“நான் குடிச்சிட்டுத்தான் எடுத்திட்டு வந்தேன்” என அவள் சொல்லவும், அவன் பருகினான்.
“நீங்க இருங்க, சாப்பிடும் போது கூப்பிடுறேன்” என சொல்லி அகல போனாள்.
“நீ எதுக்காக என் கூட வந்திருக்கேன்னு எனக்கு தெரிஞ்சா போதும், அடுத்தவங்க கருத்துக்கு இம்பார்டன்ஸ் கொடுக்காத” என்றான்.
“உங்களுக்கு என்ன தெரியும்?”
“எனக்கும் தெரியாது, தெரிஞ்சுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன், ஆனா அந்த பொடியன் சொன்னது மாதிரி லக்ஸுரி லைஃப்க்காக வரலைன்னு தெரியும்” என்றவன் டிவியில் மூழ்க, அவளும் சென்று விட்டாள்.
முதல் பந்தியிலேயே பெண்ணும் மாப்பிள்ளையும் அமர வைக்கப்பட்டனர். சித்துவும் ஆதியும் கூட பரிமாற வந்தார்கள். வேதாவை முறைத்தான் விஷ்வா.
“என்னன்னு சொல்லி ஒதுக்கி வைக்கிறதுங்க, ப்ளீஸ்…” என கெஞ்சினாள்.
அவன் ஒருவித இறுக்கத்தோடு அவளிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டான்.
செய்தது தவறு என்பது ஆதிக்கு புரிந்து விட்டது, ஃபேக்டரிக்கு சென்றது எல்லாம் சித்துவின் யோசனைதான், இருப்பினும் அவனுக்கு அறிவுரை சொல்லாமல் தானும் பங்கெடுத்து கொண்டோமே என இப்போதுதான் வருத்தப் படுகிறான்.
அதிலும் விஷ்வாவை சித்தார்த் காயப்படுத்திய போது ஒரு நொடி தங்கையின் உருவம்தான் ஆதியின் கண் முன்னால் வந்து சென்றது.
சித்தார்த்துக்கு செய்தது தவறு என உறுத்தலே இல்லை. என்னதான் தன் அம்மாவை விஷ்வா ஒதுக்கி வைத்தாலும் அவரின் உயிர் அவன்தான் என்பதை உணர்ந்து கொண்டிருந்தான், அந்த பொறாமை. அம்மாவை மதிக்காமல் இருப்பவன் மீது கோவம், சிறு வயதிலிருந்தே விஷ்வாவை அவனுக்கு பிடிக்காது.
விஷ்வாவை தனது பரம எதிரியாகவே பாவிக்கிறான் சித்தார்த். பரிமாற வந்ததே அவனை ஏதாவது ஒரு வகையில் அவமரியாதை செய்யும் நோக்கத்துடன்தான்.
இன்னும் இவர்கள் இருவரையும் விசாரித்திருக்கவில்லை சந்திரன். உறவினர்கள் அனைவரும் புறப்பட்டு சென்ற பின் கச்சேரியை வைத்துக் கொள்ளலாம் என இருக்கிறார். தன் மகனையும் தங்கையின் சின்ன மகனையும் பரிமாறும் பணியிலிருந்து விலக்கி வேறு ஏதோ வேலை கொடுத்து அனுப்பி விட்டார்.
அப்பாடா என வேதா மூச்சு விட, விஷ்வாவும் சற்றே இறுக்கம் தளர்ந்தான். சாப்பிட்டு முடித்து உடனே கிளம்ப இருந்தவனை மல்லுகட்டி அறையில் இருக்க வைத்தாள்.
“மதியம் மேல கிளம்பலாம்னுதானே வேதா பிளான்?” என எரிச்சல் பட்டவனை வெகு நேரம் அவளால் சமாளிக்க முடியவில்லை.
அப்பாவிடம் விஷயத்தை சொன்னாள். சந்திரனும் மாப்பிள்ளைக்கு அவசர வேலை என சமாளித்து அவர்கள் புறப்பட வகை செய்து தந்தார்.
சாப்பிட்ட களைப்பு கூட வேதாவுக்கு நீங்கியிருக்கவில்லை. யாரிடமும் சாவகாசமாக சொல்லிக் கொள்ள கூட நேரம் தராமல் பார்வையால் அவளை துரத்திக் கொண்டிருந்தான் விஷ்வா.
இருவரும் வெளியே வந்தனர். அவர்களை வழியனுப்ப சந்திரனும் வாசுகியும் வாசல் வரை வந்தனர்.
கார் வரவும், “ஏன்டி… நீ எடுத்து வைக்க சொன்னதையெல்லாம் ட்ராலில போட்டு வச்சேனே, எடுத்துக்கலியா?” என மகளிடம் கேட்டார் வாசுகி.
நீ எடுத்து வைப்பதற்கு என்ன என மனைவியை சந்திரன் கடிய, அவசரமாக உள்ளே ஓடினார் வாசுகி.
“இவ ஆடி அசைஞ்சு எடுத்திட்டு வர்றதுக்குள்ள…” என அலுத்த சந்திரன், “மாப்ளய ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ண சொல்லுடா” என மகளிடம் சொல்லிக் கொண்டே உள்ளே விரைந்தார்.
விஷ்வாவுக்கு ஏதோ அழைப்பு வர, ஏற்று பேசிக் கொண்டே சற்று தள்ளி நடந்தான். தண்ணீர் கேன் தூக்கிக் கொண்டு வந்த சித்தார்த், விஷ்வாவின் இடப் பக்க தோளில் வேண்டுமென்றே நன்றாக இடித்து விட்டு, தெரியாமல் செய்து விட்டதை போல பாவனை செய்தான்.
காயத்தில் போடப் பட்டிருந்த தையல் கூட இன்னும் பிரிக்க பட்டிருக்கவில்லை. எடை மிகுந்த தண்ணீர் கேனால் பலமாக விழுந்த அடி தாங்கொனா வலியை கொடுக்க, துடித்து விட்டான் விஷ்வா.
ஓடிச் சென்ற வேதா, கணவனை ஆதரவாக பிடிக்க அவளை விலக்கியவன் வலியையும் பொறுத்துக் கொண்டு சித்தார்த்தை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான்.
விபரீதம் ஏதும் நிகழாமல் இருக்க, விஷ்வாவை இழுத்துக் கொண்டு போய் காரில் விட்டு அவளும் ஏறிக் கொண்டாள்.
விஷ்வாவுக்கு குப் என வியர்த்து போயிருந்தது. பற்களை கடித்துக் கொண்டு வலியை பொறுக்க முயன்றான். அவனது சட்டையின் மேலிரு பொத்தான்களை களைந்து காயத்தை ஆராய்ந்தாள் வேதா. காயத்தின் கட்டிலிருந்து லேசாக இரத்தம் கசிந்தது.
“அச்சோ! ஹாஸ்பிடல் போலாம்ங்க” என்றாள் வேதா.
“நீ தள்ளு அவனை அப்படியே விட்டுட்டு எங்கேயும் வர்றதா இல்லை நான்” என சீறினான்.
“முதல்ல காயத்தை பார்க்கலாங்க, அவனுக்கு புத்தி பிசகி போயிருக்கு, அப்பா கவனிச்சி விடுவார், நீங்க சண்டைக்கு போகாதீங்க” என சமாதானம் செய்தாள்.
அப்படி சித்தார்த்தை இலகுவாக விட விஷ்வாவின் அகந்தை இடம் தரவில்லை. சொல் பேச்சு கேளாமல் அடமாக இருந்தவனை வழிக்கு கொண்டு வர, “ப்ளீஸ்ங்க எனக்காக” என கெஞ்சலை கையில் எடுத்தாள்.
இங்கே இருக்க வைக்க கூட எனக்காக என கேட்டுத்தானே சம்மதிக்க வைத்திருந்தாள், ஆகவே இப்போதும் அது அவனிடம் வேலை செய்யும் என நினைத்து விட்டாள்.
அவன் முறைக்க, மீண்டும் கெஞ்சினாள்.
“நீ கேட்டேன்னுதானே என் ஃபேக்டரிய அழிக்க பார்த்தவனுங்கள சும்மா விட்டேன்? உனக்காகத்தானே இந்த வீட்டுக்கு வந்தேன், நீ கெஞ்சினதாலதானே இவ்ளோ நேரம் இங்க இருந்தேன்? ஆனா உனக்கு நான் முக்கியம் இல்லை, உன் ஃபிரெண்ட்க்கு ஏதும் ஆகிட கூடாது, என்ன?” என ஆத்திரத்தோடு கேட்டான்.
“அப்படியில்லைங்க…”
அவளை பேச விடாதவன், “வேற எப்படி? ஒன்னு என்னை கீழ இறங்க விடு, இல்லைனா நீ இறங்கு” என கடுமையான தொனியில் சொன்னான்.
வேதாவின் டிராலியை இழுத்துக் கொண்டு சந்திரனும் பின்னால் வாசுகியும் அவருக்கும் பின்னால் சில உறவுக் காரர்களும் வந்து கொண்டிருந்தனர்.
காரிலிருந்து வேதா இறங்கிக் கொள்ள, அடுத்த நொடி விஷ்வாவின் கட்டளையின் பெயரில் காரை எடுத்திருந்தான் டிரைவர்.
பதற்றமாக ஓடி வந்த அப்பாவை பார்த்து அவளுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது. கையால் வாயை மூடி, நொடி நேரம் கண்களையும் மூடி, மூச்சை உள் இழுத்துக் கொண்டாள் வேதா.
“என்னடா ம்மா ஆச்சு?” என தவிப்போடு கேட்டார் சந்திரன்.
“என்ன ப்பா ஏன் இப்படி ஓடி வர்றீங்க? ஃபேக்டரில ஏதோ பிரச்சனை, அவர் அங்கதான் போறார், அதான் ஈவினிங் வரை இங்கேயே இருக்கேன்னு சொன்னேன், சரின்னு கிளம்பிட்டார்” என்றாள் வேதா.
சந்திரன் சந்தேகமாக பார்த்தார். ஏனெனில் சற்று முன் அவரல்லவா ஃபேக்டரியில் அவசர வேலை எனும் காரணத்தை உருவாக்கினார். சொந்தங்களுக்காக மகள் சமாளிக்கிறாள் என்பது அவருக்கு புரிந்தது.
“அதை வீட்லேயே வச்சு கேட்க என்னவாம் உனக்கு? சரி வா, இன்னும் என்ன வேணும்னு பார்த்து எடுத்து வச்சுக்க” என சொல்லி சென்றார் வாசுகி.
அப்பாவும் மகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நின்றனர். அவள் மேலுதட்டை கடித்துக் கொண்டு அழுகையை அடக்க, சந்திரனின் கண்களும் மனமும் கலங்கிப் போயின.
தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்துக்கும் என்னவோ போலானது.
வேதாவுக்கு தனிமை தேவையாக இருக்க, விரைந்து மாடிக்கு ஏறினாள். சொந்தங்களும் வீட்டிற்குள் சென்றிருக்க சந்திரனும் மகளிடம் சென்றார்.