கொஞ்சும் கிளிகள்

      இறுதி அத்தியாயம் 3

   சரண்யா குடும்ப கட்டுப்பாடு செய்ய தன்னை தயார்படுத்தி கொண்டாள். மூன்றாம் குழந்தை வேண்டாம் என்று கணவன் சொன்ன காரணம் அவளை முடிவு எடுக்க செய்து விட்டது. அதிலும் மாமியாரின் பேச்சு அவளை உடைத்து விட்டது என்றே சொல்லலாம். அவரை எந்த ரகத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.

   கணவன் உடன் தன் வாழ்க்கையை தொடங்கிய பின் அவனின் பிரிவு அவளை அசைத்து பார்த்தது. தொடர்ந்து சுடு மணலில் நடந்து வந்தவளுக்கு கிடைத்த இளைப்பாறுதல் நிலைக்குமா என்ற பயம் வந்தது. அவன் வேலை இது தான் என்று தெரிந்தாலும், நல்ல படியாக அவன் வீடு வரும் வரை நிம்மதி இருக்காது. அடிக்கடி போன் செய்தால் முகம் காட்டுவான். சென்னை தாண்டி விட்டால் டவர் அவ்வளவு எளிதாக கிடைக்காது. முக்கியமாக ராத்திரியில் உறக்கம் அண்டாது. ஏதேதோ கனவு வந்து பயமுறுத்தும். 

   சரண்யாக்கு கணவன், பிள்ளை என்று முழுமையாக தூங்கினாள் தான் உறக்கம் கிட்டும். கணவன் இன்றி தாங்கள் மட்டும் உறங்க மனம் வராது. முட்டாள்தனமாக இருந்த போது அன்பு அளவு கோல் அறியாது. ஏ.சி ஓடி கொண்டிருக்க, பிள்ளைகள் மெத்தையில் உறங்கி கொண்டு இருந்தார்கள். தாங்கள் அனுபவிக்கும் இந்த  சுகத்திற்கு, கணவன் தன் உறக்கம் தியாகம் செய்து, முதுகு வலிக்க வண்டி ஓட்டி கொண்டு இருக்கிறான். எங்கோ ஒரு மூலையில் உடல் வலியையும் பொருட் படுத்தாது, உறங்காமல் வண்டி ஓட்டும் கணவனை நினைத்து சரண்யா உறங்காமல் முழித்து கிடப்பாள்.

   மூன்று, நான்கு நாள் கழித்து வரும் தந்தையை பார்க்க ஆவலாக பிள்ளைகள் வாசலில் ஆளுக்கொரு துணை பிடித்து நின்று இருந்தார்கள். சரண்யா நல்லெண்ணெய் சுடு தண்ணீர் வைத்து, நல்லி எலும்பு சூப் எடுத்து வைத்து கொண்டு இருக்க, கார் ஹாரன் அடித்தது. மனைவி முகத்தில் ஒரு புன்னகை. தான் வந்து விட்டதை அறிவிக்கிறான். பிள்ளைகள் ஓடி போய் கேட் திறக்க, மலர்ந்த முகமாக வண்டியில் இருந்து இறங்கினான்.

   தனம் அங்கு தான் இருந்தார். வெற்றி உடன் இல்லாத போது இவர்கள் துணைக்கு…

    “உம் பொண்டாட்டி ஆந்தை மாதிரி ராத்திரி முழுக்க முழிச்சு கெடக்குற மகனே, என்னன்னு நீ தான் கேளு… எம்புட்டு வருசம் வேலை பாக்குற, உன்னை பாக்க உனக்கு தெரியாது. இங்க முழிச்சு, அங்க உன்னை காவ காக்குறா…” என்று அவள் பயத்தை, பரிதவிப்பை கேலி பேசி சென்றார்.

  “ஏன் சரண். நான் ஒன்னும் குழந்தை இல்லை. என் குடும்பத்துக்கு நான் எவ்வளவு முக்கியம்ன்னு தெரியும். என்னை நான் ஜாக்கிரதையா பார்த்துபேன்…” வெற்றி விளக்கம் சொன்னான்.

    சரண்யாக்கு அவள் மனதை சமாதானம் செய்ய தெரியவில்லை. தாங்கள் இங்கு சுகமாக இருக்க, எங்கோ கண் காணாத இடத்தில் கணவன் நல்ல உறக்கம், உணவு இன்றி பாடுபடுகிறானே… அந்த நினைவு தான் வாட்டுது. அது போக நாளாகும்.

    அன்று ஒரு விசேஷ வீடு, வெற்றி தன் குடும்பத்தை அழைத்து செல்ல மட்டும் வந்து இருந்தான். நல்ல கூட்டம் வாசலில் நின்று எட்டி பார்க்க, வந்தது அபிராமி. அவன் ஒதுங்கிந்தான் நின்றான். அவன் வருகையை அறிந்து அபிராமி தான்.

   “பின் பக்கம் இருக்காங்க மாமா. குட்டி பாப்பா அழுகவும், அவங்க தூக்கிட்டு போனாங்க…”

  “ஓ… சரி அபி. நான் போய் என்னன்னு பாக்குறேன். விசேசத்துக்கு தனியாவா வந்த…”

  “இல்லை மாமா, அம்மா கூட தான் வந்தேன்…” தயங்கி தான் சொன்னாள். வெற்றிக்கு தெரியும் ஏதோ வரன் பார்க்கிறார்கள் என்று… சம்மந்தம் முடிய கடவுளிடம் வேண்டி கொண்டவன். தலையசைத்து நகர, மனைவி வந்து விட்டாள். எந்த விகல்பமும் இல்லாமல் சின்ன சிரிப்பில் அவரவர் பாதையில் கடந்து விட்டார்கள். 

         அபிராமிக்கு முன்பு இருந்த ஆதங்கம், கோபம் எதுவுமில்லை. நிதர்சனம் பொட்டில் அடித்தது போல் புரிந்தது. சின்ன வலி இன்றும் இருக்கு. ஆனால் கடக்க முடியாதது அல்ல…

    வெற்றிக்கு தொழில் நன்றாக தான் போனது. ஓரளவு சேமிப்பு கையில் நிக்க, முதல் செய்த வேலை, அம்மாக்கு நகை எடுத்தது தான். மயில் வைத்த முகப்பு சங்கிலி தனம் நீண்ட நாள் ஆசை. காலத்துக்கும் மனைவி, பிள்ளைக்கும் தான் சேர்க்க போகிறோம். அம்மா ஆசையை நிறைவேற்ற வேண்டி தாயை அழைத்து சென்று தான் வாங்கினான். 

   சரண்யாக்கு இதில் எந்த குறையும் இல்லை. அவள் கணவனை அவள் தான் நன்கு அறிவாளே… தனத்துக்கு பெருமை பிடி பட வில்லை. அவ்வளவு சந்தோசமாக இருந்தது. 

   இன்று ஒரு பஞ்சாயத்து தான்… இரவு வீடு வந்த வெற்றி. மூவரையும் பார்த்து என்ன என்று விசாரிக்க.

   “பிள்ளைக எனக்கு பயப்படவே மாட்றாங்க… அங்க இருந்த வரைக்கும் அம்மா அடிப்பாங்கன்னு பயன் இருந்துச்சு. இங்க சுத்தமா இல்லை. இன்னைக்கு நீங்க மிரட்டியே ஆகணும். சின்னதா ஒரு அடி குடுங்க. அப்பா மேல ஒரு பயம் வரட்டும்…” மனைவியின் கோரிக்கையை பார்த்தவன், பிள்ளைகளை அழைத்து,

   “எதுக்கு சேட்டை பண்றீங்க… அம்மா கவலை படுறாங்க. அடி வேணுமா ரெண்டு பேருக்கும்…” வெற்றி கொஞ்சம் மிரட்ட.

   “சாரி ப்பா…” என்று அவனின் கிளிகள், அப்பாவின் கன்னத்தில் முத்தம் வைக்க. அதற்கு மேல் யார் கோபத்தை காட்ட முடியும். 

  “சரி விடுங்க. அம்மா சொன்ன கேட்கணும். அவ சொல்லை மீற கூடாது. அப்புறம் அப்பா உங்களுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன்…” 

  “என்கிட்ட சாரிலாம் கேட்கவே மாட்டாங்க. என்ன சொன்னாலும் சண்டைக்கு தான் நிக்குறாங்க… எப்படி இருந்தவங்க தெரியுமா… நீங்க தான் செல்லம் கொடுத்து கெடுக்குறீங்க…” சரண்யா கணவனை சாட.

  “எப்பவாவது கோப பட்டா தான் மதிப்பு இருக்கும். நீ காலையில எழுந்தா ராத்திரி தூங்குற வர கத்துற… அவங்களுக்கு பழகி போச்சு…” என்று வெற்றி சொல்ல

 “என்ன செய்ய, என் விதி. எனக்கு மட்டும் பிள்ளை, புருசன் எல்லாம் தப்பா இருக்காங்க. நீங்க சும்மாவாது கைய ஓங்கி இருக்கணும். கொஞ்சம் பயம் இருக்கும்…”

  “கோபமா கிட்ட போனா சிரிக்கிறாங்க. எனக்கு அடிக்கவே மனசு வரலை சரண்…” வெற்றி சொல்ல.

  “உங்க பிள்ளைகன்னா மட்டும் கை ஓங்க மாட்டிங்க. அடுத்த வீட்டு பிள்ளைன்னா கை ஓங்கி அடிப்பீங்க…” மனைவி குறையாக சொல்ல.

  “நான் யாரடி அடிச்சேன்…”

  “என்னை தான்…”

  “இந்த பொண்டாட்டிகளே இப்படி தான். என்னைக்கோ நடந்து முடிஞ்சு போனதை இன்னைக்கு நடந்த மாதிரியே பேசுவாங்க…”

  “என்னைக்கு நடந்தா என்ன, நீங்க என்னை அடிச்சிங்க  தான…”

   “அதுக்கு தான் உங்கண்ணணை கூட்டி வந்து பதிலுக்கு அடிக்க விட்டையே. அப்படி பார்த்த நான் நல்லவன் தான். தினமும் ராத்திரி பூனை மாதிரி முதுகு முழுக்க பிராண்டி வைக்கிற. எங்க அம்மா கிட்ட சொல்லவா செஞ்சேன்…”

  “ஐயே! பேச்சை பாரு… ராத்திரி பிள்ளைக உறங்கின பின்ன பூனை மாதிரி என் பக்கத்துல வாரது யாராம்…”

 “அதுக்கு முன்ன என்னங்கன்னு எனக்கு சிக்னல் கொடுக்கிறது யாராம்…”

   “என்ன சொல்லி காட்டுறீங்க. நான் மட்டும் தான் உங்க பின்ன வாரேனா?…” சரண்யா எகிற.

   “நானும் தான். நாம ரெண்டு பேரும் தான்…” வெற்றி ஒத்து கொள்ள.

  “நீங்க தான் நீங்க மட்டும் தான். ஒரு நாள் ராத்திரி கூட எனக்கு ரெஸ்ட் கிடையாது…”

  “என்னடி எல்லாத்தையும் என் பக்கம் திருப்புற… உனக்கு ஆசை இல்லை…”

 “பொம்பளைக அப்படி தான். இதை எல்லாம் புருசனாவே  இருந்தாலும் ஒத்துக்க மாட்டோம்…” 

  அந்த மாத கடைசியில் சரண்யா குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டாள். சுற்றி இருக்கும் சொந்தம் எல்லாம் வந்தது. ஆனால், இரவில் அவள் உடன் தங்கி பார்த்து கொள்ள தான் ஆள் இல்லை. வெற்றி தான் உடன் இருந்தான். இரண்டு நாள் வைத்து தான் அனுப்புவோம் என்று ஹாஸ்பிடலில் சொல்லி விட, துணைக்கு என்று கணவன் தான். 

   சுகந்தி வந்தார் தான். ஒரு வாரம் முன்பே சரண்யா சொல்லி விட்டாள். பிள்ளைகள் இருக்க, அவளுக்கு துணை வேண்டுமே… 

   “திவ்யா ஊருக்கு போய் இருக்கா சரண். அப்பாக்கு சாப்பாட்டுக்கு கஷ்டம், அண்ணன் வேற இருக்கான். சுகர், பிரஸர், ஸ்ட்ரோக் இருக்கு, நான் வந்து உனக்கு என்ன உதவ  முடியும். ஒரு நாள் உன்னை பார்த்து ஒன்பது நாள் நான் படுத்துக்குவேன் சரண். உன் மாமியார் வீட்டுக்கு உன் புருசன் தானா எல்லாம் பாக்குறாரு. ஒரு நாள் ராத்திரி அவங்க துணை இருக்கட்டும். பகல்ல நான் வாரேன்…” தாய் சொல்ல

  “உன் பிறந்த வீட்டில் எதிர்பார்ப்பே வைத்து கொள்ளாதே மனமே என்று முடிவு எடுத்து பல மாதம் ஆனாலும், மனதில் ஒரு ஆசை இருந்தது தான். பெரிதாகவா இரண்டு நாள் தானே… அடுத்து தேறி கொள்வேன் அல்லவா…” 

 தனம் எட்டி கூட பார்க்க வில்லை. “எம் பேச்சை கேட்காம புருசன் சொல்லு கேட்டு ஆபரேசன் பண்றா… அவ கெடக்கட்டும். எனக்கு என்ன வந்தது. குடும்ப கட்டுப்பாடு எல்லாம் சாதாரணம்…”

   வெற்றி யாரையும் குறை சொல்ல வில்லை. இவர்கள் தோதுக்கு நான் பிள்ளை பெற முடியுமா… இன்று சரண்யாக்கு என்னவோ அது தானே நாளை எனக்கு… இருபத்தி ஐந்து வயதில் அம்மாவை நாடுகிறாள். அதுவே நாப்பது வயதில் கணவனை மட்டும் தானே நாடுவாள். அதை இன்றே நான் பார்க்க மாட்டேனா… அதை மனைவியிடம் சொல்லவும் செய்தான்.

    “அடி என்னடி மூஞ்சிய தூக்கி முகட்டுல வச்சு இருக்க. இங்க பாரு சரண், நம்மளை பெத்தவங்களும் சரி, நாம பெத்தவங்களும் என்னைக்கும் நமக்கானவங்க கிடையாது. கட்டையில போற வரை கை பிடிச்ச  உறவு தான் நிரந்தரம். உனக்கு நான் பார்க்க மாட்டேனா சரண். ஆசைக்கு மட்டுமா உன் கிட்ட வர்ற ஆம்பிளை நான்…” கணவன் சத்தம் போட்ட பின் தான் திடம் பெற்றாள்.

      “மூணாவது ஒன்னை பார்த்து இருக்கலாம். உங்க மாமியார் கோபம் நியாயம் தான். தம்பிக்கு நல்ல சம்பாத்தியம் இருக்கு, அப்ப ஒன்னை பார்க்க வேண்டி தான… ஜான் பிள்ளைன்னாலும் ஒத்தை ஆண்பிள்ளை வேணும்ல…” எல்லோரும் சொல்லி செல்ல, வெற்றி வெறுத்து போய் பார்த்து இருந்தான்.