ஆனந்த போர்க்களம் – 14

சந்தியா வாடிய பயிர் போல ஆனாள். ஒரு வீம்பில், கோபத்தில் விலகி நின்றவளுக்குக் கணவன் தன்னை இத்தனை நாட்களாகியும் திரும்பியும் பார்க்காதது பலத்த அடியாக இருந்தது.

‘கோபம் வந்தால் தன்னை வேண்டவே வேண்டாம் என்று இருந்து விடுவாரோ… இந்த கல்யாணமே ஏன் செய்தோம் என்று கவலைப்பட்டவர் தானே!’ அவளுக்கு நினைக்க நினைக்க மனதே விட்டுப்போனது.

‘அப்படி என்ன நாம் தவறாகச் சொல்லி விட்டோம் அவரோட அம்மா, அப்பா இருந்திருந்தாலும் இப்படி தானே எடுத்துச் சொல்லி இருப்பார்கள்’ என எண்ணியவளுக்குக் கணவனின் மனதில் தான் இல்லவே இல்லை என்பது மனதைப் பாறாங்கல்லாய் கனக்கச் செய்தது.

ஸ்ரீதரன் வேறு சின்னஞ்சிறு மாற்றத்தையும் எளிதாகக் கண்டுகொள்ள அவன் முன்பு நடிப்பது வேறு அத்தனை சிரமமாக இருந்தது. அவன் பள்ளியில் இருக்கும் நேரம் தான் இவள் வேதனையில் வாடும் நேரம் என்றாக வீரேந்திரனுக்கும் இவளின் கவலை, வேதனை தெரியவில்லை.

தெரிந்திருந்தாலும் கண்டு கொண்டிருப்பானோ என்னவோ… அவனை பொருத்தவரையிலும் சந்தியா அவனுக்குக் கடிவாளமிடுவதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. கோயில் காளையாகத் தான்தோன்றித்தனமாகச் சுற்றி திரிபவனுக்குத் தன்னை கட்டுப்படுத்தும் உறவு சினத்தைத் தான் வரவழைத்தது.

இந்த தொந்தரவு வேண்டாம் என்று எண்ணியதால் தான் திருமணமே வேண்டாம் என்று உறுதியாக நின்றான். அதற்குள் என்னென்னவோ நடந்து விட்டது.

இந்த பிரச்சினையின் பின்பு, சந்தியா மனநிம்மதி தேடி அடிக்கடி கோயில், தாய் வீடு என செல்வது வழக்கமாகியிருந்தது.

முன்பொருநாள் வந்தபோது சந்தியாவை அழைத்துச் செல்ல வீரேந்திரனே வீட்டிற்கு நேரில் வந்திருந்த காரணத்தால், இப்பொழுது மகள் தனியாக வீட்டிற்கு வந்தாலும் நாராயணன் எந்த கவலையும் படுவதே இல்லை.

வழக்கம்போல ஒருநாள் அப்பா வீட்டிற்கு வந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியிருந்தாள்.

வீட்டு வாசலில் இருந்த செருப்புகளின் எண்ணிக்கையே சொன்னது உள்ளே அந்த அறுந்த வாலின் நண்பர்கள் படை கூடியிருக்கிறது என்று!

இருந்த சோர்விலும், அயர்விலும் அவர்களை எதிர்கொண்டு வரவேற்று, அளவளாவி எதுவும் முடியும் போலத் தோன்றவில்லை. அமைதியாக வீட்டின் பக்கவாட்டிலிருந்த மாடிப் படிகளில் சென்று அமர்ந்து கொண்டாள்.

என்னவோ மிகவும் சோர்வாகத் தோன்றியது. இப்பொழுதெல்லாம் அடிக்கடி நேரங்காலமில்லாமல் பசிக்க வேறு செய்தது. நாள் வேறு தள்ளிப்போயிருந்த காரணத்தால் பிள்ளையாக இருக்குமோ என்று ஆசையும், ஏக்கமுமாக இருந்தது.

அடிவயிற்றை இதமாக வருடிக் கொடுத்துக் கொண்டாள். பிள்ளையாக இருக்க வேண்டும் என்று மனம் ஆவலாக எதிர்பார்த்தது.

ஆனால், சொல்லி மகிழ வேண்டியவன் பாராமுகம் காட்டுகிறானே!

மெடிக்கலில் கிட் வாங்கி செக் செய்ய வேண்டும். கணவனிடம் சொல்லி வாங்கி வர சொல்லலாம் என்றால், அந்தளவுக்கு இப்பொழுது பேச்சுவார்த்தைகள் இல்லை.  இருந்த அலுப்பில் இவள் போய் வாங்கி வரவும் முடியும்போல தோன்றவில்லை.

‘ச்சு… வரும்போதே ஆட்டோவை மெடிக்கல் ஷாப் எங்கேயும் நிறுத்த சொல்லி வாங்கிட்டு வந்திருக்கலாம். எதுக்கு இவ்வளவு சோம்பேறித்தனமோ…’ என முனங்கிக் கொண்டாள். இந்த நேரத்தில் அயர்வாகத் தான் இருக்கும் என அவளுக்குப் புரியவில்லை பாவம்.

இப்பொழுது எப்படி செக் செய்ய என்ற குழப்பம்…

உறுதியானால் கணவனிடம் எப்படி சொல்வது என்ற தடுமாற்றம்…

ம்பச்… இனி பிள்ளை வந்தால், பிள்ளைக்காக தன்னிடம் பேசுவானா என அந்த எண்ணமும் சலிப்பைத் தான் தந்தது.

இவளின் யோசனையைக் கலைக்கும் விதமாக, “ம்பச்… போதும் விடுடா…” என்ற கிசுகிசுப்பான பெண்ணின் குரலைத் தொடர்ந்து முத்தமிடும் சத்தம் தொடர்ந்து கேட்க அசூயையாக முகம் சுழித்தவள், சத்தம் வந்த திசைக்குச் சென்றாள்.

வீட்டின் பக்கவாட்டில் தான் அந்த சத்தம். அவள் சென்று பார்த்தபோது அந்த பதின்ம வயது ஆணும் பெண்ணும் அரை நிர்வாணத்தில், பின்னிப் பிணைந்து… அவள் வாழ்க்கையில் இப்படி ஒரு காட்சியைப் பார்த்ததில்லை. முகம் சுழித்தவள் அடிவயிற்றிலிருந்து குமட்ட, கட்டுப்படுத்த முடியாமல் அங்கேயே வாந்தி எடுக்கத் தொடங்கி விட்டாள். என்ன மாதிரியான காட்சியைப் பார்க்க நேர்ந்து விட்டது அவளுக்கு மனதே ஆறவில்லை.

காலையிலிருந்து இருந்த மனவுளைச்சல், தலைச்சுற்றல், சோர்வு கூடவே இந்த காட்சியையும் காண நேர்ந்த கொடுமை எல்லாம் சேர்ந்து அவளை மிகவும் மோசமாகப் பாதித்தது.

சந்தியாவின் சத்தத்தில் அவசரமாக விலகியவர்கள் வேகமாகப் பிரிந்து தங்கள் உடைகளைச் சரிசெய்ய ஒருமாதிரி முகம் வெளிறிப் போய் நின்றிருந்தவள், கைப்பேசியை எடுத்து ஸ்ரீதரனை அழைத்தாள்.

பிரதாப்பும், மதிஷாவும் உடல் நடுங்க நின்றிருந்தார்கள். இந்த நிலையில் வேறொருவர் பார்வையில் விழ நேர்ந்து விட்டதே என்று அவர்களுக்குக் கூசிப் போனது. தவறு செய்தபோது தோன்றாத பயம், மாட்டிக் கொண்டபோது அதிகமாகத் தோன்றியது.

இனி எப்படி இவரை இன்னொருமுறை எதிர்கொள்ள முடியும்? ஸ்ரீதரனின் முகத்தில் எப்படி இனி விழிப்பது?

மேனி நடுங்க, உடல் கூச, யாரையும் எதிர்கொள்ளும் திராணியின்றி நின்றிருந்தார்கள்.

“என்ன கெஃக் தனியா வர பயமா இருக்கா? நான் வரவா?” என நண்பர்கள் கூட்டத்திலிருந்து தள்ளி வந்து ஸ்ரீதரன் விசாரிக்க,

“உடனே எல்லாரையும் வீட்டுக்குக் கிளம்ப சொல்லிட்டு ஸ்டேர்கேஸ் கிட்ட சீக்கிரம் வா…” என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் சந்தியா அழைப்பைத் துண்டித்தாள்.

என்னவோ ஏதோ என்று ஸ்ரீதரன் பயந்து போனான். “டேய் ஒரு எமெர்ஜென்சி டா. நீங்க எல்லாம் உடனே வீட்டுக்கு கிளம்புங்க… நாளைக்கு ஸ்கூலில் பேசிக்கலாம்” என அவசரமாக வீட்டிற்குள் வந்து நண்பர்களிடம் சொல்ல,

“என்னடா ஆச்சு? எங்க ஹெல்ப் எதுவும் வேணுமா?” என அவர்களும் பதறினார்கள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லைடா… நான் பார்த்துக்கிறேன்…” என்றவன் முகத்தில் இருந்த குழப்பத்தில், “ஓகே மச்சான் பாய்… டேக் கேர்” என சொல்லிக்கொண்டு எல்லாரும் உடனே சிட்டாகப் பறந்தார்கள்.

எல்லாரின் வண்டியும் சென்ற பிறகும் பிரதாப்பின் வண்டி மட்டும் மீதம் இருக்க, ‘ச்சு இவன் எங்கே தொலைஞ்சான்?’ என்ற யோசனையோடே அவன் பெயரைச் சொல்லி அழைக்க, அவன் சத்தம் கேட்கவில்லை.

‘சரி அவனை அப்பறம் பார்த்துக்கலாம்’ என்று எண்ணியபடியே வீட்டின் பக்கவாட்டை நோக்கி வேகமாக நடந்தான்.

“என்னாச்சு சந்து? எல்லாரும் போயிட்டாங்க இந்த பிரதாப் மட்டும் எங்கேன்னு காணோம்… எதுவும் பிரச்சினையா?” என்று கேட்டபடியே வீட்டின் பக்கவாட்டுக்கு வந்து அண்ணியை நெருங்கியவன், அவள் அருகிலிருந்த வாந்தியைப் பார்த்துவிட்டு,

“அண்ணி… என்னாச்சு… உடம்பு எதுவும் சரியில்லையா?” என பதறினான். வேகமாக அவளின் நெற்றியில் கைவைத்து ஆராய லேசாகச் சுட்டது போலத்தான் தோன்றியது.

அவள் ஒன்றும் பேசாமல் நின்றிருக்க, “என்ன அண்ணி?” என மீண்டும் அவள் முகம் பார்த்துக் கேட்டதும், அவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு எதிரில் பார்க்க, அவள் பார்வை சென்ற இடத்தில் இவனும் பார்வையைச் செலுத்தியவன் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்தான். நண்பர்கள் இருந்த கோலத்தில் ஒருமாதிரி அருவருப்பாக உணர்ந்தான். அவனுக்குக் கூசிப் போனது.

நம்பி வீட்டிற்குள் விட்டால் இவர்கள் வீட்டை எந்தமாதிரி பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற கோபம் நெருப்பெனக் கனன்றது.

அதிலும் தன் அண்ணி இவர்களின் இந்த கோலத்தைப் பார்க்க நேர்ந்து விட்டதை எண்ணி மனதளவில் பலமாக அடி வாங்கியது போல உணர்ந்தான்.

என்ன மாதிரி உணர்ந்தாளோ பாவம்! அதற்குத்தான் இந்த வாந்தியாக இருக்குமோ என யோசித்தவனுக்கு நண்பர்கள் இருவரையும் சாட்டை எடுத்து விலாசி தள்ளும் ஆத்திரம்.

“ச்சீ…” என்று பிரதீப்பையும், மதிஷாவையும் பார்த்துச் சொல்லிவிட்டு முகத்தைச் சுழித்தான். இருவருக்கும் முகத்திலேயே உமிழ்ந்தது போல இருந்தது.

ஏற்கனவே சந்தியா வாந்தி எடுத்தபோதே தங்களைக் கீழாக எண்ணியவர்கள், இப்பொழுது நண்பனின் முக சுழிப்பில் உள்ளுக்குள் சில்லு சில்லாய் உடைந்தார்கள்.

“நம்பிக்கை துரோகிங்களா? அப்படி என்னடா உங்களுக்கெல்லாம் அ**பு… அதைத் தணிக்க எங்க வீடு தான் கிடைச்சுதா? தெரு நாய்ங்க மாதிரி… உங்களுக்கெல்லாம் அசிங்கமா இருக்காது…” என்று கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் தாறுமாறாக ஸ்ரீதரன் திட்ட,

பிரதாப் தலைகுனிய, மதிஷா அழுகையில் கேவினாள். “ம்பச்… அவங்களை அனுப்பு முதல்ல…” சந்தியா அழுத்தமாகச் சொன்னாள். அவளுக்குக் குரலே எழவில்லை. ஒருமாதிரி தேகம் மொத்தமும் அருவருப்பில் கூசியது.

“ரொம்ப சாரி அண்ணி…” என இருவரும் குற்றவுணர்ச்சியோடு சொல்லிச் செல்ல, சந்தியா அவர்கள் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.

இப்பொழுது ஸ்ரீதரனுக்கு குற்றவுணர்வாய் போனது. ‘பெரியவங்க இல்லாத வீடு… அடிக்கடி இத்தனை பிரண்ட்ஸை வர வைக்காத’ என சந்தியா எத்தனையோ முறை படித்துப் படித்துச் சொல்லியிருந்தும், கேட்காத தன் முட்டாள்த்தனத்திற்கு எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளிடம் மன்னிப்பு கேட்பது?

அவர்கள் சென்றதும் சந்தியா ஸ்ரீதரனைத் திரும்பியும் பார்க்காமல் வீட்டிற்குள் நுழைந்தாள். அவளின் புறக்கணிப்பு அப்படி வலித்தது.

பின்னோடே வேகமாக வீட்டிற்குள் சென்று, “அண்ணி…” என்றான் பரிதாபமாக.

அவள் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. ஷோபாவில் அமர்ந்து, வலது கை முட்டியை மடியில் ஊன்றி, அதன் உள்ளங்கையில் தலையைத் தாங்கி சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

இப்படி ஒரு காட்சியைக் காண நேர்ந்ததே என்கிற அருவருப்பு அவளுக்குள் குறைவதாக இல்லை. வீட்டை எந்த மாதிரி ஆக்கிவிட்டான் என்று ஸ்ரீதரன் மீது பொங்கிய கோபத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

“அண்ணி… பிளீஸ்… இப்படி நடக்கும்ன்னு நான் எதிர்பார்க்கலை…” என்றான் கெஞ்சலுடன்.

விழுக்கென்று நிமிர்ந்தவள், “ஆனா நான் எத்தனை முறை எடுத்துச் சொல்லியிருப்பேன்?” என்றாள் ஆக்ரோஷமாக.

பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றான்.

வேகமாக எழுந்து அவன் அருகே வந்து, “உங்க அம்மா இருந்து சொல்லியிருந்தாலும் இப்படித்தான் அலட்சியப்படுத்தி இருப்பியா?” சாட்டையடியாய் வந்து விழுந்தது அவளின் கேள்விகள்.

சந்தியாவிற்கு பெரும் கோபம்! தன் பேச்சைக் காது கொடுத்துக் கூட கேட்க மறுத்த கணவன் மீதான கோபம் இப்பொழுது கொழுந்தனிடம் திரும்பியது.

இந்த கேள்வியைக் கணவனிடம் கேட்க முடியாத இயலாமையில் இவனிடம் வெடிக்கிறாளா? இல்லை இன்று பார்க்க நேர்ந்த அவல காட்சியால் இப்படி காய்கிறாளா என்று அவளுக்கே தெரியவில்லை.

ஸ்ரீதரன் பேச்சிழந்து போனான். சந்தியாவிற்கான இடம் அவன் மனதில் என்றுமே உயர்வு தானே! “என்ன அண்ணி இப்படி சொல்லிட்ட… என்னை அஞ்சு வயசு வரை வளர்த்த அம்மா, அப்பா பாசம் எனக்கு பெருசா ஞாபகம் இல்லை. ஆனா உன் பாசம் என்னோட உயிர் வரை நிறைஞ்சு இருக்கு… ஏதோ விளையாட்டு புத்தியில கேட்டுக்காம இருந்துட்டேன். அது தப்பு தான். அதுக்காக இவ்வளவு பெரிய வார்த்தை சொல்லுவியா?” என்றான் கலக்கமும், தவிப்புமாக.

ஆக்கிரமித்த கோபம் அவளின் மனதை இளக்க விடவில்லை. பொங்கிய சினம் கட்டுப்பட மறுத்தது.

“ஆயிரம் சொன்னாலும் நீ கேட்கலை தானே? அதானே இந்த கூமுட்டை சொன்னதை கேட்கணும்ன்னு என்ன இருக்கு உனக்கு?”

பலமாக அதிர்ந்தான் ஸ்ரீதரன். “அண்ணி…” என்றான் தவிப்பாக.

ஏளனமாகச் சிரித்தவள், “கே ப்ளஸ் எஃக் தானே கெஃக்… அதாவது உன் பாஷையில கூமுட்டை…”

“ம்பச்… அது விளையாட்டுக்குன்னு உனக்கே தெரியும்…” என்றான் வேகமாக. “உனக்கு பிடிக்காட்டி இனி அண்ணி தவிர வேற எதுவும் சொல்லலை” சிறுபிள்ளை ரோசமாய் உரைத்தான்.

சாதாரண நேரம் என்றிருந்தால், இவனின் ரோசத்திற்கு மனம் உடனே கரைந்திருக்கும். ஆனால், இன்று கோபம் மட்டும் மட்டுப்படவே மறுத்தது. சினத்தில் உடல் நடுங்க நின்றிருந்தவள்,

தன் தலையிலேயே அறைந்து கொண்டு, “எத்தனை முறை இப்படி எல்லாரையும் கூப்பிட்டு கூத்தடிக்காதன்னு சொல்லியிருப்பேன். இனி ஜென்மத்துக்கும் இன்னைக்கு பார்த்த காட்சி மறக்குமா? எனக்கு என்ன தலையெழுத்து அதைப் பார்க்க? இந்த வீடு… நம்ம வாழற வீடு… நம்ம முன்னோர்கள் வாழ்ந்த வீடு… நமக்கு கோயில் மாதிரி இல்லையா?

நாளைக்கு நம்ம வீட்டை நான் சுத்தம் செய்யறேன்னு வை… இந்த அசிங்கத்தை எல்லாம் நான் சுத்தம் செய்யணுமா?

பக்கத்து வீட்டுல மாடியில நிக்கிற யாரும் இதை பார்த்திருந்தா நம்ம வீட்டைப் பத்தி என்ன நினைப்பாங்க? உன்னால என்ன கேவலத்துக்கு நான் ஆளாயிட்டேன் பாரு…” என அவள் புலம்ப,

“சாரி அண்ணி… இனி இப்படி செய்ய மாட்டேன்… உன் சொல்பேச்சு கேட்டு பொறுப்பா இருக்கேன். பிளீஸ் வருத்தப்படாத…” என்றான் பரிதாபமாக.

கோபம் அடங்க மறுக்க, அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தாள். “தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைன்னு நானும் பொறுமையா சொல்லி தந்தா என்னை எந்த நிலைமையில நிக்க வெச்சுட்ட நீ?” என்று அந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் மனம் நடுங்கச் சொன்னவள்,

மீண்டும் அவன் கன்னத்தில் அறைந்து தோளிலும் சரமாரியாக அடித்தாள்.

எல்லா அடிகளையும் வாங்கிக்கொண்டு மரம் போல நின்றிருந்தான் ஸ்ரீதரன்.

அவனை பொருத்தவரையிலும் அண்ணி தன்னிடம் பாராமுகம் காட்டுவதைக் காட்டிலும் இப்படி அடித்து விடுவது எவ்வளவோ மேல்!

ஆனால், இந்த காட்சியைப் பார்த்த வீரேந்திரனும் அப்படி நினைக்க வேண்டுமே!

தம்பியை மனைவி அடிப்பதைப் பார்த்த நொடி அவனின் ரத்தம் கொதித்தது. கண்கள் சிவக்க, “ஏய்…” என ஆக்ரோஷமாகக் கத்தினான்.