ஆனந்த போர்க்களம் – 15

ஸ்ரீதரனை அடித்துக் கொண்டிருந்தவள் கணவனின் சத்தத்தில் அவனை விட்டு விலகி நின்று கொண்டாள்.

சந்தியாவிற்கு கணவன் பார்த்து விட்டானே என்றெல்லாம் கலக்கம் இல்லை. மாறாக, இப்பொழுது அடித்ததற்கான காரணத்தைக் கேட்டால் எப்படி நடந்ததைச் சொல்வது என்றுதான் தவிப்பாக இருந்தது. எப்படி சமாளிக்க என புரியாமல் திணறியபடி பதற்றத்துடன் நின்றிருந்தாள்.

என்னவோ இந்த நாள் நிறைய அலுப்பையும் சலிப்பையும் வாரி வழங்கி தந்து அவளை வெகுவாக சோதித்தது.

ஸ்ரீதரனை பார்த்து, ‘எதையும் உளறி வைக்காத…’ என கணவன் அறியாதபடி கண்டிப்பான குரலில் முணுமுணுத்தாள்.

கண்கள் சிவக்க இறுகிய முகத்தோடு நெருங்கிய வீரேந்திரன், “எதுக்குடி அவனை அடிச்ச?” என்றான் எடுத்த உடனேயே ஆத்திரத்துடன்.

அவனது கோபத்திலும் வார்த்தை பிரயோகத்திலும் சந்தியா ஒரு நொடி அதிர்ந்து நின்று விட்டாள். ஸ்ரீதரன் முன்பு வாக்குவாதம் வளர்வதை அவள் விரும்பவில்லை.

வேகமாகச் சுதாரித்து, “உள்ளே போயி பேசிக்கலாம் வாங்க…” மெல்ல அவன் கரம் பற்றிச் சொன்னாள். கண்கள் இளையவனைச் சுட்டிக்காட்டிக் கெஞ்சியது.

இருவருக்கும் சண்டை என்றால் நிச்சயம் ஸ்ரீதரன் வருந்துவான். அதுவும் சண்டையே அவனை மையமாக வைத்து என்ற சூழல் வந்தால், பாவம் ஏற்கனவே இன்று நடந்த பிரச்சனையில் குற்றவுணர்வில் தவிப்பவன் இன்னும் ஒடுங்கிப் போவான். ஆக, அவன் முன்பு வாக்குவாதம் நடக்க வேண்டாம் என எதிர்பார்த்தாள்.

ஆனால், பற்றிய கையை வேகமாக உதறி, “ச்சீ… என்னை தொடாதடி…” என்றான் வீரா ஆக்ரோசத்துடன்.

அவன் உதறிய அவமானத்தில் கண்கள் கலங்கியது சந்தியாவிற்கு. தொண்டைக்குழிக்குள் என்னவோ அடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முடியாமல் தவித்தது.

என்ன ஏதென்று விசாரிக்க மாட்டானோ? நான் ஸ்ரீயை அடித்ததைத் தவறாக எடுத்துக் கொள்வானோ என தவிப்பும் கலக்கமுமாகக் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“சொல்லுடி எதுக்கு அவனை அடிச்ச? இந்தமாதிரி கண்ணுல தண்ணி வெக்கறது, தெரியாம நடந்திடுச்சுன்னு கும்பிடு போடறதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன்” என்று எச்சரித்தவனின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது.

கணவனின் அழைப்பு விகுதியும், கோபமான உடல் மொழியும், நிதானமற்ற செய்கைகளும் வரவிருக்கும் பெரிய சண்டைக்கு சாட்சியாய் நின்றது. எச்சில் கூட்டி விழுங்கி வறண்ட தொண்டைக்குழியை நனைத்துக் கொண்டாள்.

ஸ்ரீதரனுக்கும் புரிந்தது போல! ரொம்பவும் பயந்து போனான். “அண்ணா… அண்ணி…” எனத் தொடங்கியவனைப் பேச விடாமல்,

“அவ அடிச்சா நீ வாங்கிட்டு நிப்பியாடா? என்னை அடிக்க நீ யாருன்னு கேட்டிருக்க வேண்டாம். இல்லாட்டி என்கிட்ட சொல்லறதுக்கென்ன? எத்தனை நாளா இப்படி செய்யறா?” என்றான் கோபத்துடன்.

ஏதோ ஸ்ரீதரனை அடிப்பது மட்டுமே சந்தியா வேலையாக வைத்திருப்பவள் போல, அவளை சித்தரித்து கணவன் கேள்விகளை அடுக்கிய விதத்தில் அவள் அசந்து தான் போனாள்.

‘இவ்வளவு தானா நீங்க என்மேல வெச்சிருக்க நம்பிக்கை?’ என அவளுக்கு மனம் விட்டுப்போனது.

அதிலும், ‘என்னை அடிக்க நீ யாரு…’ என கணவன் ஸ்ரீயிடம் கேட்கச் சொன்ன வார்த்தைகளால் அவளுள் இருந்த இணைபிரியா பந்தம் ஒன்று தன் பிணைப்பைத் தளர்த்திக் கொண்டதாகவே உணர்ந்தாள்.

அண்ணியைப் பேசியதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், “என்னண்ணா பேசற? அப்படியெல்லாம் எதுவும் இல்லை…” என்று ஸ்ரீதரன் கொஞ்சம் குரல் உயர்த்தினான்.

இதென்ன இவன் வேறு சண்டைக்கு நிற்கிறான் என பதறியவள், “ஸ்ரீ நீ முதல்ல உள்ளுக்கு போ…” என்று அவன் அறையை வேகமாகச் சுட்டிக் காட்டினாள்.

“மாட்டேன்…” என மறுத்தவன், வேகமாக அவள் புறம் திரும்பி, “பிளீஸ் அண்ணி…” என்றான் பாவமாக.

வளர்ந்த குழந்தையாகக் கெஞ்சிக் கொண்டு நிற்கும் ஸ்ரீயையும் சமாளிக்கத் தெரியாமல், கோபத்தில் வார்த்தைகளை நெருப்பென வீசும் கணவனையும் கட்டுப்படுத்த முடியாமல் சந்தியா தடுமாறினாள்.

“அவகிட்ட என்னடா கெஞ்சிட்டு இருக்கிற?” என வீரா ஸ்ரீயை கடிந்துவிட்டு,

“எதுக்குடி அவனை அடிச்ச? உன்னைத் தானே கேட்கிறேன்… தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை அடிக்கிறியே உனக்கெல்லாம் அறிவில்லை…” என சந்தியாவை மீண்டும் சத்தமிட்டான்.

ஸ்ரீதரன் முன்பு இப்படி எல்லாம் பேசுகிறானே என அவளுக்குக் கஷ்டமாக இருந்தது.

இப்பொழுதும் ஸ்ரீ ஏதோ மறுத்துச் சொல்லவர, “நீ உள்ளே போடா” என வீரேந்திரன் இம்முறை கோபமாகச் சொன்னான்.

அப்பொழுதும் ஸ்ரீ போக மறுத்து நிற்க அலுப்புடன், “நீ உள்ளே போறியா இல்லையா…” என்று சந்தியாவும் அதட்டினாள்.

அவளின் அழுத்தத்தில் இம்முறை மறுக்க முடியாமல் உள்ளே சென்றான்.

“எதுவா இருந்தாலும் நம்ம ரூமில் வெச்சு கேட்க மாட்டீங்களா? நாளைக்கு அவனை நான்தான் சமாளிக்கணும். நீங்க இல்லை…” என்றாள் தளர்ந்து போன குரலில். பசி வேறு வயிற்றை பிராண்டி கொண்டிருக்க, தலை சுற்றுவதைப் போல இருந்தது.

“நம்ம ரூமா?” நக்கல் வழிந்தது வீராவின் குரலில்.

சந்தியாவின் முகம் யோசனையில் சுருங்க, “அது என் ரூம்…” என்றான் வீரா அழுத்தமாக.

அவளுக்கு அவன் சொல்ல வருவது புரிந்தும் புரியாத நிலை! அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஸ்ரீதரன் சென்ற அறையைக் காட்டி, “அவன் என் தம்பி…” என்றான் இன்னும் அழுத்தமாக.

‘ஓ… என் தம்பியை நீ எப்படி அடிக்கலாம்ன்னு கேட்க வரானா?’ என அர்த்தம் செய்து கொண்டவளுக்கு, உள்ளுக்குள் என்னவோ நொறுங்கிப் போனது. ‘இல்லை தம்பி மேல இருக்கும் பாசத்துல கண்மூடித்தனமா பேசறான். நாம கொஞ்சம் பொறுமையா இருப்போம்’ என முயன்றவரை தன்னைத்தானே இழுத்துப் பிடித்தாள்.

“கொஞ்சம் செய்யக்கூடாத வேலையை செய்துட்டான். அதோட பாதிப்பு அதிகம்… அதுதான் கோபத்துல கண்டிச்சேன்…” என்றாள் பொறுமையாகவே.

“கோபத்துல கண்டிச்சியா? முதல்ல நீ யாரு அவனை கண்டிக்க? அம்மா, அப்பா இல்லாத பிள்ளை தானே… அண்ணனும் வேலை, தொழில்ன்னு கதியா கிடக்குறான் யாரு கேட்பாங்கன்னு நினைப்பு… அதுதான் உனக்கு இந்தளவு தைரியத்தை தந்திருக்கு என்ன…” என அடிக்குரலில் சீறினான்.

நீண்ட பெருமூச்சு அவளிடம்! இவனுக்குப் புரியும் என்ற நம்பிக்கையே விட்டுப்போனது. அவன் கையால் வாங்கிய தாலி அவளை பார்த்துச் சிரிக்கும் உணர்வு! வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடித்த திருமண பந்தம் இப்பொழுது இவன் கோபத்தின் முன்னால் நிற்குமா என்பதே சந்தேகமானது.

ஏன் தான் இப்படி எல்லாம் யோசனை போகிறதோ என்று அவளுக்கே அவள் மேல் கோபம் தான் வந்தது.

சுத்தமாக தெம்பே இல்லாததால், “இதுவரை இதுமாதிரி நான் நடந்துக்கிட்டதில்லை. ஸ்ரீயை அடிச்சது தப்பு தான் ரொம்ப சாரி. இனி இப்படி நடந்துக்க மாட்டேன்” என்றாள் சோர்வாக.

“ஓ… நீ அடிப்ப… அதை நான் பார்த்துட்டா உடனே மன்னிப்பு கேட்கிற மாதிரி கேட்ப… நாங்க விட்டுடணும்…” நக்கல் வழிந்தது அவன் குரலில்.

வீராவுக்கும் ஏன் இத்தனை கோபமோ தெரியவில்லை. உண்மையில் மனதளவில் மனைவியுடனான சண்டை அவனையும் சுணங்க செய்திருந்தது. காரணமற்ற எரிச்சல் உள்ளுக்குள் கனன்று கொண்டே இருக்க, அதை வாகாக மனைவியிடம் கொட்டி தீர்த்துக் கொண்டான்.

“வேற என்ன செய்யலாம்ன்னு நீங்களே சொல்லுங்க…” என்றவள் சோர்வு அதிகமாக அமர்ந்து விட்டாள். கொஞ்சம் ஏதாவது குடித்தால் கூட போதும்! பசித்த வயிறு அவளை படுத்தி எடுத்தது. அருகிலிருந்த தண்ணீரை எடுத்து கொஞ்சம் அவசரத்துடனேயே பருகினாள். நீர் உடையில் சிதறுமளவு!

‘சாவகாசமா உட்கார்ந்துட்டு தண்ணியும் குடிச்சிட்டு என்ன செய்யன்னு திமிரா கேட்கிறா பாரு… எல்லாம் நம்ம கொடுத்த இடம்…’ என்ற கடுப்போடே, “ஏற்கனவே சொல்லி இருக்கேனே… அப்பறமும் இப்படி திமிரா கேட்டா என்னடி அர்த்தம்…” என காய்ந்தான்.

“மறுபடியும் சொல்லுங்க… இன்னொருமுறை தெளிவா கேட்டுக்கிறேன்”

“இனி என் விஷயத்துல தலையிடாத…”

என்னவோ அதற்கும் மேல் பொறுமையைக் காக்க முடியவில்லை. என் அறை! என் தம்பி! என அவளும் எத்தனை தான் பொறுத்துப்போக முடியும்? அப்படியென்றால் இந்த வீட்டில் அவள் யாராம் என்ற சினத்தோடே, “உங்க விஷயத்திலா?” கையை கட்டிக்கொண்டு நிதானமாக கேட்டாள்.

“ஆமா…” என்று கத்தினான். “என் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலேயும் இனி நீ தலையிடக் கூடாது…” என்றான் திட்டவட்டமாக.

“ஹ்ம்ம்… சரி…” என்றாள் அமைதியாக. எப்பொழுதுமே அச்சப்படுபவள் தான்! இப்பொழுது கணவனின் பேச்சினால் ஒருவித விரக்தி மனநிலை மட்டுமே!

“என்னடி திமிரா பதில் பேசற? எங்க விஷயத்துல தலையிடாம இருந்திருந்தாலே இன்னைக்கு இத்தனை பிரச்சினை இல்லை. என்னை தான் நிம்மதியா இருக்க விடலை… இப்ப என் தம்பி நிம்மதியையும் கெடுக்கிறயா? அவன் என்னடி உன்னை செஞ்சான்?”

“உங்க ரூம்… உங்க தம்பி… உங்க விஷயம்… இதுல நான் திமிரா பேச என்ன இருக்குன்னு எனக்கு புரியலை… இனிமேல் உங்க ரெண்டு பேர் நிம்மதியையும் கெடுக்கலை. போதுமா?”

வீரேந்திரன் கையை கட்டிக்கொண்டு அவளையே ஆழ்ந்து பார்த்தான். சோர்ந்து அவள் அமர்ந்திருந்த தோற்றம் அவனை மதிக்காமல் புறக்கணிப்பதாகவே பட்டது. ஸ்ரீதரனை அவள் அடித்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனாலும் இப்பொழுது வரை வெறுமனே விசாரிக்க மட்டும் செய்கிறான். ஆனால் சந்தியா அதற்குக் காட்டும் எதிர்வினை அத்தனை கோபத்தைத் தந்தது.

‘இவளுக்கு மேலும் மேலும் இடம் தருவதா?’ என்றொரு ராட்சச எண்ணம் மேலெழ, “என்னவோ உன்னைப் பார்க்கப் பார்க்க அத்தனை எரிச்சல் வருது… என் வாழ்க்கையில நான் செஞ்ச பெரிய முட்டாள்த்தனம் உன்னை கட்டிக்கிட்டது மட்டும் தான்!” என்றான் அவளை நோகடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்.

சந்தியா உள்ளுக்குள் மொத்தமாய் நொறுங்கிப் போனாள். இதற்கு மேலும் அவளால் இன்றைய நாளில் போராட முடியும் போல தோன்றவில்லை.

“ஹ்ம்ம்… வேற எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாமா? எனக்கு கொஞ்சம் உடம்பு முடியலை…” இதையும் சோர்வோடு தான் கூறினாள். கலங்கி விட்ட கண்களை அவனுக்கு காட்டாமல் மறைக்கத் தலையைக் குனிந்தபடியும்.

“உன்கிட்ட நாளைக்கு வேற பேசுவாங்களா?” என்றான் ஏளனமாக. துக்கம் தொண்டையை அடைத்தது மனைவிக்கு. இவனால் எப்படி இந்தளவு பேச முடிகிறது? தனக்கு வந்த ஆத்திரத்திற்கு நன்றாகத் திருப்பி தந்து விடுவாள் தான்! என்னவோ சுத்தமாக உடம்பு முடியாததால் எதுவும் சண்டையிடவில்லை.

“உங்க இஷ்டம்…” என்று நலிந்த குரலில் சொல்லிவிட்டு, எழுந்து அறைக்குள் போகப் பார்த்தாள்.

அப்பொழுதும் ஆத்திரம் அடங்க மறுக்க, வீரா சொடுக்கிட்டு அவளை நிறுத்தினான். நின்றாளே தவிர திரும்பவில்லை.

“அது என் ரூம்ன்னு சொன்னேன். இனி நீ அங்க தங்க வேண்டாம். எனக்கு உன்னைப் பார்க்க பார்க்க எரிச்சலா வருது…” என்றவன் நில்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றான்.

தலையில் இடி விழும் நிலை இதுதான் போலும்! என்று எண்ணியவளுக்கு இனி இந்த வீட்டில் கூட இருக்க முடியும் என்று தோன்றவில்லை.