தனம் வெறித்து பார்க்கும் போதே, “இதே உங்க மக கிட்ட, புருசன் கிட்ட என்னை பத்தி கேட்டு பாருங்க. மதினி, மருமகன்னு சொல்ல தாண்டி வேற வார்த்தை வராது. இப்ப சொல்லுங்க யார் பொழப்பு நாறி போய் இருக்கு. பெத்த பிள்ளைகளும், கட்டுன புருசனும் மதிக்காத ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு அடுத்தவங்க வாழ்க்கையை நீங்க விமர்சிக்கலாமா… உங்களை பார்த்து ஒதுங்கி போறது சாக்கடை மேல ஏன் கல்லு எரியனும்ன்னு தான். நாங்க எல்லாம் நமக்கு மேல ஒருத்தன் இருக்கான், அவன் கிட்ட கூலு வாங்க கூடாதுன்னு நினைப்பையும், சொல்லையும் அடக்கி வாழ்றவங்க. உங்களை மாதிரி இஷ்டத்துக்கு வாய் இருக்குன்னு பேசுற ஆள் இல்லை…”
“எனக்குனு ஒரு மரியாதை இருக்கு, என் நடத்தைக்கு என் கிட்டயே மதிப்பு இருக்கு. கண்ட மாதிரி வாய் பேசுற ஆள் நான் இல்லை. உங்களோடு சரிக்கு சமமா பேசி, நம்ம தரத்தை ஏன் குறைக்கணும்ன்னு ஒதுங்கி போறாங்க. அது என்னவோ உங்களை பார்த்து பயந்து போற மாதிரி உங்களுக்கு ஒரு கர்வம். நம்ம குடும்பத்தை அடக்கி ஆள்ரது என்னைக்கும் நமக்கு பெருமையை தராது. நீங்க என்னை பேசும் போது நான் ஒதுங்கி போனதும் சாக்கடை மேல ஏன் கல்லு எரியனும்…”
தனத்திற்கு கோபம் அடக்க முடிய வில்லை, “நீ வாழ்ற வாழ்க்கை எம் மகன் போட்டது. அந்த மகன், இந்த தனம் பெத்தவன்…”
“உங்களை மாதிரி தரம் கெட்டு வார்த்தை விடாம வாயடக்கி, கையடக்கி நின்னதுக்கு கடவுள் கொடுத்தது. நீங்க சொன்ன ஒண்டி குடுத்துனத்துல, அடுத்தவங்க கைய எதிர் பார்த்தாலும் அடுத்தாளு குடி கெடுக்காம என் வாழ்க்கைக்கு நான் உண்மையா இருந்ததுக்கு கடவுள் கொடுத்தது. அந்த வீட்டுல என்னை துரத்தி விட்டீங்களே, இந்த வீட்டு படியேறி என்னை வெளியேத்த முடியுமா உங்களால?… எம் பிள்ளைகளை தெருவுல போட்டீங்களே அங்க போய் முன்ன நின்னு பாருங்க வீடு, கடை எல்லாம் எம் பிள்ளைக பேரு தான். கடவுள் யாரை தூக்கி ஒய்யாரமாக வச்சு இருக்கார்… வாயில விடுற வார்த்தைக்கு கூட சாமிக்கு பயப்படனும். மாசமா இருக்குற பொண்ணுன்னு பார்க்காம எத்தனை நாள் என் சாப்பாட்டுல கை வச்சீங்க, இன்னைக்கு என் கையால சாப்பாடு போடுறேன். ரொம்ப பெருமையா இருக்கு.”
“இப்ப சொல்றேன் கேளுங்க. என் வாழ்க்கைக்கு எந்த குறைச்சலும் இல்லை. நாலு பேர் மத்தியில் அடிச்சாலும், நாலு சுவத்துகுள்ள கால பிடிக்கிற எம் புருசன் நல்லவன் தான். அதான் ஒய்யாரமாக ஊஞ்சல் ஆடுறேன்…”
“எம் மகன் வரட்டும், உனக்கு இருக்கு…”
“வரட்டுமே, எனக்கு எந்த பயமும் இல்லை. முப்பத்தாறு வருசமா நீங்க காணத ஒன்னு எங்க வாழ்க்கையில இருக்கு. அது தான் நம்பிக்கை. இங்க நாம தான் இருக்கோம். உங்களை நான் அடிக்கிறேன்னு வைங்க…”
என்ன என்று அதிர்ந்து தனம் பார்க்க.
“சும்மா ஒரு பேச்சுக்கு. நான் அடிச்சேன்னு உங்க மகன் கிட்ட சொல்லுங்க. நீங்க என்ன பண்ணீங்கன்னு தான் முதல் வார்த்தை வரும். எம் பொண்டாட்டி தப்பு பண்ண மாட்டான்னு எம் புருசனுக்கு ஒரு நம்பிக்கையா நான் கொடுத்திருக்கேன். உங்க வாழ்க்கையை, உங்களை நீங்களே கேட்டு பாருங்க…” சரண்யா சொல்ல.
வேக வேகமாக போனார் தனம். வேற எங்க மகனை பார்க்க தான். இன்றைக்கு இவளுக்கு ஒரு முடிவு காட்டாமல் விட கூடாது.
சரண்யா அமைதியாக அமர்ந்து விட்டாள். இன்றைய கோபம் அல்ல, பல நாள் மன அழுத்தம் வெடித்து விட்டது. கணவன் மேல் நம்பிக்கை இருந்தாலும், சிறு உறுத்தல் இருந்தது. பெற்ற தாய் அல்லவா…
சாப்பிட வீட்டுக்கு தான் கிளம்பி கொண்டு இருந்தான். வெற்றி என்ற சத்தம் கேட்க. “யாரு, அம்மாவா… என்னம்மா வெயிலுல வந்திருக்க, வா, உட்கார்…” என்று அமர வைத்து தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க.
அப்படி ஒரு திருப்தி தனம் முகத்தில்.
“சாப்பிட வீட்டுக்கு தான் வாரேன். எதுக்கு இவ்வளவு தூரம் வந்த…” என்று கேட்க.
கண்களில் நீர் நிறைய தலை குனிந்து அழுதவாரு இருந்தார்.
பதறி போனவன், “என்னம்மா…”
“இந்த வீட்டு மூத்தவ தான்.”
“சரண்யாவா…”
“ஆமாடா, நான் சாக்கடையாம். என்ன வார்த்தை சொல்லிட்டா பாரு…” என்று அழுக.
“சரண்யாவா சொன்னா… அவளே சொல்ற அளவுக்கு நீங்க என்னம்மா சொன்னீங்க… காரணமில்லாம அவ ஏன் கோபப்பட போறா, அவ கிட்ட எதுவும் சண்டை போட்டீங்களா…” என்று ஒரு வார்த்தை தான் வந்தது.
“மூணு பிள்ளை மூத்தது முத்துன்னு பொத்தி வச்சேன். நல்ல பேரு தான் எனக்கு…” என்று மூக்கை சிந்த,
தாயை அழுத்தமாக பார்த்தவன், உடனே மனைவிக்கு போன் செய்து விட்டான். “சரண்யா, என்ன நடந்துச்சு…”
மறைக்க ஒன்றும் இல்லை, பயமும் இல்லை எல்லாவற்றையும் சொல்லி விட்டாள்.
“மாமியார்ன்னா நாலு வார்த்தை கூட, குறையா வந்து விழ தான் செய்யும். அதுக்காக என்னை என்னவும் பேசலாமா… அவளை பயமுறுத்தி வை மகனே. நீ நல்லா ஒய்யாரமா தூக்கி வச்சுட்ட, அவ ஆடுறா… பின்னாடி உன்னையவே மதிக்க மாட்டா…”
“நீங்க சொல்றது சரி தான்மமா. அப்ப என்ன செய்யலாம்…” யோசிப்பது போல பாவனை காட்டியவன்,
“அவளை அடிச்சு வீட்டை விட்டு அனுப்பிறேன். நானும், பிள்ளைகளும் தனியா நிக்கிறோம். ஆனா, சரண்யா பிள்ளைகளை விட மாட்டா. அப்போ அவ பிள்ளைகளை கூட்டி போகட்டும் நான் அனாதையா நிக்குறேன். சரிதானா, அப்ப தான் அவளுக்கு புத்தி வரும்…” என்று வெற்றி சொல்ல.
“என்ன வெற்றி, நான் என்ன அப்படியா சொன்னேன்…”
“வேற என்னம்மா பண்ண சொல்றீங்க. நீங்க சொல்றது அப்படி தான் இருக்கு. அவ என்ன அடிமையா… எங்கம்மா சொல்றத தான் கேட்கணும், இல்லன்னா வீட்டை விட்டு துரத்திவிடணுமா… இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா. அவ என்ன வழி இல்லாமவா என் கூட வாழ வந்தா. உன் மகன் தான் கால்ல விழுந்து கெஞ்சி கூத்தாடி கூட்டி வந்துருக்கேன். என்னை பத்தி யோசிக்காம இஷ்டத்துக்கு பேசி வச்சு இருக்கீங்க…” என்று சத்தம் போட
கால்ல விழுந்தையா வெற்றி…” என்று அதிர்ந்து போய் தனம் கேட்க.
“பின்னே, நான் என்ன அவ்வளவு பெரிய உத்தமனா. நான் போய் நின்னதும் கூடவே வர. நான் பண்ணது எல்லாம் அயோக்கிய தனம் தானம்மா. எந்த பொன்னும் யோசிக்க தான் செய்வா…” என்று சொன்னவன். கண் மூடி யோசித்தான், பின் தாயை பார்த்து அமர்ந்தவன்,
“கட்டாயபடுத்தி எந்த உள்ளார்ந்த உறவும் வராது. உங்களுக்கு சரண்யாவ பிடிக்கலையா ஒதுங்கி போங்க. எதுக்கு வீம்புக்கு போய் சண்டைக்கு நிக்குறீங்க…”
“நான் என்ன சண்டைகாரியா?…”
“என்னை முழுசா பேச விடுங்க. உங்களுக்கு பிடிக்கலை. சரிதான், அதுக்கு நான் என்ன பண்ண… அவளை நான் என்ன கூட்டி ஓடியா வந்தேன். நீங்க தான பார்த்து கட்டி வச்சீங்க. இன்னைக்கு தொட்டதுக்கு எல்லாம் குறை சொல்றது சரி கிடையாது…”
“நான் எதுவுமே பண்ணலை வெற்றி…” விட்டு குடுக்காமல் தனம் பேச, கோபம் ஏறியது வெற்றிக்கு…
“ எல்லாத்துக்கும் குறை சொல்லி அவளை அடக்கி, ஒடுக்கி அவளை பார்த்தா உங்களுக்கு என்னன்னு இருக்கு. தாலி கட்டுன நான் மனசு ஒப்பிதான் வாழ்றேன். இப்ப எங்க வந்து நிக்குது தெரியுமா… உங்க சொந்த மகன் வீட்டுல ஒரு நாள் தங்க முடியுமா. ஒரே ஊர்ல ரெண்டு குடும்பமா நாம வாழ்றோம். அந்த வலி உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லை…”
“இதுவரைக்கும் உங்களை நான் ஒரு வார்த்தை கேட்டது இல்லை, ஏன் முதல் குற்றவாளியே நான் தான். தண்டனை முதல எனக்கு தான் வரணும். எம் பிள்ளைகளை தெருவுல தூக்கி போட்டீங்க. ஒரு வார்த்தை கேட்டேன… என் இடத்துல எந்த ஆம்பிளையாவது விடுவானா. ஆனா, நான் எல்லா தப்பும் என் தலையில போட்டு அமைதியா தான் கடந்து போனேன். எப்பவும் என் வாழ்க்கையை நான் தான் சரி செஞ்சு வாழ்றேன். தயவு செஞ்சு எந்த குழப்பமும் பண்ணிடாதீங்க…”
“எம் மகனே இப்படி எல்லாம் பேசுற, அம்மாவுக்கு கஷ்டமா இருக்கு…”
“சரி விடுங்க. நீங்க மகன், மருமக, பேத்தின்னு பொதுநலமா யோசிக்க வேணாம். கொஞ்சம் சுயநலமா யோசிங்க. சரண்யா இடத்துல வேற பொண்ணு இருந்தா எண்ண ஆகும். நீங்க அந்த வீட்டு படியேற முடியுமா…. உங்களுக்கு எதுக்கு இவ்வளவு விரோதம். நிஜமாவே விரோதமா இருக்க வேண்டியது சரண்யா தான். ஆனா, அவ தான் விட்டு குடுத்து போறா… என்னையும், எம் பிள்ளைகளையும் துரத்தி விட்ட நீங்க, எம் வீட்டுக்கு வராதீங்கன்னு ஒரு வார்த்தை சரண்யா சொன்னா. யாரால என்ன செய்ய முடியும். நியாயம் அவ பக்கம் தான் இருக்கு. ஆனா, அவ தான் எல்லோரையும் அனுசரிச்சு போறா… உங்களை பார்க்கலையா, சரியா கவனிக்கலையா, சாப்பாடு போடலையா…” என்று சொன்னவன்.
“அவ்வளவு ஏன்?… உங்க மகன், மகள கூட அவ தான் பாக்குற. இன்னைக்கு நீங்க எல்லாத்தையும் முடிச்சு விட்டீங்க..”
“நான் என்ன மகனே செஞ்சேன்…” அவர் குரலில் அழுகை நிறைந்து இருந்தது.
“இன்னும் என்னம்மா செய்யணும். நீங்க பாட்டுக்கு பேசிட்டு போவீங்க. அவ கோபம் யார் பக்கம் திரும்பும். இன்னைக்கு வேறுபாடு இல்லாம நாத்தனார், கொழுந்தன்னு இழுத்து போற… நாளைக்கு ஒதுங்கி தான் போவா… மாமியார் சரி இல்லை நமக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கி போனா. உம் பிள்ளைகளுக்கு பிறந்த விடுன்னு ஒன்னு இல்லாமவே போகும். இன்னைக்கும் அவங்க ரெண்டு பேரும் வந்தா தங்குறது சரண்யா வீடு தான். உங்களை கூட தேடுறது இல்லை. நம்ம அண்ணன் வீடுன்னு வாராங்க. நாளைக்கு அண்ணன் உறவே இல்லாம போகும்…”
“வெற்றி” என்று நெஞ்சில் கை வைத்த தனம்.
“நான் இல்லாம போனாலும், எம் பிள்ளைக ஒற்றுமையா தான் இருக்கணும்…” அழுகை பொங்கியது தனதுக்கு.
“உங்க காலத்துக்கு அப்புறம் ஒருத்தருக்கொருத்தர் தாங்கி நிக்கிறது கூட பிறந்த உறவு தான். உங்க வாயால அதை கெடுக்காதீங்க. நாளைக்கு மாயாக்கு அண்ணன்னு ஒருத்தன் இல்லாம போயிடுவான். உங்களுக்கு என்னம்மா குறை. உங்க பிள்ளைக மூணு பேரும் நல்லாதான இருக்கோம். குடும்பம், தொழில், பிள்ளை, வருமானம்ன்னு நல்லா இருக்கு எங்க வாழ்க்கை. அதை பார்த்து சந்தோச படுங்க. என்னைக்கும் மருமகன்னு சரண்யாவ தேடி வாரிங்க. அபிராமியவ தேடி போறீங்க… உங்க குடும்பம் ஏதுன்னு முதல்ல யோசிங்க…”
“எங்க எல்லாருக்கும் தனித்தனியா பேர் சொல்ல குடும்பம் இருக்கும்மா… ஆனா, உங்களுக்கு குடும்பம்ன்னு யார் இருக்க. அது நாங்க தான். நாங்க தான் உங்க குடும்பம். அதை உடைச்சு போடாதீங்க…”