“இப்பல்லாம் நான் கடவுளுக்கு நன்றி தான் சொல்லிக்கிறேன். ஏன்னு தெரியுமாங்க?” என்றாள் ரேணுகாவிடம்.

ரேணுகா அவளை கேள்வியாய் பார்க்க,

“நல்லவேளை இவங்க என்னை வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டாங்க. நான் என் அப்பாகிட்ட இருக்க போய் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கேன். ஒருவேளை இந்த வீட்ல இப்படிப்பட்ட மனுஷங்க கிட்ட வளர்ந்திருந்தா எப்படி வளர்ந்திருப்பேனோ? என்னால யோசிச்சுக் கூட பார்க்க முடியலை. அந்தஸ்தையும், ஆஸ்தியையும் கட்டி அழுதுகிட்டு இருக்கவங்ககிட்ட போய் அன்பையும் அக்கறையையும் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?” என்றாள் கேள்வியாய்.

“அம்மாடி சிவா, இந்த வயசுக்கு இந்த அளவுக்கு யோசிக்காதடா. இது எதைப்பத்தியும் கவலைப் படாம வாழ்க்கையை வாழ வேண்டிய வயசு. தேவையில்லாம மனசைப் போட்டு குழப்பிக்காம சந்தோஷமா இருமா” என்றார் ரேணுகா.

“ம்ம்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஆதியின் குரல் கேட்டது. அவனின் குரலில் அவள் பட்டென்று சமையல் அறைக்கு உள்ளே நகர்ந்து சென்று விட,

“ம்மா..!” என்றபடி வந்தவனின் குரலில் எரிச்சல் அப்பிக் கிடந்தது.

“என்ன ஆதி? என்னாச்சு?” என்றார் ரேணுகா புரியாமல்.

“இவளைப் பார்த்திங்களா? அங்க ரூம்ல இல்லை. மறுபடியும் சொல்லாம கிளம்பி போயிட்டாளா?” என்றான்.

“ஆதி” என்று ரேணுகா சொல்ல வரும் முன்,

“நான் போய் கூட்டிட்டு வரேன்மா. அன்னைக்கு மாதிரி சமாளிங்க. இவளை வச்சுகிட்டு” என்று பல்லைக் கடித்தவன், அப்படியே வெளியே செல்ல,

“சிவா இங்க தான் இருக்கா ஆதி” என்று ரேணுகா சொல்லவும், சட்டென்று திரும்பி வந்தவன்,

“இதை முதல்லயே சொல்றதுக்கு என்னம்மா?” என்றவன் அப்போது தான் நிம்மதியாய் மூச்சு விட்டான்.

அவனின் பதட்டத்தைக் கண்ட சிவாவிற்கோ சிரிப்பு. கூடவே உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு. தன்னைக் காணவில்லை என்றால் அவன் பதட்டமடைகிறான் என்பதால் வந்த சிலிர்ப்பாக கூட இருக்கலாம்.

அவன் கண்களோ அவளைத் தேட, அவனுக்கான டீயுடன் வெளியே வந்தவள் அவனிடம் நீட்ட, பார்த்திருந்த அவனுக்கு மயக்கம் வராத குறைதான்.

‘என்னை ஒரு வழியாக்கனும்னே எல்லாம் பண்றாளோ?’ என்று எண்ணியவன் டீயை எடுத்துக் கொள்ள, அந்த நேரத்திற்கு சரியாக அங்கே வந்த விசாலாட்சியின் கண்களில் இதெல்லாம் தவறாமல் விழுந்தது. அவரோ கண்ணைக் கசக்கி விட்டு மீண்டும் பார்க்க, சிவாவைப் பார்த்தவருக்கு அதிர்ச்சி.

விசாலாட்சியைக் கண்டு நக்கலாய் சிரித்தவள், வேண்டுமென்றே அவரிடமும் டீ டம்ளரை நீட்ட, அவரோ முழித்துக் கொண்டு நின்றார்.

‘உன் கையால குடிப்பேன்னு கனவு கூட காணாதடி’ என்று எண்ணியவர் அப்படியே நிற்க,

“கிழவி எப்படி நீ எடுக்காம இருக்கன்னு நானும் பார்க்குறேன்” என்று அவளும் மனதிற்குள் கறுவிக் கொண்டாள்.

“என்ன பாட்டி யோசனை? டீ ஆறிடப் போகுது, உங்களுக்கு சூடா இருந்தாத்தானே பிடிக்கும்” என்றான் ஆதி.

“சரிப்பா ஆதி” என்ற விசாலாட்சி வேண்டா  வெறுப்பாய் எடுத்துக் கொள்ள,

“குடிங்க பாட்டி” என்றான் மீண்டும்.

‘குடிச்சு தொலைக்கிறேன்’ என்று எண்ணியவர் டீயைக் குடிக்க, மிதப்பாய் பார்த்திருந்தாள் சிவ தீர்த்தா.

“இன்னைக்கு சமையல் கூட சிவா தான் பண்ணா அத்தை” என்றார் ரேணுகா.

“இதென்ன புதுப் பழக்கம் ரேணுகா, கண்டவங்க எல்லாம் சமையல்கட்டுக்குள்ள போறது?” என்று ஆதி இருப்பதை மறந்து அவர் வார்த்தையை விட்டிருக்க,

“பாட்டி” என்று அவன் கத்திய கத்தலில் வீடே அதிர்ந்தது.

விசாலாட்சி அதிர்ந்து நிற்க,

“வார்த்தையை பார்த்து பேசுங்கன்னு பல தடவை சொல்லிட்டேன். நான் மனுஷனா இருக்கணும்னு நினைக்கிறேன். வீணா என்னை மாத்திடாதிங்க” என்றான்.

“நீ இப்பல்லாம் ரொம்ப மாறிட்ட ஆதி” என்றார் விசாலாட்சி.

“நான் எப்பவும் அதே மாதிரி தான் இருக்கேன். என்ன? இப்பத்தான் உங்க ஒரிஜினல் முகமே எனக்குத் தெரியுது” என்றவன்,

“அவளுக்கு இடமில்லைன்னா, எனக்கும் இடமில்லைன்னு தான அர்த்தம். உங்களுக்கு உங்க பேரன் நான் முக்கியம்னா, என்னோட சேர்த்து என் பொண்டாட்டியும் முக்கியமானவளாத்தான் இருக்கணும். அவளை ஒதுக்குறது என்னை ஒதுக்குறதுக்கு சமம், அதுக்கு மேல உங்க விருப்பம்” என்றவன் இறுகிப் போன முகத்துடன் அறைக்குள் சென்றுவிட்டான்.

“ஆதி” என்ற ரேணுகா மனசு கேட்காமல் அவன் பின்னால் செல்ல, விசாலட்சியோ சிவாவை முறைத்திருந்தார்.

“என்ன முறைப்பு வேண்டி கிடக்கு? அதான் மாமா தெளிவா சொல்லிட்டு போனாங்கல்ல. அவங்க சொன்ன மாதிரி இருந்தா, பாவம் வயசானவங்க ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டும்னு விடுவேன். அதுக்கு மேல உங்க விருப்பம் பார்த்துக்கோங்க” என்றாள் கண் சிமிட்டி.

“மாமாவா??” என்றார் விசாலாட்சி அதிர்ந்த பார்வையுடன்.

“ஆமா, அவங்க என் மாமா தான. இப்படி எல்லாம் உரிமை கொண்டாட மாட்டேன்னு நினைச்சு தான உங்க இஷ்ட்டத்துக்கு பேசி ஆட்டம் போடுறிங்க?எங்க இனி பேசுங்க பார்ப்போம்? கிருஷ்ணன் பொண்ணைத் தான் உங்களால இஷ்ட்டத்துக்கு பேச முடியும். ஆனா, ஆதி கேசவன் பொண்டாட்டியை பேச முடியாது. சாம்பிள் பார்த்திங்கல்ல?” என்றாள் நக்கலுடன்.

“என்னடி ஆட்டம் ஓவரா இருக்கு? யாரு உங்கப்பன் சொல்லிக் குடுத்தானா?” என்றார் அப்போதும் விடாமல்.

“இதை விடவே மாட்டிங்களா? இந்த வார்த்தையை கேட்டு எனக்கு அலுத்துப் போய்டுச்சு. இந்த சொல்லிக் குடுக்குறது, குடும்பத்தை கெடுக்குறது எல்லாம் உங்க புத்தி. என்னோட அப்பாவுக்கு சுட்டுப் போட்டாலும் அந்த புத்தி வராது. ஒரு வேளை எனக்கு அந்த புத்தி இருந்தா கூட அதுவும் உங்க ரத்தத்துல இருந்து வந்ததாத்தான் இருக்கும்” என்றாள் அவரைப் பார்த்து நேர் பார்வையாய்.

அவள் ஆதியை ‘மாமா’ என்று சொன்ன அதிர்ச்சியிலிருந்தே அவர் வெளியே வரவில்லை. அவளுக்கு இருக்கும் கோபத்திற்கு எப்படியும் ஆதியை விட்டு சென்று விடுவாள் என்று அவர் எண்ணியிருக்க, அவரின் எண்ணங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி இருந்தாள் சிவ தீர்த்தா.

“ஆங்.. அன்னைக்கு என்னமோ சொல்லிட்டு இருந்திங்களே, நான் நின்ன இடத்தை தண்ணி ஊத்தி அலசி விடணும்னு” என்று நிறுத்தியவள்,

“இன்னைக்கு இந்த வீடு முழுசா சுத்தி வந்திருக்கேன், நான் தான் பூஜை பண்ணேன், நான் தான் சமையல் பண்ணேன். இந்த வீட்ல மங்களகரமா நீங்க எதையெல்லாம் பார்த்திங்களோ அந்த வேலையெல்லாம் இன்னைக்கு நான் தான் செஞ்சேன். முடிஞ்சா எல்லா இடத்தையும் தண்ணி ஊத்தி நல்லா அலசி விடுங்க” என்றாள் அழுத்தமாய். ரேணுகா வரவும் வாயை மூடிக் கொண்டாள்.

“சிவா நீ போய் தலையை உலர்த்திட்டு வாடா. இன்னும் ஈரமாவே இருக்கு” என்று சொல்ல,

“நானே வந்து எல்லாருக்கும் பரிமாறேன். நீங்க எதுவும் செய்ய வேண்டாம்” என்று ரேணுகாவிடம் சொன்னவள்,

பிரம்மை பிடித்தார் போல் நின்றிருந்த விசாலாட்சியை பார்த்துவிட்டு, ஒரு நமட்டு சிரிப்புடன் மேலே சென்றாள்.

அறைக்கு சென்றவள் கண்டது என்னவோ குளித்துவிட்டு டவலுடன் வெளியே வந்த ஆதியைத் தான். பார்த்தவள் சட்டென்று திரும்பிக் கொள்ள, ஆதியோ வெகு இயல்பாய் நடமாடிக் கொண்டிருந்தான்.

“இது என்ன? இவங்க இப்படி ப்ரீ ஷோ காட்டிட்டு இருக்காங்க” என்று நினைத்தவள், அப்போது தான் பார்த்தாள் அவன் சட்டையை அயர்ன் செய்து கொண்டிருப்பதை. அவனின் போன் வேறு விடாமல் ஒலித்துக் கொண்டிருக்க, போனை எடுத்து அவனிடம் நீட்டியவள், அயர்ன் பாக்ஸை வாங்கித் தானே அயர்ன் செய்ய, போனில் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை என்னவோ அவள் மேல் தான் இருந்தது.

இன்று என்னவோ வித்யாசமாய் தெரிந்தாள் அவள். அவளின் நடவடிக்கைகள் அனைத்தும் அவனுக்கு புதியதாய் பட்டது.  அவள் முந்தானையை சொருகியிருந்த விதமும், அந்த இடைவெளியில் தெரிந்த அவளது இடையும் அவனுக்கு நிச்சயம் காலை நேர சோதனை தான்.

“இவ என்ன இன்னைக்கு ஹாட் பிகரா தெரியறா? நிஜமாவே அப்படித்தான் இருக்காளா? இல்லை என் கண்ணுக்குத் தான் அப்படி தெரியறாளா?” என்றவனுக்கு அவளின்  இடைப் பிரதேசத்தில் இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. இதில் அவள் வளையல் சத்தம் வேறு அவனை பித்தாக்க,

“வளையலை ஆட்டி ஆட்டியே என் இதயத்தை இருந்த இடம் தெரியாம உடைச்சுடுவா போலயே” என்று எண்ணியவன், ஒரு வேகத்தில் அவள் அருகில் சென்று விட்டான்.

“ஆதி, கண்ட்ரோல் யுவர் செல்ப். உன் பாட்டி குரவலையை பிடிச்ச மாதிரி உன்னையும் பிடிச்சிட போறா?” என்று நிதானித்தான்.

திடீரென்று அவன் பின்னால் வந்து நிற்கவும் பதறித் திரும்பியவள் அவன் மீதே மோதி நிற்க,

“தீர்த்தா பார்த்து” என்றவன் அவளைத் தன் பக்கம் இழுத்திருந்தான். அவனின் கைகளுக்கு நின்றவளின் உடல் வெடவெடக்க, அதை ஆதியும் உணர்ந்திருந்தான்.

“பயப்படத் தேவையில்லை, ஒன்னும் பண்ண மாட்டேன்” என்று அவளைத் தள்ளி நிறுத்தி கடுப்புடன் கூறியவன், மீண்டும் அவளைத் தன்னருகில் இழுத்து, அவள் சொருகியிருந்த முந்தானை எடுத்துவிட்டான். அவளின் இடுப்பு சேலையையும் சரி செய்துவிட்டவன்,

“இப்படி எல்லாம் முந்தானையை சொருகிட்டு என் முன்னாடி வராத. அப்பறம் எக்குத் தப்பா ஏதாவது நடந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை. கண்ணு அங்க தான் போகுது” என்றான்.

அவள் அவனை முறைக்க,

அவளின் எதிர்புறம் திரும்பி சிகையைக் கோதி சிரித்தவன்,

“என்ன முறைப்பு? எனக்கு உரிமைப்பட்ட இடத்தைத் தான நான் பார்க்குறேன். இதுல எனக்கொன்னும் தப்பா தெரியலை. சொல்லப் போனா இந்த இடுப்புக்கு சாரி இடத்துக்கு பட்டா சிட்டா எல்லாம் வச்சிருக்க ஒரிஜினல் ஓனரே நான் தான். பார்க்குறதுக்கு என்ன, படுத்து உருள்றதுக்கு கூட எனக்கு மட்டும் தான் ரைட்ஸ் இருக்கு” என்று அவன் பேசிய பேச்சில் அவளுக்குத் தான் முகமெல்லாம் குப்பென்று சிவந்து போனது. அதை அவனிடம் இருந்து மறைக்க அரும்பாடு பட்டுப் போனாள்.

“இப்போ மில்லுக்கு போயிட்டு அப்படியே தோட்டத்து பக்கம் தான் போவேன் தீர்த்தா. வர்றதுன்னா கிளம்பி ரெடியா இரு. வந்து கூட்டிட்டு போறேன். உனக்கும் உங்க அப்பாவை பார்த்த மாதிரி இருக்கும்” என்றான்.

அவள் சரி என்று தலையை ஆட்ட,

“நிஜமாவே என் முகம் பார்த்து பேச பிடிக்கலையா? இல்லை நீ பார்க்குற அளவுக்கு நான் இல்லையா?” என்றான் அவள் முகத்தை பார்த்தபடி.

அவன் பேச்சில் திடுக்கிட்டு சட்டென்று அவனை நிமிர்ந்து நேர் பார்வையாய் பார்த்திருந்தாள்.

“ஒரு வழியா பார்த்துட்டா” என்று எண்ணியவன்,

“ஓகேவா நானு. சிவ தீர்த்தாவுக்கு பொருத்தமா இருக்கேனா?” என்றான் புன்னகையுடன்.

அவனை முறைத்தவள், திரும்பி சிரித்தபடி கீழே சென்றாள்.

“நல்ல முன்னேற்றம்டா ஆதி” என்று சிரித்துக் கொண்டவன், தானும் கிளம்பி சென்றான்.

சாப்பிட வந்தவனுக்கு அன்று அவளே பரிமாற, ஆதியோ வாசலை பார்த்துக் கொண்டே சாப்பிட்டான்.

“என்னாச்சு ஆதி? யாரும் வர்றாங்களா?” என்றார் ரேணுகா.

“இல்லம்மா, மழை வர்ற அறிகுறி எதுவும் இருக்கான்னு பார்க்குறேன்” என்றான் சிரிப்புடன்.

ரேணுகா சிரிக்க,

“இப்போதைக்கு புயல் வர்ற அறிகுறி தான்மா தெரியுது” என்றான் மீண்டும்.

“இங்க பாருங்க சாம்பார் சூடா இருக்கு” என்றாள் ரேணுகாவைப் பார்த்து.

“அவன் சும்மா கிண்டலுக்கு பேசுறான்மா” என்ற ரேணுகா சமையல் அறைக்குள் செல்ல, ஆதியோ சட்டென்று அவளின் இடுப்பைக் கிள்ளியிருந்தான்.

அவளோ கண்ணை விரித்து அவனைப் பார்க்க,

“நான் தான் புடவையை இப்படி சொருகாதன்னு சொன்னேன் தான. நீ கேட்கலை. அதான் என் கையும் என் சொன்ன பேச்சு கேட்கலை” என்றவன் நமட்டு சிரிப்புடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இதையெல்லாம் அப்போது சாப்பிட வந்த விசாலாட்சி பார்த்திருக்க, அவருக்கு நெஞ்சு வலியே வந்துவிடும் போல் இருந்தது.

அவரும் எத்தனை அதிர்ச்சியைத் தான் தாங்குவார் ஒரே நாளில்?