“மதுரைக்கு போறேன்மா. ஏதாவது வேணும்னா சொல்லுங்க, வாங்கிட்டு வர்றேன்” என்றான்.
“தாலிச் செயின் வாங்கணும் ஆதி. அப்பறம் சிவாவுக்கு புடவை எடுக்கணும். கல்யாணத்துக்கு தான் நாம ஒன்னும் எடுக்கலை. அந்த குறை எதுவுமே இதுல இருக்க கூடாது” என்றார்.
“கண்டிப்பா அவ வர மாட்டா ஆதி. அதனால நீயே வாங்கிட்டு வந்துடு. நான் கிளம்புனா அதுக்கு ஒரு பஞ்சாயத்து வரும் இந்த வீட்ல” என்ற ரேணுகா மகனிடமே பொறுப்பை ஒப்படைத்தார்.
அன்று ஆதி வீட்டிற்கு வர இரவு வெகு நேரம் ஆகியிருந்தது. ஏனோ அவன் வரும் வரை அவளுக்குத் தான் உறக்கம் என்பது துளியும் இல்லை. அவன் இரவு சாப்பாட்டை வெளியே பார்த்துக் கொள்வதாய் கூறியிருக்க, இவளை சாப்பிட வைத்து அனுப்பியிருந்தார் ரேணுகா. நொடிக்கொரு தரம் கண்கள் அவன் வருகிறானா? என்று பார்க்க, வெகு நேரம் கழித்தே வந்தான்.
வந்தவனின் முகத்தில் களைப்பு அப்பட்டமாய் தெரிய, அவன் பார்க்கும் முன் சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டாள்.
“எனக்கு தெரிஞ்ச அளவுக்கு வாங்கியிருக்கேன். பிடிச்சிருக்கான்னு பார்த்துக்கோ” என்றவன் டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.
“என்ன வாங்கிட்டு வந்திருக்காங்க” என்று பார்த்தவளுக்கு, உள்ளே அவளுக்கு பிடித்த பர்ப்பிள் கலரில் பட்டுப் புடவை இருக்க, ஆச்சர்யமாய் பார்த்தாள்.
“எனக்கு இந்த கலர் பிடிக்கும்னு இவங்களுக்கு எப்படி தெரியும்?” என்று யோசித்தபடியே மற்ற கவரையும் பிரிக்க, மேலும் சில புடவை, சுடிதார் அதற்கு தேவையான உள்ளாடை என அனைத்தும் இருக்க, அவளுக்கோ முகம் சிவந்து படபடவென்று வந்தது.
குளித்துவிட்டு வந்தவனுக்கு அவளின் முகம் போன போக்கிலேயே விஷயம் புரிபட,
“எனக்கு இதெல்லாம் வாங்கிப் பழக்கம் இல்லை. அங்க இருக்க சேல்ஸ் கேர்ள்கிட்ட, உன்னை மாதிரி ஹைட், வெயிட்ல இருக்குற பொண்ணைக் காட்டி சொன்னேன். அவங்களே செலக்ட் பண்ணி பேக் பண்ணி குடுத்துட்டாங்க” என்றான் விளக்கமாய்.
முதன் முறையாய் அவன் பேச்சில் சிரிப்பு வந்திருக்க, அதை அப்படியே அடக்கிக் கொண்டாள் சிவா.
“அந்த ஜூவெல்லரி ஷாப் பேக்ல தாலிச் செயின் எல்லாமே இருக்கு. அதை காலையில அம்மாகிட்ட குடுத்துடு.அப்பறம் ஒரு ஜுவெல் செட்டும் இருக்கும். பங்ஷன் அப்போ அதையே போட்டுக்கோ” என்றான் கூடுதல் தகவலாய்.
அனைத்தையும் பார்த்திருந்தாலும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசினாள் இல்லை.
“எதாவது வாயைத் திறந்து பேசுறாளா பாரு? அட்லீஸ்ட் நல்லா இருக்கு இல்லைன்னாவது சொல்றாளா? இவளுக்காக கடை கடையா ஏறி வாங்கிட்டு வந்தா, கல்லையோ மண்ணையோ பார்த்த மாதிரி பார்த்து வைக்கிறா? எல்லாம் உன் நேரம்டா ஆதி” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவனுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது, அவளுக்காய் வாங்கிய ஒன்றை ஜீப்பில் விட்டுவிட்டு வந்தது. வேகமாய் கீழே சென்று அதையும் எடுத்து வந்து அவளிடம் நீட்டியிருந்தான்.
“சாரி இதை மறந்துட்டேன்”என்றபடி அவன் கொடுத்த கவரை வாங்கி பிரித்தவளுக்கு மூச்சடைத்தது. அவளுக்குப் பிடித்த கண்ணாடி வளையலும், மதுரை மல்லியும். கிருஷ்ணன் எப்போது மதுரைக்கு சென்றாலும் அவளுக்கு அதை வாங்கி வருவது தான் வழக்கம்.
முகம் பூவாய் மலர்ந்திருக்க, வளையலை அப்போதே கைகளில் போட்டுக் கொண்டாள். ஒரு யோசனையுடன் பூவைப் பார்த்திருந்தவள், பின் அதையும் வைத்துக் கொள்ள, அவளின் மலர்ந்த முகத்திலேயே தெரிந்து போனது, அது அவளுக்கு பிடித்திருக்கிறது என்று.
‘இத்தனை நாளா இது தெரியாம போச்சே ஆதி கேசவா. இப்படின்னு தெரிஞ்சிருந்தா இன்னும் டஜன் டஜனா வாங்கிட்டு வந்திருப்பேனே’ என்று எண்ணி சிரித்துக் கொண்டான்.
அவள் எப்போதும் போல் கீழே படுத்துக் கொள்ள, அவனும் வேறு வழியின்றி கீழேயே படுத்துவிட்டான். அவளுக்கு பாவம் பார்த்து கீழே படுத்த அவனின் நிலை தான் தினமும் பாவமாகிப் போனது. தரையில் படுத்து அவனுக்கு சுத்தமாக பழக்கமில்லை. அவன் தினமும் இரவில் புரண்டு புரண்டு படுப்பதிலேயே அவளுக்கும் புரிந்திருந்தது.
“நானா வந்து கீழ தூங்க சொன்னேன். அவங்களா வந்து தூங்கினா நான் என்ன பண்றது?’ என்று எண்ணியவள் கண்டு கொள்ளாதவளைப் போலவே இருந்து விட்டாள்.
ஆதிக்கோ அன்று முழுவதும் அலைந்ததில் உடல் ஏற்கனவே களைப்பில் இருக்க, தூக்கம் வருவேனா என்றது. அவன் படும் அவஸ்தையில் அவளுக்குத் தான் பாவமாகிப் போனது.
அவள் எழுந்து லைட்டைப் போட, பட்டென்று கண்களைத் திறந்திருந்தான் ஆதி.
“என்னாச்சு?” என்றான்.
சிவாவோ தலையணை எடுத்து கட்டிலில் போட்டு விட்டு, தன் நகத்தை ஆராய்ச்சி செய்ய,
“இப்போ இந்த டைம்ல லைட்டை போட்டு நகத்தை ஆராய்ச்சி பண்றது ரொம்ப முக்கியமா?” என்றான் நக்கலாய்.
அவளோ முகத்தை முறைப்பாய் வைத்துக் கொள்ள,
“இப்ப என்ன நான் மேல படுக்கணுமா?” என்றான்.
“ஆமா” என்பதைப் போல் தலையை ஆட்ட,
“மேடம்க்கு என் மேல நம்பிக்கை வந்திருச்சா” என்றவனை மீண்டும் முறைக்க,
“இந்த முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றவன் எழுந்து கட்டிலில் படுத்துக் கொண்டான். அவளும் கட்டிலின் மறு ஓரத்தில் படுத்துக்கொள்ள, மெத்தையோ அவளை சுகமாய் உள் வாங்கியது.
‘இப்படி சொகுசா தூங்குனவங்களுக்கு எப்படி கீழ படுத்தா தூக்கம் வரும்’ என்று நினைத்துக் கொண்டவள், சற்று நேரத்தில் உறங்கியும் போனாள்.
தலையை ஒரு கையால் தாங்கி, தூங்கிக் கொண்டிருந்தவளைத் தான் ரசித்துக் கொண்டிருந்தான் ஆதி கேசவன்.
“எப்ப தான்டி வாயைத் திறந்து என்கிட்ட பேசுவ? மத்த எல்லார்கிட்டயும் பட்டாசா வெடிக்கிற. என்கிட்ட பேச மட்டும் இன்னும் நேரம் காலம் வரலையா என்ன?” என்று எண்ணிக் கொண்டவனுக்கு சிரிப்பு தான் வந்திருந்தது அவனை நினைத்து.
“அடேய் ஆதி! ஊருக்குள்ள நீ வீராப்பா சுத்திட்டு இருந்தது என்ன?ஆனா இன்னைக்கு எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு ஒரே நாள்ல, நகைக்கடை,புடவைக் கடை, பூக்கடைன்னு சுத்திட்டு வந்திருக்கியே? நிஜமாவே உனக்கு என்னமோ ஆகிப் போச்சுடா” என்று எண்ணியவன்,
“எப்படியோ மேடம் மஞ்சம் வரைக்கும் வந்துட்டாங்க. சீக்கிரம் உன்னோட நெஞ்சத்துக்கும் வந்துடுவா ஆதி” என்று அவளைப் பற்றிய நினைவுடனே அவனும் உறங்கிப் போனான்.