“என் மகளை பேசக் கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருடி?” என்றபடி வந்தார் விசாலாட்சி.

“ஏன்? நான் யாருன்னு அடிக்கடி மறந்து போய்டுதா? வயசாயிடுச்சுல்ல, இனி இந்த பிரச்சனை எல்லாம் வரத்தான் செய்யும்” என்றாள் சிவா நக்கலாய்.

“நானும் பார்த்துட்டே இருக்கேன், ரொம்ப அதிகமா பேசிட்டு இருக்க நீ. வந்தப்போ என்னமோ இங்க இருக்கவே பிடிக்காத மாதிரி இருந்தவ, இப்ப சொகுசு வாழ்க்கைக்கு பழகுன உடனே இங்கயே இருக்கணும்ன்ற எண்ணம் வந்திடுச்சோ?” என்றார் ஆத்திரத்துடன்.

“யாருக்கு வேணும் உங்க சொகுசு வாழ்க்கை. உட்கார்ந்து சாப்பிடுற சாப்பாடு கூட உடம்புல ஒட்டாதுன்னு நினைக்கிறவ நான். கிருஷ்ணன் பொண்ணு, சொகுசைப் பார்த்து மயங்குறவளும் இல்லை, உழைக்கிறதுக்கு தயங்குறவளும் இல்லை. என் அப்பா என்னை அப்படி வளர்க்கவுமில்லை” என்றாள் பட்டென்று.

“இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. இப்படி பேசியே தான் உங்கப்பன் என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்தான். நீ என் பேரன் வாழ்க்கையை கெடுக்க வந்திருக்க? வாயை அடக்கிக்கிட்டு இந்த வீட்ல ஒரு ஓரமா இருக்குறதுன்னா இரு. இல்லைன்னா,இப்பவே கிளம்பிடு. என் பேரனை கட்டிக்க என் பேத்தி ரெடியா இருக்கா” என்றார் விசாலாட்சி.

அவரின் ‘என் பேத்தி’ என்ற வார்த்தை அவளை ஊசியாய் தைக்க, மனதின் ரணத்தை வெளியே காட்டாமல் மறைத்தவள்,

“யார் புருஷனுக்கு யார் ரெடியா இருக்குறது. நான் என்ன அப்பாவி கிருஷ்ணன்னு நினைச்சிங்களா? எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லிட்டு போறதுக்கு? குடும்பத்தோட கம்பி எண்ண வச்சிடுவேன் ஜாக்கிரதை. இந்த அத்துவிடுறது தீர்த்து விடுறது எல்லாம் அந்த காலம். எங்க? இப்ப அப்படி பண்ணி பாருங்களேன்? கொத்தா குடும்பத்தோட போய் ஜெயில்ல களி தான் திங்கணும். பாவ புண்ணியமெல்லாம் பார்க்க மாட்டேன், ஜாக்கிரதை” என்றாள் ஒரே போடாய்.

“அம்மா நீங்க வாங்கம்மா! சரியான திமிர் பிடிச்சவளா இருப்பா போல” என்று மணிமேகலை விசாலாட்சியை இழுத்துக் கொண்டு செல்ல,

“சிவா அமைதியா இருமா” என்று அவளின் கோபத்தை தணிக்க முயன்ற ரேணுகா,

“எதுக்கு சிவா? வீட்ல ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பேசினா பிரச்சனை தான் வளரும்” என்றார்.

“நான் இப்படித்தாங்க. எனக்கு தப்புன்னு தெரிஞ்சா பேசிடுவேன். அது என்னவோ தெரியலை இந்த வீடுன்னா இன்னும் ரெண்டு வார்த்தை சேர்த்து தான் வருது. நீங்களும் பார்த்திங்க தானே எப்படி பேசுறாங்கன்னு”  என்றாள்.

“ஓரமா ஒதுங்கி இருக்கனுமா? கிழவி இருக்கு உனக்கு. ஓரமா ஒதுங்கித் தான இருக்க சொன்ன, பாரு எப்படி இருக்கேன்னு?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

“சரி அதெல்லாம் விடும்மா. பாரு தலையில இருக்குற பூ  வாடிப் போய் இருக்கு” என்றவர் அதை எடுத்துவிட்டு அப்போது கட்டிய மலர்ச்சரத்தை வைத்து விட்டார்.

“உங்களுக்கு என் மேல கோபமே வரலையா?” என்றாள் சிவா கோபம் குறைந்த ஆச்சர்யத்துடன்.

“ஏன் வரணும்? அவங்களும் உன்னை பேச வைக்கிறாங்க தானே..! அது மட்டுமில்லாம உன்னோட பக்கம் இருந்து பார்த்தா உன்னோட இழப்பும் வலியும் பெரிசு தான சிவாம்மா. நீ சின்ன பொண்ணா இருக்கும் போதே, அதை உன் கண்ல பார்த்திருக்கேன்” என்றார் ரேணுகா.

“அப்பவும் பார்க்க மட்டும் தானே செஞ்சிங்க” என்றாள் சிவா பட்டென்று. பின் சட்டென்று நாக்கைக் கடித்தவள்,

“சாரி, என்னை மீறி வார்த்தை வந்துடுது” என்றாள் பாவமாய்.

“பரவாயில்லை விடுமா..!” என்றவர்,

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா சிவா? அது என்னவோ தெரியலை உன்னைப் பார்க்கும் போதெல்லாம், நீ எனக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும்னு தோணிட்டே இருக்கும். கடைசியில அது தான் நடந்தது. அதுல ஒரு சந்தோசம் எனக்கு” என்றார் ரேணுகா.

“நிஜமாவா? உங்களுக்கு ஏன் அப்படி தோணுச்சு?” என்றாள் ஆர்வமாய்.

“காரணம் தெரியலை. ஆனா தோணும். கடவுள் எப்படியோ என் எண்ணப்படியே ஆதிக்கு உன்னை மனைவியாக்கி இங்க அனுப்பிட்டார்” என்றார் ரேணுகா.

“இந்த வீட்ல இருக்குற உங்களுக்கு கூட என்னைப் பிடிச்சிருந்திருக்கே? ஆச்சர்யம் தான்” என்றாள் சிரிப்புடன்.

“அந்த வகையில பார்த்தா,ஆதி தான்மா முதல்ல வருவான். இந்த வீட்ல இருந்து உன்னை முதன் முதல்ல பார்க்க வந்த பெரிய மனுஷன் ஆதி தான். நீ குழந்தையா இருக்கும் போதே வீட்ல யாருக்கும் தெரியாம வந்து உன்னை பார்த்துட்டு வருவான். வாங்க போய் பாப்பாவை தூக்கிட்டு வரலாம்னு என் கூட சண்டை எல்லாம் போடுவான். அப்பவே அவங்க பாட்டிகிட்ட வந்து, பாப்பாவை இங்க கூட்டிட்டு வந்து வச்சுக்கலாம்னு தைரியமா சொன்னவன். இப்ப வரைக்கும் உனக்காக சண்டை போடுறான் என் பையன்” என்றவர் அந்த நாட்களின் நினைவில் முகம் மலர,

“நிஜமாவா” என்றாள் ஆச்சர்யத்துடன்.

“நான் ஏன் சிவா பொய் சொல்ல போறேன்? அதுலயும் சுபத்ரா உன்னை தூக்கிட்டு வந்து நீ  ஒரு மாசம் இந்த வீட்ல தான் இருந்த. அப்பல்லாம் ஆதி தான் உன்னைத் தூக்கியே வச்சிருப்பான். யார் கேட்டாலும் குடுக்கக் கூட மாட்டான்” என்றார் ரேணுகா.

“அப்பவேவா?” என்று நினைத்தவளுக்கு மனதின் ஓரம் ஒரு குறுகுறுப்பு.

“நான் சொல்றதை நம்பலையா நீ?” என்றவர் அவளை தன் அறைக்கு அழைத்துச் செல்ல, தயக்கத்துடன் அந்த அறைக்குள் நுழைந்தாள் சிவா.

ரேணுகா தன்னுடைய பீரோவில் எதையோ தேடி எடுத்தவர், அவளிடம் நீட்ட,

“என்னதிது?” என்றாள்.

“வாங்கி பாருமா” என்று அவர் சொல்ல, அதை வாங்கி பார்த்தவளுக்கு முதலில் புரியவில்லை. பிறகு தான் புரிந்தது.

“இது நான் தானே” என்றாள் சிறுபிள்ளையாய்.

“அது நீயே தான். ஆதி தான் உன்னைத் தூக்கி வச்சிருக்கான்” என்றார் சிரிப்புடன்.

“ஐந்து மாதக் குழந்தையை அவனுக்கு தெரிந்த அளவு தூக்கிக் கொண்டு நிற்க, அவர்கள் இருவரையும் பிடித்தார் போல் ரேணுகாவும் அந்த புகைப்படத்தில் இருந்தார்.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க?” என்றாள் மாமியாரைப் பார்த்து.

“நீயும் அப்ப கொழுகொழுன்னு அழகா இருப்படா” என்றார்.

“நல்லா இருக்கு, ஆனா நான் ட்ரெஸ் இல்லாம இருக்கேனே” என்றாள் குறையாய்.

“நல்லா பாரு, ஜட்டி எல்லாம் போட்டு அழகா இருக்கடா” என்றார் ரேணுகா சிரிப்புடன்.

“ஆனா டிரஸ் போடலையே” என்றவள்,

“இதை மொபைல்ல ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்” என்றவள் தன் மொபைலில் அதை படம் பிடித்துக் கொண்டாள்.

ரேணுகாவிடம் திரும்பியவள் “இந்த போட்டோ இருக்குறது உங்க பையனுக்குத் தெரியுமா?” என்றாள்.

“இல்லைடா..! இது இங்க இருக்குற யாருக்கும் தெரியாது. இனி ஆதி கிட்ட காட்றேன்” என்றார்.

“அய்யோ வேண்டாம். பிளீஸ், அப்படியே வச்சிடுங்க” என்றாள் சங்கோஜத்துடன்..

“சரிடா காட்டலை” என்றார் சிரிப்புடன். முகம் சிவந்தபடி மொபைலைப் பார்த்தபடி சென்றவள் ஆதி வந்ததை கவனிக்கவில்லை.