ஆனந்த போர்க்களம் – 13

கணவன் என்ற உறவிருந்தும் உரிமையாக இதுவரை எதற்கும் வீரேந்திரனை சந்தியா அணுகியதில்லை.

முன்பு ஒருமுறை அவன் கல்லூரி நண்பர்கள் சந்திப்பில் சண்டையிட்டபோது தடுக்க முயன்றாள். அதற்கே அவன் தன் கழுத்தை நெறிக்குமளவு முயன்றதை இன்று வரையிலும் அவளால் கடந்ததுவர முடியவில்லை.

என்னவோ அதிசயத்திலும் அதிசயமாக இப்பொழுது சில தினங்களாகத் தான் அவன் பார்வையே இவள் புறம் திரும்பியிருக்கிறது.

என்னவோ அந்த பார்வைகள் கொஞ்சம் இதம் தந்தாலும் அன்றைய பாதிப்பு நெருஞ்சி முள்ளாய் அவ்வப்பொழுது உறுத்திக் கொண்டே தான் இருந்தது.

ஆனால், இன்றைய அவனின் செய்கையைப் பார்த்தபிறகு அவளுள் எந்த சுணக்கமும் இல்லை. கூடவே தன் கணவன் என்னும் பெருமிதம் தான் அவளுள் மிதமிஞ்சி இருந்தது.

குறையற்ற மனிதர்கள் தான் யார்? இவனின் குறை இந்த அடிதடி! அதை எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்ள மாட்டானா? அதுவும் அந்த அடிதடிகளின் எதிர்வினை… எப்பொழுது எப்படி வேண்டுமானாலும் இவனையோ இவன் குடும்பத்தையோ பாதிக்கும் என புரியும்படி சொன்னால் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்காமலா போவான்?

இந்த எண்ணத்தில் இருந்தவள் வீடு வந்ததும் இனிய கற்பனையோடு இறங்கி உள்ளே நடந்தாள். கூடவே கணவனும் வரவும், ‘வெளிய ஏதோ வேலையிருக்குன்னு சொன்னாங்களே…’ என யோசனை வந்தாலும் அவனிடம் மனதில் பட்டதைக் கேட்கும் நெருக்கம் ஏது?

தங்கள் அறைக்குள் சென்று அன்று கடையில் வாங்கிய பொருட்களை எல்லாம் வைத்துவிட்டுத் திரும்பியவள், அங்கு நின்றிருந்த கணவனைப் பார்த்து ஒருநொடி அதிர்ந்து பின் அவன் என்று தெரிந்ததும் ஆசுவாசமானாள்.

அவன் என்னவோ சொல்ல நினைக்கிறானோ என்பதுபோல தோன்ற அவன் முகத்தைப் பார்த்தவளிடம், “புடவை எதுவும் கட்டிக்கறியா? கோயிலுக்கு போயிட்டு வரலாம்ன்னு யோசிக்கிறேன்” என்றதும், இது என்ன திடீர்ன்னு என்று தான் ஆச்சரியப்பட்டாள்.

பொதுவாக இவன் இப்படி எல்லாம் கேட்பவன் இல்லையே!

சரி, ஏதோ ஒன்று அவன் இணக்கமாக நடக்க முயற்சிப்பது நல்லது தானே என்ற எண்ணத்தில் முகம் மலர்ந்தவள், சரி என்று தலையசைத்தாள்.

சந்தோஷமும் அது தந்த முகப்பொலிவுமாக அவனோடு கோயிலுக்குச் செல்ல தயாரானாள்.

இருவரையும் ஒருசேரப் பார்த்த ஸ்ரீதரன் தன் புருவங்களை ஏற்றி இறக்கி ஆச்சரியம் காட்டினான். கேலி புன்னகையுடன் கண் பாஷையில் தன் அண்ணியிடம் வம்பு வளர்க்க, அவள் கண்களைச் சுருக்கி கைவிரல்களைக் குவித்துக் கெஞ்சுவது போலக் காட்டி, ‘பிளீஸ்… விட்டுடுடா…’ என கணவனுக்குத் தெரியாமல் சைகை செய்து வாயசைத்தாள்.

‘சரி சரி பிழைத்து போ…’ என்கிற பாவனையை அவனும் பதிலுக்குக் காட்டினான்.

“கோயில் போகலாம் வரியா டா?” எதிர்ப்பட்ட தம்பியிடம் வீரேந்திரன் விசாரிக்க, “இல்லைண்ணா நீங்க போயிட்டு வாங்க. நான் சாப்பிட்டு தூங்கணும்” என கூறியவனின் மனதிற்குள், ‘நான் என்ன கரடியா?’ என்ற கேள்வி தான்!

அது அவனது முகபாவனையிலேயே புரிபட்டு விட, ‘இவனோட…’ என பல்லைக் கடித்தாள் சந்தியா.

வீரேந்திரன் முன்னே சென்றுவிட, “ஹேவ் எ நைஸ் டே அண்ணி…” என சந்தியாவைச் சீண்டி தலையில் பலமாகக் கொட்டு வாங்கிக் கொண்டான். அவள் சிரிப்போடே இளையவனிடம் பத்திரம் காட்டிவிட்டுச் செல்ல, ஸ்ரீதரன் முகத்திலும் நிறைவான புன்னகை.

அவர்கள் வருவதற்கு முன் உணவை முடித்து தன் அறைக்குள்ளும் ஐக்கியமாகிவிட்டான்.

வீரேந்திரன் கோயில் வாயிலில் மனைவிக்கு பூ வாங்கி தந்தவன், அவள் மெதுவான நடைக்கு ஈடுகொடுத்து நடந்தான். சந்நிதானத்தில் அவள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் வரை நின்று, அவளோடே நிதானமாகக் கோயிலை வலம் வந்து, மண்டபத்திலும் அவள் அமர்ந்திருந்தவரை அமர்ந்திருந்தான்.

இந்த கவனிப்பெல்லாம் சந்தியாவிற்குப் புதுமையாக இருந்தது. அவளுக்கு ரொம்பவும் பிடித்தும் இருந்தது. ஒருமாதிரி சந்தோச மனநிலையில் இருந்தாள்.

அதுவும் மண்டபத்தில் இருந்தபோது, வீராவுக்கு ஒரு கைப்பேசி அழைப்பு வர, அதில் அவன் பேசியதைக் கேட்டபோதுதான், வேலை இருந்தும் அதைப் பிறரிடம் ஒப்படைத்து விட்டு தன்னோடு நேரம் செலவழிக்கிறான் என்று புரிந்தவள் என்னமாதிரி உணர்ந்தாள் என்றே சொல்ல முடியாது.

மனம் நெகிழ, இதுவரை அனுபவித்தறியாத ஒருவித பரவசத்துடன் அமர்ந்திருந்தாள்.

அதன்பிறகு வீடு வந்து சேர்ந்து உணவை முடித்தனர்.

சந்தியா உண்ட பாத்திரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து அறைக்குச் சென்றபோது வீரேந்திரன் வெள்ளை வேஷ்டி, உள்பனியன் அணிந்து கட்டிலில் படுத்துக்கொண்டு கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.

பெரும்பாலும் இவள் படுத்தபிறகு தான் வருவான் என்பதால், இதுபோன்ற காட்சிகள் எல்லாம் அந்த அறையில் அபூர்வம் தான்!

அவனிடம் இன்று தான் எண்ணியதைப் பேசிவிட வேண்டும் என்று எண்ணியபடியே, இவளும் விளக்கணைத்து மறுபுறம் படுக்க, வழக்கம்போல இரவு உடைக்கு மாற மறந்திருந்தாள்.

‘அச்சோ! புடவையை மாத்திட்டு படுப்போம்’ என எழ முயற்சி செய்தவளால் எழவே முடியவில்லை. அதற்குள் கணவனின் கையணைப்பில் இருந்தாள்.

இதயம் வேகமாகப் படபடத்தது. நிச்சயம் இதை அவள் எதிர்பார்க்கவில்லை.

அவளின் அதிர்ச்சி குறையும் முன்பே அவளைப் பிரட்டி தன்னை நோக்கித் திருப்பியிருந்தவன், அவளின் முகத்தையே ஓரிரு நொடிகள் ஆர்வமாகப் பார்த்துவிட்டு, மெல்ல அவளின் இதழ்களை முத்தமிட்டான்.

அதிர்ந்து விழி விரித்தாள் மங்கை. வீரேந்திரன் சின்ன சிரிப்புடன் முத்தத்தை மீண்டும் மீண்டும் தொடர, மனம் மத்தளம் கொட்டியது சந்தியாவிற்கு. அச்சம், கூச்சம், தயக்கம் என அவள் தன் மெல்லிய மேனி நடுங்கக் கணவனின் கையணைப்பில் படுத்திருந்தாள்.

சந்தியாவின் அச்சத்தை விரட்டி, கூச்சத்தை விலக்கி, தயக்கத்தை உடைத்து வீரேந்திரன் அழகாய் முன்னேறியிருந்தான்.

அவனின் முன்னேற்றத்தில் பெண்ணரசி திணறித் திண்டாடிப் போனாள்.

“சந்தியா…” என்ற அவனின் குழைந்த உச்சரிப்பு அவளின் உயிர்வரை உரசிச் சென்றது.

முரடன், ரௌடி என அவள் ஒதுக்கி வைத்தவன் தன் வாழ்வின் எல்லாமுமான விந்தை அவளுக்குப் புரியவே இல்லை. களைப்போடு கணவனின் கையணைப்பில் உறக்கத்தை தழுவியிருந்தவளின் முகத்தில் சோர்வையும் மீறிய மகிழ்ச்சியும், நிறைவும்!

திருமணமே வேண்டாம் என நினைத்த வீரேந்திரனும் தான் இப்படி மாறிப் போவோம் என ஒருநாளும் நினைத்திருக்க மாட்டான்.

காதலின் இனிமையோடு அவர்களின் நாட்கள் அழகாய் பயணித்தன.

எப்படியாவது இந்த அடிதடி, சண்டை, சச்சரவுகள் எல்லாம் இனி வேண்டாம் என கணவனிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்று சந்தியா எண்ணுவதும், அதை எப்படி எடுத்துச்சொல்ல என தயங்குவதுமாக இருந்தாள்.

அதை அவனிடம் சொல்வதற்கான தைரியம் கூட வராமல் தகிடுதத்தம் செய்ய, ஒரு நாள் அவனாகவே, “என்ன விஷயம்? ஏதாவது சொல்லணுமா?” என்று கேட்டு விட்டிருந்தான். அடிக்கடி இவள் அவனின் முகம் பார்த்துவிட்டுத் தயங்குவதை அவனும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

அவளாகச் சொல்லட்டும் என நேரம் கொடுக்க, அவள் சொல்ல முயற்சியே எடுக்கவில்லை என்றதும் இவனே கேட்டு விட்டிருந்தான்.

வீராவே கேட்டதும், திருதிருத்து விட்டு, ஆமாம் எனத் தலையாட்டியவள், “அது… இல்லை…” என்று திணறினாள்.

கடுப்புடன், “ம்பச்… என்ன விஷயம்?” என்றான்.

“அது… அது… ராகவி இப்ப நல்லா இருக்கா தானே?” என்றாள் வேகமாக.

“யாரு ராகவி?” அவனுக்கு அந்த பெண்ணின் பெயர் நினைவில் இல்லை.

“அன்னைக்கு நம்ம கடை முன்னாடி ஆசிட் வீசினாங்களே…”

“ஓ… ஆமாம் அந்த பொண்ணுக்கு ஆபரேஷன் எல்லாம் பண்ணிட்டாங்க. இப்ப பரவாயில்லை. இதை கேட்கவா இவ்வளவு தயங்கின?” என்றதும் சந்தியாவிடம் அமைதி!

வீரேந்திரனின் பொறுமை எட்டி நிற்க, “என்னன்னு கொஞ்சம் சொல்லறியா?” என்றான் அதிருப்தியாக.

“அது… அந்த பையன்…” சந்தியா திணற, “ம்பச்… இப்ப எந்த பையன்?” என அவன் கேட்ட தொணியில் மேற்கொண்டு இதைக்குறித்து விசாரிக்கும் எண்ணமே ஓடி விட்டது அவளுக்கு.

அவள் பாவமாகப் பார்க்க, இல்லாத பொறுமையை இழுத்துப் பிடித்து, “என்னன்னு நேரடியா கேட்டா தானே சொல்ல முடியும்?” என்றான் இயல்பான குரலில்.

“அந்த பொண்ணு மேல ஆசிட் வீசினவன்…” என மெதுவான குரலில் மென்று விழுங்கினாள்.

“அந்த பரதேசி சட்டத்துல இருக்க ஓட்டை வழியா வெளிய வந்துட்டான். இன்னும் அடங்காம வஞ்சம் வெச்சுட்டு தான் சுத்திட்டு இருக்கான். எப்ப அடுத்த ரௌண்டு என்கிட்ட வாங்கி காட்டுவான்னு தெரியலை…” என்றான் ஆத்திரமாக.

“பிரச்சினை ஆயிடாதே…” என்றாள் அச்சத்துடன்.

“இனி அந்த பொண்ணு பக்கம் போக மாட்டான். அப்பறம் காலத்துக்கும் ஜெயில் தான்… அதுனால அவன் பார்வை கண்டிப்பா அந்த பொண்ணு பக்கம் போகாது” என்று கணவன் சொன்னதும், “உங்ககிட்ட பிரச்சினை செய்ய மாட்டானா?” என்றாள் கலக்கமாக.

“என்கிட்டயா? அதுதான் சொன்னேனே பண்ணிட்டு தான் இருக்கான். அதெல்லாம் நான் சமாளிச்சுப்பேன்”

“ஆனா இப்படி எவ்வளவு உங்களால சமாளிக்க முடியும்? ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்குமா?” என்று சந்தியா தவிப்பாகச் சொன்னதும், “என்ன சொல்ல வர?” என்றான் பார்வையைக் கூர்மையாக்கி.

“எனக்கு பயமாயிருக்கு…” என்றவள், “கொஞ்சம் கை நீட்டற பழக்கத்தை குறைச்சுக்கங்களேன்” என ஒருவழியாக தன் மனதில் இருப்பதைச் சொல்லி விட்டாள்.

வீரேந்திரனின் பார்வை மனைவியைத் துளைத்தது.

அதில் அவளுக்குத் தேகம் நடுங்கும் போல இருந்தது.

இந்த அச்சம், மனதில் சொல்ல நினைத்ததைச் சொல்லத் தயங்குவது இதெல்லாம் கணவன், மனைவி பந்தத்துக்குள் சரிப்பட்டு வராது என இருவருக்குமே விளங்கவில்லை.

சந்தியா அச்சப்படுவதே தவறு எனும்போது, வீரா அவளை அந்த நிலையில் வைத்திருப்பதை என்னவென்று சொல்ல?

வீரா கொஞ்சமும் யோசிக்காமல் வார்த்தைகளைச் சிதற விட்டான். “உனக்கு ரொம்ப இடம் கொடுத்திட்டேன் என்ன?” என்றான் தயவு தாட்சண்யமின்றி.

அவனை ஏறிட்டுப் பார்த்தவளின் விழிகளில் சொல்லொணா வேதனை! கலக்கத்தோடு அவனையே பார்த்திருந்தாள்.

“என்கிட்ட இவ்வளவு பேசும் தைரியம் நான் தந்தது தான் இல்லையா?”

‘ஏன் இவன் என்ன பூத இனமா இவனிடம் பேச என்ன தைரியம் வேண்டுமாம்?’ அவளுக்கு ரோசம் வந்தது.

“கொஞ்சம் இடம் கொடுத்தா தலைமேல ஏறி உட்கார்ந்துப்பாங்களாம்? சரியா தான் இருக்கு என்ன?” அடுத்த பாய்ச்சல் அவனிடம்.

அவனுக்குத் தான் என்ன பொல்லாத வேலை செய்துவிட்டோம்? ஆளாளுக்கு வேண்டாம் வேண்டாம் என்று கட்டுப்படுத்த என்னும் எண்ணம் தான்!

யாரை பார்த்தாலும் அவன் முரட்டுக் குணத்தையே குறையாகச் சொல்ல, அந்த குணம் இல்லாவிட்டால் எப்பொழுதோ தன்னை மொத்தமாகக் கவிழ்த்துப் போட்டுவிட்டு சென்றிருப்பார்கள் என்று கோபமாக எண்ணிக் கொண்டான். அந்த ஆத்திரம் முழுவதும் இப்பொழுது மனைவி மீது பொழிந்தது.

என்னவோ அவன் பேச்சு செல்லும் திசையே அவளுக்குப் பிடிக்கவில்லை. “உங்ககிட்ட எதையாவது சொல்ல நான் பயப்படணுமா?” என அவனிடமே திரும்பிக் கேட்டாள்.

அவன் புருவம் சுருங்க கூர்மையாக அவளையே பார்த்துக் கொண்டிருக்க, “உங்களுக்கு ஒரு பாதிப்புங்கிறது உங்களோட இல்லை… எனக்கும் ஸ்ரீதரனுக்கும் கூட உங்க மேல இருக்கும் கோபத்துல யாரு வேணா பாதிப்பை உண்டாக்கலாம். நாளைக்கு நம்ம குழந்தைங்க வரை கூட அது தொடரலாம்… இல்லை நடக்காதுன்னு உறுதியா உங்களால சொல்ல முடியுமா?”

அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் தன் பார்வையையும் மாற்றிக் கொள்ளவில்லை.

இன்னமும் என் விஷயத்தில் நீ மூக்கை நுழைக்கிறாய் என்ற எண்ணம் தான் அவனுக்குள்!

“நீங்க மத்தவங்களுக்கு உதவி செய்யறது வரை ஒன்னும் பிரச்சினையில்லை. ஆனா இந்த அடிதடி, சண்டை சச்சாரவு எல்லாம் சட்டத்தை உங்க கையில எடுக்கிறது தானே? அதாவது சட்டப்படி தப்பான ஒரு விஷயத்தை செஞ்சுட்டு இருக்கீங்க…” என்றாள் பொறுமையான குரலில்.

அவள் பேசியது முழுவதும் கேட்டு முடித்தவன், “உன் பிரசங்கம் முடிஞ்சதா?” என்றான் கேலியாக.

அவள் முகம் விழுந்தது. என்ன எடுத்துச் சொன்னாலும் புரிந்துகொள்ள மாட்டேன் என்பவனிடம் என்னவென்று சொல்வது? அவள் முகமே வாடிப் போனது.

“நிஜமாலுமே உனக்கு ரொம்ப இடம் தந்துட்டேன் தான்! ஏன் தந்தேன்னு இப்ப வருத்தப்பாடறேன். ச்சே! இந்த கல்யாணத்துக்கே நான் சம்மதிச்சிருக்க கூடாது…” என்று அவன் சொன்னபோது அவள் மனதளவில் பலமாகக் காயப்பட்டாள்.

எவ்வளவோ போராடி தன் அச்சத்தை எல்லாம் ஒதுக்கி தன் மனதில் இருந்ததை மொத்தமாகச் சொல்லி முடித்தால், அதை கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படி பேசிவிட்டானே என அவள் மனம் மிக மோசமாக ரணப்பட்டது.

இவனைப் போன்றவர்களை எல்லாம் மாற்ற நினைப்பதே மடத்தனம் என எண்ணியது அவள் உள்ளம்.

இருவருக்குமே மற்றவரின் செய்கை, பேச்சு பிடிக்காமல் போய்விட, இருவரிடையேயும் பெரிய வெற்றிடம்!

ஒருவர் முகம் பார்ப்பதை மற்றவர் தவிர்த்தனர். அவசிய பேச்சுவார்த்தைகளைக் கூட வைத்துக் கொள்ளவில்லை. ஒரே அறையில் தனித்தனி தீவென்று வாழ்ந்தனர்.

இருவரில் ஒருவருக்கும் மற்றவரிடம் இறங்கிப் போகும் எண்ணம் எழவில்லை. தங்கள் கோபத்தில் நிலையாய் நின்றனர்.

வீராவுக்கு யாரையும் சமாளிக்கத் தேவையில்லை. ஆனால், சந்தியா ஸ்ரீதரன் முன்பு கணவனிடம் சண்டை இல்லாதது போல நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அதற்கும் வீரா வாய்ப்பளிக்கவில்லை. அங்கே இருந்தால் தானே நீ பிறருக்காக நடிக்க..  என வீட்டில் இருக்கும் நேரத்தை வெகுவாக குறைத்துக் கொண்டான்.