நீயென் நாயகி -6

அத்தியாயம் -6

விஷ்வாவின் தோளில் காயத்தை கண்ட வேதா, “என்னங்க இது?” என அதிர்ச்சியோடு கேட்டாள்.

“ம்ம்… சும்மா டைம் பாஸ் ஆக நானே இப்படி கிழிச்சுகிட்டேன், சூச்சர் போட்டுகிட்டு கொஞ்சம் வலியோட இருக்கணும்னு ஒரு வேண்டுதல் வேற இருந்துச்சு” என்றான் விஷ்வா.

நேற்று இரவில் ஆதியும் சித்துவும் பிடிபட்ட பிறகு அங்கு சென்ற விஷ்வா, அவர்களிடம் கோவப் பட்டு சத்தம் போட்டான். ஃபேக்டரியில் ஸ்டோர் ரூம் ஒன்றில்தான் அவர்கள் அடைத்து வைக்கப் பட்டிருந்தார்கள். ஆவேசமான வாக்குவாதத்தில் அங்கு கிடந்த கம்பி ஒன்றை கொண்டு விஷ்வாவை தாக்கி விட்டான் சித்தார்த்.

கணவனின் பதிலில் எரிச்சல் ஏற்பட்டாலும், “நேத்து நீங்க, அண்ணா, சித்து மூனு பேரும் சண்டை போட்டுக்கிட்டீங்களா? அப்போ காயம் ஆகிடுச்சா? இன்ஜெக்ஷன் கூட இதுக்குதானா? என்கிட்ட ஏன் சொல்லலை நீங்க? பெரிய காயமா?” என கேள்விகளாக கேட்டாள்.

“பாருடா! உனக்கெல்லாம் எம்மேல அக்கறை கூட வருமா?” என நக்கலாக கேட்டான்.

“என்ன அக்கறை இல்லாம போச்சுங்க எனக்கு? உங்களைதான் கல்யாணம் பண்ணி வைக்க போறதா எப்பலேர்ந்தோ வீட்ல பேசிட்டு இருக்காங்க, அதை நம்பித் தொலைச்சிட்டேன் நான். மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி நாம பேசிக்க ஆரம்பிச்சப்ப கூட உங்க பிஹேவியர் வித்தியாசமா இருந்தது. அப்போ கூட கல்யாணத்தை நிறுத்த எல்லாம் நான் யோசிச்சது இல்லை. நான் உங்களை எப்படி நினைச்சேன்னு உங்களுக்கே நல்லா தெரியும். எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்தே நான் மீண்டு வரலை, அதுக்குள்ள தாலி கட்டி…” என்றவள் பேச்சை நிறுத்தி நடந்தவற்றை கடந்து வர பார்த்தாள்.

அவளிடமிருந்து பார்வையை அகற்றவே இல்லை அவன். அவளது நிலையை ஓரளவு விளங்கிக் கொள்ள முயற்சி செய்தான்.

“அண்ணாவும் சித்துவும் இப்படி செஞ்சது இன்னும் ஷாக்கிங்’கா இருக்கு. ஒன்னு போனா இன்னொன்னுன்னு ஏந்தான் எனக்கு மட்டும் இப்படி நடக்குதோ?” என புலம்பியவள் படுக்கையில் அமர்ந்து தன் மடியில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

“ஹேய் அழறியா என்ன?” என அவன் கேட்க, நிமிர்ந்து பார்த்தாள். முகத்தில் கலக்கம் தெரிந்ததே தவிர, கண்கள் கலங்கியிருக்கவில்லை.

“சாப்பிடலையா நீ?” எனக் கேட்டவன் சட்டை அணியாமலேயே இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

“நீங்களும்தான் சாப்பிடல”

“நான் சாப்பிடலைன்னு சாப்பிடலையா நீ?” என அவன் கேட்க, மறுப்பாக தலையாட்டினாள்.

“போ போய் சாப்பிட்டு எனக்கும் ஏதாவது எடுத்திட்டு வா” என்றான்.

“டேப்லெட்ஸ் ஏதும் போடணுமா நீங்க, ஃபர்ஸ்ட் உங்களுக்கு எடுத்திட்டு வர்றேன், அப்புறம் நான் சாப்பிட்டுக்கிறேன்”

“ப்ச், எனக்கு ஷர்ட் போட்டா இரிடேட் ஆகுது, இப்படியே வந்தா தாத்தாக்கு தெரிஞ்சிடும், இல்லைனா நானே கீழ வருவேன், அவ்ளோ பசியும் இல்லை, முதல்ல நீ சாப்பிட்டிட்டு அப்புறம் எடுத்திட்டு வந்தா போதும்” என விளக்கி சொன்னான்.

சரியென்று சொல்லி சென்றவள் உடனே அவனுக்கான உணவோடு வந்து நிற்க, “நான் என்ன சொன்னாலும் அதுக்கு ஆப்போசிட்டாதான் செய்வியா?” எனக் கேட்டான்.

“அப்படி எத்தன தடவ உங்களுக்கு ஆப்போசிட்டா செஞ்சிருக்கேன், பேசாம சாப்பிடுங்க” என அவள் அதட்ட, கை கழுவிக் கொண்டு வந்து சாப்பிட ஆரம்பித்தான்.

மாத்திரைகள் எங்கே என அவள் கேட்க, “நான் எடுத்துக்கிறேன்” என்றான்.

“சொல்லுங்க நான் எடுக்கிறேன்”

“நான் கழட்டி போட்ட பேண்ட் பாக்கெட்ல இருக்கும்”

“அதை வெளில எடுக்காம அப்படியே அழுக்குல போட்டீங்களா?” என கண்டனமாக கேட்டுக் கொண்டே மாத்திரைகளை எடுத்தாள்.

சட்டையை களைந்து விட்டதில் எரிச்சல் இல்லை, ஊசி போடப் பட்டிருந்ததில் வலியும் அவ்வளவாக இல்லை, ஆனால் உறக்கம் சொக்கியது. அதில் எங்கே இதெல்லாம் நிதானத்தில் இருந்தது.

மதியத்திற்கு என குறிப்பிட்டிருந்த இரண்டு மாத்திரைகளை எடுத்து வைத்தாள். பாதி உணவுதான் சாப்பிட்டான்.

“ஏன் சாப்பாடு பிடிக்கலியா?” எனக் கேட்டாள்.

“வேதா… நான் செய்ற எல்லாத்துக்கும் கேள்வி கேட்காத” என்றவன் மாத்திரையை இரண்டாக உடைக்க பார்த்தான்.

“சரியா சாப்பிடலைனா சாதாரணமா இப்படித்தான் கேட்பாங்க. டேப்லெட் பாதி இல்லை முழுசும் போடணும்”

“இவ்ளோ பெரிய மாத்திரை என்னால முழுங்க முடியாது”

“ஏது!” என வியந்தவள், “பவுடர் பண்ணி பால்ல கலந்து தரட்டுமா?” என கிண்டலாக கேட்டாள்.

“பாலா? உவ்வே”

“அதுசரி அம்மா இருந்து வளர்த்திருந்தா ஏன் இப்படி இருக்க போறீங்க?” என பேச்சுவாக்கில் சொல்லி விட்டவள், தான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்து, அதிர்ந்து அவனை பார்த்தாள்.

“உன் அத்தை வளர்த்த பையன் ரொம்ப ஒழுங்குன்னு நினைச்சியா? வளர்ப்பு சரியா இருக்க போயிதான் புடிக்குதோ இல்லையோ நீ இந்த வீட்ல இருக்க, சும்மா இல்லை எல்லா உரிமையோடையும். என் வளர்ப்ப பத்தி இன்னொரு முறை பேசினா பொல்லாதவன் ஆகிடுவேன்!” கடினமாக சொன்னான்.

கோவத்தில் அவளின் மூச்சின் வேகம் கூடியிருந்தது. கண்டு கொள்ளாதவன் மாத்திரையை உடைக்க அதில் பாதி எங்கோ போய் விழுந்தது. எரிச்சலுடன் அடுத்த பாதியையும் தூக்கி போட்டவன், இன்னொரு மாத்திரையையும் போட்டுக் கொள்ளாமல் பக்கத்து அறைக்கு சென்று விட்டான்.

“இவனெல்லாம் திருந்தாத ஜென்மம்! எக்கேடோ கெட்டு போகட்டும், எனக்கென்ன!” என வாய் விட்டு சொல்லிக் கொண்டே சாப்பிட சென்றாள் வேதா. அவன் மீதான கோவத்தில் வயிறு நிறைய சாப்பிட்டாள்.

அறைக்கு திரும்பியதும் அப்பாவுக்கு அழைத்து பேசினாள்.

“ரெண்டு பசங்களும் சரியில்லைமா, நைட் ஏதோ பிரச்சனைய இழுத்துகிட்டு அடி பட்டு வந்து நிக்கிறானுங்க. கேட்டா ஃபிரெண்ட்ஸ்குள்ள சின்ன சண்டையாம். அடிதடி பண்றவனுங்க எல்லாம் இவனுங்களுக்கு ஃபிரெண்ட்ஸா? யாரு வேதா அந்த ஃபிரெண்ட்ஸ்?” என மகளிடம் கேட்டார் சந்திரன்.

“எனக்கு என்னப்பா தெரியும்?” என்றாள் வேதா.

“நீதானே ஃபிரெண்ட் எவன் வீட்லேயோ ஸ்டே பண்ணிருக்கானுங்கன்னு சொன்ன, அப்போ உனக்கு தெரிஞ்சிருக்கணும்தானே?” என குறுக்கு விசாரணை போட்டார்.

“அப்பா… அது… எங்க காமன் ஃபிரெண்ட் மூலமா விசாரிச்சு சொன்னேன், வேற விவரம்லாம் எனக்கு தெரியாது”

“உங்க அண்ணனோட ஃபோன் காணாம போயிடுச்சாம். எங்கடா போட்டேன்னு கேட்டா ‘அடி பட்டு வந்தவங்கள போட்டு குடையாதீங்க’ன்னு சொல்றா உன் அம்மா. உன் அத்தை வேற ரெண்டையும் பார்த்திட்டு ஒரே அழுகை. எனக்கு இன்னும் நாலு வைக்கலாமான்னு இருக்கு மா. இவனுங்கள விடு, நீ எப்படி இருக்க, உனக்கு அங்க எல்லாம் செட் ஆகுதா?” குறை சொல்வதை விட்டு மகளை அக்கறையாக விசாரித்தார்.

தன் நலனை சொல்லி, அவர்கள் இருவரையும் வீட்டிலேயே இருக்க வையுங்கள், குணமான பிறகு திட்டுங்கள், இப்போது அமைதியாக இருங்கள் என கூறி பேச்சை முடித்துக் கொண்டாள் வேதா.

நேற்று பகலில் உறங்கியதற்கே இரவில் உறக்கம் வராமல் போயிருக்க, படுக்காமல் அங்குமிங்கும் நடந்தாள். அவன் விட்டெறிந்த மாத்திரை காலில் பட, பெருமூச்சு விட்டவளாக அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டாள்.

மருந்துகளை ஒழுங்காக எடுக்காமல் அதனால் ஏதேனும் பிரச்சனை வர போகிறது என நினைத்தவள் மாத்திரை அட்டையிலிருந்து புதிதாக மாத்திரை எடுத்துக் கொண்டாள். மறக்காமல் பெரிய மாத்திரையை இரண்டாக உடைத்து வைத்தாள்.

அவனிருந்த அறைக்கு சென்று பார்த்தாள். தூங்கி கொண்டிருந்தவனை தொட்டு எழுப்பினாள். விழித்தவன், “அறிவில்ல உனக்கு? தூங்குறவனை சும்மா சும்மா வந்து எழுப்புவியா? எவ்ளோதான்டி உன்னை பொறுத்து போறது?” என சத்தம் போட்டான்.

“ஷ்ஷ்… வாய் இருக்குன்னு சும்மா கத்தாதீங்க! உடம்பு முடியலையேனு அமைதியா இருக்கேன், இல்லைனா எனக்கும் கத்த தெரியும். உங்களை எழுப்பி விட எனக்கு மட்டும் ஆசையா? டேப்லெட்ஸ் போட்டுட்டு படுங்க” என்றவள் தண்ணீரையும் மாத்திரையையும் நீட்டினாள்.

முறைத்தவன் மீண்டும் படுக்க போக, “உங்க அம்மா பத்தி இனிமே பேசல, உங்க வளர்ப்பு பத்தியும் இனிமே பேசல, போதுமா?” என்றாள்.

“போதாது, இப்படி பாதி தூக்கத்துல வந்து எழுப்பவும் கூடாது”

“ம்ம்…” என்றவள் அவனை மாத்திரைகளை விழுங்க செய்தாள்.

முகத்தை அஷ்ட கோணலாக்கி அவன் விழுங்கியதை பார்த்தவள், “ஸ்டீல் ஃபேக்டரி ஓனர் டேப்லெட் போட்டுக்க இவ்ளோ கஷ்ட படுறார்னு வெளில சொன்னா சிரிப்பாங்க” என்றாள்.

“எதுக்கு நீ வெளில சொல்ற?” என்றவன், “விளையாட்டு இல்லை, என்னை பத்தி உன் வீட்ல உன் ஃபிரெண்ட்ஸ்கிட்டலாம் ஏதாவது நக்கல் பண்ணி வச்ச…” என மிரட்டும் தொனியோடு நிறுத்தினான்.

“ம்ம்…  ‘புடிக்குதோ இல்லையோ நீ இங்க இருக்கே’ன்னு சொன்னீங்கதானே? லாஸ்ட் வார்னிங் உங்களுக்கு, திரும்ப இன்சல்ட் செஞ்சா…” என அவளும் மிரட்டினாள்.

“செஞ்சா?”

“மூக்கால தண்ணி குடிக்க வைப்பேன், தூங்குங்க” என சொல்லி வெளியேறப் போனாள்.

“ஹேய் எங்க போற? டக் டக்குன்னு தூக்கம் வருமா? தூங்க வச்சிட்டு போ”

“என்ன?” எனக் கேட்டுக் கொண்டே அவனிடம் வந்தவள், “தாலாட்டு பாடணுமா? கதை சொல்லணுமா… இல்லை… தட்டி கொடுக்கணுமா?” என எரிச்சலாக கேட்டாள்.

“அவ்ளோலாம் கஷ்ட பட வேணாம், காலை பிடிச்சி விடு, தூங்கிடுவேன்” என தீவிர தொனியில் சொன்னான்.

“அதுக்கு வேற ஆளை பாருங்க!”

“ஏய் என்ன உன்னை டீஸ் பண்றதா நினைச்சிட்டியா? என்னை என் பாட்டி அப்படித்தான் தூங்க வைப்பாங்க”

“அது குழந்தைல”

“அஃப்கோர்ஸ், ஆனா என்னை எப்பவும் எழுப்பி விட்டது இல்லை” என்றவன் அவளின் முறைப்பில் லேசாக சிரித்தவனாக, “சும்மா சொன்னேன், நீ போ” என்றான்.