தலையில் துண்டுடன் சமையல் அறையில் நின்றிருந்தான் வெற்றி. மதிய நேரத்து வெயில் அவனை குளிப்பாட்டிக் கொண்டிருக்க, கையில்லாத ஒரு பனியன், மடித்து கட்டிய வேட்டி சகிதமாக சமையல் அறைக்குள் புகுந்திருந்தான்.
மருத்துவமனையில் இருந்து வந்த தேனருவி முடியாமல் படுத்துவிட, அவளுக்காக சமையலில் இறங்கியிருந்தான் வெற்றி.
பெரிதாக ஒன்றும் இல்லை. சாதம், ரசம், தோட்டத்தில் விளைந்திருந்த கொத்துமல்லியை பறித்து ஒரு துவையல். ஆனால், அதற்கே அரும்பாடு பட்டுப் போனான் அவன்.
ஒருவழியாக சமைத்து முடித்து அவன் குளித்துவிட்டு வந்து உணவை அறைக்கே எடுத்துச் செல்ல, அதுவரையும் உறக்கம் கலையவில்லை தேனருவிக்கு.
மேலும் ஒரு அரைமணி நேரம் பொறுத்துப் பார்த்தவன் அவளை எழுப்பி அமர்த்தி உணவை வாயில் திணிக்க, “நீங்களா செஞ்சீங்க” என்று கண்களை விரித்தாள் அவள்.
“வேற யார் செய்வா?”
“எனக்கு இது ஓகே. உங்களுக்கு”
“ஏன் இதெல்லாம் நான் சாப்பிடக்கூடாதா?”
“வெறும் ரசமும், துவையலுமா எப்படி சாப்பிடுவீங்க?” என்று கேள்வியுடன் அவள் எழ,
‘உட்காருடி” என்று அவள் கையைப் பிடித்து அமர்த்தியவன், “சாப்பிட்டு முடி” என்று மொத்தமாக ஊட்டி முடித்தான்.
அவளுக்கு போதும் எனவும், ” எனக்கு எடுத்து வா” என்று அவளை வெற்றி அனுப்பி வைக்க, சமையல் அறையில் அவசரத்திற்கு என்று வைத்திருந்த இரண்டு முட்டைகளை வெங்காயம் சேர்த்து அடித்து ஒரு ஆம்லெட்டுடன் அவன் கையில் கொடுத்தாள்.
“நான் உன்னை கேட்டேனா? சொன்ன பேச்சை கேட்கவே மாட்டியா” என்று வெற்றி முகத்தை காண்பிக்க,
“வெறும் சாதம் எப்படி சாப்பிடுவீங்க?”
“அதுக்கு… முடியாம இருந்தாலும் வடிச்சு கொட்டுவியா?”
“நீங்கதான் வடிச்சது. நான் ஒரே ஒரு முட்டை தான் ஊத்தி கொடுத்து இருக்கேன். ஒன்னும் கஷ்டமில்ல. சாப்பிடுங்க” என்று அவன் வாயை அடைத்தவள் அவன் கையில் தட்டை திணிக்க,
“ஏன் ஊட்டிவிட்டா உன் அப்பன் சொத்து குறைஞ்சிடுமா?” என, அவனை முறைத்தபடியே தேனு தட்டை கையில் வாங்க பார்க்க,
“ஒன்னும் வேணாம். படுத்து தூங்கு” என்றவன் தானே உண்ண தொடங்க, அவனையே பார்த்து அமர்ந்திருந்தாள் தேனு.
“என்னடி” என்று வெற்றி அதட்ட,
“என்ன” என்றாள் பாவமாக.
“என்ன நடுக்கமெல்லாம் போயிடுச்சு போல.”
“இப்போ கொஞ்சம் பரவால்ல. ஊசி போட்டு இருக்கு இல்ல”
“நான் அதை கேட்கல. ஹாஸ்பிடலில் நடுங்கிட்டு இருந்தியே. அது சரியா போச்சா கேட்கிறேன்.” என்று முறைப்புடன் வெற்றி கூற, தேனுவின் முகம் மாறிவிட்டது.
“என்னமோ தெரியல வெற்றி. வெளியே போக இன்னும் தைரியம் வரல. உங்களுக்கு என் அண்ணனையும், அப்பாவையும் பற்றி தெரியல. அவங்க எதுக்கும் துணிஞ்சவங்க. எப்போ சரியாகுமோ தெரியல. ஆனா, எனக்குள்ள எப்பவும் ஒரு பயம் இருக்கு”
“எவ்ளோ நாளைக்கு இப்படி பயப்படுவ?”
“இங்கே இருந்தா பயமா இல்ல. ஆனா, துணிஞ்சு வெளியே போகவும் துணிச்சல் இல்ல. இவ்ளோ ஏன்? உன்னை வேலைக்கு அனுப்பக்கூட பயமா தான் இருக்கு. நீ தினம் தினம் திரும்பி வர வரைக்கும் உயிரை கையில பிடிச்சுட்டு தான் உட்கார்ந்து இருக்கேன்” என்றாள் தேனு.
“பைத்தியமா தேனு நீ. நான் இருக்க இடம் ரொம்ப பாதுகாப்பு தான். நீ பயப்பட தேவையே இல்ல. சும்மா கண்டதையும் யோசிச்சு குழம்பிட்டு இருக்காம, ஓய்வெடுத்துக்கோ.” என்று அவளை படுக்கச் செய்தவன் பேச்சோடு பேச்சாக உணவை முடித்திருந்தான்.
அவள் உறங்கவும் திண்ணையில் வந்து அமர்ந்தவனுக்கு தேனருவியை நினைத்து தான் கவலை. அப்படி ஒன்றும் அவள் பயம் தேவையற்றது என்று கூறிவிட முடியாது. அவள் தந்தையும், அண்ணனும் அவள் நினைப்பதை விடவும் கொடூரமானவர்கள் தான். அது ஊரறிந்த விஷயம்.
ஜாதிக்காக எதையும் செய்ய துடிக்கும் காட்டுமிராண்டி கூட்டம் தான் அவர்களுடையது. இப்போது தங்களை விட்டு வைத்திருப்பதற்கும் ஏதோ உள்நோக்கம் இருக்கும் என்பதை நன்றாகவே அறிந்திருந்தான் வெற்றி.
ஆனால், என்ன முயன்றும் அவனால் அதை கணிக்க முடியவில்லை. காவல் துறைக்கு எல்லாம் பயந்தவர்கள் இல்லை அவர்கள். இந்த வீட்டுக்கு வந்தது முதலாகவே அதிக எச்சரிக்கையுடன் தான் இருக்கிறான். ஆனால், இதுவரை அவன் பயந்தபடி ஒன்றும் நடக்கவில்லை என்பதால் கொஞ்சம் நிம்மதி.
சரி எதுவாக இருப்பினும் அதுவே வெளியே வரட்டும் என்று காத்திருக்கிறான் அவன். ஆனால், தேனருவியின் தந்தையும், அண்ணனும் சக்திவேல் அயரும் தருணத்திற்காக காத்திருந்தனர்.
வெற்றி- தேனருவியை கண்டுபிடித்து காவல் துறையில் ஒப்படைத்து, எழுதி வாங்கியது முதல், இப்போது பாதுகாப்பாக அவர்களை பண்ணை வீட்டில் தங்கவைத்து அடைகாப்பது வரை அத்தனையும் சக்தியின் வேலை என்று அவர்களுக்கும் புரிந்தே இருக்க, அவர்களின் வன்மம் மொத்தமாக அவன்மீது திரும்பி இருந்தது. வேறு யாரும் அவன் நிலையில் இருப்பின் கதையே வேறாக இருந்திருக்கும். ஆனால், சொக்கநாதர் குடும்பத்திற்கு ஊருக்குள் செல்வாக்கும் அதிகமாக இருக்க, அடக்கி வாசித்தே ஆக வேண்டிய நிலையில் இருந்தனர் அவர்கள்.
தற்போதைக்கு அமைதியாக காட்டிக் கொண்டாலும், புயலை தனக்குள் ஒளித்துக் கொண்டு அமைதியாக காட்சி கொடுக்கும் கடலைப் போலத்தான் காத்திருந்தனர் தந்தையும் மகனும்.
ஆனால், இவர்களை பற்றிய கவலையில் மூழ்க நேரமில்லாமல் தன் தோட்டத்தை செதுக்கும் பணியில் இறங்கியிருந்தான் வெற்றி. இதற்குள் குளத்தில் நீர் நிரப்பி, விரால், கெண்டை என்று மீன் வகைகளை வாங்கி விட்டிருக்க, அந்த குளத்திற்கு மேலே பாலம் கட்டுவது போல், சமதளம் அமைத்து அதற்கு மேலே கோழிக்கூடு ஒன்றை அமைத்திருந்தான்.
ஏற்கனவே இருந்த கோழிகளுடன் இன்னும் பத்து கோழிகளை வேறு வாங்கி விட்டிருக்க, தினம் 30 முட்டைக்கு குறையாமல் இருப்பு இருந்தது. காத்தன் தினம் அதை வாங்குவதற்கும் ஆள் பிடித்துவிட, அதுவும் வரவுதான்.
இப்படியாக தொட்டது அனைத்தும் அவனுக்கு கைகொடுக்க, மேலும் மேலும் உழைக்கும் ஆர்வமும் ஊறியது அவனுக்குள்.
இவன் இப்படியிருக்க, அங்கே சக்திவேல் சர்க்கரை ஆலையை புதுப்பிக்கும் பணியில் மும்முரமாக இறங்கியிருந்தான். பழைய எந்திரங்களை ஒதுக்கிவிட்டு, நவீனத்தை பொருத்தியவன் வேலையாட்கள் முதல் கொள்முதல் வரை அனைத்தையும் தரம் பிரித்து அலசி, ஆராய்ந்து கொண்டிருந்தான்.
சொக்கநாதர் முதல் தங்கபாண்டியன், முத்தையா வரை அத்தனை பேரும் ஆட்சேபம் தெரிவித்தும் சக்தி அடங்கவில்லை. யாருக்கும் இந்த சர்க்கரை ஆலை விவகாரம் பிடிக்கவில்லை. அதுவும் சபாபதி, வாசுதேவனின் தலையீடு இருப்பது அறிந்த நிமிடம், வேண்டவே வேண்டாம் என்று தான் நின்றனர்.
ஆனால், சக்தி யாரின் பேச்சையும் காதில் வாங்குவதாக இல்லை. கல்யாண விவகாரத்தோடு இதுவும் சேர்ந்து கொள்ள, ‘நான் சொல்றப்போ யாரு கேட்டது?’ என்று இன்னும் அவன் பிடிவாதம் தான் அதிகமானது.
அதையும்விட, இனி அவன் சபாபதியையும், அவன் மகனையும் கண்டு ஒதுங்குவதாக இல்லை. ‘அப்படி என்ன இவன் பெரியாளு. நாங்க சின்னவங்க‘ என்ற எண்ணம் தான். அவர்களை விட, சாதி, அந்தஸ்து, பணம், மரியாதை என்று எந்த விதத்திலும் குறைந்தது இல்லை சக்திவேலனின் குடும்பம்.
அவன் சாதிக்கு அவன் சாதிக்கட்சியின் தலைவன் என்றால், இவர்கள் பிரிவுக்கு சொக்கநாதர் அனைவருக்கும் தெரிந்த, அனைவராலும் மதிக்கப்படும் பெரியவர். அப்படியிருக்க, தங்களையே இத்தனை தூரம் அச்சுறுத்திப் பார்க்க துணியும் இவர்கள் எளியவர்களை என்ன செய்ய மாட்டார்கள் என்ற கோபம் தான் சக்தியினுடையது.
அதே ஊரில் அனைத்து விதத்திலும், அவனைவிட மேலே இருக்க வேண்டும் என்று தனக்குள் வேள்வி வளர்த்து கொண்டிருந்தான் அவன். அப்படி இல்லாவிட்டால், நிச்சயம் தன் தம்பியையும்,அவன் மனைவியையும் அவர்கள் வாழ விடமாட்டார்கள் என்று தெரிய, ஒவ்வொரு நிமிடமும் போராட்டம் தான் சக்திக்கு.
திருமனாத்தை தள்ளி வைக்க சொன்னதற்கும் ஒருவகையில் இது தான் காரணம். ஆனால், வீட்டுப் பெரியவர்கள் அவனுக்கு ஒத்துழைக்காமல் போக, அதுவேறு ஒருபுறம் கோபம். இப்போது வரை அவன் பாட்டியும் அவனுடன் பேசி இருக்கவில்லை. இப்படியாக எல்லாம் சேர்ந்து அவனை மூர்க்கனாக்கி கொண்டிருக்க, அவ்வபோது அவனுடன் கலந்துரையாடல் நடத்தி, அவனை களைத்து போகாமல் காப்பாற்றிக் கொண்டிருந்தாள் மீனாட்சி.
அவளுக்கும் வீட்டில் நடக்கும் அத்தனையும் தெரிந்து தான் இருந்தது. தங்கள் திருமணம் தொடங்கி இன்று காலை வீட்டில் நடந்த வாக்குவாதம் வரை அத்தனையும் அத்துப்படி தான். ஆனால், அவள் சக்தியுடன் பேசிக் கொண்டிருந்தது வீட்டினர் அறியாதது.
அவனும் சொல்லவில்லை, அவளும் சொல்லவில்லை. மொத்தத்தில் அவர்களின் இந்த புதிய நாடகம் இப்போதைக்கு ரகசியமாக அரங்கேறிக் கொண்டிருந்தது. சக்தியும் அன்று நாள் முழுவதும் நடந்த விஷயங்களை மீனாட்சியிடம் அலசி ஆராயும் அளவுக்கு முன்னேறி இருந்தான்.
ஆக, யார் எப்படி போனாலும், அவர்கள் உறவைப் பொறுத்தவரை முன்னேற்றம் குறிப்பிடும்படியாக இருந்தது. இதோ, இப்போதும் இத்தனை வேலைகளுக்கு மத்தியில் ஒரு நாளைக்கு மூன்று முறை மீனாட்சி அழைத்துவிடுவாள்.
பெரும்பாலும், ‘சாப்பிட்டீங்களா, என்ன பண்றிங்க, எங்க இருக்கீங்க‘ என்பதாகத் தான் இருக்கும். ‘இதைத்தவிர வேறெதுவும் கேட்கமாட்டியா‘ என்று சிரித்தாலும், சலிக்காமல் அவள் கேள்விகளுக்கு பதில் கொடுப்பான் சக்திவேல்.
இப்படியாக நாட்கள் கடக்க, அன்று கட்சி விஷயமாக செண்பகப்பாண்டியன் சென்னைக்கு கிளம்ப, அவருடன் வெற்றியும் சென்றாக வேண்டிய நிலை. வேலை செய்யும் இடத்தில் தன் விருப்பத்திற்கு மறுக்க முடியாது என்பதால் வெற்றி ஒப்புக்கொள்ள, காலை மூன்று மணிக்கே அவருடன் கிளம்பி இருந்தான்.
கட்சி நிதி என்று அவர் பெரும் தொகையை வேறு தன்னுடன் எடுத்து வந்திருக்க, வழியில் எங்கும் நிற்காமல் ஒரே மூச்சில் சென்னையை அடைந்திருந்தான் வெற்றி.
“திரும்பி வர மூணு மணி நேரம் ஆகும் வெற்றி. நீ பக்கத்துல எங்கேயாவது போயிட்டு கூட வா. நான் கூப்பிட்ட கார் எடுத்துட்டு வா. போதும்” என்று அவர் சொல்லிச் சென்றிருக்க, வெற்றிக்கு சட்டென மனதில் தோன்றியது மீனாட்சி தான்.
நேராக அவள் படிக்கும் கல்லூரிக்குச் சென்றவன் வாசலில் நின்று அவளை அழைக்க, அடுத்த அரைமணி நேரத்தில் வெளியே வந்தாள் அவள்.
“என்ன வெற்றி. இந்த நேரத்துல இங்கே” என்று அவள் அதிசயிக்க,
“ஓனர் இங்கே சென்னைக்கு வந்தார். அவர்கூட வந்தேன்.” என்றான் வெற்றி.
“அப்போ எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடு” என,
“உனக்கு ஐஸ் வாங்கி கொடுக்கவா, மதுரையில இருந்து சென்னைக்கு வந்தேன். கொஞ்சமாவது வளருடி” என்று அவன் கிண்டலடிக்க,
“அதெல்லாம் வளர்ந்த வரைக்கும் போதும் வாடா” என்று அவனுடன் காரில் ஏறிக் கொண்டாள் மீனாட்சி.
“ரங்கநாதன் ஸ்ட்ரீட் போ வெற்றி. கொஞ்சம் வாங்க வேண்டியது இருக்கு. நீ கூட இருக்கும்போதே வாங்கிடறேன்” என,
“ஏய். எனக்கு போன் வந்தா நான் கிளம்பனும். புரியுதா உனக்கு”
“அதெல்லாம் சீக்கிரம் முடிச்சுடுவேன் போடா” என்று அவனை அழைத்துக் கொண்டு வந்தவள் வேகமாக ஆறேழு செட் உடைகளை வாங்கிவிட்டாள். மேலும், சில கடைகளில் ஏறி இறங்கி, பெண்கள் உபயோகப்படுத்தும் சில பொருட்களைப் பார்த்து வாங்கியவள் வெற்றியிடம் கொடுக்க,
“உனக்கு தானே வாங்கின. நீ தூக்கக்கூட மாட்டியா” என்று வம்பிழுத்தான் அவன்.
“எனக்கு வாங்கினா நான் தூக்குவேன். உன் பொண்டாட்டிக்கு வாங்குனா, நீதான் தூக்கணும். தூக்கு. போய் அவகிட்ட கொடு” என்றாள் மீனு.
“எதுக்குடி இவ்ளோ?” என்று அவன் அதிர்ச்சியாக.
“எவ்ளோ… எல்லாத்திலயும் கஞ்சத்தனம் பண்ணாத வெற்றி. கிளம்பு” என்று அதட்டி அவனை அழைத்துக்கொண்டு அவள் கிளம்ப,
“நான் உனக்கு gpay பண்ணி விடறேன்” என்றதற்கும்,
“அதோட உன் நம்பரை பிளாக் பண்ணிடுவேன்.” என்று மிரட்டியவள், “ஐஸ் வாங்கி கொடுடா” என, அருகில் இருந்த ஒரு கடையில் வண்டியை நிறுத்தி அவள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து அவளை மீண்டும் கல்லூரியில் விட்டு கிளம்பினான் வெற்றி.
அவர்களைப் பொறுத்தவரை அது சாதாரண நிகழ்வு. ஆனால், இதற்காகவே காத்திருந்தவனுக்கு அப்படி இல்லையே.
வாசுதேவன் முதலில் அடிக்க நினைத்தது அவன் தங்கை தேனருவியைத் தான். அவள் தனது தங்கை என்பதெல்லாம் கொஞ்சம் கூட நினைவில் இல்லை அவனுக்கு. ஆனால், அவன் எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை.
வெற்றி கிளம்பும்வரை பொறுத்திருந்தவன் மெல்ல அவன் வீட்டை ஆட்களை வைத்து நோட்டம் விட்டபடி இருக்க, அவன் சென்ற நிமிடமே காத்தன் எழுந்து வந்திருந்தான். வீட்டின் பின்புறம் கட்டியிருந்த நாய்களை அவிழ்த்துவிட்டவர் அதன்பின் மீண்டும் உறங்க செல்லவே இல்லை.
விடிந்து நன்கு வெளிச்சம் பரவும்வரை, வெற்றியின் வீட்டிற்கு அருகில் அமர்ந்திருந்தவர் அவரது மனைவி எழுந்து வரவும், அவரிடம் சொல்லிவிட்டு அவர் வீட்டிற்குள் நுழைந்தார்.
இது அனைத்தும், அவனது அடியாட்கள் வழியே வாசுதேவனுக்கு தெரிய வந்திருக்க, ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற வெறியில் தான் அவன் சென்னை வந்து சேர்ந்தது.
வெற்றியை பதம் பார்த்துவிட வேண்டும் என்று அவன் தொடர, அழகாக அவன் கண்ணில் வந்து சிக்கிக் கொண்டிருந்தாள் மீனாட்சி.
‘இவ அந்த சக்திக்கு பேசி இருக்க பொண்ணு தானே‘ என்று அருகில் இருந்தவனிடம் அவன் விசாரிக்க,
‘அவனுக்கும் மாமன் பொண்ணு தானே” என்றான் அவன்.
“இவ அப்பன்காரன் தானே அன்னைக்கு ஸ்டேஷன்ல வச்சு துள்ளுனது.” என்று உறுதிப்படுத்திக் கொண்டான் வாசுதேவன்.
“என்னய்யா. போனவனை விட்டுட்டு இவளை விசாரிக்கிற?”
“இல்ல. இவளை தூக்கினா, ரெண்டு பேருக்கும் வலிக்கும் போலவே” என்று சிரித்தான் வாசுதேவன்.
“என்ன வாசு. பொட்டப்பிள்ளையை போய்”
“ஏன் என் வீட்டு பிள்ளை பொட்டப்பிள்ளை இல்லையா”
“அதுக்காக இவளை தூக்கி என்ன செய்ய போற? உன் அப்பாவே செருப்பால அடிப்பார்”
“தூக்கி நான் வச்சுக்கிட்டா தானே செருப்பால அடிப்பார். ஒரேடியா தூக்கிடு. கத்தி கதறி சாகட்டும் அவனுங்க” என்று இரக்கமே இல்லாமல் திட்டம் தீட்டினான் அவன்.
“என்னடா”
“ஒரே வெட்டு. கழுத்தை பார்த்து போடு. மத்ததை நான் பார்த்துக்கறேன்” என்றான் வாசுதேவன்.
அவனுக்கு ஒப்புதல் இல்லையென்றாலும், நண்பனுக்காக செய்வதாக ஒப்புக்கொண்டவன் அடுத்த சில நாட்கள் மீனாட்சியின் பின்னே அலைந்து அவளுக்கான நேரத்தை குறித்துவிட, அன்றைய தினம் அவர்களுக்கு சாதகமாகிப் போனது.
வாசுவின் நண்பன் மீனாட்சியின் கல்லூரிக்கு வெளியே காத்திருக்க, அன்று விடுதிக்கு செல்லாமல் அருகில் இருக்கும் கோவிலுக்கு கிளம்பினாள் மீனு. அவனும் அதை அறிந்து தான் அங்கே காத்திருந்தான்.
அவள் கல்லூரியில் இருந்து சற்று தூரம் நடந்து வந்து அவள் ஆட்டோவிற்கு காத்திருக்க, ஐந்தே நிமிடத்தில் வேலையை முடித்து கிளம்பியிருந்தது வாசுதேவனின் நண்பர் குழு.
கழுத்தில் மரணகாயம் பட்டவள் ரத்த வெள்ளத்தில் கிடக்க, உடன் இருந்த அவள் தோழிகளும், அருகில் இருந்த சிலரும் சேர்ந்து அவளை மருத்துமனையில் சேர்த்திருந்தனர்.