புதுப்புது அர்த்தங்கள்….. நாள் – 30

அத்தியாயம் 84

அறைக்குள் போன சந்தியா கதவடைக்க முயல , விஸ்வா அவள் முயற்சியை முறியடித்து, உள்ளே வந்தான் .

சந்தியா கட்டிலில் வேறுபக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள். விஸ்வா  அவள் காலடியில் அமர ,

சந்தியா திரும்பாமல் அப்படியே இருக்க,

விஸ்வா அவள் கைகளை , தன் கையில் எடுக்க , கையை விடுவித்துக் கொண்டாள்.

“பிளீஸ் சந்தியா , நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள்…” என்று வேண்ட ,

சந்தியா யாருக்கு வந்த விருந்தோ என்று வேறு பக்கம் பார்த்தபடி , கண்ணீரைத் துடைக்க ,

“சந்தியா…” என்று தயக்கத்துடன், “இப்போது நான் சொல்வதெல்லாம் சத்தியம் . நம்ம குட்டி மேல சத்தியம்” என்றவன், “உனக்கு ரஞ்சனி மூலம் ஏற்கனவே ஒரு பாதி கதை தெரியும் . மீதி கதை இதோ…”

 “அம்மா பார்த்த பெண் தான் ரஞ்சனி . எனக்கும் பிடித்திருந்தது . தேர்வு முடிந்த பின் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது . 

நானும் அப்போது, போரூர் கடை வேலையில் பிஸியாக இருந்தேன் .அவளும் தேர்வில் பிஸியாக இருந்தாள். அதனால் எங்கள் இருவருக்குள் பெரிய பேச்சு வார்த்தையெல்லாம் கிடையாது சந்தியா…  ஒருவேளை இந்த ஜோடி சேராது என்று கடவுள் கணக்குப் போட்டு விட்டார் போல, கிட்டத்தட்ட அந்நியர்கள் போல் தான் இருந்தோம்…..”

சந்தியா அவனைத் திரும்பிப் பார்க்க, “கல்யாணத்திற்கு முன் , உன்னிடம் பேசிய அளவு கூட,  அவளிடம் பேசியது கிடையாது . இது தான் உண்மை. சத்தியம் சந்தியா .” 

சந்தியா அவனை ஆழ்ந்து பார்க்க,

“தேர்வுக்குப் பின் தோழி திருமணத்திற்காக ரஞ்சனி சென்னை வர , முதல் சந்திப்பு நடந்தது. இரவு உணவுக்குச் சென்றோம் . சந்தோஷ மனநிலையில் இருந்தோம்.

மறுநாள் காலை அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் போக , அந்தப் பதட்டத்தில் , ரஞ்சனி விசயத்தை  மறந்து போனேன்…” என்று சொல்லும் போதே, அவன் முகம் வேதனையில் கசங்க, 

“அப்புறம், என் தவறால், அவள் கடைசி நேரத்தில், ரயிலைப் பிடிக்க ஓட , விபத்து நடந்தது.”

சந்தியா இமைக்காது, அவனையே பார்க்க,

“ உனக்குத்தான் தெரியுமே? விக்கித்துப் போனேன்.

 பின், அப்பாவின் துணை கொண்டு ஒருவாறு சமாளித்தேன் . பின், ரஞ்சனி குடும்பம் வந்து பொறுப்பை எடுத்துக் கொண்டார்கள் . அதன்பின் ….” என்று  நிறுத்தி , தயக்கத்துடன் சந்தியாவைப் பார்த்து, “அடுத்து என்னென்ன விஷயங்களை யோசிக்க வேண்டும்? என்ற எந்தச் சிந்தனையும் இல்லாது,ரஞ்சனியைப் பற்றிய கவலையோடு மட்டுமே இருக்க, 

அப்போது, கால் இல்லாத பெண்ணுடன் வாழ விருப்பமா ?” என்று அம்மா கேட்டார்.

“ பயந்து போனேன். பதட்டமானேன். ஊனமான பெண்ணோடு என் வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. பின், சுயநலவாதியாக , அம்மா பின்னால் ஒளிந்து கொண்டு, ‘வேண்டாம்’ என்ற முடிவை எடுத்தேன். அந்த முடிவை மூன்று நிமிடத்தில் எடுத்து விட்டேன் என்றால் எங்களுக்குள் இருந்த அன்பை, பிடிப்பைப் பார்த்துக் கொள்.”

சந்தியா ஒருவித பிடித்தமின்மையோடு,  அவனையே பார்க்க,

விஸ்வா தலை குனிந்தபடி , “ உனக்குத் தெரிந்தது தான் , குறைபாடு உள்ள பெண்ணைக் கையாளும் அளவிற்கு, என்னிடம் பரந்தமனசும் பக்குவமும் கிடையாது சந்தியா.

அதனால்தான், இப்போதும் திருமணத்தை மறுத்தததை விட, அதை அவளிடம் நேரில் சொல்லத் துணிவில்லாமல் , கோழைத்தனமாக என் பெற்றோர் பின் ஒளிந்து கொண்டதையும், மன்னிப்புக் கேட்காததையும் தான் அவமானமாக, அசிங்கமாக உணர்கிறேன் . அப்போது தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. 

மேலும், அப்பா சொன்னதும், எதிர்பார்த்ததும், இப்போதுதான் புரிகிறது.  

அவள் கஷ்டப்பட்ட பொழுது, கூட இருந்து உதவியிருக்க வேண்டும் , பின்பு பக்குவமாக என் நிலைப்பாட்டைச் சொல்லி விலகியிருக்க வேண்டும்… செய்யத் தவறிவிட்டேன்…” என்று பெருமூச்சு விட்டான்.

தன்னைச் சரி செய்து கொண்டு, “அதற்குப் பின், நம் திருமணம் முடிவானது , முதலில் சில தயக்கங்கள் இருந்தாலும் , சீக்கிரத்தில் உன் மென்மையான அணுகுமுறையால் கவரப்பட்டேன். அதனாலே, திருமணத்திற்கு முன் இயல்பாகப் பேச ஆரம்பித்தேன் .

அப்புறம் நம் திருமணம் , வாழ்க்கை நன்றாகப் போனது . சந்தோஷமாக இருந்தேன் சந்தியா…” என்று அவள் கைகளைப் பற்ற,

சந்தியா தடுக்காதது, தைரியத்தைத் தர, “ஆனாலும் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி அரித்துக் கொண்டே இருந்தது சந்தியா.

அன்று மாலில்  ரஞ்சனி நன்றாக இருப்பதைப் பார்த்தவுடன்,  நிம்மதியாக உணர்ந்தேன். சந்தோஷமாகக் கூட இருந்தது. ஆனால் அடுத்த நிமிடமே , உன்னுடன்  பார்த்தவுடன் பதட்டமாகிவிட்டது… தலைவலியெல்லாம் வந்து விட்டது…” என்று அன்றைய நாளை விளக்கினான்.

சந்தியாவிற்கு அனைத்தும் ஞாபகம் வர, ஆழ்ந்து கவனிக்க, “ரகு ரஞ்சனி திருமணச் செய்தி வந்த பொழுது , முதலில் நான் விடுதலை அடைந்ததைப் போல் உணர்ந்தேன் . அவள் நன்றாக வாழ வேண்டும் என்றும் கடவுளிடம் மனமாற வேண்டிக் கொண்டேன்…” என்றவன், சந்தியாவின் முகம் பார்த்து, “சத்தியமாகச் சொல்கிறேன், நம் திருமணம் முடிவான பின், உன்னைத் தவிர வேறு எந்தப்  பெண்ணையும் நினைத்ததில்லை சந்தியா…. அதனால் தான் அவள் திருமணத்திற்குப் போக முடிந்தது…”

அவன் அன்பின் மேல் உறுதி ஏற்பட, “இவ்வளவு பெரிய துரோகத்திற்குப் பிறகு, உங்களால் எப்படி ரஞ்சனியிடம் இயல்பாகப் பேசமுடிகிறது? இல்லை அவங்களால் எப்படி முடிகிறது?”

“அதற்குக் காரணம், ரகு – ரஞ்சனியின் பெருந்தன்மை…  மேலும் ரஞ்சனியிடம் மன்னிப்பும் கேட்டு விட்டேன்.”

“ஒ….! அத்தை சொன்னது போல், ஏன் ரஞ்சனி..? மன்னிப்புடன் நிறுத்தியிருக்கலாமே? ஏன் என்னையும் பழக வைத்தீர்கள்? ஏன் நட்பைத் தொடர்கிறீர்கள்?”

“ம்ம்…. சொல்கிறேன். அதற்கு என்னுடைய இயலாமை தான் காரணம்…” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

“விஸ்வா….” என்று பதறி, சந்தியா கை கொடுத்து, கட்டிலில் அமர வைக்க ,   

தன்னைச் சரி செய்து கொண்டு,  “நமக்குள் பிரச்சனை தீவிரமாகத் தொடங்கியிருந்தது . நீ சிலமுறை சொல்லியும் , அப்பா எடுத்துச் சொல்லியும் , உன் கவலைகளை , பயங்களை  அடி ஆழம் வரை பார்க்காமல் ,  நுனிப்புல்  மேய்ந்தேன் . அதற்கான தண்டனையும் அனுபவித்து விட்டேன்” என்று உணர்ந்து பேசினான் .

“நான் சரியாகக்  கையாளாததால் நீ கடுமையாகப் பாதிக்கப்பட்டாய் , மன அழுத்தத்திற்கு உள்ளானாய் . ஸாரி… சந்தியா , ரியலி வெரி ஸாரி….”

சந்தியா படபடப்பாக , 

“பயப்படாதே சந்தியா…. இது பெரிய விஷயம் இல்லை. மன அழுத்தம் என்று நான் சொல்ல வருவது ‘ஸ்டரெஸ், ஸ்டெரஸ் ஆனாய்…’ உண்மையில் உனக்கு வயிற்றில் எந்தப் பிரச்சினையும் இல்லை . வீட்டுப் பிரச்சனையால், நீ பதட்டமானாலோ, கவலைப்பட்டாலோ, உனக்கு வயிறு பிரச்சனை வருகிறது என்று மருத்துவர் சொன்னார்…. அதைத்தான் சொல்கிறேன்.”

சந்தியா மனதிற்குள் பயப்பந்து உருள, “என்னென்னமோ சொல்கிறீர்கள்?”

“பதட்டப்படாதே… நான் சொல்வதைக் கவனமாகக் கேள்..” என்றவன், அவள் கன்னத்தை இருகைகளாலும் தாங்கி, அவளை ஆழ்ந்து பார்த்து,  “கடந்த ஐந்து மாதத்தில் வயிற்றுப் பிரச்சனை வந்ததா?”

‘இல்லை…’ என்று தலையாட்ட, 

“இதைத்தான் மருத்துவர், வீட்டுப் பிரச்சனைனையே யோசித்துக் கொண்டிருப்பதால், உடல்நலன் பாதிக்கப்படுகிறது என்றார்…”

“ஓ…!,அதற்கு..?”

“உன்னை இந்தத் சிந்தனையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்றார்…”

“சரி..”

“என்ன செய்வது? எப்படிச் செய்வது? என்று புரியாமல் தவித்துக்குக் கொண்டிருந்த போதுதான், மருத்துவமனையில் நம்மை அவர்கள் பார்த்தார்கள். ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டார்கள்…”

“ஓ…!”

“அந்த வாரத்திலே ரகுவை , மீண்டும் கல்யாண வீட்டில் சந்தித்தேன்.  அப்போது ரகு, ரஞ்சனி உன்னைப் பார்த்த பின், சந்தியா இப்படி இருக்கிறார்களே ? என்ன பிரச்சனையோ?என்று புலம்பியிருக்கிறாள். அதனால் ரகுவும், என்ன பிரச்சினை? என்று என்னிடம் விசாரிக்க,

 ஏதாவது பிடிப்பு கிடைக்காதா? இதைச் சரி செய்து விட மாட்டோமா? என்று இருந்த நான், என் கவலையை, மன வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டேன்..”

தன்னைப் பற்றிய விஷயம் ரகுவிற்கும், ரஞ்சனிக்கும் தெரிந்தது, ஒரு சங்கடத்தைக் கொடுக்க, சந்தியா மனம் வாட, அது முகத்தில் தெரிய,

“இதைப் புரிந்து கொண்டவன், இதில் சங்கடப்படுவதற்கு ஒன்றுமில்லை சந்தியா…, உதாரணத்திற்கு அடிக்கடி தலைவலி வந்தால்… ஒரு வேளை கண் கோளாறா? ஸைனஸா? மைக்கிரேனா?என்று அதைப் பற்றிய சந்தேகங்களை நண்பர்களிடம் பேசுவோம் இல்லையா? அது போல் தான்.. மேலும் உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.. இது ஒரு சங்கடத்தின் வெளிப்பாடு … அவ்வளவு தான்..” என்று சமாதனப்படுத்தினான்.

அறைகுறையாக, “ம்ம்…” என்று சொல்ல,

“ நம் பிரச்சனையைப் புரிந்து கொண்டான். உனக்கு மனம் விட்டுப் பேச, நல்ல நட்பு கிடைத்தால் நல்லது என்றான். அதேபோல் அப்பாவிடம் பேசச் சொன்னான்.  பேசிய பிறகு, வீட்டுச் சூழ்நிலையை, அம்மாவின் குணத்தைப் புரிந்து கொண்டேன்.  யோசிக்க ஆரம்பித்தேன். எனக்கும் என் தப்பு புரிந்தது”

சந்தியா ஆச்சரியமாகப் பார்க்க,

“முன்பு அப்பா சொன்னபோது, நீ சொன்ன போது புரியாதது? இப்போது மட்டும் எப்படி? என்று தானே பார்க்கிறாய்? நீ இரண்டு வருடமாகப்பட்ட, அவஸ்தைகளைப் பார்த்திருக்கிறேன் சந்தியா.. ” என்று நீண்ட மூச்சை விட்டவன், “வாழ்க்கை உச்சி மண்டையில் ஓங்கி அடித்து, சொல்லிக் கொடுத்து விட்டது.  பச்…. நான் சொல்லித் திருந்துகிற வகையறா இல்லை, அதான் பட்டுத் தெரிந்து கொண்டேன்.”

நம்பமுடியாமல் விழி அகற்றாது அவனையே பார்க்க,

“அப்போது இருந்த மனநிலையில், ‘நீயும், நம் வாழ்க்கையும் தான் முக்கியம்’ என்று தோன்றியது. அதைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற வெறி வந்தது. என்னால் இன்னொரு பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது என்ற ஆதங்கம் இருந்தது. அதனால் தான் ரகு உதவிக்கரம் நீட்டியவுடன், வெட்கமில்லாமல் பற்றிக் கொண்டேன்…”

அதன்பின் ரஞ்சனி, உன்னிடம் பேசத் தொடங்கினாள். நீயும் நல்ல நட்பைப் பற்றிக் கொண்டாய். மனம் விட்டு பேசத் தொடங்கினீர்கள். நான் என் தவறுகளைத் திருத்திக் கொண்டேன். வீட்டில் நல்ல சூழ்நிலை உருவாகியது. உன் உடல் நலமும் தெறிவிட்டது. 

நீ பகிர்ந்த பின் தான், ரஞ்சனி இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாள் என்றே தெரியும். ரொம்ப குற்ற உணர்வுக்கு உள்ளானேன். பின், அவள் வீட்டுக்குப் போய், மன்னிப்பு வேண்டினேன்.. அவர்கள் பெருந்தன்மையாக , இந்த விஷயத்தைக் கடந்தார்கள்…” என்று நிறுத்த,

சந்தியாவிற்கு அவன் பட்ட துன்பமும், குற்ற உணர்வும், தர்மசங்கடமும் புரிய, அவன் கை மீது கையை வைக்க, இறுகப் பற்றியவன், “உனக்குப் புரிகிறது தானே சந்தியா?

ஏற்கனவே என்னுடைய சுயநலத்தால் , கோழைதனத்தால் , ஒரு பெண்ணிற்குப் பாதிப்பை ஏற்படுத்தி விட்டேன் , இப்போது மீண்டும் உனக்கு, என் இயலாமையால், புரிதல் இல்லாமையால், துன்பத்தைக் கொடுத்து விட்டேன் என்பது என்னை அறைந்தது . அரித்தது.”

“முதல் தடவை போல், ஓடி ஒளிந்து கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை ,  உன்னை நினைத்து மனம் பதைபதைத்து . எப்படியாவது சரி செய்தே ஆக வேண்டும் என்று துடித்தது. அது தான் பிரச்சனை ஆகும் என்று தெரிந்தும் ரஞ்சனி நட்பைப் பற்றிக் கொண்டேன். உன்னையும் உள்ளே இழுத்தேன்.எனக்கு வேறு வழி தெரியவில்லை. மன்னித்து விடு சந்தியா” என்று அவன் கைகளை விடாது பிடித்திருக்க,

 அவன் குணத்தை மீறி, அம்மா பின்னால் ஒளிந்து கொள்ளாமல், தனக்காகப் போரடியதன் மூலம் விஸ்வாவின் அன்பைப்  புரிந்து கொண்டாள் . அவனை அணைத்துக் கொண்டாள் .

அப்படியே சற்று நேரம், அவள் தோள் மீது சாய்ந்து இருந்தவன், “அம்மா அவசரப்படவில்லை என்றால் நிச்சயமாக நானே ஒருநாள் பேசியிருப்பேன் சந்தியா. ..”

அவள் நம்பாத பார்வை பார்க்க,

“இங்கே சூழ்நிலை சரியான பிறகு, உனக்கு என் மீதான கோபம் குறைந்த பிறகு, என் மீதான நம்பிக்கை வந்தபிறகு, நீயும் என் பேச்சைக் கேட்கும் மனநிலைக்கு வந்தபிறகு, நிச்சயமாக சொல்லியிருப்பேன் சந்தியா…”

சந்தியாவிற்கும் அவன் வாதத்தில் இருந்த நியாயம் புரிய, “நீங்கள் சொல்வது சரிதான் . நான் அப்போது எதையும் கேட்கும் நிலையிலோ , உள்வாங்கும் நிலையிலோ இல்லை .என் பயங்களும், கவலைகளுமே ஆட்டிப் படைத்தன” என்று ஒத்துக் கொண்டாள்.  அவன் மார்பில்சாய்ந்தாள்.

அவனும் அணைத்துக் கொண்டான். மனதில், 

உண்மை வெளியே வரும் பொழுது சந்தியாவிற்கு பாதிப்பு வராமல், மன அழுத்தம் ஏற்படாமல், எந்தப் பெரிய பிரச்சனையும் வராமல், எப்படிக் கையாள வேண்டும் என்பதை ரஞ்சனி-ரகுவிடம் கலந்து பேசியதை நினைத்து, நிம்மதியானான்.

மன அழுத்தம் , மன நோய் போன்ற வார்த்தைகளே, பல நேரங்களில் வேறு விதமாக யோசிக்கபட்டு, பதட்டமும், பயமும் வர வாய்ப்புள்ளது என்பதை எச்சரித்த, ரஞ்சனிக்கும் ரகுவிற்கும் பல கோடி நன்றிகளைச் சொல்லிக் கொண்டான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, விஸ்வா மீண்டும், “ ரஞ்சனி-ரகுவுடன், முக்கியமாக அப்பாவுடன் பேசிய பிறகு தான், சில உண்மைகளைப் புரிந்து கொண்டேன்..”

“மாமா…?”

“ஆமாம்… அப்பாவும் உதவினார். உன் உடல்நிலை மோசமாகத் தொடங்கியதிலுருந்தே, ஏதோ தப்பு செய்கிறாய்.. கவனி… என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நான் தான் அம்மா மீதிருந்த அதீத நம்பிக்கையில் கண்டு கொள்ளாமல் விட்டேன்….” என்று வருத்தப்பட்டான்.

ஒருவித பயத்துடன் படபடப்புடன் அவனையே பார்க்க,

“ரகுவிடம் பேசிய பிறகு, முதலில் அவன் அப்பாவிடம் பேசு. அப்போது தான் குடும்ப சிக்கலை சரியாகக் கையாள முடியும் என்றான். நானும் உடனே,அப்பாவிடம் பேசினேன். அப்போதுதான் நம் குடும்பச் சூழ்நிலை, உனக்கும் அம்மாவுக்கும் இடையே இருந்த உறவுச் சிக்கலும் புரிந்தது.”

சந்தியா ஒரு வெற்றுச் சிரிப்பைச் சிந்த,

அவளை நேராகப் பார்த்து,  அம்மாவால் , நான் அதிகம் சொந்தங்களிமும், நண்பர்களிடமும் பேசியதும் பழகியதும் கிடையாது. அதனால் இந்த உறவுச்சிக்கல்கள் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லை… ஆனால் அப்பாவிடம் பேசிய பிறகு தெளிவு வந்தது, சூழ்நிலையை அவதானிக்க ஆரம்பித்தேன். பல உண்மைகள் புரிந்தது. உன் கஷ்டமும் புரிந்தது.”

சந்தியா இமைக்காது அவனையே பார்க்க, 

“அம்மாவுக்கு நான் தான் உயிர். எனக்குப் பார்த்துப் பார்த்து செய்வார் . அதனால், ‘அம்மா சொன்னால் சரி, செய்தால் சரி..’ என்பது எனக்குப் பசுமரத்தானிப் போல் பதிந்து விட்டது . அப்படியே வளர்ந்து விட்டேன் சந்தியா.

ஆனால், நீயும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைத்தது, எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று  தாமதமாகத் தான் புரிந்தது . 

அம்மா நமக்கு நன்மை தான் செய்வார் என்று மட்டுமே யோசித்தேன் தவிர ஒவ்வொருவருக்கும் ஆசைகள் வேறு  , பார்வைகள் வேறு  என்று  யோசிக்கத் தவறிவிட்டேன் . ஸாரி சந்தியா…..” என்று அவள் முகம் பார்க்க ,

அவள் ஆழ்ந்து கேட்பதைக் கவனித்தவன் ,  சற்று நிம்மதியாக உணர்ந்தான். தொடர்ந்தான்.

“அதே போல் அம்மா…. , எனக்கு அவர் தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று அப்பாவைக் கூட, என்னுடன் அதிகம் நெருங்க விடவில்லை என்பதே அப்பாவிடம் பேசிய பிறகு தான் புரிந்தது. 

சந்தியா ஆச்சரியமாகப் பார்க்க,

“வியாபாரத்தில் நுழைந்த பிறகு தான், அப்பாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. ..

அதே போல் உன்னையும் தாண்டி, அதாவது மனைவியையும் தாண்டி அம்மாவைத் தான், நான் முதன்மையாக நினைக்க வேண்டும் என்று நினைத்து ….

அவர்களே அறிந்தும் அறியாமல் சில காரியங்களைச் செய்து விட்டார்கள் , உன்னை மட்டம் தட்ட முயன்றது உட்பட…” என்று தலைகுனிந்தான் .

சந்தியா கண்கலங்க,

“ஸாரி…”  என்றவன், “இப்போது, பிரச்சனையின் அடிநாதம் புரிந்ததால், நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கினோம். உனக்கும் அம்மாவிற்கும் மோதல்கள் ஏற்படாதவாறு, அப்பா பார்த்துக் கொண்டார் . நானும் உனக்கான நேரத்தையும், அன்பையும், மரியாதையையும் கொடுக்கத் துவங்கினேன். உனக்காக நின்றேன்.

உனக்கு மனம்விட்டு பேச நல்ல தோழியாக , உன் மனதை வேறு திசையில் செலுத்தி , உற்சாகம் ஊட்டி , உனக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்தி என அனைத்தையும் ரஞ்சனி பார்த்துக் கொண்டாள்” என்று அவன் விளக்க ,

சந்தியா வியந்து போனாள் .

தன்னைச் சுற்றி நிகழ்ந்த அனைத்தும் அவளுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்க, அமைதியாக யோசிக்கத் தொடங்கினாள்.

தொடரும்…..