“என்ன யாரும் கிளம்பலையா?” என்றார் ரேணுகா வீட்டினரிடம்.
“அம்மா ஒன்னும் சொல்லலை அண்ணி” என்றார் மணி மேகலை தயக்கத்துடன்.
ரேணுகா வீட்டில் இருந்து அனைவரும் வந்து விட்டிருந்தனர்.
“இன்னும் யோசிச்சுட்டே இருந்தா எப்படி? கல்யாணம் தான் நம்ம இல்லாம நடந்திடுச்சு. இதையாவது கண்ணு குளிர பார்க்க வேண்டாமா?” என்று ரேணுகாவின் அம்மா சொல்ல, விசாலாட்சியோ வீம்புடன் நின்றார்.
“வர இஷ்ட்டம் இருக்குறவங்க வரட்டும். இஷ்ட்டம் இல்லாதவங்க வர வேண்டாம். அம்மா கிளம்புங்க” என்று ஆதி ஒரே வார்த்தையில் சொல்லிவிட, வீட்டில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி. ஆதி கொஞ்சம் தணிந்து பேசுவான் என்று எதிர்பார்த்திருந்தார் விசாலாட்சி. ஆனால் அவனோ யார் வந்தாலும், வரவில்லை என்றாலும் கவலையில்லை என்ற ரீதியில் பேசி வைத்திருக்க, அவருக்கோ அவரின் பேரன் முழுசாய் சிவ தீர்த்தாவின் புருஷனாய் மாறி விட்டதாய் நினைத்துக் கொண்டார்.
“அம்மா அவ மேல கோபம் இருந்தாலும், நாம ஆதிக்காக போய்த்தான ஆகணும்” என்றார் மணிமேகலை. ஒரு வீம்புடன் தான் கிளம்பினார் விசாலாட்சி.
“ஆமா சிவாவை எங்க இன்னும் காணோம்?” என்ற ரேணுகா, அவளைத் தேடி செல்ல முற்பட,
“அவளே வந்துட்டாளே” என்ற தாயின் குரலில் திரும்பிப் பார்த்தான் ஆதி. சிவாவோ கவியுடன் பேசிக் கொண்டே வர, ஆதிக்கோ அவள் மேலிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை.
அவன் வாங்கிக் கொடுத்திருந்த பர்ப்பிள் நிற பட்டுப் புடவையில்,அவன் வாங்கிக் கொடுத்த நகைகளையும் அணிந்து,கை நிறைய கண்ணாடி வளையல்களுடன் தேவதையாய் ஒளிர்ந்தவளை கண்டு முதன் முறையாக அவன் மனம் ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வை அவனுக்குள் கடத்த,
“ஆதி” என்ற ரேணுகாவின் குரலில் நடப்பிற்கு வந்தவன்,
“கிளம்பலாம்மா” என்றான். ஆனால் கோவில் செல்லும் வரை அவனின் பார்வை அவளைத்தான் அடிக்கடி தீண்டிக் கொண்டிருந்தது.
‘என்ன திடீர்ன்னு இவ இவ்வளவு அழகா தெரியறா? இல்ல, இத்தனை நாளா நான் தான் சரியா பார்க்கலையா?’ என்று தனக்குள் பேசிக் கொண்டவன், அவளை பார்த்தபடியே தான் ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்தான்.
“அங்கே கோவிலில், சொந்த பந்தங்கள், அவள் வீட்டு ஆட்கள் சகிதம் கிருஷ்ணனும் நிற்க, வண்டியை விட்டு இறங்கிய நிமிடம் தந்தையிடம் ஓடியிருந்தாள் சிவ தீர்த்தா.
“அப்பா”
“எப்படிடா இருக்க?” என்ற கிருஷ்ணன் மகளின் தோற்றத்தில் திருப்திப் பட்டுக் கொண்டார்.
“எப்படிப்பா இருக்கேன்” என்று சிறுபிள்ளையாய் அவரிடம் கேட்க,
“சிவாம்மா ரொம்ப அழகா இருக்கடா” என்றார் வார்த்தைகள் தழுதழுத்து.
ஆதியையும் சிவாவையும் அமர வைத்து ரேணுகாவின் அம்மாவே முன்னின்று அனைத்து சடங்கையும் செய்து முடித்திருந்தார். விசாலாட்சி வெறும் பார்வையாளர் மட்டுமே அங்கு. சுபத்ராவோ தள்ளி நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆதியின் அருகே அமர்ந்திருந்த சிவாவிற்கு ஏனோ மனதிற்குள் புதிதாய் ஒரு படபடப்பு. அன்று தான் திருமணமே நடப்பதைப் போன்ற ஒரு பிரம்மை அவளுக்குள். தோள்கள் உரசியும் உரசாமலும் அமர்ந்திருந்த ஆதி கேசவனை அவ்வப்போது ஓரக்கண்ணால் வேறு பார்த்துக் கொண்டாள். பட்டுவேட்டி சட்டையில் நெற்றியில் சந்தனம் குங்குமம் சகிதம் அமர்ந்திருந்தவன், இவளைத் திரும்பிப் பார்க்க, இவளோ பார்வையை மாற்றிக் கொண்டாள்.
“ஆதி தாலியில குங்குமம் வச்சு விடு” என்று அவனின் பாட்டி சொல்ல, தாலியோடு சேர்த்து அவள் நெற்றியிலும் குங்குமத்தை வைத்து விட்டிருந்தான். அவனின் அருகாமையில் அவள் தான் ஒரு வழியாகிக் கொண்டிருந்தாள்.
அங்கிருந்த சுமங்கலிப் பெண்கள் அவளுக்கு சந்தனம் குங்குமமிட,
“சுபத்ரா நீயும் வா” என்றார் ரேணுகாவின் தாயார். சுபத்ரா தயங்கியபடி செல்ல, சிவாவோ முகம் இறுகிப் போனாள். சட்டென்று எழுந்து கொள்ள போக, ஆதியோ அவளின் கையைப் பிடித்து இறுக்கியிருந்தான். வேறு வழியின்றி அவனுக்கு கட்டுப்பட்டு அமைதியாய் இருந்தாள். அவளுக்கு குங்குமம் வைக்கும் போது சுபத்ராவின் கைவிரல்கள் நடுங்க, ஒரு துளி கண்ணீர் அவள் கையில் பட்டுத் தெறித்திருந்தது. ஆனால் இது எதுவும் அவளை சிறிதும் பாதிக்கவில்லை. காவேரியும் வந்து அவர் முறையை செய்திருக்க, பார்த்திருந்த கிருஷ்ணனுக்கு மனம் நிறைந்து போனது.
“நீங்களும் குங்குமம் வச்சு விடுங்க” என்றாள் ரேணுகாவின் கை பிடித்து.
“நல்லா இருக்கணும்னு நினைக்கிற நல்ல மனசைத் தவிர வேற எதுவும் தேவையில்லை. நீங்க இப்போ வச்சு விடப் போறிங்களா இல்லையா?” என்றாள் மிரட்டலாய். வேறு வழியின்றி அவள் சொல் படி செய்திருந்தார் ரேணுகா. அவளின் இந்த ஒரு செயலே ரேணுகாவின் தாய் தந்தைக்கு சிவா மீதான என்னத்தை உயர்த்தியிருந்தது.
சிவா தன் தந்தையுடன் நின்று பேசிக் கொண்டிருக்க, அவளைத்தான் பார்த்திருந்தான் ரசனையுடன்.
“மச்சான் சிவா பாப்பா பிறந்ததுல இருந்தே அழகு தான். என்னமோ இன்னைக்குத்தான் புதுசா பார்க்குற மாதிரி பார்க்குற?” என்றான் பாண்டி.
“இன்னைக்குத்தான் எல்லாம் புதுசா தெரியுது” என்றவன்,
“டேய் பாண்டி, உன் சிவா பாப்பாவை கரெக்ட் பண்றதுக்கு ஏதாவது ஐடியா குடேன்” என்றான் பார்வையை அவள் மேல் வைத்து.
“மச்சான் பொண்டாட்டியை கரெக்ட் பண்ண ஐடியா கேட்குற புருஷனை இப்பத்தான்டா பார்க்குறேன். நீயாவது கல்யாணம் காட்சின்னு பண்ணிட்ட. நான் இன்னும் அதைக் கூட பண்ணலையே. அப்பறம் எனக்கெப்படி தெரியும்?” என்றான் பாண்டி சிரிப்பை அடக்கி.
“அப்படி ஒன்னு இருக்கோ?” என்றவனுக்கு தன்னை நினைத்தே சிரிப்பு.
“உன் மாமனாரை கரெக்ட் பண்ணாலே எல்லாம் ஈசியா நடந்திடும். ஏன்னா, சிவா ஒருத்தர் பேச்சைக் கேட்குதுன்னா, அது உன் மாமனார் பேச்சை மட்டும் தான்” என்றான் பாண்டி.
“உன்கிட்ட கேட்டேன் பாரு, எனக்கு இது தேவை தான்” என்ற ஆதி,