விஷ்வா வேதாவுக்கு முத்தமிட்டு சென்ற பின் வெகு நேரம் அவனை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள் அவள். பின் கீழே சென்று விட்டாள். இரவு உணவு என்ன வேண்டும் என சமையல் கார பெண்ணிடம் சொல்லி விட்டு தோட்டத்தில் சற்று நேரம் நடந்தாள்.
இவளை கண்டு விட்டு தாத்தாவும் நடக்க வந்தார். அவரால் வேகமாக நடக்க முடியவில்லை, அவரின் வேகத்துக்கே இவளும் தன் நடையை மாற்றிக் கொண்டாள். எதை பற்றி பேசினாலும் எப்படியோ பேரனின் பேச்சுக்கு தாவி விடும் அந்த பெரியவரின் பேரனுக்கான தவிப்பை நினைத்து இவளுக்கு அவர் மீது இரக்கமாக இருந்தது.
இருட்ட ஆரம்பித்தது, தாத்தாவும் நடை போதும் என அமர்ந்து விட்டார்.
“ரொம்ப ஸாரி தாத்தா” என்றாள் வேதா.
எதற்கு என அவர் கேட்க, “அண்ணாவும் சித்துவும் செய்ததுக்கு, சத்தியமா அவங்கள்ட்டேருந்து நான் இப்படியொன்னை எதிர் பார்க்கவே இல்லை தாத்தா. எப்படி இப்படி ஆனாங்கன்னு யோசிச்சு யோசிச்சு தலைதான் வலிக்குது” என்றாள்.
“நீ என்னம்மா செய்வ, விடு விடு” என சமாதானமாக சொன்னார்.
விஷ்வாவிடம் அண்ணனின் கைப்பேசியை கேட்டு அவன் கோவப் பட்டதை சொன்னாள்.
“இல்லை தாத்தா, இப்ப தோணுது நான் கேட்ருக்கவே கூடாது. அது… அண்ணாக்காக கூட கேட்கல, ஃபோன் காணோம்னு அப்பா அண்ணாட்ட விசாரிச்சிட்டு இருக்கார். போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணலாம்னு போவார், அண்ணா செஞ்சது தெரிஞ்சா அப்பாவால எல்லாம் தாங்க முடியாது தாத்தா. அதனாலதான்… அப்பாக்காகத்தான் கேட்டேன்” என விளக்கம் சொன்னாள்.
“இது விஷ்வாவுக்கு தெரியுமா வேதா?” என அவர் விசாரிக்க, தெரியாது என்றாள்.
“செஞ்ச தப்புக்கு ஒன்னும் செய்யாம வெளில விட்டுட்டோமேன்னு ஏற்கனவே கோவத்துல இருக்கான், இதுல ஃபோனையும் கேட்கவும் மிதமிஞ்சி ஆத்திர பட்டிருப்பான். நான் புதுசு வாங்கி தர்றேன்மா” என்றார்.
“இல்லையில்ல வேணாம் தாத்தா. அண்ணனே சமாளிச்சுக்கட்டும். எனக்கு அவங்கள சப்போர்ட் செய்ற ஃபீல் ஆகுது, எனக்கும் அவங்க செஞ்சதுல உடன்பாடு இல்லை தாத்தா” என்றாள்.
உன் மீது தவறு என இங்கு யாருமே சொல்லவில்லை என ஆறுதல் படுத்திய தாத்தா, சில நிறுவனங்களில் அவருக்கு இருக்கும் பங்குகளை வேதாவிற்கு மாற்றி தரப் போவதாக சொன்னார்.
அதெல்லாம் வேண்டாம் என மறுத்தாள் வேதா.
“எல்லாத்தையும் விஷ்வாவுக்கே கொடுக்கணும்னு இல்லைமா. உன் பேருலேயும் இருக்கட்டும். நீயும் வீட்லேயே இருக்க போறியா என்ன? அவனால தனியாளா எவ்வளவை பார்த்துக்க முடியும்? நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு சொல்றேன், நீயும் எல்லாத்திலேயும் பங்கெடுத்துக்கணும்” என அவள் மறுக்க முடியாத படி நயமாக சொல்லி விட்டார்.
காற்று வாங்கியபடி இன்னும் சற்று நேரம் அங்கே அமர்ந்திருந்தவர்கள் சாப்பிடும் நேரம் வரவும் உள்ளே சென்றனர். சமையல் செய்யும் பெண்மணி எப்போதோ சென்று விட்டார். தாத்தாவின் உதவிக்கென இரவில் நடுத்தர வயதுடைய ஒரு ஆண் எப்போதும் இருப்பார்.
பேரனை உணவுக்காக அழைத்து வரச் சொல்லி தாத்தா சொல்ல, “அவர் தூங்குவார் தாத்தா, நான் எடுத்திட்டு போய் தந்துக்கிறேன்” என்றாள். அவரும் சரியென சொல்ல, அவர்கள் இருவர் மட்டும் சாப்பிட்டனர்.
விஷ்வாவுக்கான உணவுகளை அவன் படுத்திருந்த அறைக்கு எடுத்து சென்றாள் வேதா. அறை கும்மிருட்டில் இருக்கவும் மின் விளக்கை போட்டு விட்டாள். அரைத் தூக்கத்தில் இருந்தவன் விழித்துக் கொண்டான்.
அவளை பார்த்தவன், “நெனச்சேன், இன்னும் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ண உன்னை ஆளை காணோமேன்னு” என கிண்டலாக சொன்னான்.
அவள் உணவை கண்களால் காட்ட, “ஏன் வாயை தொறந்து பேச மாட்டியா?” எனக் கேட்டுக் கொண்டே எழுந்தான்.
“கம்மியா பேசலாம்னு இருக்கேன், நிறைய பேசினா சண்டைல வந்து முடியுது” என்றாள்.
“என் கூட பேச பிடிக்கலையா? இல்லை சண்டை போட பிடிக்கலையா?” என அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல், “ரெஃரெஷ் ஆகி வந்தா சாப்பிடலாம்” என்றாள்.
கால் மணி நேரத்தில் சாப்பிட வந்தவன் கைப்பேசியில் ஹெட் செட் போட்டுக் கொண்டு ஏதோ கேட்டான்.
“சாப்பிடறப்போ என்ன ஃபோன்?” என அவள் அதட்ட, தாத்தா அவனுக்கு அனுப்பியிருந்த வாய்ஸ் நோட்டை ஒலிக்க விட்டான்.
ஆதியின் கைப்பேசியை விஷ்வாவிடம் வேதா கேட்டதற்கான காரணத்தை சொல்லி, வேதா மிகவும் நல்ல பெண், அவர்களின் செயலுக்காக அவளும் வருந்துகிறாள், அவர்கள் மீதான கோவத்தை வேதாவிடம் காண்பிக்க கூடாது என அறிவுரை சொல்லியிருந்தார் தாத்தா.
“இந்த தாத்தாவை…” என அவள் அலுக்க, “இத என்கிட்ட கூட சொல்லலாம் வேதநாயகி. எதுக்கு தாத்தாகிட்டருந்து மெசேஜ் பாஸ் பண்ற?” எனக் கேட்டான்.
“உங்கள்ட்ட சொல்ல சொல்லி ஒன்னும் தாத்தாகிட்ட கேட்டுக்கல, அவரா சொல்லிருக்கார்” என ரோஷமாக சொன்னாள்.
“ம்ம்… நீ நிஜமா வருத்த படுறியா என்ன?”
“உங்களுக்கு என்னை நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை, என்னை எனக்கு தெரியும்”
“எனக்கும் தெரியணும்!” என அழுத்தி சொன்னான்.
“என்ன தெரியணும்?”
“அவங்க செஞ்சது சரிதான்னு…” அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, “அவங்கன்னு இல்லை யார் அப்படி பண்ணினாலும் என்னால அதை ஏத்துக்க முடியாது” என்றாள்.
“அதை சரி பண்ணனும்னு உனக்கு தோணலைல?”
“நான் அவங்கள்ட்ட பேசி சரி பண்ணுவேன்” என அவள் சொன்னதை ‘அப்படியா!’ என கிண்டலாக பார்த்தான். பின் அவர்கள் பற்றி இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
அவன் சாப்பிட்டு முடிக்கவும், தயக்கமாக அவனை பார்த்து நின்றாள்.
என்னவென அவன் கேட்கவும், “நம்ம ரூம்லேயே தூங்கலாம்ல?” எனக் கேட்டாள்.
“இந்த விஷ்வாவை பிடிச்சு போய் கூப்பிடு, வர்றேன். யாருக்காகவோ தியாகம் பண்ணிலாம் நீ எனக்கு வாழ்க்கை கொடுக்க வேணாம்” என்றான்.
“என்ன… வாழ்க்கை கொடுக்கிறேனா? இங்கேயே கெடங்க” என நொடிப்பாக சொல்லி சென்றவளை ரசனையுடன்தான் பார்த்திருந்தான்.
வேதா புகுந்த வீடு வந்து மூன்று நாட்களாகி விட்டன. விஷ்வாவுக்கு அடிபட்ட விஷயமே தாத்தாவுக்கு தெரியவரவில்லை. அவன் எப்போதும் போல அவனது வேலைகளை பார்த்து வந்தான்.
வேதாவின் பெயருக்கும் பங்குகள் மாறப் போவதை பேரன் எதிர்ப்பானோ, அவனை எப்படி சரி செய்வது என்றெல்லாம் கவலை கொண்டிருந்தார் பெரியவர். ஆனால் அவனோ அவரின் செயலை அப்படியே ஆமோதித்தான்.
மனைவியின் மீது பற்று இல்லாமல் இதற்கு சம்மதம் சொல்லியிருக்க மாட்டான் என புரிந்து கொண்ட பெரியவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
வேதா, விஷ்வா இருவருக்கும் வெவேறு அறைகளில்தான் உறக்கம். வார்த்தைகள் கொண்டு காயப்படுத்திக் கொள்ளாமல் தள்ளியே இருக்கின்றனர்.
அன்று ஞாயிறு என்பதால் விஷ்வா தாமதமாகத்தான் எழுந்து வந்தான். வேதாவின் பெற்றோர் வந்திருந்தனர்.
இங்கே சௌகரியமாக இருப்பதாக வேதா சொல்லியிருக்கவும் வாசுகிக்கும் மனக் கலக்கம் ஓரளவு நீங்கியிருந்தது. மறுவீட்டு விருந்துக்கு அழைக்கவென வந்திருந்தனர். அவர்கள் பக்க சொந்தங்கள் அனைவருக்கும் திருமண விஷயத்தை சொல்லி விட்டார்களாம். கட்டாயத் தாலி கட்டிய கதையை சொல்லாமல், தாத்தா கேட்டு கொண்டதால் கோயிலில் எளிமையாக திருமணம் நடந்ததாக சொல்லியிருக்கிறார்கள்.
பொது வெளியில் வைத்தே விஷ்வா வேதாவுக்கு தாலி கட்டியிருந்ததால் விஷயம் வெளியில் பரவியிருந்ததுதான், தங்களுக்குள் பேசிக் கொண்டார்களே தவிர, வேதாவின் பெற்றோரிடம் வந்து யாரும் துருவிக் கொண்டு விசாரிக்கவில்லை.