விருந்து முடிவதற்குள் ‘உடனே இங்கிருந்து செல்ல வேண்டும்’என வேதாவின் கையை பிடித்துக்கொண்டு வீம்பாக நின்றான் விஷ்வா.
எப்படி சமாளிப்பது என தெரியாமல் கலங்கி போய் விட்டார் சந்திரன்.
கணவனின் பிடிக்குள் இருந்த தன் கையை விடுவித்துக் கொண்ட வேதா, தன் பிடிக்குள் அவனது கையை கொண்டு வந்து பார்வையால் அவனை அடக்கினாள்.
அவன் ஏதோ பேச வருவதற்குள், “அப்பா நீங்க போங்க ப்பா, நாங்க விருந்தெல்லாம் சாப்பிட்டுத்தான் கிளம்புவோம்” என்றாள்.
மகளின் பேச்சில் தெரிந்த அழுத்தத்தில் சந்திரனும் தைரியமாக வெளியேறினார்.
“போலாம்னு நான் சொல்லிட்டு இருந்தா நீ என்ன சொல்லிட்டு இருக்க?” என கடுப்பாக கேட்டான் விஷ்வா.
“சொன்னா சொன்ன சொல்லை காப்பாத்தணும்ங்க, அப்பாகிட்ட இன்னிக்கு விருந்துக்கு வர்றேன்னு நீங்க ஒத்துகிட்டீங்கதானே? இப்ப சொந்த பந்தம் அத்தனையும் கூடி நிக்கும் போது என் அப்பாவை அவமான படுத்துவீங்களா? அடுத்தவங்கள கஷ்ட படுத்தி அதை ரசிக்கிற மனநிலை எப்படி பட்டதுங்க?” நிதானமாக கேட்டாள் வேதா.
“பச்சை குழந்தைகிட்ட கருணை காட்ட தெரியாதவர் உன் அப்பா” என தாய்மாமனை குறை சொன்னான் விஷ்வா.
“அப்படி என்ன கருணை காட்டாம போயிட்டார்?” கைகளை கட்டிக் கொண்டு கேட்டாள்.
“ஏன் உனக்கு தெரியாதா?”
“உங்களை உங்க அம்மாகிட்டருந்து பிரிச்சது உங்க தாத்தாவும் பாட்டியும், என் அப்பா கிடையாது”
“வேதா!”
“நீங்க என்ன கோவ பட்டாலும் உண்மை அதுதான்”
“என் அப்பா இறந்ததுக்கு காரணமே உன் அத்தைதான், அவங்க காதல் கை கூட என் அப்பாவை பலி கொடுத்திட்டாங்க, உன் அப்பாதான் உன் அத்தைக்கு ஃபுல் சப்போர்ட்”
“என்னிக்காவது உங்க அப்பா அம்மா ரிலேஷன்ஷிப் பத்தி உங்க அம்மாகிட்ட கேட்ருக்கீங்களா? ஒரு தரப்ப மட்டும் கேட்டுட்டு முடிவுக்கு வரக் கூடாதுங்க. நீங்க நினைக்கிற மாதிரி என் அத்தைக்கு அவங்க பையன் முக்கியம் இல்லைனா எதுக்காக இப்ப வரை உங்க அன்பை பெற போராடிக்கிட்டு இருக்காங்க? உங்க கண்ல படாம எங்கேயாவது போயிருப்பாங்களே”
“என் கூட உறவை புதுப்பிச்சுகிட்டாதானே அவங்க ஆசை மகனை செட்டில் பண்ண முடியும்?”
“விஷ்வா!” கண்டனத்தோடு அவனை அடக்கினாள் வேதா.
“வெட்டி பேச்சு எதுக்கு? இப்ப இங்கேருந்து கிளம்ப போறியா, இல்லை தூக்கிட்டு போகவா?” என மிரட்டினான்.
“முடியாதுங்க! நீங்க இப்படி நடந்துகிட்டா நம்ம உறவுநிலை இன்னும் மோசமா மாறும்”
“அதெல்லாம் நான் சரி பண்ணிக்கிறேன்”
“நான் கேட்டுகிட்டதால அண்ணா சித்து ரெண்டு பேரோட தப்பையும் மன்னிச்சி விட்டுட்டீங்க, அது முடிஞ்ச போச்சு. இப்ப நடக்கிற பிரச்சனை எனக்கும் அவங்களுக்குமானது, அதை நான் சரி பண்ணிக்குவேன். அவங்க ஒன்னும் உங்களை விடலாம் அதிகமா என்னை அழ வைக்கல. அதுக்கு நீங்க ரியாக்ட் பண்றது உங்களுக்கே ஓவரா தெரியலை.
எந்த காரணத்துக்காகவும் என் அப்பாவை நீங்க இல்லை வேற யாரா இருந்தாலும் தலைகுனிய வைக்க நினைச்சா… அதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன். நீங்க போறதுன்னா போங்க, நான் வரலை, ஆனா போனீங்கன்னு வைங்க… எப்பவும் நான் அங்க வர மாட்டேன். நீங்க வார்த்தை தவறும் போது நான் மட்டும் சொன்னதை கடை பிடிக்கணும்னு என்ன அவசியம்?”
“என்னையவே பிளாக் மெயில் பண்றியா?”
“ஏன் அதெல்லாம் நீங்கதான் செய்யணுமா?”
“வேதா நீ என் வைஃப், என் சொல்படி கேட்டுத்தான் ஆகணும்”
“ம்ஹூம்! ஏன் ஹஸ்பண்ட் வைஃப் சொல்படி கேட்டு நடக்க கூடாதா?”
“இங்க என் பக்கம்தான் நியாயம் இருக்கு”
“அப்படின்னு நீங்களா நினைச்சுக்குறீங்க, நினைச்சுக்கோங்க. டைம் வேஸ்ட் ஆகுது பாருங்க, புறப்படுங்க” என்றாள்.
அவன் கோவத்தோடு வெளியேற போக, “தாத்தா கேட்டா இனி நான் வரமாட்டேன்னு சொல்லிடுங்க, காரணம் கேட்டா நீங்கதான் சமாளிக்கணும், யோசிச்சுக்கோங்க” என்றாள்.
அவளை திரும்பிப் பார்த்தவன், “சமாளிச்சுக்கிறேன், போதுமா?” என்றான்.
“கொஞ்ச நாள் போயி ஏதாவது சொல்லி என்னை திரும்ப அழைச்சிட்டு போலாம்னு கனவு காணாதீங்க, கல்யாணம் ரெஜிஸ்டர் கூட ஆகல, அதனால பிரியுறதுல கூட பிரச்சனை இல்லை” என்றாள்.
“நாளைக்கே ரெஜிஸ்டர் பண்ணி காட்டட்டுமா?”
“நான் நேர்ல வராம எப்படி பண்ணுவீங்களாம்?”
“உன்னை வர வைக்கிறதெல்லாம் எனக்கொரு மேட்டரே இல்லை வேதா”
“அதானே சாத்தான் வேதமா ஓதும்?”
“ம்ம்… நான் சாத்தான்… சொல்லிக்க சொல்லிக்க”
“மிரட்டி ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம், மிரட்டி வாழ முடியாது”
“என் கூட வாழ முடியாது ஓகே, என்னை நினைச்சிட்டே வாழ வேண்டியதுதான். காலம் முழுக்க உன் அப்பாம்மா முன்னாடி ஒத்தையா அழுது வடிஞ்சிட்டே இருக்க போறியா வேதா?”
“ஹ்ஹ்ஹா… அதெல்லாம் அந்த காலம். இப்போல்லாம் சிங்கிலா வாழறது சகஜம் ஆகிடுச்சு. நல்லா சிரிச்சிட்டே சந்தோஷமா வாழ்வேன்”
“ஓ… குட்! ஹாப்பி சிங்கில்’ஸ் லைஃப்” என சொல்லி மீண்டும் வெளியேற எத்தனித்தான்.
“நான் கொடுத்த முத்தம் உங்க உணர்வுல போய் கலந்திடுச்சுல்ல, அதுக்காகலாம் ஃபீல் பண்ண வேணாம். என் ஃபிரெண்ட் ஒருத்தி சைக்காலஜிஸ்ட்டா இருக்கா, ரெண்டு சிட்டிங் கவுன்சிலிங் போனா அந்த உணர்வை எல்லாம் தனியா ஃபில்டர் பண்ணி வெளியேத்தி விட்ருவா, அட்ரஸ் தரேன் போய் பாருங்க, அப்புறம்…” பேசிக் கொண்டிருந்தவள் அவனது நமட்டு சிரிப்பில் முறைத்தாள்.
“என்ன?” கோவமாக இரைந்தாள்.
“என் ஃபீலிங்ஸ் பத்தி உனக்கென்ன அக்கறை? நீ எப்படி காய் உருட்டினாலும் நானா மனசு வைக்காம காரியம் நடக்காது வேதா” என்றான்.
அயர்ந்து போனவளாக படுக்கையில் அமர்ந்தவள், “ஏங்க… ஏன் இப்படி போட்டு படுத்தி வைக்குறீங்க? என் வாழ்க்கைல இவ்ளோ ஸ்ட்ரெஸ் ஆனதே இல்ல நான். உங்களாலதான் அவ்ளோ அழறேன், கோவப் படுறேன், என் இயல்பை மீறி எப்படி எப்படியோ நடத்துக்கிறேன்” என்றாள்.
“என்னடி வேணும் உனக்கு?” என எரிச்சலோடு கத்தினான்.
“எல்லாத்தையும் விடுங்க, ப்ளீஸ் இருங்க, எனக்காக” என கண்களை சுருக்கிக் கொண்டு கெஞ்சினாள்.
ஒரு கையை இடுப்பில் வைத்து அவளை ஊன்றிப் பார்த்தவன், “தம் கட்டி பேசினது போதும், நான் கிளம்புற வரை அவனுங்க என் கண்ணுல படக்கூடாது, பட்டா அப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்லை” என்றான்.
என்ன சொன்னான் என அவள் கிரகித்துக் கொண்டிருக்க, டிவியின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
பெரிய மூச்சை விட்டவள், “அப்போ இருக்கீங்கல்ல?” எனக் கேட்டாள்.
“போ, ஐஸ் வாட்டர் எடுத்திட்டு வா” என்றான்.
“தொண்டை தண்ணி வத்தி போனது எனக்கு, இவருக்கு தண்ணி வேணுமாம்!” என புலம்பிக் கொண்டே நகர்ந்தவளை, முகம் கழுவி விட்டு போகும் படி சொன்னான்.
குளியலறை சென்று விட்டு வந்தவள் கண்ணாடியில் தன்னை பார்த்து கலைந்திருந்த சிகையை சரி செய்து கொண்டு, முகத்திற்கும் கொஞ்சமாக டச் அப் செய்து கொண்டாள்.
அவன் குரலை செரும, “போறேன் போறேன், அழுதது தெரியாம மறைக்கிறதுக்கு அழாம இருந்திடலாம் போல” என சலித்துக் கொண்டே வெளியேறினாள்.
விஷ்வா சமாதானமாகி விட்டதை அப்பாவிடம் சொல்லி விட்டே தண்ணீர் எடுத்துக் கொண்டு அறைக்கு திரும்பினாள். பாட்டிலின் குப்பியை திறந்து அவளிடமே கொடுத்தான்.