புதுப்புது அர்த்தங்கள்….  நாள் – 28

அத்தியாயம் 79

மருத்துவர் கொடுத்த  மாத்திரைகள் வேலையைக் காட்ட , சந்தியாவின் பரபரப்பும் படபடப்பும் சற்று குறைந்திருந்தது .

மூன்று நாட்களுக்குப் பிறகு, பேறுகாலத்தில் படிக்க நல்ல புத்தகங்கள், பார்க்கக் கூடிய நல்ல யூடூயுப் சேனல்களைப் பரிந்துரைக்கும்படி ரஞ்சனி கேட்க , 

சந்தியாவும் சொல்ல , சற்று நேரத்தில் பேச்சு ரஞ்சனியின்  வாழ்விற்கு வர , 

“ முதலில் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை சந்தியா  , மயக்கம் , வலி , கால் இல்லை என்ற வேதனையிலே  நாட்கள் போய்விட்டது .அப்புறம் தான் அவங்க வீட்டில் வரவில்லை என்பது உரைத்தது .

அம்மா அப்பாவிடம் கேட்க , அப்பா முகம் வேதனையில் சுருங்க, அம்மா வாய் பொத்தி அழு , 

‘விசயத்தைப் புரிந்து கொண்டேன் . ‘

என் வேதனையைக் காண்பிக்கக் கூடாது என்பதற்காக விழிகளை மூடினேன் , ஆனால்  என்னையும் மீறி கண்ணீர் வழிந்தது. 

அம்மா, ‘ஓ…’வென்று அழுதபடி வந்து , என் கையைப் பிடித்துக்கொண்டார் . அப்பா காலைத் தடவிக் கொடுக்க , அப்படியே அமைதியாகப் படுத்துக் கிடந்தேன் . 

ஆனால் மனதிற்குள் எல்லாம் ஓடியது . பழகிய பழக்கத்திற்காகக் கூட வராத  சுயநலவாதிகளிடம் என்னைச் சேர்க்காத கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொண்டேன் . அத்தோடு என் வாழ்க்கையின் அந்தப் பக்கங்களைக் கிழித்தும் போட்டு விட்டேன் . 

எனக்காக தவிக்கும் என் குடும்பத்தினருக்காக , முழு முயற்சியில் இறங்கினேன் . கிட்டதட்ட ஒரு வருட போராட்டத்திற்குப் பிறகு , ரகு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன் . அப்புறம்….” என்று வழக்கம் போல் போனை வைத்தாள் .

சந்தியா மனதில் ரஞ்சனியின் கஷ்டங்களே வியாபித்திருக்க , அவளுடைய பிரச்சனைகள் பின்னால் சென்றன . 

விஸ்வா வந்தவுடன் அனைத்தையும் கொட்டினாள் .  அவர்களைத் திட்டினாள் .

விஸ்வா அனைத்தையும் கேட்டு ஆடிப் போனான் . தன்னுடைய சுயநலத்தை எண்ணி கூனிக் குறுகிப் போனான் . 

மறுநாள் அப்பாவை  அழைத்து கொண்டு , ரகு வீட்டுக்குப் போனான் .

ஏற்கனவே வீட்டில்,  விஸ்வா பிரச்சனை மற்றும் ரகுவும் , ரஞ்சனியும் அவர்களுக்குச் செய்யும் உதவி என்று அனைத்தும் தெரிந்திருக்க , 

ஏதோ கலந்து பேச வந்திருக்கிறார்கள் என்று நினைத்து , சுவாமிநாதனும்  சுந்தரியும் அன்புடன் வரவேற்றனர்.

விஸ்வா தர்ம சங்கடத்துடன் உள்ளே வந்து , “ரஞ்சனி….” என்று கேட்க , 

“உட்காருங்கள் , நான் கூப்பிடுகிறேன்”  என்றவர் , “ரகு… , ரஞ்சனி….”என்று  சுவாமிநாதன்  குரல் கொடுக்க , 

வீட்டில் இருப்பதால் கட்டையின் உதவியோடு தான் நடந்து வந்தாள் ரஞ்சனி .

விஸ்வாவை ஹாலில் பார்த்து அதிர்ச்சியானாள் .

 “வாங்க விஸ்வா… , வாங்க அங்கிள்…” என்று வரவேற்படியே மெதுவாக இருக்கையில் அமர்ந்தாள் . ரகுவும் அருகில் வந்து அமர்ந்தான் .

இத்தனை நாள் செயற்கை காலில் பார்த்திருந்தவனுக்கு , இத்தோற்றம் முகத்தில் அறைந்து , கண்கள் தளும்ப , அவளையே பார்த்திருந்தான் .

அனைவரும் புரியாமல் விஸ்வாவையே பார்க்க , விஸ்வா ரஞ்சனி அருகில் வந்து , இருகைகளையும் கூப்பி,  மண்டியிட்டு ,

 “என்னை மன்னித்து விடு ரஞ்சனி , சுயநலவாதியாக , கோழையாக இருந்துவிட்டேன் , மன்னித்துவிடு….” என்று குரல் உடையச் சொல்ல, 

அந்த அறை முழுவதும் நிசப்தமே நிறைந்திருந்தது . 

சங்கரன் கூட இப்படியொரு மன்னிப்பை எதிர்பார்த்திருக்கவில்லை . 

சங்கரன் கண்கள் கலங்க , மகன் அருகே வர முயல , வேகமாக வந்து ரகு , விஸ்வாவை எழுப்பி, கட்டிக் கொண்டான் .

பின், “விடுங்க விஸ்வா…”  என்று சொல்ல ,

“உங்கள் பெருந்தன்மைக்கு முன்னால் கூனி குறுகி நிற்கிறேன் ரகு..” என்று தளுதளுத்தான் .

“விடுங்க விஸ்வா…..” என்று ரஞ்சனியும் சொல்ல ,

“இல்லை ரஞ்சனி , உன் இடத்தில் யாராக இருந்தாலும் இந்நேரம் நன்றாக வேண்டும் என்று சந்தோஷப்பட்டிருப்பார்கள் . ஆனால் நீ….” என்று நிறுத்தியவன்,

“சந்தியாவிற்காக யோசித்து செயல்படுவதும்  , என்னுடைய ஈனத்தனத்தைக் காட்டிக் கொடுக்காமல் இருப்பதும் , யூ ஆர் கிரேட்…” என்று மீண்டும் கை கூப்பினான் .

ரஞ்சனி தர்மசங்கடத்துடன் ரகுவைப்  பார்க்க , ரகு அவனை அழைத்துக் கொண்டு போய் , சற்று தள்ளி இருந்த சோபாவில் அமர வைத்தான் . 

அதற்குள் சுந்தரி காபியைக் கொண்டு வந்து விஸ்வாவிடம் கொடுத்து , “குடி” என்று சைகை செய்ய , 

அவன் மறக்க முடியாமல் கையில் எடுத்தான் . சுந்தரி அவன் குடிக்கும் வரை அருகிலேயே நிற்க , வேறு வழியில்லாமல் விஸ்வா காபியைக் குடிக்கத் தொடங்கினான் .   . 

அதற்குள் ரகு மற்றொரு காபியை சங்கரனிடம் கொடுக்க , அவரும் அருந்தினார் . காபி  குடிக்கும் வரை அமைதியே நிலவியது.

“ விஸ்வா அனைத்து விவரத்தையும் சொன்னான். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்” என்றார் சங்கரன்.

“முடிந்து போனதைப் பற்றி பேச வேண்டாமே , அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை பார்ப்போம்” என்று சுவாமிநாதன் பேச,

ரகுவும் அதையே ஆமோதித்தான். 

“சரி, உங்கள் யோசனையை சொல்லுங்கள்…” என்று சங்கரன் கேட்க,

“அங்கிள் , இப்போது நாங்கள் செயல்படுத்துவது பழைய இருகோடுகள் தத்துவம் தான் .  ரஞ்சனி பட்ட துன்பத்தைச் சொல்லி, சந்தியாவின் துன்பத்தைச் சிறிதாக்குவது தான் . அதே மாதிரி அவளுடைய கஷ்டத்தையே யோசித்துக் கொண்டு இருக்க விடாமல் , வேறொரு விசயத்தில் மனசைத் திருப்புவதும் ஒரு நோக்கம்” என்று ரஞ்சனி எடுத்துரைத்தாள் .

அவள் பேசுவதையே அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தனர் . அப்போது விஸ்வா , “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”

“மிக முக்கியமாக செய்ய வேண்டியது , அவளுக்கு மீண்டும் துன்பங்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றபடி விஸ்வாவை உறுத்து விழித்தாள் .

விஸ்வா தலையைத் தாழ்த்த , 

“அப்படியே மோசமானசந்தர்ப்பங்கள் அமைந்தாலும், அவளுக்காக நிற்க வேண்டும் , பேச வேண்டும் . மேலும் இதன் மூலம் மட்டுமே உங்கள் மேல் சந்தியா இழந்த நம்பிக்கையை மீட்டு எடுக்க முடியும் . நம்பிக்கை வந்தால் மட்டுமே வாழ்க்கை சீராகும்” என்று தன் கூர்மையான பார்வையை விஸ்வா மீது செலுத்தினாள் .

தன் தவறுகளால் தலையை நிமிர்த்த முடியமால் தவிக்க,

“விஸ்வா ……” என்று ரஞ்சனி கூப்பிட , அவன் நிமிர ,

“இதை நான் நிச்சயமாக உங்களுக்காகச் செய்யவில்லை . அப்படிச் செய்ய, நான் ஏசுநாதரோ , புத்தரோ அல்ல , உங்கள் நிலையைப் பார்த்து  நிச்சயமாக வருத்தப்பட்டிருப்பேன் தவிர வழிய வந்து உதவியிருக்க மாட்டேன் , 

நான் உதவியதற்கு  ஒரே  காரணம் சந்தியா . இன்னும் அவர்களை மாலில் பார்த்தது , என் நினைவில் நிற்கிறது , அன்று மலர்ந்த மலர் போல் , அவள் அழகாக  மலர்ச்சியோடு இருந்தார்கள் . ஆனால் இன்று வாடி வதங்கி , கசங்கிய மலராக இருக்கிறார்கள் . கண் கொண்டு காண முடியவில்லை , அதனால் தான் செய்கிறேன்” என்றாள் அழுத்தம் திருத்தமாக .

 ரகு அருகே வந்து , ரஞ்சனியின் கையை பிடித்துக் கொண்டான் .

“புரிகிறது…”என்று தலைகுனிந்தான் விஸ்வா. 

இடைபுகுந்த சங்கரன் , “அவனுக்குக் காலம், சம்மட்டியால் அடித்து, புரிய வைத்து விட்டது ரஞ்சனி , நிச்சயமாக மாற்றம் நிகழும்.”

“சந்தியாவை நன்றாக பார்த்துக் கொள்வேன்”என்று விஸ்வாவும் உறுதி அளிக்க ,

“எப்படியம்மா ? உனக்கு இவ்வளவு விவரம் தெரிகிறது ?”என்று சங்கரன் விசாரிக்க ,

ஒரு வெற்றுப் புன்னகையைச் சிந்தியவள் , “ஆறு மாதம் படுக்கையில் கிடந்தால் பல ஞானங்கள் பிறக்கும் அங்கிள்…” என்று  சொன்னாள். 

நான் படுக்கையில் இருந்த காலத்தில் , “என் மனசை விட்டு விடுவேனோ ? என்ற பயத்தில் , என் குடும்பமே என்னை அடைகாத்தது .”

“ அப்போது என் அண்ணன் நிறைய  மனநலம் பற்றிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்தான் . மேலும் நிறைய மனநல குறித்து ஆன்மீக குருக்கள் , மருத்துவர்கள் , பெரியவர்கள் பேசியதைப் பார்க்கும்படி செய்தான்”என்று மென்னகை புரிந்தாள் .

அனைவரும் அசையாது அவளையே பார்க்க , “நான் தைரியமான பெண் தான் , ஆனாலும் வாழ்க்கை புரட்டி போடும் போது , கைப்பிடித்து எழ , பிடிப்பு தேவைப்படுகிறது அல்லவா? , அதை என் குடும்பம் தந்தது . அதைத்தான் இன்று நான் சந்தியாவிற்குச் செய்கிறேன் .”

“பக்குவமான குடும்பம்” என்று  சங்கரன் சிலாகிக்க  , 

ரஞ்சனி சிரித்தபடி , “என் குடும்பத்தின் உதவியால் தத்தித்தத்தி நடந்த நான் , இப்புத்தகங்களினால் நம்பிக்கையுடன் நடை போட ஆரம்பித்தேன் . 

அப்புறம் , “இன்று என் ரகுவுடன்….. , இந்த அன்பான  புரிதலான  குடும்பத்துடன் ராஜநடை போடுகிறேன்” என்றாள் பெருமிதமாக . 

“ரகு, எனக்குக் கடவுள் கொடுத்த வரம்” என்று அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.

மீண்டும் ஒரு நிமிடம் அமைதியே நிலவ , “நீ நல்ல இடத்தில் சேர்ந்தது , எனக்கு மிகவும் மகிழ்ச்சி ரஞ்சனி”என்றார் சங்கரன் .

ரஞ்சனியின் பேச்சைக் கேட்ட விஸ்வாவிற்கு , “அமானமாக இருந்தது. சந்தியாவும் தன்னைப் பற்றி இதைப் போல பெருமையாக பேச வேண்டும் என்று ஆசை வந்தது .”

“அவ்வப்போது  கலந்து பேசி , அடுத்தடுத்து விசயங்களை முடிவு செய்து கொள்வோம்” என்று ரகு பேச்சை திசை மாற்றினான் ,

உடனே விஸ்வா , “அப்படியே செய்யலாம்…” என்றான் . பின், “மீண்டும் உங்கள் பெரிய மனசுக்கு என் கோடான கோடி நன்றிகள்…” என்று அனைவரையும் பொதுப்படையாகப் பார்த்து, தெரிவித்துக் கொண்டு கிளம்பினான்.

அத்தியாயம் 80

அடுத்து வந்த நாட்களில் , விஸ்வாவும் சங்கரனும் இணைந்து பெரிதாகப் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொண்டனர் . 

சந்தியாவும் கொஞ்சம் தெளிவாகத்தான் இருந்தாள் . ஆகாஷுடன் நேரத்தைச் செலவளித்தாள் . விஸ்வா அடிக்கடி  குடும்பத்துடன் வெளியே  போய் வந்தான் .

அன்று, “அம்மா , அப்பா……” என்று விஸ்வா கத்திக்கொண்டே உள்ளே வர , 

“என்னடா விஸ்வா?” என்று ராஜி கேட்க , 

“இன்று என்ன நடந்தது தெரியுமா அம்மா?”

“சொல்லுப்பா “,

“இன்றைக்கு மால் பார்க்கிங்கில் காரை எடுப்பதற்காகச் சென்றிருந்த போது , ஒருவர்  ரிவர்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக கார் பின்னால் ஒரு நான்கு வயது குழந்தை போய் விட்டது .  குழந்தை என்பதால் வண்டி ஓட்டுனரின் பார்வைக்கு வராமல் இருந்தது. குழந்தையின்  தாய் சற்று தூரத்தில் இருந்து ஓடி வந்து கொண்டிருந்தார்.

எனக்குப் பதட்டத்தில் , கையும் ஓடவில்லை , காலும் ஓட வில்லை , அப்படியே பதைபதைத்து நின்றேன் . 

ஆனால் சந்தியா துரிதமாக , ஆகாஷை என் கையில் திணித்து விட்டு , காரை நோக்கி ஓடினாள்…”

“ஐயோ  , குழந்தைக்கு என்னாச்சு?” என்று ராஜி படபடக்க,

“சந்தியா வேகமாக அங்கிருந்து  குழந்தையை தள்ளி விட்டாள் . காரும் இவள் மீது லேசாக மோதி நின்றது .”

“ஏன் குழந்தை தள்ளி விட்டாய்? ஏதாவது காயம் படும் அல்லவா? தூக்கி இருக்க வேண்டியது தானே?” என்று வழக்கம் போல் ராஜி குறைபட ,

“இல்லை அத்தை , நானே வேகமாக ஓடி வருகிறேன் தடுமாறி விட்டாலும்  இல்லை கார் என்னை பலமாக  இடித்து விட்டாலும் பிரச்சனை , அதான்…” என்று தெளிவாகச் சொல்ல ,

“சபாஷ் சந்தியா , சரியாகச்  செயல்பட்டுள்ளாய் ,சபாஷ்” என்று சங்கரன் பாராட்ட ,

எரிச்சலுடன் இடை புகுந்த ராஜி , “அப்புறம் குழந்தைக்கு ஒன்றுமில்லையே?”

“ஒன்றும் இல்லை அம்மா , குழந்தை சற்று தள்ளி பாதுகாப்பான இடத்தில் விழுந்தான் . ஆனால் பயத்தில் கொஞ்ச நேரம்  அழுதான் . அப்புறம் குழந்தையின் அம்மா வந்து தூக்கி சமாதானப்படுத்தி விட்டார்கள் .”

மீண்டும் சங்கரன் , “நம்ம ஆகாஷ் விழுந்த போது கூட  சந்தியா இதே போல் சரியாகச் சமயோஜிதமாக செயல்பட்டாள்…” என்று நினைவு கூற,

“ஆமாம் அப்பா , நான் அப்படியொரு சூழ்நிலையில் இருந்தால், திகைத்து தான் நின்றிருப்பேன் .”

 “அப்படியெல்லாம் இல்லை , நீயும் சரியாகத்தான் செயல்படுவாய் “என்று ராஜி பரிந்து கொண்டு வர,

“இல்லை அம்மா , உங்களுக்கு  முன்பு சர்க்கரை குறைந்த போது , நான் சரியாகக் கையாளவில்லையே …”என்று சந்தியா இருப்பதை யோசிக்காமல்  வாயை விட , 

“விஸ்வா….” என்று ராஜி எச்சரிக்க , உடனே சங்கரன், “பழையதைப் பேசாதே , இனி எச்சரிக்கையாகச் செயல்படு” என்றவர், பின் சிரித்தபடி, “அப்படியே இல்லையென்றாலும் , இனி கவலையில்லை.. இப்போது உன் கூட தான் தைரியலஷ்மி இருக்கிறாளே…” என்று கேலி  பேசி , பேச்சைத் திசை திருப்பினார்.

முதன்முறையாக தன் புகுந்த வீட்டில் கிடைத்த பாராட்டு , சந்தியாவை மகிழ்விக்க , சின்ன புன்னகையோடு, “நன்றி மாமா” என்று உள்ளே சென்றாள் .

ராஜி முறைக்க , “உன் மகன் செய்த குளறுபடியை தவிர்க்கத்தான்….” என்று சமாளித்து, நகர்ந்தார் .

சிறிது நேரம் அம்மாவுடன் பேசி விட்டு , அறைக்குள் வந்த விஸ்வா அமைதியாகவே இருக்க , சந்தியா  குழம்பினாள் .

சற்று நேரம் கழித்து , “இன்று நடந்த விசயத்தை தான் யோசிக்கிறேன் சந்தியா .”

“இன்றைய சம்பவத்தின் போது அந்தப் பெண்ணின் கணவர் பதட்டப்படாமல் , அழுது கொண்டிருந்த மனைவியின் தோளணைத்து , தட்டிக் கொடுத்து , பின் குழந்தையை வாங்கி சமாதானம் செய்தார் , பார்த்தாயா?”

மேலும் அவர் அழுத மனைவியிடம் , “குழந்தைகள் துறுதுறுவென தான் இருக்கும் , நம்மையும் மீறி சில நேரங்களில் இப்படித்தான் நடக்கும் . அதான் கடவுள் புண்ணியத்தில் ஒன்றும் நடக்கவில்லையே , தேவையில்லாததை யோசிக்காதே என்று சமாதானப்படுத்திய போது தான் , ஆகாஷ் கீழே விழுந்து போது தான் நான் உன்னைக் கத்தியதைப் பற்றி யோசித்தேன் .

அன்று நீயும் இப்படித்தானே பதைபதைத்துத் தவித்திருப்பாய் , அதை உணராமல் திட்டி , ச்சே…. எனக்கே அசிங்கமாக இருக்கிறது . ஸாரி சந்தியா” என்று கைளைப் பிடிக்க , 

சந்தியா கண்கலங்க , கைகளை இறுக்கிக் கொண்டாள். 

அங்கே ஒரு சின்ன புரிதலும் , அன்னியோனியமும் தொடங்கியது .

தொடரும்……