“என்னம்மா கொழுப்பா? நானும் பார்த்துட்டே இருக்கேன், எங்க அத்தையை எதிர்த்தெதிர்த்து பேசிட்டு இருக்க? என்ன ஆதி உனக்கு சப்போர்ட் பண்றான்ற திமிரா?” என்றார் மகா தேவன்.
“அண்ணா பார்த்து பேசுங்க. சிவாவைப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது” என்றார் ரேணுகா கோபமாய்.
“என்னமா நேத்து வந்த மருமகளுக்கு சப்போர்ட்டா. பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம பேசிட்டு இருக்கு இந்த பொண்ணு. நீயும் சரிதான்ற மாதிரி பார்த்துட்டு இருக்க?” என்றார் மகா தேவன்.
சாப்பிட்டு முடித்து கையைக் கழுவியவள், சுப்தராவைப் பார்க்க அவரோ கண்ணீரைத் துடைக்க மனமின்ற தட்டையே வெறித்திருந்தார். அவரைப் பார்த்து விரக்தியாய் சிரித்துக் கொண்டவள், அமைதியாய் மேலே செல்ல முற்பட,
“அப்பப்ப இப்படி தட்டி வைக்கணும் அத்தை. இல்லைன்னா தலையில ஏறி தாளம் போட ஆரம்பிச்சுடுவாங்க. இப்படியே சமைச்சு பரிமாறட்டும். அப்பத்தான் வீட்ல தான் ஒரு வேலைக்காரங்க இடத்துல தான் இருக்கோம்ன்றது புத்தில இருந்துகிட்டே இருக்கும்” என்றார் மகாதேவன்.
“அண்ணா” என்றார் ரேணுகா.
அந்த வார்த்தைகளை கேட்ட பிறகு அவள் கால்கள் படியேறவில்லை. நின்று நிதானித்தவள்,
“பொண்டாட்டி வீட்ல உட்கார்ந்து சாப்பிடுற உங்களுக்கே இவ்வளவு திமிரும், கொழுப்பும் இருக்கும் போது, இது என் புருஷன் வீடு. அதாவது என் வீடு. அப்போ சொந்த வீட்டு சாப்பாட்டை சாப்பிடுற எனக்கு எவ்வளவு திமிரும் கொழுப்பும் இருக்கணும்?” என்றாள் அழுத்தமாய் உரைத்தவள்,
“அப்பறம் இன்னொன்னு சொல்லியே ஆகணும். வீட்ல வேலைக்காரங்க தான் சமைச்சு பரிமாறனும்னு இல்லை. வீட்டுக்கு வந்து பல நாளா, இல்லையில்ல பல வருஷமா தங்கியிருக்கிற விருந்தாளிகளுக்கு மனம் கோணாம சமைச்சு போடணும்னு என் மாமியார் சொல்லி இருக்காங்க. அதாவது வீட்டுக்கு உடமைப்பட்டவங்க தான் விருந்தாளிகளை கவனிக்கனும். இப்ப உங்களுக்கு தெளிவா புரிஞ்சுடுச்சா” என்றாள் தீர்க்கமாய்.
ரேணுகாவைப் பார்த்தவள், “உங்களைப் பார்த்தா தான் எனக்கு நிஜமாவே இப்போ பாவமா இருக்கு. நீங்க இத்தனை வருஷம் பாசத்துல இவங்களுக்கு வடிச்சு கொட்டியிருக்கிங்க. ஆனா, இவங்க உங்களை வேலை செய்றவங்க இடத்துல தான் வச்சிருந்திருக்காங்க போல. இதை உங்க பையன் எப்படி அனுமதிச்சார்னு தான் எனக்கு இப்போ வரைக்கும் புரியலை” என்றாள்.
ஏற்கனவே மகாதேவனின் பேச்சில் ரேணுகா அதிர்ந்திருக்க, இப்போது சிவா அதை தெளிவாய் எடுத்து உரைக்கவும், அவருக்கு படபடவென்று வந்தது.
“சிவாம்மா” என்றவர் அங்கிருந்த சேரில் அப்படியே அமர்ந்துவிட, இவர்கள் பேசுவதை எல்லாம் அறைக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்த விசாகனுக்கு யாரோ முகத்தில் காரி உமிழ்ந்த உணர்வு.
வேகமாய் ரேணுகாவின் அருகில் சென்ற சிவா, அவருக்கு குடிக்க நீரை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க, அதை குடித்த பின் தான் அவருக்கு மூச்சே சீராக வந்தது.
அவரின் கையைப் பிடித்தவள்,
“உங்களுக்கு உங்க மருமக முக்கியம்னா,நான் சொல்றதைக் கேளுங்க. இனி இந்த வீட்ல எந்த வேலையும் நீங்க செய்யக் கூடாது. நான் ஆக்கிப் போடுறதை வாயை மூடிட்டு சாப்பிடுறதுன்னா சாப்பிடட்டும். யாருக்கெல்லாம் முடியாதோ அவங்க எல்லாம் கிளம்பி போயிட்டே இருக்கலாம். யாரையும் வீட்ல உட்கார வச்சு வடிச்சு கொட்டனும்னு எந்த நேர்த்திக் கடனும் இல்லை” என்றாள் மகாதேவனை நேர் பார்வையாய் பார்த்து.
‘என்ன இந்த போடு போடுறா?’ என்று எண்ணிய மணிமேகலை எச்சிலை விழுங்கிக் கொண்டார். மெல்ல நகர்ந்து அந்த அங்கிருந்து இடத்தை காலி செய்திருந்தார்.
“சிவாம்மா” என்று கண்கலங்கிய ரேணுகாவைப் பார்த்தவள், சட்டென்று அவரின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
“சாரிங்க இப்படி பேசணும்னு நான் பேசலை. ஆனா, அவங்க எல்லாம் என்னை பேச வைக்கிறாங்க” என்றாள் சிவா.
அவளின் தலையை பரிவுடன் வருடியவர்,“எனக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணு இல்லையேன்னு இப்ப நினைச்சு கவலைப்படுறேன்டா. நீயும் என்னை அத்தைன்னு சொல்ல மாட்டேங்குற? ஏதோ மூணாவது மனுஷங்க கிட்ட பேசுற மாதிரி போங்க வாங்கன்னு பேசுற?” என்றார் ரேணுகா கவலையுடன்.
“ஏன் அப்படி தோணுது உங்களுக்கு?பொண்ணு இல்லைன்னா என்ன? அதான் நான் இருக்கேனே? அப்பறம் எனக்கு அத்தைன்னு சொல்ல நிறைய பேர் இருக்காங்க. அம்மான்னு சொல்லத்தான் யாருமில்லை. நான் வேணும்னா உங்களை ரேணும்மான்னு கூப்பிடவா?” என்றாள் ஏக்கம் கலந்த ஒரு எதிர்பார்ப்புடன்.
அவளின் வார்த்தைகளை கேட்ட சுபத்ரா சட்டென்று அறைக்குள் சென்று விட,
“அதுக்கென்னடா நீ அப்படியே கூப்பிடு” என்றவரைப் பார்த்து மௌனப் புன்னகை பூத்தாள்.
அவருக்காகத் தான் அவள் சிரிக்கிறாள் என்று ரேணுகாவிற்கும் புரிந்தது.
“எப்படிமா இதையெல்லாம் மனசுக்குள்ள வச்சுகிட்டு வெளியே எதுவுமே நடக்காத மாதிரி இருக்க?” என்றார் ரேணுகா.
“இந்த வீட்டு ஆளுங்க என்னமோ என்னை இன்னக்கு புதுசா பேசுற மாதிரி. தூரத்துல இருக்கும் போதே என் மேல அப்படி வெறுப்பு இவங்களுக்கு. இப்போ இப்படி உரிமை கொண்டாட்டிட்டு இந்த வீட்ல இருக்குறதைத் தாங்க முடியலை. அதான் எந்த வகையில வார்த்தையால தாக்கலாம்னு முயற்சி பண்ணி பார்க்குறாங்க. முடிஞ்ச வரைக்கும் அவங்களும் தான் போய் பார்க்கட்டுமே” என்றாள் சிவா.
அவர் அவளையே பார்த்திருக்க,
“உங்களுக்கு என்மேல கோபம் எதுவும் இல்லையே?” என்றாள்.
“நீ என்ன தப்பு பண்ண சிவா? உன்மேல நான் கோபப்பட?” என்றார்.
“படபடப்பா இருக்குன்னு சொன்னிங்களே, நீங்க வந்து ரெஸ்ட் எடுங்க” என்று அவரை அறைக்கு அனுப்பி விட்டு தங்கள் அறைக்கு வந்தவளுக்கு, அதுவரை போட்டிருந்த அழுத்த முகமூடி எல்லாம் உடைந்து கண்ணீர் உடைப்பெடுத்திருந்தது.
‘நல்ல சாப்பாட்டை பார்த்திருக்கியா நீ?’ என்ற விசாலாட்சியின் குரலே அவளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்க, ஆத்திரமும் இயலாமையும் அவளுக்கு கண்ணீராய் உருமாறியிருந்தது.
நேரம் போவதே தெரியாமல் வெற்றிடத்தை வெறித்திருந்தவள், வெளியே விடாமல் கேட்ட ஜீப்பின் ஹாரன் சத்தத்தில் மீண்டாள். எழுந்து பால்கனி வழியாக எட்டிப் பார்க்க, ஆதி தான் விடாமல் ஹாரனை அடித்துக் கொண்டிருந்தான். அவள் எட்டிப் பார்ப்பதை பார்த்தவன்,
“வா” என்று அழைக்க, தலையை ஆட்டியவள், வேகமாய் அறையை விட்டு வெளியேறப் போக, அப்போது தான் ஞாபகம் வந்தவளாய் வேகமாய் சென்று முகத்தைக் கழுவி விட்டு தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அழுத தடம் எதுவும் தெரியாததைப் போல் தான் இருந்தது.
வேகமாய் வருபவளைப் பார்த்த ஆதி,
“மெதுவா..! என்ன அவசரம்?” என்றான்.
அவள் ஏறியவுடன் ஜீப்பை கிளப்பியிருந்தவனின் பார்வை அடிக்கடி அவளைத் தொட்டு மீள, அதை அவளும் உணர்ந்திருந்தாள்.
“என்னாச்சு? ஏன் கண்ணெல்லாம் சிவந்து இருக்கு? அழுதியா என்ன?” என்றான். பார்வை வழியில் இருந்தாலும் கேள்வியும் கவனமும் அவளிடத்தில் இருந்தது.
“எதுவுமில்லை” என்பதைப் போல் அவள் தலையை ஆட்டியிருந்தாள்.
“நான் என்ன நடந்ததுன்னு கேட்டேன் தீர்த்தா” என்றான் மீண்டும் அழுத்தமாக. அவன் குரல் மாற்றத்தில் அவளுக்கே ஒரு நொடி உடல் தூக்கி வாரிப் போட்டது.
‘மறுபடியும் முதல்ல இருந்தா, தீர்த்தா அப்படியே இருந்திடு’ என்று எண்ணிக் கொண்டவள் அமைதியாய் இருக்க, வேகமாய் போனை எடுத்தவன் விசாகனுக்கு அழைத்தான்.
அவன் இப்படி சட்டென்று போன் போடுவான் என்று எதிர்பார்க்காதவள், அவன் போனை சட்டென்று பிடுங்கி, அழைப்பை துண்டித்தாள்.
“அப்ப ஏதோ விஷயம் இருக்கு இல்லையா?” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.