“எதுக்கு இப்படி பாக்ககுறான்? ஒரு வேளை தேங்க்ஸ் சொல்லவா? ஆனா அப்படியும் தெரியலையே?”, என்று அவள் குழப்பத்தோடே  வீட்டுக்குள் வர கோமளமும் பின்னே வந்தாள். கேட்டை பூட்டி விட்டு சந்திரனும் உள்ளே வர இப்போது இவர்கள் வீட்டில் பிரச்சனை ஆரம்பித்தது.

“மாமா அத்தை நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. என்ன தான் நீங்க உங்க பொண்ணுக்கு சுதந்திரம் கொடுத்தாலும் அவ பொண்ணு தான். இப்படி தேவை இல்லாம அடுத்தவங்க விஷயத்துல மூக்கு நுழைச்சா என்ன அர்த்தம்? இவளுக்கு இது தேவையா?”, என்று கேட்டாள் லதா.

கோமளத்துக்கும் சந்திரனுக்கும் முதலில் அந்த எண்ணம் இருந்தது தான். மகள் தேவையில்லாமல் தலையிடுகிறாள் என்று தான் எண்ணினார்கள். ஆனால் கயல் மற்றும் பார்த்திபன் முகத்தில் இருக்கும் நிறைவை பார்த்தவர்களுக்கு மகளை எண்ணி பூரிப்பே. அப்படி இருக்க இப்போது லதா மகளை குறை சொன்னால் எப்படி இருக்கும்?

கோமளம் மருமகளை முறைத்துப் பார்க்க “இப்ப என் பொண்ணு என்ன மா தப்பு செஞ்சிட்டா?”, என்று அவ்வளவு ஆழமாக ஒரு கேள்வி கேட்டார் சந்திரன். மங்கையும் லதாவை எரிச்சலுடன் ஒரு பார்வை பார்த்தாள். ஆனால் தந்தை பார்த்துக் கொள்வார் என்று எண்ணி நெஞ்சை நிமிர்த்தி நிமிர்வாகவே வேடிக்கை பார்த்தாள்.

அவர் கேள்வியில் லதா திணறி அமைதியாக இருக்க “லதா கேட்டதுல என்ன தப்பு இருக்கு பா? நம்மளுக்கு எதுக்கு ஊர் வம்பு? அவங்க வீட்டு விஷயத்துல எதுக்கு தலையிடணும்?”, என்று கேட்டான் நந்தன்.

கவினுமே கயல் சந்தோஷமாக இருந்ததைக் கண்டு நிம்மதியாக இருக்க அவனுக்கு அக்கா செயலில் சந்தோஷம் தான் இருந்தது. இப்போது அண்ணனும் அண்ணியும் மங்கையை குறை சொல்லிக் கொண்டிருக்க அவனுக்கு கூட கோபம் வந்தது. ஆனாலும் தந்தையை எண்ணி அமைதியாக இருந்தான்.

கணவர் சப்போர்ட் கிடைத்ததும் தைரியமான லதா “அவ நல்லதுக்கு தான் மாமா சொல்றோம். நீங்களே பாத்தீங்கள்ல? ஒரு நிமிஷத்துல அந்த பொம்பளை உங்க பொண்ணை அந்த பார்த்திபன் கூட சேத்து வச்சு பேசிருச்சு? நாளைக்கு கல்யாணம் முடிஞ்சு வேற வீட்டுக்கு போற பிள்ளை. இப்படி இவ பேர் தப்பா பரவினா எப்படி இவளுக்கு கல்யாணம் நடக்கும்?”, என்று கேட்டாள் லதா.

கோமளத்துக்கோ லதாவை எண்ணி அவ்வளவு கோபமாக வந்தது. ஆனாலும் கணவரை எண்ணி அமைதியாக இருந்தாள்.

“நீ உன் புருஷனையும் பிள்ளையையும் பாத்தா போதும் மா லதா. என் மகளைப் பத்தி நீ கவலைப் பட அவசியம் இல்லை.  அவளுக்கு நல்லது யோசிக்க அம்மா அப்பா நாங்க இருக்கோம்”, என்றார் சந்திரன்.

“அப்பா எப்ப பாத்தாலும் எதுக்கு லதாவை பேச விடாம பண்ணுறீங்க? நாளைக்கு அந்த பொம்பளை மங்கையை அந்த பையன் கூட சேத்து வச்சு ஊர் முழுக்க பேசினா என்ன பண்ணுவீங்க?”, என்று கேட்டான் நந்தன்.

மருமகளை விட சந்திரனுக்கு மகன் மேல் தான் அவ்வளவு எரிச்சல் வந்தது. அவனை முறைத்துப் பார்த்தவர் “அப்படி ஒரு பேச்சு வந்தா அந்த பையனுக்கே என் பொண்ணைக் கட்டிக் கொடுத்துருவேன். அப்படி இல்லைன்னா அவளை நம்புற ஒருத்தனை தேடிப் பிடிச்சு கட்டி வச்சிக்கிறேன் போதுமா?”, என்றவர் “அப்புறம் என்ன சொன்ன? உன் பொண்டாட்டியை நான் பேச விடாம செய்யுறேனா? அப்படி செஞ்சா உன் பொண்டாட்டி பேச்சு சரி இல்லைன்னு அர்த்தம். அது கூட படிச்ச உனக்கு தெரியலையா? படிச்சிருந்தும் நீ என்ன முட்டாளா டா?”, என்றார் வெளிப்படையாகவே. இத்தனை நாள் மகன் மீது இருந்த அதிருப்தி இன்று வெளியே வந்து விட்டது.

“நான் என்ன மாமா தப்பா பேசிட்டேன்? உங்க மக வாழ்க்கையை பத்தி ஒரு அண்ணியா கவலைப் பட்டது தப்பா?”, என்று கேட்டாள் லதா.

“நீ எப்பவும் என் பொண்ணுக்கு அண்ணியா இருந்தது இல்லைன்னு அர்த்தம். இனியும் இருக்க மாட்டேன்னு அர்த்தம்”, என்று அவர் சொல்ல “மாமா”, என்றாள் கோபமாக.

“என்ன மா, எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா? நீ பண்ணுறது பேசுறது எல்லாம் நான் கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன்”, என்று அவளிடம் சொன்னவர் “டேய் சின்னவனே நான் இல்லாதப்ப லதா உன் அக்காவை என்ன என்ன பேசினான்னு சொல்லு டா”, என்றார் கவினிடம்.

தந்தையே கேட்ட பிறகு சொல்லாமல் இருப்பானா? அவனே மனதுக்குள் வைத்துக் குமுறிக் கொண்டு தானே இருக்கிறான்.

“அண்ணி எப்பவும் அக்கா கூட சண்டை இழுத்துகிட்டே தான் பா இருக்கு. எதுக்கு எடுத்தாலும் அக்காவை மட்டம் தட்டுறாங்க. அதுவும் படிக்கலை, ஒண்ணும் தெரியாதவன்னு அக்காவை பேசுறாங்க. போற இடத்துல உனக்கு வரவன் உன் திமிரை அடக்குவான் பாருன்னு சாபம் கொடுக்குற மாதிரி பேசிக்கிட்டே இருக்காங்க. அக்கா ஒதுங்கி தான் போகுது. ஆனாலும் இப்படி தான் பண்ணுறாங்க. அஸ்வின் குட்டி அக்கா கிட்ட வந்தாலும் அவனை தூக்காத, அவனுக்கு வயிறு சரி இல்லைன்னு சொல்றாங்க. இன்னும் நிறைய இருக்கு பா. ஆனா இவ்வளவு திட்டுறவங்க அக்கா டிராவல்ஸ்ல இருந்து தினமும் எவ்வளவு வருமானம் வருதுன்னு அடிக்கடி எதுக்கு கேக்கணும்னு தெரியலை”, என்று இவ்வளவு நாள் மனதில் இருந்த மனக்குறையை கொட்டி விட கோமளமோ கொதித்து போனாள்.

“கவின் என்ன டா சொல்ற? இப்படி எல்லாம் இவ மங்கையை பேசினாளா டா?”, என்று கேட்டாள் கோமளம்.

“ஆமா மா”, என்று சொல்லி அவன் மங்கையை பார்க்க அவளோ சாதாரணமாக நின்றாள்.

“எதுக்கு டா நீ என் கிட்டயும் அப்பா கிட்டயும் சொல்லலை?”, என்று கேட்டாள் கோமளம்.

“கூட பிறந்த தங்கச்சியை திட்டிக்கிட்டே இருக்குற பொண்டாட்டியை அண்ணன் தான் கண்டிக்கணும். இங்க அண்ணனே அவங்க பக்கம் பேசும் போது எதுக்கு மா தேவையில்லாத பிரச்சனை? இதையும் அக்கா தான் சொல்லுச்சு”, என்று கவின் சொல்ல நந்தனுக்கு செருப்பால் அடித்தது போல இருந்தது. லதாவோ பயத்தில் வெளுத்து போய் நின்றிருந்தாள்.

“ஆனா ஒண்ணு மா, எனக்கு வரப் போற பொண்டாட்டி மட்டும் அக்காவை ஏதாவது சொல்லட்டும். அப்ப இந்த கவின் யாருன்னு தெரியும். மத்தவங்க மாதிரி நான் ஜால்ரா தட்டவும் மாட்டேன். ஒத்து ஊதவும் மாட்டேன். சரி எனக்கு தூக்கம் வருது. அக்கா வா போகலாம்”, என்று சொல்லி மங்கையையும் இழுத்துக் கொண்டு சென்று விட்டான். ஏனோ அண்ணன் மீது இருந்த கோபம் இன்று வெளியே வந்து விட்டது கவினுக்கு.

கவினுக்கு நந்தனை அவ்வளவு பிடிக்கும் தான். அதற்காக உடன் பிறந்தவளுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவன் என்ன தம்பி? ஆனாலும் அண்ணனை நேரடியாக குறை சொல்ல மனதில்லாமல் லதாவைப் போல ஜாடையாக பேசி விட்டு சென்று விட்டான்.

மங்கைக்குமே இது தேவையில்லாத பேச்சு வார்த்தையாக தான் பட்டது. அவளுக்கு பிரச்சனை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருந்தால் இதை எல்லாம் என்றோ செய்திருப்பாளே? கூடவே அவள் மனதில் இப்போது பார்த்திபனும் அவன் பார்வையும் மட்டுமே இருக்க உடனே அங்கிருந்து சென்று விட்டாள்.

கோமளம் மகனிடம் எதுவோ சொல்ல வர “ஒரு நிமிஷம் அமைதியா இரு கோமு”, என்றார் சந்திரன்.