“எப்படிங்க அமைதியா இருக்க முடியும்? நம்ம மகளை இவ என்ன எல்லாம் பேசிருக்கான்னு பாத்தீங்களா? எனக்கு மனசே ஆறலைங்க. ஒத்த பொம்பளைப் பிள்ளையை பெத்து வச்சிருக்கோம். பெண் குழந்தைங்க வீட்ல இருக்குற மகாலக்ஷ்மிங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த கனகா அவ பிள்ளைகளுக்கு பண்ணினதை பத்தி சேது அண்ணன் கிட்ட நாம நியாயம் பேசினோம் தானே? ஆனா இங்க நம்ம பொண்ணுக்கே அதே நிலைமை தானே? என் பொண்ணு உள்ளுக்குள்ள எவ்வளவு துடிச்சிருப்பா. எனக்கு இப்பவே இதுக்கு ஒரு முடிவு தெரியணும்? என் பொண்ணை அழ வைக்கிற யாரும் இனி இந்த வீட்ல இருக்க கூடாது? இவங்களை தனிக் குடித்தனம் வைங்க”, என்று சொல்ல நந்தனும் லதாவும் அதிர்ந்து போனார்கள்.

“அம்மா”, என்று அதிர்ந்து போய் நந்தன் அழைக்க “சி என்னை அப்படிக் கூப்பிடாதே? கல்யாணம் முடிஞ்சதும் தான் டா உன் சாயமே வெளுத்துப் போச்சு. முதல்ல நீ பையனா பிறந்ததுக்கு அப்படி பூரிச்சு போனோம் டா. குடும்பத்தை தாங்குவ, நீ உன் தம்பியையும் தங்கச்சியையும் பாத்துக்குவன்னு. ஆனா நீ.. இதோ பேசிட்டு போறானே சின்ன பையன். அவனுக்கு மங்கை மேல இருக்குற பாசம் கூடவா உனக்கு இல்லாம போச்சு? அப்படி என்ன டா இவ கிட்ட உனக்கு மயக்கம்? அம்மா கிம்மான்னு பேசின இதுக்கும் மேல அசிங்கமா ஏதாவது பேசிறப் போறேன்”, என்று வெடித்தாள் கோமளம். அன்னையின் பேச்சில் நந்தன் அதிர்ந்து நின்றான்.

“கோமு டென்ஷன் ஆகாத. உனக்கு ஏதாவது வந்திறப் போகுது டி”, என்றார் சந்திரன்.

“எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க. மங்கை இந்த வீட்டு இளவரசிங்க. அவளை போய் கஷ்ட படுத்தினா நான் பாத்துட்டு இருக்கணுமா?”, என்று கேட்ட கோமளம் மகளுக்காக பரிதவிக்க அவள் கண்கள் கண்ணீரை சொறிந்தது. கோமளம் அவ்வளவு எளிதாக அழ மாட்டாள் என்பதால் அவள் அழுகை மகனையும் தந்தையையும் அவ்வளவு பாதித்தது.

என்ன இருந்தாலும் பெற்ற அன்னை கண் முன் கண்ணீர் விடுவதை எந்த மகனால் பார்க்க முடியும்? நந்தனுக்கு இது வரை இருந்த இறுமாப்பு எல்லாம் அழிந்து போனது. தவறு செய்திருக்கிறோம் என்ற உறுத்தல் அவனை அடுத்து எதுவும் பேச விட வில்லை. அப்படியே ஒடுங்கி போய் நின்றான். இத்தனை நாள் அவன் மனைவி பக்கம் பேசினான் தான். ஆனால் மறுபக்கம் என்ற ஒன்று இருக்கிறதை அவன் மறந்ததை இப்போது அனைவரும் அவனுக்கு நினைவு படுத்தினார்கள்.

“கொஞ்சம் பொறுமையா இரு கோமு. நான் தான் பேசுறேன்னு சொல்றேன்ல? அழாத டி. உன் கண்ணீரை வேடிக்கை பாக்கவா  அவ்வளவு ஆசையா உன்னை கல்யாணம் பண்ணுனேன்?”, என்று சொன்ன சந்திரன் “என்ன நந்தா? இப்ப என்ன சொல்லப் போற? உண்மையிலே எங்க குழந்தைக்கு முடியலை. அதனால தான் என் பொண்டாட்டி மங்கை கிட்ட குழந்தையை தூக்க கூடாதுன்னு சொன்னான்னு சொல்லப் போறியா? இல்லைன்னா மங்கை ஒழுங்கா படிக்காதது மங்கை தப்பு. அதை உன் பொண்டாட்டி சொல்லி காட்டினது எல்லாம் தப்பு இல்லைன்னு சொல்லப் போறியா?”, என்று கேட்ட தந்தைக்கு பதிலே சொல்ல முடியவில்லை அவனால்.

இத்தனை நாள் அவன் இப்படி தானே பேசிக் கொண்டிருந்தான். அதனால் பதில் சொல்ல முடியாமல் அவன் அமைதியாக இருக்க அவன் அருகே சர்வமும் ஒடுங்கி போய் நின்றிருந்தாள் லதா. மாமனார் மாமியார் கொழுந்தனார் என ஒவ்வொருத்தர் பேச்சும் அவளை வாயைத் திறக்க விடாமல் செய்திருந்தது.

“நீயும் எங்க மகன் அப்படிங்குறதுனால  உனக்கு கடைசியா ஒரு வாய்ப்பு தரேன் நந்து. இனி இந்த வீட்ல உள்ளவங்களை மதிச்சு இந்த குடும்பத்துக்கு மூத்த மருமகளா ஒழுங்கா உன் பொண்டாட்டி இருப்பான்னா இங்க இருங்க. இல்லைன்னா தனியா போயிருங்க. ஆனா இன்னொரு தடவை என் மத்த பிள்ளைங்க இவளால பாதிக்கப் பட்டா என்னோட இன்னொரு முகத்தை பாக்க வேண்டியது இருக்கும். இவளை மருமகன்னும் பாக்க மாட்டேன், உன்னை மகன்னும் பாக்க மாட்டேன். என் மகளை துன்புறுத்துறீங்கன்னு சொல்லி போலீஸ்ல பிடிச்சு கொடுத்துருவேன்”, என்று சொல்ல அதிர்ந்து போனார்கள் இருவரும்.

“நான் செஞ்சது தப்பு தான் பா. என்னை மன்னிச்சிருங்க. இனி இப்படி நடக்காதுப்பா. நான் சொல்லி வைக்கிறேன்”, என்று தயக்கத்துடன் சொன்னான் நந்தன்.

“சொல்லி வை, உன் பொண்டாட்டி என் பிள்ளைகளையோ என் பொண்டாட்டியையோ மரியாதை இல்லாம பேசினான்னு தெரிஞ்சது அப்புறம் இருக்கு”, என்று மகனிடம் சொன்னவர் “கோமு, நீ எதுக்கும் நாளைக்கு உன் அண்ணனை இங்க வர வச்சு நடந்ததை சொல்லிரு. அவங்க பிள்ளை வளத்துருக்குற லட்சணம் அவங்களுக்கு தெரிய வேண்டாமா? நாள பின்ன பிரச்சனை வந்தா ஒரேடியா பேசி முடிக்க ஈஸியா இருக்கும்”, என்று சொல்ல லதா முகத்தில் ஈ ஆட வில்லை.

நாளை தந்தை வந்தால் என்ன சொல்வாரோ? அதுவும் அவளது தாய்க்கு இந்த விஷயம் தெரிந்தால்  மகள் என்றும் பாராமல் கெட்ட வார்த்தையால் அவளை ஒரு வழி ஆக்கி விடுவாள்.

திருமணத்தின் போதே “உன் குணத்துக்கு வெளிய கட்டிக் கொடுத்தா சரியா இருக்காதுன்னு தான் உன் அத்தை வீட்ல கொடுக்குறோம். அங்க போய் ஒழுங்கா வாழனும். அதை செஞ்ச இதை செஞ்சன்னு ஏதாவது கம்பளைண்ட் வந்தது நாங்களே நந்தா தம்பிக்கு வேற பொண்ணு பாத்து கட்டி வச்சிருவோம்”, என்று தான் சொல்லி இருந்தார்கள்.

அதை எண்ணி பயந்தவள் அடுத்த நொடி கோமளம் மற்றும் சந்திரன் காலில் மாற்றி மாற்றி விழுந்து “இனி இப்படி பண்ண மாட்டேன், என்னை மன்னிச்சிருங்க மாமா, என்னை மன்னிச்சிருங்க அத்தை”, என்று மன்னிப்பு கேட்டாள்.

“கடைசி தடவையா மன்னிக்கிறோம். இனி ஒழுங்கா இரு”, என்று சொன்ன சந்திரன் மகன் புறம் திரும்பி “இனி நீ என் பொண்ணுக்கு அண்ணன் எல்லாம் கிடையாது. எங்களுக்கு மகன் மட்டும் தான். மங்கை கிட்ட பேசுறதோ அறிவுரை சொல்றேன்னு பேர்ல அவ மனசை நோகடிக்கிறதையோ பாத்தேன் அடுத்த நாள் நீ என் மகனாகவும் இருக்க மாட்ட. இனி எக்காலத்துலயும் எங்க பொண்ணு வாழ்க்கைல தலையிடக்  கூடாது. என் பொண்ணு எது செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும். இப்ப கூட அடுத்தவங்க வீட்டு விஷயத்துல தலையிட்டதா சொல்லி தானே அவளை குறை சொன்னீங்க? இன்னைக்கு என் பொண்ணால தான் ஒரு குடும்பமே நிம்மதியா இருக்கு. அந்த பெருமை எனக்கு போதும். என் பொண்ணை நான் சரியா தான் வளத்துருக்கேன்னு நெஞ்சை நிமித்திட்டு சொல்லுவேன் டா. உன்னை நினைச்சா தான் அவ்வளவு வெறுப்பா இருக்கு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

கணவர் அவர்களை மன்னித்தாலும் கோபம் குறையாமல் நின்ற கோமளம் “இவ்வளவு நாள் நீ என்னை தான் மதிக்கிறது இல்லை. வேலைக்காரி மாதிரி என்னை யூஸ் பண்ணிக்கிறேன்னு நினைச்சேன் டி. ஆனா என் பொண்ணையா இவ்வளவு பேசிருக்க? அவர் சொல்லலைனாலும் கண்டிப்பா நாளைக்கு உன் வீட்ல பேச தான் போறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

தளர்ந்த மனதுடன் அறைக்குள் வந்தார்கள் லதாவும் நந்தனும். அங்கே படுக்கையில் அவர்கள் மகன் மட்டும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். இவர்கள் விளக்கைப் போட்டதால் அவன் லேசாக அசைந்து “அத்தை”, என்று வேறு சிணுங்க அந்த சின்ன குறுத்தின் மனதில் மங்கை எப்படி ஒரு இடத்தை பிடித்திருக்கிறாள் என்று அந்த முட்டாள்களுக்கு புரிந்தது.