“நான் வீட்டுல படிப்பை விட்டு இருக்கும் போது பதினாறு வயசு. உங்க மகளுக்கு குழந்தை பிறந்து தாய் வீடு வந்து இருக்கா… நீங்க படுத்த படுக்கை. அப்பாவோட அக்கா தான் வந்து பார்த்தாங்க. ஆனாலும், உங்க மகளோட பீரியட்ஸ் துணிய யாரும் தொடலை. என் வயசுக்கு நான் துவச்சு போட்டேன். அசந்து தூங்குறவ பிள்ளை அழுதா கூட எழும்ப மாட்டா. எத்தனை ராத்திரி தூக்கம் கெடுத்து அவ பிள்ளையை தூக்கி வச்சு இருக்கேன். அவ புருசன் எனக்கு யாரு?…”

     “அவர் துணிய கூட நான் துவச்சு போட்டேன். அவளை வச்சு தானே அவர் சொந்தம். நான் அங்க இருந்த வரைக்கும் அவளுக்கு, அவ புருசனுக்கு, அவ பிள்ளைக்கும் நான் பார்த்த மாதிரி, என்னைக்காவது ஒரு நாள் எனக்கு பார்த்து இருக்காளா… எனக்கும், என் புருசனுக்கும் என்னவோ விடுங்க, நாங்க சேர்ந்து பத்து மாசம் ஆக போது, இதுவரைக்கும் உம் மக, மகன் யாராவது எங்களை வீட்டுக்கு வான்னு அழைச்சாங்ககளா… சின்ன பிள்ளைகளுக்கு துணி எடுத்ததை கூட சொல்லி காட்டுறீங்களே. அப்போ நான் செஞ்சது என்ன கணக்கு… காசு, பணத்துக்கு மட்டும் தான் மதிப்பா…” ஆவேசமாக கேட்க.

   “ஐயோ! சரண். அப்படி இல்லடி, மாயா கூட சேர்ந்து சிரிக்கிற நீ, உன் அக்கா பிரியாவ தள்ளி வைக்கிறயேன்னு ஒரு ஆதங்கம். அதை எப்படி சொல்லன்னு தெரியாம…” என்று அவர் திணற

   ஒரு விரக்தி சிரிப்பை சிந்தியவள், “மாயா எனக்கு யாருமே இல்லாமா… ஆனா, பிரியா என் கூட பிறந்தவ, சின்னது தொட்டு எவ்வளவு பார்த்து இருப்போம். என் இரத்த சொந்தம். அவ கிட்ட எனக்கு எதிர்பார்ப்பு இருக்க கூடாத… நான் ஏன் அவளுக்கு அவ்வளவு செஞ்சேன். எனக்கு ஒரு காலத்துல துணை நிப்பான்னு தான். என் பிள்ளைகளை தொட்டு கூட தூக்கலை. அவ புருசனுக்கு நான் செஞ்ச மாதிரி, எம் புருசனுக்கு ஒரு வேளை சாப்பாடு போடுவாளா…”

   “உம் மகன் மட்டும் என்ன?.., இன்னைக்கு தாய்மாமன் சீரா பிள்ளைகளுக்கு தங்க சங்கிலி போட்டான். உங்களுக்கு அவ்வளவு பெருமை. இன்னைக்கு தான் நான் அவன் தங்கச்சின்னு தெரிஞ்சுச்சா. நான் இன்னிக்கா பிள்ளை பெத்தேன். தட்டு, பழம், சீர்ன்னு சபை நிறஞ்சது தான்…” 

              “இது எல்லாம் அவன் கூட பொறந்த தங்கச்சி சரண்யாக்கு செய்யலை. வெற்றி வேல் பிள்ளைகளுக்கு செஞ்சான்.  பணம் பணத்தோடு தான் சேரும். கூட பொறந்த பாசம் கூட பணத்தை வச்சு தான் மதிப்பு போல… புருசன் சரி இல்லன்னா ஒரு பொண்ணு பொறந்த வீட்டை நம்பி, கூட பொறந்த இரத்த உறவ நம்பி தான் வருவா… நான் அங்க தோத்து போனேன்…”

   “அக்கா புருசன், அண்ணன் பொண்டாட்டின்னு எதை சரிகட்ட. அதுக்கு புருசன் ஒருத்தனை சரி கட்டுன போதும்ன்னு வந்துட்டேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வந்தேன். என் மரியாதையை என் புருசன் காத்து நின்னாங்க…”

 முகத்தை அழுந்த துடைத்து, “எல்லா புருசன், பொண்டாட்டிக்கும் சண்டை வரும். எங்களுக்கும் வந்துச்சு, அவ்வளவு தான். இங்க சரண்யாக்கு எந்த மதிப்பும் இல்லை. வெற்றி வேல் பொண்டாட்டிக்கு தான் மதிப்பு. அந்த மரியாதையோட தான் அவங்க என்னை பாக்குறாங்க, அதே வெற்றி வேல் கூட பொறந்தவங்க, அந்த மரியாதையில் நான் ஒரு எல்லையில நிக்குறேன். எங்களுக்குள்ள எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என் வீடு வந்தா வாங்க, வரலையா அதுவும் சரி தான். என்னை பாதிக்காது. இவ்வளவு நடந்தும் எம் புருசன் என்னை தான் கேட்டாங்க, உங்களை ஒரு வார்த்தை கேட்கலை…” 

             “அதே மாதிரி தான் நானும், என் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், எல்லாம் வெற்றி வேல் அப்படின்ற  தனி மனுசன் கிட்ட மட்டும் தான். எம் மாமியார் கிட்ட கூட கிடையாது. அந்த தெளிவு மட்டும் தான் இந்த வாழ்க்கையை கொண்டு போகுது…” 

           “வெற்றி வேல் எனக்கு சரியா சொல்ல தெரியலை. ஏதோ ஒன்னு இழுத்து பிடிச்சது. யாரையும் குற்றம் சொல்லி ஒதுக்க எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு எல்லாரும் முக்கியம் தான். எனக்கான முக்கியதுவம் என் புருசன் கிட்ட இருந்தா போதும்… உங்க எல்லாரையும் சரி கட்டிடுவேன். பிரியா, சுரேன் எப்படியோ அப்படி தான் சரண்யா. அவ கிட்ட மட்டும் மாற்றத்தை எதிர் பார்க்காதீங்க…” என்று சொன்னவள் கீழ சென்று விட்டாள்.

  மறுநாள் கிளம்பும் போது எல்லாம் செய்து அவர்கள் காரில் தான் அனுப்பி வைத்தார்கள். 

    வெற்றி சவாரிக்கு சென்று விட, பிள்ளைகள் பள்ளிக்கும் சென்று விட சரண்யா கார் செட்டுக்கு வந்தாள். வெற்றி சொல்லி கொடுத்தது தான். வெற்றிக்கு வேலை அதிகம் இருக்கும் போது பண வரவு கணக்கு பார்க்க முடியாது என்பதால் அந்த பொறுப்பை சரண்யா எடுத்து கொண்டாள். மதியம் வரை கார் ஆபீஸில் இருப்பவள், அதன் பின் வீடு சென்று ஒரு குட்டி தூக்கம். அடுத்து பிள்ளைகள் வந்தால் நேரம் பறந்து விடும்.  

  அன்று இரவே கோவில் விசயம் பேச தனம், வேல் முருகன் வந்து விட்டார்கள். இவர்கள் வந்ததன் நோக்கம் தெரியும். இப்பொழுது எல்லாம் மாமியாரை கண்டு சரண்யாக்கு எந்த பயமும் இல்லை. 

   தனம் எவ்வளவு எடுத்து சொல்லியும் வெற்றி ஒத்து கொள்ளவே இல்லை. வேல் முருகனும் எடுத்து சொன்னார் தான், வெற்றி பிடி கொடுக்க வில்லை.

   “அத்தை, இட்லியா, தோசையா…” சரண்யா வந்து நிக்க.

  “எம்புட்டு முக்கியமா பேசுறோம். இதை சொல்லி வார, போடி அங்குட்டு…”

  “எம்புட்டு நேரமும் நீங்க பேசுங்க. என் வேலை எனக்கு முடிய வேண்டாமா…” அவரை போலவே பேசி செல்ல, பல்லை கடித்தார் தனம்.

    “வெற்றி, அம்மா சொல்றது என்னன்னா….” 

      “அத்தை சாம்பார் போதுமா, வெங்காய சட்னி வைக்கவா…” வேற எப்படி அவரை வெறுப்பேற்ற

  “என்னத்தவோ பண்ணி தொலை…”

“மிளகு பால் வைக்கவா…”

 “இந்தாடி என்ன ஏத்தமா?…”

   “உனக்கு வேலை வைக்காம, மருமக  எல்லாம் செய்யிற கொழுப்பா… பேருக்கு தான் தனி வீடு. டீ கூட மகன் வீட்டுல தான். நாக்கு ருசி பாக்குற தான, உனக்கு செய்ற மருமகளுக்கு பதில் சொல்ல மாட்டியோ… போட்டதை திங்க சொல்லாம, தாங்குற மருமகளை குறை சொல்றவ…” வேல் ரைடு விட சரண்யாக்கு சிரிப்பு.

    வெற்றி எதையும் கண்டு கொள்ள வில்லை. அவன் பேச்சில் உறுதியாக நிக்க, தனம் அழுத்தம் கொடுத்தார்.

   சரண்யா, ஏய் சரண்யா… எங்க வா…” 

  “உங்களுக்கு தான் அத்தை தோசை ஊத்துனேன்…”

 “உம் புருசனுக்கு எடுத்து சொல்லு?…”  

   “ஏய்… இந்தாடி… எவடி உள்ள… அடியே… மதுரைகாரி… இப்படி புது புது பேர் வைக்காம சரண்யான்னு சொன்னது நல்லா தான் இருக்கு. அதுக்காக எல்லாம் உங்களுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன். உங்க மகனாச்சு, அம்மாவாச்சு… பத்து மாசம் சுமந்து பெத்த தாயை மதிக்கலை, நான் எம்மாத்திரம்…” எப்போதும் அவர் சொல்லும் வார்த்தையை திருப்பி சொல்ல

 “கூறு கெட்டவா…” தனத்திற்கு கேலி, கிண்டல் எல்லாம் ஆகாது. அதை கொண்டு அவருக்கு அடங்கி செல்வது போல அவரை வச்சு செய்வாள் சரண்யா.

  “என்ன தான் சொல்ற வெற்றி…”

  “அம்மா, சரண்யா வச்சே மாசத்துல ஏழு நாள் வீட்டை விட்டு தனியா இருக்கனும். எனக்கு இருக்குறது ரெண்டும் பொம்பளை பிள்ளைக, அவங்க வளர்ந்து வரும் போது, மொத்தமா குடும்பத்தை விட்டே ஒதுங்கி தான் போகணும். அதுக்கு நான் எதுக்கு துபாய்ல இருந்து வரணும்…” 

  “ஏன் தனியா இருக்கனும். உன்னை நான் பாக்குறேன் வெற்றி…” என்று தனம் சொல்ல.

   “முப்பத்தாறு வயசுல காவி வேட்டி கட்டி எதுக்கு கார் ஓட்டணும். பேசாம திருவோடு எடுத்து பழனி போறேன்… என் குடும்பத்தை நீங்க பாருங்க…” வேல் முருகன் புரிந்து கொண்டார்.

  “சரி விடு தனம். அவன் யோசனையும் சரி தான்…”

 “அதெப்படி சரி. சாமி வரம் தந்தா வேண்டாம் சொல்றான். வெற்றி உனக்கு அருள் இறக்கணும்…”

 “அம்மா!… பொண்டாட்டிய விட்டு தள்ளி நிக்கிற வயசா எனக்கு…” உடைத்தே பேசி விட, சரண்யா உள்ளே சென்று விட்டாள்.

   தனத்துக்கு பேச்சே வரவில்லை. மகனுக்கு என்ன பதில் சொல்ல, இப்படி சொல்லுவான் என்று எதிர் பார்க்கவே இல்லை. மெளனமாக வெளியேறி விட்டார்.

  “ஏன்…” என்று சரண்யா கேட்க. வேல் முருகனும் சென்று விட்டார்.

  “பின்னே நிஜம் தான சரண். பத்து நாள் வாழ்க்கையே எனக்கு மறந்து போச்சு. இப்போ கேளு கிஸ் மீன்னு…”

  அவள் முறைக்க… சிரித்தவன்.

   “சாமி வாரது ரொம்ப பெரிய விசயம் சரண். நான் ஊர் பூரா சுத்துறவன். நல்லது, கெட்டது எதையும் பார்க்க முடியாது. எப்பவும் பக்தியோடு இருக்க முடியாது தான… நீ, இங்க வந்து பல முறை பீரியட்ஸ் ஆகி இருக்க. அப்போ எல்லாம் தள்ளியா இருந்த… ஒரே பெட், ஒரே பாத்ரூம் தான். இனி அது எல்லாம் மாறும். என் மேல காலை தூக்கி போட்டு தூங்குற பிள்ளைக ஒதுங்கி போகும். அஜியும், விஜியும் ஒரு நாள் உன்னை மாதிரி எப்படி சொல்ல, அவங்களுக்கு அப்பாவா மட்டும் தான் நான் இருக்க நினைக்கிறேன்…” என்று விளக்கம் கொடுக்க. புரிந்து கொண்டாள் சரண்யா.

  “அத்தோட, நம்ம வாழ்க்கையும் ஒரு நாள் சரியாகும் சரண்யா. சரியாகும் தான…” வெற்றிக்கு ஒரு ஏக்கம்.

   “நாலு பேருக்கு முன்னாடி உங்க கூட சண்டை போட்டது தான் எல்லாருக்கும் தெரியும். நாலு சுவத்துகுள்ள நான் வாழ்ந்தேன். உங்க கூட உண்மையா, காலத்துக்கும் நீங்க மட்டும் தான்னு நினைப்போடு சந்தோசமா தான் வாழ்ந்தேன். உங்க மேல எனக்கு நிறைய அன்பு இருந்தது. உண்மையான அன்பு எதையும் மாற்றும். நான் உங்க மேல வச்ச அன்பை தான் தேடிட்டு இருக்கேன். அதுக்கு எட்டி நின்ன தீர்வு கிடைக்குமா… எல்லாத்தையும் மறக்க, நான் என்ன செய்ய எனக்கு தெரியலை…” என்றவள் சென்று விட,

   “என்ன சொன்னா, புரியாமவே பேசிட்டு போய்டா… சண்டை போட்டா மட்டும் தான் பாயின்ட் பாயின்ட்டா பேசுவா போல…” குழம்பி நின்றான் வெற்றி.