அத்தியாயம்18

வாழ்வில் ஒரு முறை பூக்கும் பூவே காதல்…

காதலில் பல முறை தோற்று வாடி வதங்கிய போது கிடைக்கும் உண்மை நேசமும் காதலே…

காரில் கண்ணாடி வழியே ஜெனிஷாவை பார்த்து முறைத்து கொண்டும் மனதில் திட்டி கொண்டும் இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டும் வந்தான் சத்தியா.

“ மேம் செமயா சுடுறிங்க மேம் எப்படி ஐ.ஏ.எஸ் ஆன இதெல்லாம் ட்ரெயினிங்ல சொல்லி தருவாங்களா மேம் “

“இல்லை ஜெனி இதெல்லாம் கத்து கொடுக்க மாட்டாங்க “

“அப்புறம் எப்படி கரெக்டா சுட்டிங்க அந்த நாலு பேரையும் “

“அது அப்பா கொடுத்த ட்ரெயினிங் அம்மா கலெக்டர் ஆகுறதுக்கு முன்னாடியே கத்து கொடுத்துட்டாங்களாம் சூட்டிங், செல்ப் டிபென்ஸ்ல எல்லாம் “

“சார் …. ஆடிட்டர தான இருந்தாரு, இல்ல ஸ்பையா இருந்தாரா “

“ஏய்.. ஜெனி…” என்று மகா அவள் தோளில் தட்டி “ அவர் ஆடிட்டர் தான் பட் என்ன கத்துக்க சொல்லி கிளாஸ் சேத்து விட்டாங்க “

“ஓ… சூப்பர் தான் மேம் சாரு…. ஆமா… கதையில அப்புறம் என்ன ஆச்சு மேம்? நிச்சயம் அப்போ அந்த ரிங், அதை வாங்கினீங்களா “ என்றதுக்கு மறுப்பாக மகா தலையசைத்து

“இல்ல எனக்கு பேங்கில்ஸ் தான் போட்டாங்க நான் அந்த ரிங் அப்போ வேணாம்னு சொல்லிட்டாங்க “

“வெய் மேம்…பாவம் சார் எவ்ளோ ஆசையா கேட்டாரு ஏன் மேம் இப்படி பண்ணிங்க “ என்று தலையை தொங்க போட்டவள்

“அப்போ அந்த ரிங்க நீங்க வாங்கவே இல்லையா “ என்று மகா முகம் பார்க்க அவள் அவளின் இடது கை மோதிர விரலை காட்டி

“இது தான் அந்த ரிங் “ என்று காட்டினாள்.

இரு இதயங்கள் ஒன்றாக இணைந்து இருப்பது போல இருந்தது அந்த ரிங். ஆக! ஓகோ! என்று சொல்லும் அளவு ஸ்பெஷலாக அது வடிவமைக்க பட்டிருக்க வில்லை என்றாலும் அதை ஸ்பெஷலாக காட்டியது இன்பாவின் காதல் தான்.

அதை வாங்கும் போது ஆசை ஆசையாக வாங்கியிருந்தான் அந்த இரு இதயத்தையும் தொட்டு தடவி பார்த்து இது அவனின் தங்கத்தின் கைக்கு சரியாக இருக்குமா என்று பல முறை அவள் விரல் களை யோசித்து வாங்கியது அந்த மோதிரம்.

அதை பார்த்த ஜெனிஷா “ சார் சரியான லவ்வர் பாய் போல மேம்? நீங்க வேற லெவல் லக்கி மேம் “ என்றதும் மகா முகம் மலர அந்த மோதிரத்தை வருடியவள் “ ம்ம்ம்….ஆமா நான் லக்கி தான் “ என்று சிரித்த படி இருந்தாள்.

மகாவின் மோன நிலையை குரலை சிரிமி கலைத்த ஜெனி “ அப்படியே கதைய தொடங்குனீங்கனா நல்லா இருக்கும் மேம் இன்னும் ரிங் கதை அப்புறம் நம்ம மகேஷ் சார் கதை அவர் குடிக்காம இருந்து குணா மேம் ம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா இல்லையான்னு சொல்லுங்க மேம் “

“முதல்ல சாப்பிடலாம் அப்புறமா கதைலாம் பேசலாம் “ என்ற சத்தியா காரை ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தி இருவரையும் உள்ளே அழைத்து செல்ல

“ அது மேம் நான் ஸ்டே பண்ற ஹோட்டல்லயே சாப்பிடுறேன் மேம் இவ்ளோ சீக்கிரமா சாப்பிட்டு பழக்கம் இல்ல “ என்று வெளியேவே ஜெனிஷா நிற்க

“ஏய் ஜெனி, ஒன் டே தான, வா ஒண்ணா சாப்பிடலாம்” என்று மகா அழைத்தும் ஜெனிஷா தயங்கியவாறே நிற்க, அவள் தயக்கத்தில் கடுப்பான சத்யா.

“ரொம்பத்தான், இவ்வளவு நேரம் கூட தான இருந்தா அப்போலாம் தயங்காம, இப்போ சாப்பிட கூப்பிட்டதும் என்னவாம்” என்று முனங்கியபடி அவளைப் பார்க்க,

“சாப்பிட்டே மகேஷ், குணாவுக்கு மேரேஜ் ஆச்சா இல்லையான்னு சொல்லலாம்னு இருந்தேன். ஹோட்டல்க்கு போய்ட்டா பேச டைம் இருக்காதேன்னு யோசிச்சேன் ” என்று மகா சொன்னதைக் கேட்டு,

“இதோ வந்திட்டேன் மேம், என்ன சாப்பிடலாம்னு யோசிச்சேன் மேம்” என்று மகா கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தவளை

“எப்படி மாத்தி பேசிட்டு போறா பாரு” என்று இவனும் பின்னே சென்றான். உள்ளே ஒரு டேபிளில் மகாவுடன் ஜெனிஷா அமர்ந்து கொள்ள, சத்யா இவர்கள் எதிரே சென்று அமர்ந்தான்.

பின் மூவருக்கும் சப்பாத்தி ஆர்டர் செய்துவிட்டு கைகழுவி வந்து அமர்ந்தனர்.

“மேம், இப்போ சொல்லுங்க மேம். ஃபுட் வர லேட் ஆகும்.” என்று மகா புறம் ஜெனிஷா திரும்பி ஆர்வமாக கதை கேட்க

“ம்ம்ம் சொல்றேன். இந்த மகேஷ் மூணு வருஷம் குடிக்காம குணாவையே நினைச்சிட்டு இருந்தானா.”

“அப்போ மகேஷ் சார் வின் பண்ணிட்டாங்களா? குணா மேம்ம பொண்ணு பார்க்க அவுங்க தங்கச்சி, அம்மா ஒத்துக்கிட்டாங்களா?” என்று ஜெனிஷா சந்தோஷமாக மகா கையை பிடிக்க

“அங்க தான் ஒரு ட்விஸ்ட். அப்போ சுபாவுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்த டைம். எந்த மாப்பிள்ளையும் செட் ஆகாம கல்யாணம் தள்ளி போயிட்டே இருந்துச்சா. அப்போ அவளுக்கு வந்த ஒரு வரனோட குணாவுக்கு சேர்த்து அண்ணன் தம்பிய வரவும் எங்க அப்பா நல்லது தானேன்னு வர சொல்லிட்டாங்க.”

இதை கேட்டு அதிர்ந்த ஜெனி, “அய்யோ மேம், மகேஷ் சார் பாவம். ஏன் இப்படி பண்றாங்க உங்க அப்பா?”

“அடியேய், நடந்து முடிஞ்ச விஷயத்துக்கு இப்போ போய் பொங்குற” என்று மகா சிரிக்க,

“சரி மேம், நான் அமைதியா கேக்குறேன். நீங்க கதைய முதல்ல சொல்லுங்க. மகேஷ் சார்க்கு என்ன ஆச்சு?”

“என்ன ஆகும்? கொலை வெறியில எங்க வீட்டுக்கு வந்து நியாயம் சொல்லுங்கன்னு ஒரே அழுக” என்று அதை நினைத்து சிரித்த மகாவுக்கு இன்று நடந்தது போலத்தான் அனைத்தும் நினைவு இருந்தது.

மறுநாள் சுபா குணாவை பொண்ணு பார்க்க வருவதாக இன்பாவுக்கு சந்தானம் கால் செய்து சொல்லியிருக்க, இன்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன மாமா சொல்றீங்க? குணாவையும் பார்க்க வர்றாங்களா?”

“அது மருமகனே, சுபாக்கு தான் சொல்லியிருந்தேன். நீங்களும் விசாரிச்சீங்க தான. திடீர்னு இன்னைக்கு கால் பண்ணி அவர் தம்பிக்கும் சேர்த்து முடிச்சிடலாம் சொல்றாங்க மருமகனே.

நல்ல இடம், அக்கா தங்கச்சி ஒரே வீட்டுலன்னா நல்லா இருக்கும்னு தோணிச்சு. அதான் சரின்னு சொல்லிட்டேன். கோச்சுக்காதீங்க உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லலைன்னு.”

“அச்சோ அது பரவாயில்லை மாமா. நாளைக்கு காலைல நாங்க நேரத்துக்கே வந்துறோம் மாமா” என்று போனை வைத்தவன் அடுத்து என்ன செய்ய என்று யோசித்தபடி இருக்க, அதேநேரம் கதவு தட்டும் ஓசை கேட்டது.

திரும்பி நேரத்தை பார்த்தவன், “யாருடா அது இந்த நேரத்துல காலிங் பெல் அடிக்காம கதவை தட்டுறது?” என்று கதவை நோக்கி செல்ல, கதவு தட்டும் சத்தம் கேட்டு படித்துக்கொண்டிருந்த மகா,

“யாருங்க அது இந்த நைட்டு?” என்று அறையில் இருந்து அவளும் வந்தாள்,

“தெரியல தங்கம், நீ அங்கேயே இரு. நான் யார்னு பார்க்குறேன்” என்று கதவை திறக்க மகேஷ் தான். கண்கள் சிவந்து, தலை கலைந்து, முகத்தில் கோபம் கிலோ கணக்கில் ஏறி போய் நின்றிருந்தான்.

“என்னடா கோலம் இது? இந்த டைம் இங்க என்னடா பண்ற?” என்று உள்ளே வழி விட, எதுவும் பேசாமல் உள்ளே வந்த மகேஷ் நேராக மகாவிடம் சென்று,

“ஏன்மா உன் தங்கச்சி நான் செட் ஆக மாட்டேனா?” என்று கேட்டு நின்றவனை புரியாமல் பார்த்த மகா, “என்னது என்ன சொல்றீங்க மகேஷ்?”

அவள் ஒன்றும் புரியாமல் நிற்க மகேஷின் கேள்வியிலேயே அவனுக்கு விஷியம் தெரிந்து விட்டது என்றதை கண்டுகொண்ட இன்பா

“டேய் மகேஷ் இங்க வா, அவளுக்கு விஷயம் தெரியாது” என்ற அழைப்பில் இன்பாவிடம் வேகமாக சென்றவன் அவன் சட்டையைப் பிடித்து

“மகா கிட்ட சொல்லியிருந்தா கூட அவுங்க ஹெல்ப் பண்ணிருப்பாங்க டா உன் பேச்ச கேட்டேன் பாரு என்ன சொல்லனும் ” என்று முகத்தை மூடிக்கொண்டு என்ன செய்ய என்று சோபாவில் அமர்ந்தவனை பார்த்து பெருமூச்சு விட்ட இன்பா.

“டேய் மாமா நான் போய் பேசுறேன்டா… பொண்ணு பாக்க தான் வறாங்க இன்னும் எதுவும் ஓகே ஆகலடா ” என்று சமாதானம் செய்ய முயன்று கொண்டிருக்க அது எதுவும் அவன் இடம் வேலைக்கு ஆகவில்லை முகத்தை மூடியபடி அழுது கொண்டிருந்தான் மகேஷ்.

மூன்று வருட காத்திருப்பு தங்கை திருமணம் தற்போது தான் முடிந்திருக்க அடுத்து இவனுக்கு தான் என்று ஆசை ஆசையாக சுபா திருமணத்திற்காக காத்திருந்தான்.

ஆனால் இப்போது அவனின் அனைத்தும் கலைந்து காற்றாக சென்றது போல மாறிவிட தாங்க முடியாம‌ல் தொண்டை அடைப்பது போல இருக்க கோபம் வருத்தம் என்று அனைத்தையும் தாங்கிய படி அழுத்தத்தில் இருந்தான் மகேஷ்.

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்ட மகா “ மகேஷ், சுபா வ லவ் பண்றிங்களா “

என்ற கேள்வியில் வேகமாக எழுந்து கலங்கிய விழியுடன் பார்த்தவள் “ புருஷன் மாதிரியே யோசிங்க. ஏன் குணாவ பாத்தா நான் லவ் பண்ற பொண்ணு மாதிரி தெரியலையா “ என்றதும் வாயில் கைவைத்த மகா

“ குணாவையா? இதை ஏன் முன்னாடியே என்கிட்ட நீங்க சொல்லல மகேஷ் “

“அது என் தப்பு தான் படிப்பு முடியட்டும் னு நினைச்சது எல்லாம் என் தப்புதான் “ என்று மீண்டும் அவன் முகத்தை மூடிக்கொள்ள

“ அச்சோ அழுவாதிங்க மகேஷ், பொண்ணு தான பாக்க வர போறாங்க கல்யாணம் ஆகல தான பாத்துக்கலாம் “

“ அது எப்படி மகா மாப்பிள்ளை பிடிச்சி போக தான பாக்க வற சொல்லியிருக்காங்க”

“என்னது மாப்பிள்ளை பிடிச்சி போயா “ என்று சிரிக்க, மகேஷ் அவள் முகத்தை அவள் சிரித்ததில் என்ன என்பது போல பார்க்கவும்

“ எங்க வீட்டுல பையன் பாக்க வறான்னு மட்டும் தான் சொல்லுவாங்க மத்த எதுவும் சொல்ல மாட்டாங்க நேர்ல பாத்து ஓகேனா ஓகே, இல்லனா இல்ல

ஏன் உங்க ஃபிரண்டு என்னை பொண்ணு பாக்க வரதே எனக்கு தெரியாம நானு என் சிஸ்டர் எல்லாம் பேதி மாத்திரை போட்டு உங்கள அனுப்பலாம்னு யோசிச்சி வச்சிருந்தோம். பாக்க வந்த பையன் இவருனதும் தான் ப்ளான ஸ்டாப் பண்ணோம் “

இதை கேட்டு இருவரும் ஒன்று போல அதிர்ந்து அவளை பார்க்க அவள் அசால்டாக தோளை குலுக்கி “ சோ டோன்ட் வரி நான் குணா கிட்ட பேசுறேன் தைரியமா இருங்க “என்று தைரியம் சொல்லியவள்.

சொன்னபடி மறுநாள் குணாவிடம் பேசலாம் என்று காலை நேரமாக அவள் வீட்டுக்கு சென்றிருந்தாள்.

பைக்கில் புடவையில் இறங்கிய மகா உள்ளே செல்ல போக போனவளை முந்தானையை பிடித்து இன்பா இழுக்கவும் தடுமாறி அவன் மீது சாய்ந்தவள்

“ஏ….இன்பா… சேரிய ஏன்டா பிடிச்சி இழுத்த “

“என்ன தங்கமே இங்க வந்தும் டா போட்டு கூப்பிடுற “

“அச்சோ…” என்று பதறியவள் சுற்றி யாராவது இருக்காங்களா என்று பார்த்து விட்டு இன்பாவை திரும்பி முறைத்து பல்லை கடித்த படி

“ஏன்ங்க இப்படி விளையாடுறிங்க நானே போராடி புடவை கட்டிட்டு வந்திருக்கேன். அதை அவுத்து விட்டுறாதிங்க “

 “ச்சீ…. தங்கமே எப்பவும் அதே யோசனை தான் போல உனக்கு.” என்று இன்பா கன்னத்தில் இடிக்க, அவன் பேசியது ஒன்னும் புரியாமல் முழித்த மகா புரிந்த பின் அவன் தோளில் பட் என்று ஒரு அடி வைத்தாள்.

“என்ன விஷயத்துக்கு வந்திருக்கீங்க என்ன விளையாட்டு உங்களுக்கு “ என்று முறைத்து நின்றவளை அருகில் பிடித்து இழுத்தவன்,

“தங்கமே…. எது நடக்குமோ அதுவே நடக்கும் நம்ம மகேஷ்க்கு குணா தான்னா அவ கண்டிப்பா அவனுக்கு தான். அதை நம்பி டென்ஷன் முகத்துல காட்டாம போ நீ இப்படியே போனா எல்லாம் என்ன என்னென்னு கேட்க போறாங்க “

இன்பா சொல்லவும் தான் அவள் முகத்தை பைக்கின் கண்ணாடி வழியே பார்த்தாள். முகம் டல்லாக இருப்பது போல தெரியவும் முகத்தை அழுத்தி துடைத்தவள் சிரித்த முகமாக “ இப்போ ஓகே வா” என்று தலையை சாய்க்கவும் அவளை கைகளில் சுத்தி சுடக்கு வைத்தவன்.

“என் அழகு தங்கம் “ என்று உள்ளே அவளை அழைத்து சென்றான்.

இன்பா, மகா இருவரும் வரவும் சந்தானம், சீனி இருவரும் இன்பாவை பிடித்துக்கொள்ள மகா அவள் தங்கைகளைப் பார்க்க ஓடி விட்டாள்.

அங்கே அறையில் குணா ஏதோ யோசனையாக அமர்ந்திருக்க சுபா அமிர்தத்துடன் போராடிக் கொண்டிருந்தாள்.

“இதோ பாரும்மா நான் சொன்ன எந்த கண்டிஷனும் இந்த பையன் கிட்ட மேட்ச் ஆகல தயவு செய்து என்னை விட்டுரு இந்த பையன் வேண்டாம் “

“ஏ… இதெல்லாம் ஒரு காரணமா வச்சி பையன வேணான்னு சொல்றியே. ஒரு முறை பாருடி பையனை அப்பவும் பிடிக்கலைன்னா வேணாம் சொல்லு அம்மா ஒத்துக்குறன் “

“என்ன ஆச்சு சுபா ? என்ன சொல்றா “ என்று மகா வரவும் அவளை பார்த்து அவள் அருகே வந்து குணா அமர்ந்த படி,

“சுபாக்கு பையனை பிடிக்கலையாம் அதான் வேணான்னு சொல்லிட்டு இருக்கா “

“என்னது பையனை பிடிக்கலையா “ என்று மகா மனதில் மகிழ்ந்தவள்,

“ஏன் எதுக்கு பிடிக்கல சுபா “

“அது பையன் ஊர் மதுரையாம் அங்க தான் வீடு வேலை எல்லாமே வாம் அதான் வேணான்னு சொல்றா “

“பாரு மகா, இவ சொல்றது உனக்கே சரியா படுதான்னு. எந்த ஊரா இருந்தா என்ன நல்ல பையனா ன்னு தான பாக்கணும் “

“அதெல்லாம் முடியாது எனக்கு இந்த சென்னையிலயே பக்கமா இருக்க மாதிரி பையனை பாருங்க “ என்று அடமாக இருந்தவளை,

“சூப்பர் போ “ என்று பார்த்தவள் குணா பக்கம் திரும்பி,

“உனக்கு எப்படி குணா “

“அவளுக்கு ஓகேனா அவளுக்கு மட்டும் கல்யாணம் பண்ணி வைங்க “ என்று சுபா இடையில் வரவும் குணா

 “ஏ… வாயை மூடு டி… நான் உன் விஷயத்துக்கு வந்தேனா தேவையில்லாம பேசாத “ என்று சுபா மீது பாய ரெடியாக இருந்தவளை தடுத்து பிடித்த மகா

“ சும்மா கொஞ்ச நேரம் இருங்க டி… “ என்று குணாவை அவள் பக்கம் திருப்பி “ உனக்கு ஓகேவா இந்த கல்யாணத்துக்கு “ என்று கேட்கவும் வேகமாக மறுத்து தலையசைத்து

“எனக்கு தூரமா வேணாம் மகா பக்கமா பார்க்க சொல்லு அப்பறம் தெரியாத யாரும் வேணாம் தெரிஞ்ச பையனா பார்க்க சொல்லு “

“அ… தெரிஞ்சவனா வா…. எப்படி இந்த தெரு முனையில டவுசர் போட்டு பம்பரம் விளையாடுறாங்களே அதுல ஒன்ன கூட்டிட்டு வரவா “ என்று அமிர்தம் முறைக்கவும் மகா

“நீ போம்மா நான் பேசிக்கிறேன் “ என்று அமிர்தத்தை அனுப்பி வைத்தவள்

திரும்பி இருவரையும் பார்த்து சிரித்த படி அவள் பையில் இருந்து மாத்திரையை எடுத்து ஆட்டி காட்டவும்.

இருவரின் முகமும் பிரகாரத்தில் மின்ன “ மகா…. “ என்று அணைத்து கொண்டனர்.

இதை கேட்ட ஜெனிஷாவுக்கு புரையேற இரும்பிய படி தலையை தட்டினாள்.

“ஏ… ஜெனி பாத்து ம்மா “ என்று தண்ணீர் எடுத்து அருந்த கொடுத்தாள் மகா.

“மேம்… நீங்களா… பேதி மாத்திரை கலந்தீங்க “

“காதலுக்காக சில சமயம் சில மாத்திரைகளை கலக்குவது தவறில்லை ஜெனி “ என்று தோளை உலுக்கியவளை சாத்தியா

“எங்க அம்மாவா இது “ என்று ஒரு வித ஷாக்கில் தான் பார்த்து இருந்தான்.

“ அப்பறம் என்ன ஆச்சு மேம் “

“ அப்பறம் என்ன அதை குடிச்சதுல வயித்த கலக்கி அவசரமா அப்புறம் கால் பண்றோம்னு கிளம்பிட்டாங்க. அதுக்காப்பறம் அப்பா கிட்ட இந்த சம்மதம் வேணாம் பக்கமாவே பாப்போம்னு என் இன்பா பிரெய்ன் வாஷ் பண்ணிட்டாரு.

அதோட மகேஷ் பத்தி பேசி குணாக்கு அவன ஓகேவும் பண்ணிட்டாரு “

“குணா மேம்கு ஓகே ஆனா சுபா மேம் அவங்களுக்கு முடியாம எப்படி “

“அதையே தான் அப்பாவும் யோசிச்சி வேகமா சுபாக்கு வரன் பார்க்க அவ கேட்ட மாதிரியே பக்கத்துலயே மாப்பிள்ளையும் பார்த்து பொண்ணு பார்க்க வந்துட்டாங்க “

“வாவ் சூப்பர் மேம் “

“எங்க இருந்து சூப்பர்…. சுபா பையன பாத்துட்டு மயக்கமே போட்டா “ என்று சிரித்த மகாவை

“அ…” என்று தான் இருவரும் பார்த்தனர்.

“ ஏன் மயக்கம் போட்டாங்க மேம் “

“ பின்ன அவ சைட் அடிச்ச பையனே மாப்பிள்ளையா வந்தா மயக்கம் வராதா என்ன “