதும்… அதெல்லாம் வேலைக்கே ஆகாது. நம்ம அங்கேயே போயிக்கலாம். ஏதோ போனா போகுதுன்னு வந்திருக்கோம்ன்னு நீ கெத்து மட்டும் காட்டி சமாளிச்சிடு…” என்று சொன்னபடி ஸ்ரீதரன் அழைத்துப் போக,
உண்மையில் சந்தியா கெத்தாகத் தான் இருக்க முயற்சி செய்தாள். ஆனால், அறையில் எஸ்.ஐ., வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான படிவங்கள், அதற்குரிய பயிற்சி புத்தகங்கள் எல்லாவற்றையும் பார்க்க… ஒருமாதிரி உணர்ச்சி வசப்பட்டுப் போனாள்.
ஏற்கனவே வீரேந்திரன் விடாக்கண்டனாக அவளை, அவள் தான் இல்லாமல் இருக்க முடியாமல் தான் சீக்கிரம் வந்திருக்கிறாள் என்பதையெல்லாம் கண்டுகொண்டிருக்க, அவளை நெருங்கும் வழி தெரியாமல் அவளின் போலி முறைப்பிற்குக் கட்டுப்படுவது போலத் தான் போக்கு காட்டிக் கொண்டிருந்தான்.
இப்பொழுது மனைவியின் இந்த மெய்மறந்த தோற்றத்தில் துணிச்சல் பெற்றவனாக பின்னிருந்து ஆசையாக அணைத்தபடி, “எதுக்கு இப்ப இத்தனை ஷாக்?” என தன் தாடை கொண்டு அவள் கன்னம் உரசிக் கேட்க, விலகத் தோன்றாமல் பார்வையாலே, ‘இதெல்லாம் என்ன?’ என வினவினாள்.
“இல்லை இந்த அடிதடி, சண்டை எல்லாத்தையும் அவ்வளவு சீக்கிரம் என்னால விட்டுட முடியுமா தெரியலை. அதுதான் செய்யறது செய்யறோம் கொஞ்சம் சட்டப்படி செய்வோம்… அதோட இதையே ஒரு வேலையா செய்யும்போது கொஞ்சம் வரைமுறையோட செய்யவும் தோணும் தானே… இப்படி பொறுப்பில்லாம கண்டபடி எல்லாரையும் முறைக்க தோணாது. அடியிலேயும் கொஞ்சம் நிதானம் இருக்கும்… நானும் கொஞ்ச கொஞ்சமா என்னை மாத்திக்க பார்ப்பேன்…” என சொல்லிக் கொண்டே போக,
இதெல்லாம் தனக்காக என்று அவளுக்குப் புரியாமல் போகுமா என்ன? இத்தனை காலமாக யார் யாரோ எப்படி எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்தும் மாறாதவன், தனக்காக மாற துணிந்தான் என்பதிலேயே அவளின் மனம் மொத்தமாக நெகிழ்ந்து போனது.
உணர்ச்சிவசப்பட்ட அவளின் முகத்தை வருடியவன், “ம்பச்… அழ மட்டும் செஞ்சா என்ன செய்வேன்னே தெரியாது பார்த்துக்க…” என்று செல்லமாக மிரட்ட, மெலிதாக புன்னகை சிந்தியவளின் கண்கள் கண்ணீரைச் சிந்தியே விட்டது.
“நான் மிரட்டிட்டு இருக்கேன்… உனக்கு அழுகை… ம்ம்ம்…” என்றவன் அவளின் கண்ணீரைப் பருகத் தொடங்க, உடல் மொத்தமும் சிலிர்க்கத் தன்னை மறந்து நின்று விட்டாள்.
வீரேந்திரன் அவள் இல்லாமல் தான் எந்தளவு அவஸ்தைப் பட்டான் என்று அவளுக்குப் புரிய வைக்கத் தொடங்க அவர்களுக்கான வாழ்க்கை போர்க்களம் ஆனந்தமாக மீண்டுமொருமுறை தொடங்கிற்று!