“நீயும்தானே மா விஷ்வாவுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க ஆசை பட்ட?” என கடுப்பாக கேட்டாள் வேதா.

“ஆமாம், அப்போ  அந்த பையன் மனசுல இப்படி பழி உணர்ச்சி இருக்கும்னு எனக்கு தெரியாதே. நல்ல வசதி, பார்க்க நல்லாருக்கான், உன்னை பிடிச்சு போய் கல்யாணம் பண்ணிக்கிறான்னு ஆசை பட்டேன்” என வாசுகி சொல்லிக் கொண்டிருக்க, சந்திரன் வந்து விட்டார்.

அகல்யாவின் முகம் சரியில்லை, நீ என்ன சொல்லி வைத்தாய், இப்போது கூட அவன் இவன் என விஷ்வாவை பேசுகிறாய், எல்லாரும் செல்லட்டும் உன்னை வைத்துக் கொள்கிறேன் என சத்தம் போட்டு விட்டு சென்றார் சந்திரன்.

“நீ என்னடி வேடிக்கை பார்த்திட்டு நிக்கிற, போ போயி உன் வீட்டுக்காரருக்கு இந்த சூப் கொடுத்திட்டு வா” என மகளை அனுப்பி வைத்தார் வாசுகி.

விஷ்வா அறையில் டிஸ்கவரி சேனல் பார்த்துக் கொண்டிருந்தான். சூப்பை வழகியவள் அவனை தொந்தரவு செய்யாமல் வெளியில் வந்து விட்டாள்.

வேதாவுடைய மாமா பெண் அவளை ஆதியின் அறைக்கு கட்டாயப் படுத்தி அழைத்து சென்று விட்டு வெளியேறினாள். அண்ணன், நண்பன் இருவரையும் பார்த்து விட்டு கோவமாக அவள் வெளியேற நினைக்க, கதவை அடைத்து விட்டான் சித்தார்த்.

உன்னிடம் விஷ்வா நடந்து கொண்டதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அந்த கோவத்தில் அவனுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டுமென அப்படி செய்து விட்டதாக அவளுக்கு விளக்கம் சொன்னார்கள்.

“விஷ்வா பத்தி பேசாதீங்க, அவர் வளர்ந்த சூழல் வேற. நீங்க செஞ்சதை தான் என்னால ஏத்துக்கவே முடியலை” என சீற்றமாக சொன்னாலும் அவளின் கண்களில் கண்ணீர் திரண்டு விட்டது.

ஆதி அவளை சமாதானம் செய்ய பார்க்க, “என்ன அங்க போய் சொகுசான வாழ்க்கைய பார்க்கவும் அவன் உனக்கு நல்லவன் ஆகிட்டானா?” என கோவப் பட்டான் சித்தார்த்.

விழிகள் தெறிக்க அவனை பார்த்தவள், “ஆமாம் அப்படித்தான்டா!” என சொல்லி, கதவை திறந்து கொண்டு சென்றாள்.

அவள் உணர்ச்சி வயப் பட்டிருக்க, உறவுகள் மத்தியில் இருக்க முடியாமல் அறைக்கு சென்று விட்டாள். அங்கே விஷ்வா இருக்கவும் என்ன செய்வது என தெரியாமல் திரும்பியவள், வெளியில் நிற்கும் உறவுகளை எண்ணி மனதை மாற்றிக் கொண்டு கதவை அடைத்தாள். அவனுக்கு முதுகு காட்டியவண்ணம் படுக்கையில் அமர்ந்தாள்.

அவள் உள்ளே நுழையும் போதே கவனித்திருந்த விஷ்வா, டிவியை அணைத்து விட்டு அவளிடம் வந்து நின்றான்.

அவன் ஏதும் பேசுவதற்குள், “ப்ளீஸ், என்னை கொஞ்சம் தனியா விடுங்க” என்றாள்.

இறுகிய முகத்துடன் அவளை பார்த்தவன் பழைய படி இருக்கையில் அமர்ந்து கொண்டான். அறையை விட்டெல்லாம் வெளியேறவில்லை.

ஒருக்கலித்து படுத்துக் கொண்டவள் கண்களை மூடிக் கொண்டாள். நண்பன் சொன்னதிலிருந்து இன்னும் அவளால் வெளிவர முடியவில்லை.

தவறு செய்யாத அத்தை அனைவரின் முன்பும் சுயநலவாதியாக காட்சி படுத்தப் பட்டு அவருக்காக அவர் கூட வாதாடிக் கொள்ள முடியாத நிலையில் நிற்கிறார். பெற்ற தாயை எதிரி போல பாவிக்கும் கணவன். நேர்மை நியாயம் ஒழுக்கம் என சொல்லி சொல்லி வளர்க்க பட்ட குடும்பத்தை சேர்ந்த ஆதியும் சித்துவும் அநியாயமாக நடந்து கொண்டது, வசதியை பார்த்து மனம் மாறி விட்டதாக குற்றம் சுமந்தும் நண்பன். இப்படி அனைத்தையும் நினைத்துப் பார்த்தவளுக்கு அழுகையை அடக்க முடியவில்லை.

அவளின் கேவல் சத்தம் கேட்ட பிறகு, அவனாலும் பொறுமையாக தள்ளியிருக்க முடியவில்லை.

“என்னாச்சுன்னு கேட்டுட்டு இருக்கேன், இப்படி அழுதா என்னன்னு நினைப்பேன்? சொல்ல போறியா இல்லையா இப்போ?” என சத்தம் போட்டான் விஷ்வா.

“ஹையோ ஒன்னும் இல்லங்க, இது நான் பொறந்து வளர்ந்த இடம் இல்லையா? பிரிய போறோம்னு எமோஷனல் ஆகிட்டேன்” என சமாளித்தாள். நிஜத்தில் அந்த வருத்தமும் அவளுக்கு இருந்ததுதான்.

நம்பாதவன் கையோடு அவளது அப்பாவுக்கு அழைத்து, உடனே அறைக்கு வரும் படி சொல்லி விட்டான்.

அப்பாவை எதற்கு வர சொன்னீர்கள் என அவள் கேட்டுக் கொண்டிருக்க, அறைக் கதவு தட்டப் பட்டது.

சந்திரனை உள்ளே விட்டு மீண்டும் அறைக் கதவை அடைத்து விட்டான் விஷ்வா.

அழுத தடத்தோடு நின்ற மகளை பார்த்து பதறினார் சந்திரன். இங்குதான் ஏதோ பிரச்சனை, உங்கள் மகள் சொல்ல மறுக்கிறாள் என்றான் விஷ்வா.

அப்படியெல்லாம் இல்லை  என்ற வேதா, கணவனிடம் சொன்னதையே அப்பாவிடமும் சொன்னாள்.

“சுத்த பொய்” என்றான் விஷ்வா.

“சரி மாப்ள, விருந்து முடியட்டுமே, என்னன்னு பொறுமையா விசாரிக்கிறேன்” என்றார் சந்திரன்.

“அது உங்க பொண்ணா மட்டும் இருந்தா. விஷ்வாவோட வைஃபை அழ வச்ச தைரியசாலி யாருன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்” என நின்றான் அவன்.

வேதா, அவளின் அண்ணன் மற்றும் நண்பனோடு முறைத்துக் கொண்டிருந்ததை கண்டிருந்தவனுக்கு அவர்களோடுதான் பிரச்சனையாகியிருக்க வேண்டும் என கணிப்பு இருந்தது. அது மட்டும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்க வேண்டும் என அவனுள் அப்படியொரு ஆவேசம்.

இவனால் நான் அழாத அழுகையா? வேண்டுமென்றே பெரிது படுத்துகிறான் என புரிந்தாலும் அப்பாவின் முன்னிலையில் கணவனை ஒன்றும் சொல்ல இயலாமல் ஏதேதோ சொல்லி சமாளிக்க பார்த்தாள் வேதா.

விஷ்வாவின் பிடிவாதத்திற்கு முன்பு எதுவும் எடுபடவில்லை.

வேறு வழியின்றி அப்பாவிடம் சின்ன குரலில் உண்மையான காரணத்தை சொல்ல போனாள்.

காதை குடைந்து கொண்ட விஷ்வா, “எனக்கும் தெரியணும் வேதா!” என்றான்.

அவனை மனதில் திட்டிக் கொண்டே, சித்து சொன்னதை சொன்னாள்.

விஷ்வா தாடையை தடவிக் கொண்டே தரையை வெறித்திருந்தான்.

அவர்களிடம் நீ ஏன் பேசவில்லை, என்ன கோவம் உனக்கு? அதனால்தானே அவன் அப்படி சொல்லி விட்டான் என்ற சந்திரன், “என்னம்மா நீ?” என மகளை குறையாக அலுத்துக் கொண்டார்.

“அது… அவங்க அன்னைக்கு நைட் வீட்டை விட்டு போனாங்கல்ல ப்பா, அந்த கோவம்” என்றாள் வேதா.

மகளின் தோளை ஆதரவாக தட்டிக் கொடுத்தவர், “நான் ஏற்கனவே நிறைய திட்டிட்டேன் வேதா, அவங்களோட பேசு” என்றார். விஷ்வாவிடம் சித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டவர்,  வேதாவை பேசியதற்காக அவனை கண்டிக்கிறேன் எனவும் சொன்னார்.

“ம்ம்… அப்படியே இதுக்காகவும் கண்டிங்க” என்ற விஷ்வா, ஆதியும் சித்துவும் செய்த வேலையை அவருக்கு ஆதாராத்தோடு தெரிய படுத்தி விட்டான். வேதாவால் தடுக்க முடியவில்லை. கணவனை கண்டனமாக பார்த்துக் கொண்டு நின்றாள்.

சந்திரனுக்கு சொல்லொனா  அதிர்ச்சி. உண்மையா என்பது போல மகளை பார்த்தார். வேதாவும் ஆம் என தலையசைக்க, தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டார்.

“அப்பா என்னாச்சு உங்களுக்கு? அவங்க ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க, இனிமே செய்ய மாட்டாங்க ப்பா. ரிலாக்ஸ் ப்பா” அப்பாவை பிடித்துக் கொண்டு சொன்னாள் வேதா.

“சும்மா அவனுங்கள காப்பாத்த நினைக்காத. கிளம்பு நீ” என்றான் விஷ்வா.

இன்னும் அயர்ந்து போனவராக விஷ்வாவை பார்த்தார் சந்திரன்.

“செய்றதும் செஞ்சிட்டு என்ன பேச்சு பேசுறானுங்க. நான் எதிரி,  என் மனைவி அவனுங்களோட சிரிச்சி பேசி உறவு கொண்டாடணுமா? அவனுங்க இருக்க இடத்துக்கு வந்திருக்கவே கூடாது நாங்க” என்றவன், “கிளம்பு வேதா” என்றான்.

ஏற்கனவே இந்த திருமணம் குறித்து பல விதமாக பேசிக் கொள்கிறார்கள், இப்போது விருந்து முடியாமல் பாதியில் சென்றால் உறவுகள் மத்தியில் அவமானமாகி விடும் என எடுத்து சொன்னார் சந்திரன்.

“அப்படியா? உங்களுக்கெல்லாம் அவமானம் ஆகுமா?” என வில்லங்கமாக கேட்டவன், வேதாவின் கைப்பற்றி இழுத்துக் கொண்டு வெளியேற எத்தனித்தான்.

தவிப்பாக தன்னை பார்த்த தந்தையை கண்ட வேதாவின் மனம் சுக்கு நூறாக நொறுங்கியது.