ஏற்கனவே சந்தோஷமாக தான் இருந்தான். இப்போது அவளிடம் பேசியதும் அவள் எண் கிடைத்ததும் அவனுக்கு இன்னும் சந்தோஷத்தை அள்ளி தந்தது. இருவருக்கும் நூலிழையில் ஒரு உணர்வு ஓடிக் கொண்டு தான் இருந்தது. அது என்ன உறவு என்று முடிவு எடுக்க தான் இருவரும் அரம்பிக்கவே இல்லை.
பிடிக்கும் என்ற ஒரு வார்த்தையில் அந்த உறவை நிறுத்தி இருந்தவர்களுக்கு அதற்கு மேல் யோசிக்க பயமாக இருந்தது. ஆனால் இருவருக்குமே மற்றவரிடம் பேச அவ்வளவு பிடித்திருந்தது.
அன்று மாலை அந்த ஆட்டோமொபைல் கம்பெனி ஓனரின் மனைவிக்கு கார் டிரைவிங் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் மங்கை. அந்த கிளாஸ் முடியும் நேரத்தில் “நீங்க சூப்பரா ஓட்டுறீங்க மேடம். ரொம்ப சீக்கிரமாவும் கத்துக்கிட்டீங்க?”, என்று பாராட்டியவள் மேலும் புகழ்ந்தாள்.
எல்லாரிடமும் இப்படி பாஸிட்டிவாக பேசுவாள் தான். ஆனால் இவளை கொஞ்சம் அதிகமாக புகழ்ந்தாள். ஏனென்றால் அவளால் மங்கைக்கு காரியம் ஆக வேண்டியது இருக்கிறதே?
“நான் நல்லா ஓட்டுறேன்னா அதுக்கு நீங்க தான் காரணம் மங்கை. எனக்கு பொறுமையா சொல்லிக் கொடுத்தீங்க? என்னை ஹார்ஷா எதுவுமே சொன்னது இல்லை. உங்க பொறுமை தான் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே? உங்களை பத்தி என் பிரண்ட்ஸ் கிட்ட சொன்னேன். இந்த மாசமே ரெண்டு பேர் வந்து டிரைவிங் சேருறேன்னு சொல்லிருக்காங்க”, என்று சொன்னதும் மங்கை லேசாக சிரித்து “ரொம்ப தேங்க்ஸ் மேடம்”, என்றாள்.
“பரவால்ல மங்கை. உன்னை பாத்தா எனக்கு சிஸ்டர் பீல் தான் வருது. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு”
“நிஜமா கேக்கலாமா?”
“ஹேய் நான் சீரியஸா தான் சொல்றேன். கேளு மா”
“எனக்காக இல்லை. எனக்கு தெரிஞ்சவர் தான். அவருக்கு நீங்க ஹெல்ப் பண்ணணுமே?”, என்று ஆரம்பித்து அவர்கள் கம்பெனியில் பார்த்திபன் இன்டர்வியூ அட்டென்ட் செய்ததையும் அதற்கு அவர்கள் பதிலையும் அவன் படிப்பையும் பற்றி முழுமையாக சொன்னாள்.
“இவ்வளவு தானா விஷயம்? இரு ஒரு நிமிஷம்”, என்று சொன்ன அந்த பெண் தன்னுடைய ஹேன்ட் பேகில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து மங்கையிடம் நீட்டினாள்.
அதில் ஒரு அழகு நிலையத்துக்கான விலாசம் இருந்தது. மங்கை அதைக் கண்டு புருவம் உயர்த்த “இது என்னோடது தான் மங்கை. எனக்காக என்னோட ஹஸ்பண்ட் ஆரம்பிச்சு கொடுத்தது. நீ சொல்ற பார்த்திபன் கிட்ட இந்த கார்டைக் கொடுத்து எங்க கம்பெனிக்கு போக சொல்லு. நான் என் ஹஸ்பண்ட் கிட்ட சொல்லிறேன். அந்த பையனுக்கு வேலை கிடைச்சுருச்சுன்னு வச்சிக்கோ”, என்று சொல்ல மங்கை முகம் மலர்ந்து போனது.
“தேங்க யு மேடம். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்”, என்று அவள் குதூகளிக்க “ஓய் என்ன இவ்வளவு சந்தோஷம்? உன் ஸ்கூல்க்கு என் பிரண்ட்ஸ் வருவாங்கன்னு சொன்னப்ப கூட நீ இப்படி ஹேப்பி ஆகல? உண்மையிலே அவர் தெரிஞ்சவர் தானா?”, என்று கேட்க அழகாக வெட்கப் பட்ட மங்கை பதில் எதுவும் சொல்ல வில்லை, ஆனால் அவளுக்கு புரிந்தது.
“நான் உனக்கு ஆள் பிடிச்சு கொடுத்துருக்கேன்ல? நீயும் என் பியூட்டி பார்லர்க்கு யாரும் கேட்டா சொல்லி விடு”, என்றாள் காரியமாய்.
“கட்டாயம் சொல்றேன் மேம். எனக்கும் ஏதாவது பண்ணணும்னா நானும் வரேன். அப்புறம் நாளைக்கு உங்க விசிட்டிங் கார்ட் மட்டும் கொஞ்சம் கொண்டு வாங்க. ரிசப்ஷன்ல வச்சிட்டா கேக்குறவங்களுக்கு கொடுத்துருவோம்”
“சரி கொண்டு வரேன். இப்ப கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
சந்தோஷமாக தனது கேபின்க்கு வந்த மங்கை இதை எப்படி பார்த்தியிடம் சொல்ல? விசிட்டிங் கார்டை எப்படி அவனிடம் கொடுக்க என்று யோசித்தாள். வழி கிடைக்காததால் அவன் எண்ணுக்கு அழைத்து விட்டாள். அவனுக்கு அழைக்க கொஞ்சம் தடுமாற்றமாக தான் இருந்தது.
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தவன் மொபைல் அடிக்கவும் எடுத்துப் பார்த்தான். மங்கை என்று மின்ன அவன் கண்களும் மின்னியது.
கையில் இருந்த ஈரத்தை அணிந்திருந்த சாரத்தில் துடைத்து விட்டு போனை எடுத்தவன் “மங்கை”, என்றான் பரபரப்பாக.
அவன் பரபரப்பில் அவளுக்கு தான் வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் சிக்கியது போல இருந்தது.
“ஹலோ மங்கை கேக்குதா?”, என்று அவன் மேலும் படபடக்க கொஞ்சம் கொஞ்சமாக அவன் மேல் எழும் உணர்வு அவளுக்கு புரிந்தது.
“எனக்கு கேக்குது பார்த்தி”, என்று சொல்லும் போதே தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போல தடுமாறிப் போனாள்.
“என்ன விஷயமா கால் பண்ண மங்கை?”
“ஏன் விஷயம் இருந்தா தான் கால் பண்ணனுமா?”, என்று அவனைப் போலவே கேட்க “விஷயம் இல்லாட்டியும் நீ பண்ணலாம். பேசிட்டே கூட இருக்கலாம்?”, என்று அவன் வெளிப்படையாகவே வழிய அவள் முகத்தில் புன்னகை தழும்பியது.
வாய் விட்டே சிரித்தவள் “என்ன பண்ணுறீங்க?”, என்று கேட்டு பேச்சை மாற்றினாள்.
“சும்மா தான் இருக்கேன்”
“இங்க வரீங்களா? உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
“முக்கியமான விஷயம் இல்லைன்னாலும் இதோ வரேன், உடனே வரேன்”, என்று சொன்னவன் போனை வைத்து விட்டு உடனே உடை மாற்றி வீட்டை பூட்டி எப்போதும் சாவி வைக்கும் இடத்தில் வைத்து விட்டு கிளம்பி விட்டான்.
அவன் அங்கே சென்ற போது ஜோதி வீட்டுக்கு சென்றிருக்க அருண் கிளாஸ் எடுக்க சென்று விட மங்கை மட்டும் அலுவலகத்தில் அவளது அறையில் அமர்ந்திருந்தாள்.
அவன் போனதும் “உள்ள வாங்க பார்த்தி”, என்றாள்.
அவனும் அவளுக்கு எதிரே அமர்ந்து விட்டு “என்ன விஷயம் மங்கை? முக்கியமா பேசணும்னு சொன்ன?”, என்று கேட்டான்.
“நான் ஒரு உதவி செஞ்சா ஏத்துக்குவீங்களா?”, என்று கேட்க அவன் அவளை குழப்பமாக பார்த்தான்.
“என்ன உதவி மங்கை? எனக்கு அந்த மாதிரி காம்பிளக்ஸ் எல்லாம் கிடையாது? நீ உதவி செஞ்சா ஏத்துக்க மாட்டேனா என்ன? உன்னால் தான் நான் இப்ப நிம்மதியாகவே இருக்கேன் மங்கை”, என்றான்.
“அதையே எத்தனை தடவை சொல்லுவீங்க?”
“வாழ்க்கை முழுக்க சொல்லுவேன். சரி என்ன ஹெல்ப் பண்ண போற?”
“எனக்காக மறுபடியும் அந்த ஆபீஸ் போய் பாக்குறீங்களா?”
“ஹேய் ஏதாவது மறுபடியும் மேஜிக் பண்ணிட்டியா?”, என்று கண்கள் மின்ன கேட்டான்.
“மேஜிக் எல்லாம் நான் பண்ணலை? நீங்க போனா அங்க வேணா மேஜிக் நடக்கலாம். போகும் போது இந்த கார்ட் மட்டும் கொண்டு போங்க”
“எப்படி மங்கை?”, என்று அவன் கேட்டதும் நடந்ததைச் சொன்னாள்.
அவனும் சந்தோஷமாக சரி என்று சொல்லி அவளுக்கு மேலும் பல நன்றிகள் சொல்லி அவளை திக்கு முக்காட வைத்தான்.
“தேங்க்ஸ் எல்லாம் போதும் பார்த்தி. கண்டிப்பா இந்த வேலை உங்களுக்கு கிடைக்கும். சம்பளம் வாங்கின அப்புறம் டிரீட் வச்சிருங்க”, என்றாள் மங்கை.
“கண்டிப்பா வைக்கிறேன். நான் கூப்பிட்டா நீ வருவியா?”, என்று எதிர் பார்ப்புடன் கேட்க “வராம இருக்குறதுக்கு நீங்க ஒண்ணும் வேற யாரோ இல்லையே?”, என்றாள்.
இருவருக்கும் அடுத்தவர் மேல் பெரிய அளவில் பாதிப்பு இருந்தது தான். ஆனால் அதற்கு பெயர் வைக்க தான் இருவருக்கும் முடிய வில்லை.
“சரி மங்கை நேரம் ஆச்சு தானே? வீட்டுக்கு கிளம்பலையா?”
“அவ்வளவு தான் அடைச்சிட்டு கிளம்ப வேண்டியது தான்”, என்று அவள் எழுந்து கொள்ள அவனும் எழுந்து கொண்டான்.
ஏற்கனவே அருண் கிளம்பி இருக்க இவளும் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். தேவைக்கு அதிகமாக இருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டவள் அவன் உதவியுடன் பூட்டி விட்டு வெளியே வந்தாள்.
இருவரும் அவள் வண்டி இருக்கும் இடம் வந்தார்கள். “பத்திரமா போய்ருவியா மங்கை?”, என்று கேட்டான்.
“ஹான் போயிருவேன். நீங்களும் வேணா என் கூட வறீங்களா? நடந்து தானே போகணும்?”
“பரவால்ல நான் மெதுவா வந்துருவேன். நீ பாத்து போ”, என்று சொல்ல அரை மனதுடன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டாள். அவனும் மெதுவாக வீட்டை நோக்கி நடந்தான். அவனுக்கும் அவளுடன் ஒரே வண்டியில் பயணம் செய்ய ஆசை தான். ஆனால் அவர்கள் வண்டியில் செல்லும் போது யாரேனும் பார்த்து அவளுக்கு ஏதாவது கெட்ட பெயர் வருவதை அவன் விரும்ப வில்லை. அதனால் தான் தவிர்த்தான்.