ஒரு பெண்ணால் இத்தனை வருடங்களாக தன்னை ஏமாற்ற முடிந்திருந்தால் அது அவளது திறமை தான். ஆனால் தான் ஏமாந்தது பெரிய தவறல்லவா? என்ன தான் அவளை வீட்டில் இருந்து விரட்டி விட்டிருந்தாலும் அவளை நினைத்து சிறிது பயம் இருந்து கொண்டே தான் இருந்தது.
கனகாவின் உடன் பிறந்தவன் நிலைமையை சரியாக புரிந்து கொண்டதால் தான் பிரச்சனை இல்லை. இதுவே சந்தானம் தங்கைக்காக சப்போர்ட் செய்திருந்தால் இன்னும் அவர்களுக்கு விடிவு என்பதே வந்திருக்காது. இவ்வளவு நடந்த பிறகும் தப்பை கனகா உணரவே இல்லையே? என்று அவர் எண்ண அவரது மனசாட்சியோ “அப்படி சரி தவறு தெரிந்தவளாக இருந்திருந்தால் பிள்ளைகளை இப்படி கஷ்ட படுத்தியிருப்பாளா?”, என்று எடுத்துரைத்தது.
தன்னுடைய வேலையை மறந்து அவர் யோசித்துக் கொண்டிருக்க அப்போது அவர் மொபைல் அடித்தது. சந்திரன் தான் அழைத்தார்.
சிறு சிரிப்புடன் அதை எடுத்து காதில் வைத்தவர் “சொல்லுங்க சந்திரன்”, என்றார்.
“இல்லை சேது, ஷோரூம் போகணும்னு சொன்னீங்களே? அதான் வறீங்களான்னு கேக்க தான் கால் பண்ணினேன்?”
“கண்டிப்பா வரேன். இன்னும் அரை மணி நேரத்துல ஷிப்ட் முடிஞ்சிரும்”
“அப்படின்னா நேரா எங்க ஆபீஸ் வந்துருங்க. இங்க இருந்து சேந்து போயிறலாம். திரும்பி வீட்டுக்கு போகும் போது என் வண்டியை எடுத்துக்கலாம். இல்லைன்னா என் வண்டில கூட போகலாம்”
“சரி வந்துறேன், உங்க ஆபீஸ் வந்துட்டு கால் பன்றேன்”, என்று சேது சொன்னதும் சந்திரனும் சரி என்று சொல்லி போனை வைத்தார்.
சேதுவும் சந்திரனும் பைக் ஷோரூமில் இருந்தார்கள். முதலில் அந்த முதலாளியை பார்த்து பேசினார்கள். அவரும் “உங்களுக்கு பிடிச்ச வண்டியை பாருங்க. ரேட் பாத்து பேசிக்கலாம்”, என்று சொல்லி விட்டார்.
அணிவகுத்திருக்கும் இரண்டு சக்கர வாகனங்களை இருவரும் பார்வையிட அப்போது சேதுவின் கண்களில் பட்டது அந்த கருப்பு குதிரை போன்ற தோற்றத்தில் இருந்த ராயல் என்பீல்ட் புல்லட் வண்டி.
ஏனோ மகன் அதன் மீது ஏறி ஓட்டினால் எப்படி இருக்கும் என்று அவர் மனம் கற்பனை செய்தது. ஒரு லட்சத்துக்குள் வண்டி வாங்க வேண்டும் என்ற முடிவில் தான் வந்திருந்தார். ஆனால் அந்த வண்டி அவர் கவனத்தை ஈர்க்க மகனுக்கு அது தான் என்று முடிவு செய்து விட்டார்.
இது வரை பிள்ளைகளுக்கு என்ன செய்திருக்கிறோம்? இனியாவது செய்வோம் என்று அவர் மனமே வாதாட “இதையே முடிச்சிருவோமா சந்திரன்?”, என்று கேட்டார்.
அவரை ஒரு வியப்பானா பார்வை பார்த்தார் சந்திரன். “உங்க பார்வை புரியுது? இது கொஞ்சம் பணம் அதிகம் வரும் தான். ஆனா பரவால்ல. பார்த்திக்கு இது சரியா இருக்கும். பொண்ணு கல்யாணத்துக்கு இன்னும் வருஷம் இருக்கு. அது மட்டும் இல்லாம என் சீதா நகை வேற அவளுக்கு இருக்கு. எனக்கு இருக்குற ஒரே ஒரு கமிட்மெண்ட் வீடு கட்டுறது தான். அதுக்கும் கொஞ்சம் கொஞ்சமா பணம் சேத்துட்டு தான் வரேன். அதுல இருந்து வண்டிக்கு எடுத்துக்கலாம். பார்த்தி இது வரை எதுவுமே ஆடம்பரமா வாங்கினது இல்லை. அதான்”, என்றார் சேது.
“நல்ல முடிவு தான் சேது, பார்த்தி பொறுப்பான பையன். அவனுக்கு தானே வீடு, அதை அவன் உழைச்சு கூட கட்டிக்குவான்., ஒரு வேலை மட்டும் அவனுக்கு கிடைச்சிட்டா கண்டிப்பா அவன் பெரிய ஆளா வருவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இதையே வாங்கலாம். அவன் ரொம்ப சந்தோஷப் படுவான்”, என்றார் சந்திரன்.
அந்த வண்டியையே பேசி முடித்து மேலும் பல எக்ஸ்ட்ரா வேலைகளை அந்த வண்டியில் செய்ய சொல்லி முதல் பேமெண்ட்டை கட்டினார் சேது. அடுத்த இரண்டு மாதத்திற்குள் முழு தொகையையும் கட்டி விடுவதாகவும் சொல்லி விட்டார்.
கூடவே இன்னும் ஒரு வாரத்தில் பார்த்திபனின் பிறந்த நாள் வர இருப்பதால் அன்றே டெலிவரி செய்யவும் பேசி விட்டார்கள். அங்கிருந்து கிளம்பி சந்திரனின் அலுவலகம் வந்து அவர் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பவே நேரம் ஆகி விட்டது.
“உங்க அப்பாக்கு போனை போடு டி. எவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்குறது?”, என்று எரிச்சலுடன் சொன்னாள் கோமளம்.
“அம்மா, அப்பா என்னைக்காவது லேட்டா வந்திருக்காங்களா? இன்னைக்கு லேட் ஆகுதுன்னா ஏதாவது வேலை இருக்கும்”, என்று சோர்வாக சொன்னாள் மங்கை.
“அது எனக்கும் தெரியும் டி. ஆனா நம்ம பாக்க போற அந்த டாக்டர்க்கு தெரியுமா? ஒன்பது மணிக்கு அடைச்சிட்டு போயிருவான் டி. இப்ப உனக்கு ஊசி போட்டா தான் காலைல காச்சல் இல்லாம இருக்கும். பேசாம நானே ஒரு ஆட்டோ பிடிச்சு கூட்டிட்டு போயிருக்கணும் போல?”, என்று சலித்துக் கொண்டாள்.
இதை எல்லாம் நந்தன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால் வாயை திறந்து எதுவும் பேச வில்லை. அவனுக்கு தங்கையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எண்ணம் வந்தது தான். ஆனால் இன்னும் அவன் மீது கோபம் கொண்டிருந்த கோமளம் ஏதாவது சொல்லி விடுவாளோ என்று பயந்து தான் பேசாமல் இருந்தான்.
அப்போதும் கோமளம் மகனை மனதுக்குள் தாளித்து தான் கொட்டிக் கொண்டிருந்தாள். “பொண்டாட்டிக்கு ஒண்ணுனா தாங்குவான். இப்ப ஊமை கோட்டான் மாதிரி இருக்குறதை பாரு? தங்கச்சியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக வேண்டியது தானே?”
“அத்தை விளையாட வரியா?”, என்று கேட்ட படி வந்த அஸ்வின் மங்கையின் மடியில் ஏறி அமரப் போக “டேய் இங்க வா டா உனக்கும் காச்சல் வந்திடப் போகுது”, என்று சொல்லி அவனை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள் லதா.
அனைவரும் அவளை முறைத்துப் பார்க்க அவளுக்கு தான் ஒரு மாதிரி இருந்தது. அவள் இப்போது வேண்டும் என்று சொல்ல வில்லை தான். காச்சல் மகனுக்கு பரவி விட கூடாது என்று தான் சொன்னாள். ஆனாலும் அவர்கள் பார்வையில் சட்டென்று ஒரு பதட்டம் வந்து விட்டது.
கோமளத்தை நிமிர்ந்து பார்த்தவள் “என்னை மன்னிச்சிருங்க அத்தை. நான் வேணும்னு சொல்லலை. குட்டிக்கும் காச்சல் வந்திரக் கூடாதுன்னு தான் சொன்னேன்”, என்று மன்னிப்பு கேட்க அதற்கு மேல் கோமளம் என்ன சொல்லி விட முடியும்?
“அத்தைக்கு காச்சல் டா அச்சு குட்டி. நான் உன்னை தூக்குனா அப்புறம் டாக்டர் மாமா உனக்கும் ஊசி போடுவாங்க. அத்தைக்கு காச்சல் போனதும் தூக்குறேன் சரியா?”, என்று மங்கை கேட்க அவனும் சரி என்று சொன்னான்.
கணவர் வரத் தாமதமானதும் கோமளத்துக்கு இருப்பு கொள்ளவில்லை. அவர் அழைப்பையும் சந்திரன் எடுக்க வில்லை.
“உன் அப்பா வர மாதிரி இல்லை டி”, என்ற கோமளம் “கவின் போய் ஒரு ஆட்டோ பிடிச்சிட்டு வா. நான் கூட்டிட்டு போய்ட்டு வரேன்”, என்றாள்.
கணவர் அன்றே நந்தனை மகள் விஷயத்தில் தலையிடாதே என்று எச்சரித்திருக்க அதை மீறி மகளுக்காக கூட மகனிடம் உதவி கேட்க கோமளத்துக்கு விருப்பம் இல்லை. அதையும் மீறி மகனே நான் அழைத்துச் செல்லவா என்று கேட்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அப்படி கேட்கும் எண்ணம் இருந்தும் நந்தன் அமைதியாக தான் இருந்தான்.