உள்ளே வந்த வர்ஷினியால் அமைதியாக ஓரிடத்தில் அமர முடியவில்லை. தந்தை போனில் பேசிக் கொண்டிருந்தார்.. விஜயா டிவியில் கவனமாக இருக்க.. பெண்ணவள்.. கிட்சென் சென்றாள்.. “அம்மா.. சாப்பிட என்ன இருக்கு” என்றாள்.
“தோசை ஊற்றவா” என்றார் அன்னை.
“ம்கூம்.. எங்க அந்த காராசேவ்” என்றாள்.
“மேல பச்சை டப்பாவில் இருக்கு பாரு” என்றார்.
பெண்ணவளுக்கு அந்த பச்சனை டப்பா கண்ணெதிரே இருந்தும் கண்களுக்கு தெரியவில்லை.. “ம்மா.. எங்க” என அங்கிருந்தே கத்தினாள்.
அன்னை திட்டிக் கொண்டே வந்து எடுத்துக் கொடுத்தார்.
பெண்ணவள் கொரிக்கத் தொடங்கினாள்.
டிவி சீரியல் பற்றி பேச்சுகள் சென்றது.. பெண்ணவள் சீரியல் கதை கேட்டாள்.
அன்னை “என்ன சீக்கிரமாக வந்துட்ட டிராபிக் இல்லையா” என்றார்.
“இல்லம்மா.. நைட் ஏர்போர்ட் போகனும்.. சர்வேஷ் ஊருக்கு போன்றான்” என்றாள்.
அன்னை அத்த ஷனம் “நீ எதுக்கு போற” என்றார்.
பெண்ணவளோ “என்ன ம்மா கேள்வி இது” என சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
அன்னைக்கு எதுக்கு இவள் இரவில் போகனும்.. பகலாக இருந்தால் சரி.. அப்படி என்ன இரவில் போய் வழியனுப்பனும்.. என கேள்வி எழுந்தது. தன் கணவன் போன் பேசி முடிப்பதற்காக காத்திருந்து.. அவரிடம் பெண் பேசியது பற்றி பேசி.. ‘எதுக்கு போகனும்’ என்றார். அலசி ஆராய்ந்து.. ‘போக வேண்டாம்ன்னு சொல்லுங்க..’ என சொல்லி டிபன் வேலையை பார்க்க சென்றார்.
வர்ஷினி, தன் அறைக்கு சென்று உறங்கிவிட்டாள்.. தந்தை வந்து பார்த்தவர்.. மனைவியிடம் ஏதும் சொல்லாமல் டிவி பார்க்கத் தொடங்கிவிட்டார்.
ஒன்பது மணியாகியது வர்ஷினி எழுந்து வரவில்லை.. விஜயா கணவரிடம் “எழுப்புங்க.. சாப்பிட்டு தூங்கட்டும்,” என்றார்.
சிவகுமாரோ “விடு.. தூங்கி எழுந்து சாப்பிடட்டும் விஜயா..” என்றார்.
அன்னைக்கு அதிர்ச்சி “இந்த நேரத்தில் தூங்குகிறாளா” என. இருவருக்கும் நடுவில் சின்ன வாக்குவாதம்.. அன்னை அவள் எங்கும் செல்லக் கூடாது.. என்றும் இல்லாமல் இன்று.. இந்த நேரத்தில் வெளியே செல்லுகிறேன் என சொல்லுகிறாள்.. இதெல்லாம் சரியாக இல்லை என.. கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
தந்தைக்கு முதலில் அதிர்ச்சி.. ‘சர்வேஷ்’ என மனதில் அவனின் முகத்தை கொண்டு வந்து யோசித்தார். மனையாளிடம் ‘அவளுக்கு தெரியும்.. அவள் பார்த்துப்பா’ என்றார் மகளை ஒத்து பேசி. அதனால், அவர்கள் இருவரும் சண்டையோடுதான் உறங்க சென்றனர்.
வர்ஷினி 11 மணிக்கு அலாரம் வைத்து.. எழுந்து குளித்து.. உண்டுவிட்டு.. டாக்ஸி புக் செய்துவிட்டு.. அப்பாவை எழுப்பி அப்பாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள் பெண். தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.
தந்தை வாசல் வரை வந்து டிரைவரிடம் பேசிவிட்டு.. பெண்ணுக்கு விடை கொடுத்தார். தந்தைக்கும் பெண்.. ‘இப்படி எல்லாம் ஒருவருக்காக ஓடியதில்லை.. செய்ததில்லை..’ என புரிகிறது.. எதோ மாற்றம் அவளின் முகத்தில் என கணிக்க முடிகிறது. ‘பார்ப்போம்’ என அமைதிகாத்தார் சிவகுமார்.
வர்ஷினி காரில் ஏறியதும் சரியாக அழைத்தான், சர்வேஷ். இருவரும் பத்து நிமிட இடைவேளையில் ஏர்போர்ட் வந்து சேர்ந்தனர்.
சர்வேஷ் நின்றிருக்க.. வர்ஷினி இறங்கினாள்.. ஒரு ஆனியன் பிங்க் காட்டன் பிராக்.. சின்ன வெள்ளைகல் கம்மல் டாலடிக்க.. காற்றில் ஆடும் முன்னுச்சி முடிகளை ஒதுக்கி கொண்டு.. அவன் கண்களுக்கு தேவதையாக இறங்கினாள்.
சர்வேஷ் தன் உடமைகளை மறந்தான்.. கூடவே இருந்த மாமாவை மறந்தான்.. ஓடினான் அவளை நோக்கி.
சர்வேஷ் “ஹேய்.. குட்டி பொண்ணு மாதிரி இருக்க.. “ என சொல்லி அவளின் கைபிடிக்க வந்தான். பெண்ணவள் தன் கைகளை உருவிக் கொண்டாள்.. அவனின் மாமா தூரமாக நின்று தங்களை முறைப்பதை உணர்ந்து.
சர்வேஷ் அதை இப்போதுதான் உணர்ந்தான்.. இருவரும் நடந்தனர். தலையை கோதிக் கொண்டு.. “மாம்ஸ், வர்ஷினி..” என்றான்.
கார்த்திக் இருவரையும் பார்த்து புன்னகைத்தார்.. பின் வர்ஷினியிடம் “என்னடா இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றானேன்ன்னு யோசிச்சேன்.. நல்லதுதான் நீங்க போங்க” என்றார்.
சர்வேஷ் ட்ராலி எடுக்க சென்றான்..
கார்த்திக் “நேற்று நைட் வீட்டில் பேசினான் ம்மா.. ரொம்ப வருத்தபட்டு பேசிட்டு இருந்தான். ஆனால், இப்போது.. அவனை இப்படி பார்க்க நல்லா இருக்கு. நல்லா இருங்க..” என்றார்.
“நேற்றுதான் அண்ணா.. எதோ சொன்னாங்க.. நான் இன்னும் ப்ராஸசில்தான் இருக்கேன்.. அதுக்குள்ள” என்றாள், தயக்கமாக.
“நோ வே.. அவனின் எத்தனை வருஷக் கனவோ நீ. அது அப்போது எங்களுக்கு புரியலை.. இப்போது அவன் முகத்தில் இருக்கும் கலையை பார்த்ததும்தான் புரியுது. ம்.. அவனுக்கு பெரிதாக கஷ்ட்டம் என இல்லை.. எல்லாம் அவங்க அக்காக்கள் பார்த்தாங்க. ஆனால், அதற்காக அவன் ஜாலியாக இருந்தான் என இல்லை.. குடும்பத்தில் எல்லாவற்றுக்கும் இவன்தான் பலியாடு. கஷ்ட்டமா, அவனை வெளியூர் அனுப்பு.. நன்றிகடனா இவனை மாமா பெண்ணுக்கு கட்டி வை என.. அவனுக்கு என எந்த எண்ண ஓட்டத்தையும் வைத்திருந்ததில்லை. ஆனால், அதெல்லாம் நல்லதுக்கு என்பது போல.. இப்போது தோணுது..” என்றவர் சர்வேஷ் வரவும்.. “எங்களுக்கு மூன்று வருடம் முன்னாடி எப்படி இவனை தேற்றப் போகிறோம் என.. அந்த மண மேடையில் வைத்து பார்த்தபோது எண்ணியிருந்தோம்..” என்றவர், அவன் அடுக்கிய லக்கேஜ்களோடு முன்னே நடந்தவர் “இப்படியே இருங்க.. அது போதும். நான் இதெல்லாம் எடுத்துக்கிறேன்.. நீங்க உள்ளே போங்க” என்றார்.
சர்வேஷ், முகம் சட்டென வாடிபோகிற்று.. தலை கோதிக் கொண்டே அவளோடு நடந்தான்.
வர்ஷினி “என்னாச்சு” என்றாள்.
ஒன்றுமில்லை என தலையசைத்தான். பொறுமையாக அந்த இரவு வேளையில்.. பார்கிங் ஏரியாவில் நடந்தனர்.
காற்று விசிவிசுவென இருவரின் மௌனத்தையும் கலைக்க முற்பட்டது.
சர்வேஷ் “ஒருமாதிரி மனதேயில்லாமல் வாழ்ந்த நாட்கள் வர்ஷி அதெல்லாம். எப்படி கல்யாணத்திற்கு ஒத்துகிட்டேன்னு தெரியலை. ஆனால், ஒத்துக் கொண்ட பிறகு.. எப்படியாகினும் அந்த பெண்ணோடு வாழ வேண்டும் என எண்ணி இருந்தேன்.
கல்யாணம்ன்னு என்னை ஊர் கூட்டி மேடையில் நிறுத்தினாங்க.. நல்லா அலங்காரம் செய்துக் கொண்டு.. கோட்சூட் வேறு.. நான் மட்டும்தான் இருக்கேன் மேடையில்.. அவங்க வரவேயில்லை. ஊரே பேசிற்று ஏதேதோ.
ஒரு வார்த்தைக்கு கூட என்னை அவள் மதிக்கவில்லை.. என்னை ஊரார் பார்த்த பார்வை இருக்கே.. ‘ஐயோ பாவம்’ என ஒரு பார்வை.. பிரெண்ட்ஸ் முன்னாடி போகவே முடியாது.. என்னை கலாய்ப்பாங்களா.. இல்ல பாவப்படுவாங்கலான்னு ஒரு எண்ணம்.. தனியாகவே இருந்தேன்.
ஒருவருக்கு நம்மை கண்சிடரே செய்யவில்லை என்பது எவ்வளவு வலிக்கும். நேரே சொல்லியிருக்கலாம்.. அப்படி பொதுவில் புறக்கணிப்பது.. என்ன இருந்தாலும் என்னால் மன்னிக்கவே முடியவில்லை.” என்றான் ஆழமான குரலில்.
எப்படி ஆறுதல் சொல்லுவது என தெரியவில்லை.. மெதுவாக அவன் பிடித்திருந்த விரல்களை தட்டிக் கொடுத்தாள் வர்ஷினி. இருவரும் அமர்ந்தனர். வர்ஷினி அவனின் நிலையில் யோசிக்கத் தொடங்கினாள். சர்வேஷ்ஷூம்.. சற்று நேரம் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான்.
வர்ஷினி “ஏன் என தெரியாமல் அடி வாங்கியிருக்கீங்க” என்றாள்
“ம்..” என்றான்.
வர்ஷினி, மேலும் அவன் காயங்களை கீரிவிட வேண்டாம் என எண்ணி “எல்லாம் அத்தோட போச்சு.. இப்போது சர்வேஷ் எப்படி இருக்கீங்க என்பதுதானே முக்கியம்.” என சொல்லிக் கோர்த்திருந்த அவனின் கைகளை நம்பிக்கையாக இறுக்கி பிடித்தாள்.
சர்வேஷ் அவளின் வார்த்தைகளில்.. இதமானான். எல்லோரிடத்திலும் சோகங்களை சொல்லிவிடலாம். ஆனால், தெரிந்தோ தெரியாமலோ நிகழும் அவமானங்களை யாரிடம் சொல்லுவது.. சொல்லத்தான் முடிந்திடுமா.. தன்னக்கானவர்களை தவிர யாரிடமாவது.
முகத்தில் பெருங்காற்றும்.. அவளின் இதமான வார்த்தைகளும்.. பெரும் அழுத்தத்திலிருந்து அவனுக்கு விடுதலையை தந்தது. நீண்ட பெருமூச்சு அவனிடமிருந்து இப்போது.
சர்வேஷ் “ம்.. இப்போ கொஞ்சம் தைரியமாகிட்டேன்.. நான் கடந்துட்டேன்.. இப்போது போல.. அன்று என்னால் பேச முடியவில்லை.. நல்லது செய்கிறேன் என எல்லோரும் உடனேயே பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.. எங்கே போவது என தெரியாமல் ஒளிந்துக் கொள்ள தேடிய வேலைதான் வெளிநாட்டில் இந்த வேலை. இந்த வேலை என்னுடை.. நிம்மதி. தூரமாக நிற்கிறேன். யாருமில்லையே என தோன்றும் ஆனால், அக்காக்காளின் குற்றயுணர்வு.. என்னிடம் எப்படி பேசுவது என அவர்கள் தயங்கி நின்றது.. இப்போது இல்லை.. எல்லோரின் பார்வையையும் மாறி போகிற்று.. சகஜமாகிற்று இப்போது.” என நிறுத்தியவன்.
யோசனையோடு “ம்.. நானும் நிறைய மாறிவிட்டேன்.. அதுவும் உன்னிடம் என்னை பொருத்திக் கொள்ளும் அளவு.. ம்.. சரியா தெரியலை.. ஆனால், நிறைய யோசிக்கிறேன் உன்னைபற்றி..” என்றான்.
வர்ஷினி அவனிடமிருந்து தன் கைகளை உருவிக் கொண்டாள்.. அவனை பார்த்தபடி பக்கவாட்டில் திரும்பினாள்.. “நாம கொஞ்சம் லேட்.. சீக்கிரமாக பேசியிருக்கலாம்..” என்றாள்.
சர்வேஷ் அவளை பார்த்து திரும்பி “நான்தான் அன்றே பேசுகிறேன்னு சொன்னேன், நீதான்..” என்றான்.
என்ன சொல்லுவது என தெரியாமல் வர்ஷினி பார்த்திருக்க.. சர்வேஷ் “அதான் இவ்வளோ பேசுகிறோமே.. இது போதும் எனக்கு.. போனில் மீதத்தை கண்டினியூ பண்ணுவோம்..” என சொல்லி அவளின் முன்னுச்சி முடிகளை ஒதுக்கிவிட்டான்.
கன்னத்தில் கை வைத்து அவனையே பார்த்திருந்தவள் நிமிர்ந்தாள்.. “போலாமா.. கார்த்திக் அண்ணா வெயிட் பண்ணுவார்..” என்றாள்.
இருவரும் சற்று முன்னாள் இருந்த கார்த்திக் உடன் சேர்ந்து அமர்ந்தனர்.
மூவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
நேரம் ஆக ஆக.. இருவருக்கும் பேச்சு தடைபடத் தொடங்கியது.
கார்த்திக் “நீ செக்கிங் போகனும் நேரம் ஆச்சு சர்வா” என சொல்லிவிட்டு போன் எடுத்துக் கொண்டு சென்றார்.. வேறு இடம் சென்றார்.
இருவருக்கும் என்ன பேசுவதென தெரியவில்லை.. சர்வேஷ் மென்மையாக பெண்ணவளின் கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டான்.. “வர்ஷி, டெய்லி கூப்பிடுவேன்..” என்றான்.
“ம்..” என்றாள்.
“வேற ஏதாவது கேட்கணுமா சொல்லனுமா” என்றான்.
என்ன இப்படி கேட்கறாங்க என பார்த்தாள்.. சர்வேஷ் “இல்ல, சரியாக பேச முடியலை.. ஏதாவது நான் சொல்லனும்ன்னு எதிர்பார்க்குரீயா” என்றான்.
வர்ஷினி “இப்போ ஏதும் பேச வேண்டாமே.. ஒருமாதிரி கஷ்ட்டமா இருக்கு..” என சொல்லி எங்கோ வெறித்து பார்த்து அமர்ந்துக் கொண்டாள் பெண்.
சர்வேஷ் “சரியாகிடும்” என தேற்ற நினைத்தான் ஆனாலும் பேச முடியாமல் அமைதியானான்.
நொடிகளும் கரைந்தது.. இருவரும் கண்களால் விடை பெற்றனர். மெதுவாக விரல் விலக.. சர்வேஷ் அவளின் அருகில் வந்து மென்மையாக அவளை அணைத்தான். இதுவரை அழுகையை கட்டுபாட்டில் வைத்திருந்தவள் கண்கள் உடைபெடுத்தது.. சர்வேஷ்ஷினால் அவளை தேற்ற முடியவில்லை.. அவளை மெதுவாக தள்ளி நிறுத்தினான்.. “இந்த டைம்.. ஹாப்பியா ஒரு ஹோப்போடு போகிறேன்.. நிம்மதியாக இருக்கு.. லவ் யூ” என்றான் சின்ன குரலில் அவளின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு. பின் “ப்ளீஸ் இவ்வளோ அழாத.. கண்ணை துடை” என்றான்.
வர்ஷினி கண்களை துடைத்துக் கொண்டாள்..
சர்வேஷ் தன் வலிய கைகளால் பெண்ணவளின் கைகளை அழுத்தி விடுவித்தான்.
இப்போது சர்வேஷ் மாமாவிடம் விடைபெற்றான். புன்னகையோடு உள்ளே சென்றான் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே..
கண்களை துடைத்துக் கொண்டு நின்றாள். கார்த்திக் ‘தனியாக செல்ல வேண்டாம் நான் ட்ரோப் செய்கிறேன்’ என அழைத்து வந்து வீட்டில் டிராப் செய்தார்.
நாட்கள் எப்போதும் போல கடந்தது.
சர்வேஷ் அவளை தொடர்பு கொள்ளவே ஒருவாரம் ஆகிற்று.. அலுவலக வேலைகள் அவனை இழுத்துக் கொண்டது.
இருவரும் பேசிக் கொள்ளவில்லையே தவிர.. பொதுவான செய்திகளை பரிமாறிக் கொண்டனர்.
ஒரு வாரத்திற்கு பிறகு, வர்ஷினியின் நேரம் போனில் அதிகமாக கழிந்தது.. வேலை விட்டு வந்ததும் பேசத் தொடங்கிவிடுகிறாள். உண்பதற்கு அழைத்தால்தான் வருவாள்.
முன்பெல்லாம் அலுவலகம் முடித்து வந்தால்.. தந்தையோடு சற்று நேரம் பேசுவாள்.. இருவரும் சேர்ந்துக் கொண்டு.. அன்னை பார்க்கும் சீரியலை கிண்டல் செய்வர்.. இப்படி எல்லாம் இருந்தவள்.. அந்த ஏர்போர்ட் சென்று வந்த நாளிலிருந்து மாறியிருப்பதாக தோன்றியது. ஒன்றிரண்டுநாள் என இல்லை தொடர்ந்து மாதங்களாக இப்படியே நிகழ்ந்தது.
விஜயா பெண்ணின் மேல் ஒருகண் வைத்திருந்தார். எப்போதும் போல வேலைக்கு செல்லுகிறாள்.. தங்களுடனும் இயல்பாக இருக்கிறாள் ஆனால், எதோ மாற்றம் என அன்னை கவனித்துக் கொண்டுதானிருந்தார்.
ஒருநாள் வர்ஷினி வேலைக்கு கிளம்பும் நேரம்.. வர்ஷினியின் அலைபேசியில் சர்வேஷ்.. பெயர் மின்னியது. எப்போதும் அறையில் சார்ஜ் போடுபவள்.. நேரமாகிறதே என.. காலை உணவினை உண்ணும் நேரத்தில் சற்று நேரம் டேபிளில் அருகில் சார்ஜ் போட்டிருந்தாள்.
விஜயா கண்ணில் இது பட்டுவிட்டது, அப்போதே அன்னை “எதுக்கு இந்த பையன் அடிக்கடி கூப்பிடுறான்” என்றார்.
வர்ஷினிக்கு சட்டென ஒருநொடி முகம் மாறிபோக “யா..யாரு ம்மா” என்றாள்.
“இல்லடி.. அதான் கையை உடைச்சிகிட்டு வந்தானே.. அந்த பையன் தானே சர்வேஷ்” என்றார் சரியாக.
பெண்ணவளுக்கு பயம் பற்றிக் கொண்டது.. “இல்ல மா வெளிநாட்டில் இருப்பதால்.. ஏதாவது தேவைக்காக கூப்பிடுவாங்க” என்றாள்.. சின்ன குரலில்.
விஜயா “அதெல்லாம் வேண்டாம்ன்னு சொல்லிடு.. கல்யாணம் ஆகபோற பொண்ணு நீ.. இப்படி பேச்சு வார்த்தையெல்லாம் வேண்டாம்” என்றார் நேரடியாக.
பெண்ணவள் “அம்மா… அதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம்..” என சொல்லியவள் தன் போனினை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
பெண்ணவள் எப்போதும் நின்று பேசித்தான் கடந்து செல்லுவாள்.. ஆனால், இப்போது பதிலை கூட சரியாக சொல்லாமல் ஓடுகிறாள் என எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் தேடினார் அன்னை.
விஜயா பெண்ணின் பேச்சினை மனதில் எடுத்துக் கொண்டார் அழுத்தமாக. கணவர் கோவிலுக்கு சென்றிருந்தார்.
சிவகுமார் வீட்டின் உள் நுழையவும் விஜயா தொடங்கிவிட்டார் “உங்க பெண் சரியில்லை சொல்லிட்டேன்” என தொடங்கினார்.
கணவரோ விபூதி பிரசாதத்தினை மனையாளிடம் கொடுத்தவர் “என்ன ஆச்சு” என்றார்.
விஜயா “அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கோம், அவ என்னமோ சரியில்லை..” என்றார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நீயாக எதையாவது யோசிக்காத.. நான் பார்த்துக்கிறேன்” என்றார் திடமாக.
“நீங்க நல்லா பார்த்தீங்க.. சீக்கிரம் அவளுக்கு மாப்பிள்ளையை பாருங்க.. எனக்கு என்னமோ சரியாக இல்லை..” என புலம்பினார்.
ஆனால், தந்தைக்கு அதெல்லாம் ஒன்றும் புரியவில்லை போல “நீ எல்லாவற்றுக்கும் பயப்படுற.. அவ அப்போதே கல்யாணத்திற்கு சரி என்றுவிட்டால்.. சும்மா உன் மனச போட்டு குழப்பிக்காத.. சரி சரி சாப்பாடு எடுத்து வை” என பேச்சினை மாற்றிவிட்டார்.