“மாமா ஒரு மனுஷன் நல்லவனா வெள்ந்தியா இருக்கலாம். தப்பு இல்லை. ஆனா அந்த குணம் அடுத்தவங்களை பாதிக்காத மாதிரி இருக்கணும்ல?”, என்று அவள் கேட்க அவருக்கு ஒன்றுமே புரிய வில்லை.

“என்ன மா சொல்ற?”

“நீங்க ரொம்ப வருஷம் உங்க வீட்டை பத்தி கவனிக்காம அமைதியா இருந்துட்டீங்க? நீங்க பண்ணினது ரொம்ப பெரிய தப்பு. உங்க அமைதியால உங்க வீட்ல என்ன எல்லாம் நடந்துட்டு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா மாமா?”

“என்ன மா மங்கை இப்படி சொல்ற? என் வீட்ல என்ன பிரச்சனை? இவன் தான் கொஞ்சம் ஒரு மாதிரி. எல்லா விஷயமும் எனக்கு இன்னைக்கு தான் தெரிய வந்துருக்கு. இவ்வளவு நாள் இவ என் கிட்ட மறைச்சிட்டா”, என்றார்.

“ஆமா அவங்க மறைச்சிட்டாங்க தான். இப்பவும் மறைக்க தான் செய்யுறாங்க. ஆனா மறைச்சது உங்க மனைவி இல்லை.  உங்க மகளும் மகனும் தான்”, என்று மங்கை சொல்ல பார்த்திபன் மற்றும் கயல்விழி இருவரும் இவளை பார்த்த படியே இருந்தார்கள்.

அவள் பேசியது அவர்களுக்கு அவ்வளவு தைரியத்தைக் கொடுத்தது. ஏனோ அந்த நேரம் அவள் அன்னை அனுப்பி வைத்த தேவதையாக தான் அண்ணன் மற்றும் தங்கை கண்களுக்கு தெரிந்தாள்.

மகள் பேச்சில் ஓரளவுக்கு நடப்புக்கு வந்திருந்த சந்திரனும் “ஆமாங்க சார், வேலை வேலைன்னு ஓடின நீங்க கொஞ்சம் பிள்ளைகள் மேலயும் கவனமா இருந்துருக்கலாம்”, என்றார் பொதுவாக.

“என்ன ஆள் ஆளுக்கு வந்து பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்கீங்க? இது எங்க வீட்டு விஷயம். இனி ஏதாவது பேசுனீங்க மரியாதை இருக்காது சொல்லிட்டேன்”, என்றாள் கனகா. அவளுக்கு உள்ளுக்குள் லேசாக கலவரம் வந்தது. “வாசல்ல வச்சு அவனை பேசிருக்க கூடாதோ? இந்த குடும்பம் ஏதாவது போட்டுக் கொடுத்துருமோ?”, என்று உள்ளுக்குள் பயம் வந்தது.

“அப்படி தாங்க பேசுவோம். கண்ணு முன்னாடி தினம் தினம் ஒருத்தங்க குத்துயிரும் கொலையுயிருமா நடமாடுறதை இனி எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? நாங்க மனிதாபிமானம் உள்ள மனுசங்க. இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது. தப்பு செய்யுறது மட்டும் பாவம் கிடையாது. அதை வேடிக்கை பாக்குறது கூட பெரும் பாவம் தான்”, என்று மங்கை சொல்ல புருவம் சுருக்கி அவள் பேச்சை அனுமானிக்க முயன்றார் சேது.

“அடடே இப்ப தான் தெரியுது. நீயும் இவனுக்கு டாவு தானா? அதான் அவனுக்காக பொங்கிக்கிட்டு வர. என்ன உன் கூட தான் இவ்வளவு நேரம் ஊர் சுத்தினானா? நீ தான் எங்க வீட்டு பிள்ளையை மயக்கி வச்சிருக்கியா?”, என்று நாக்கில் நரம்பு இல்லாமல் கனகா கேட்க ஒரு நொடி அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

“கனகா என்ன பேசுற?”, என்று அதட்டினார் சேது.

“ஏமா இந்தாரு வாயை அடக்கி பேசு சொல்லிட்டேன். என் பொண்ணு பத்திரமாத்து தங்கம். அவளை இப்படி பேசின உன் நாக்கை வெட்டிருவேன்”, என்று சொன்ன கோமளம் மகள் புறம் திரும்பி “உனக்கு இது தேவையா டி? யார் எக்கேடு கெட்டுப் போனா உனக்கு என்ன? நீ பேசி கிழிச்சது போதும். வா போகலாம்”, என்று சொல்லி மங்கை கை பற்றி இழுத்தாள்.

“கொஞ்சம் இரு மா. இப்படி பேசினா தான் நாம வாயை மூடுவோம்ன்னு அந்த அம்மா பேசுது”, என்று மங்கை சொல்ல சேதுவோ “கனகா வாய்க்கு வந்ததை பேசாத. அந்த பொண்ணைப் பத்தி எனக்கு தெரியும், அவங்க ஏதோ சொல்ல வராங்க. இரு கேப்போம்”, என்று மனைவியை அடக்கினார். அவர் பேச்சு மங்கை வீட்டினருக்கு கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்தது.

“நாம அதிகம் பேசியது இல்லை மாமா. ஆனா என்னைப் பத்தி நல்ல விதமா நினைக்கிற நீங்க உங்க பிள்ளையை எப்படி தப்பா நினைச்சீங்க?”, என்று கேட்டாள் மங்கை.

“இல்லை மா அது வந்து.., அவன் குடிச்சு..”, என்று தடுமாற்றமாக சொன்னார் சேது. மங்கையின் கேள்வி அவரைக் கொஞ்சம் அசைத்தது. பிள்ளைகள் விஷயத்தில் ஏதோ தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு அவருக்கு வந்தது.

“உங்க பையன் குடிச்சதை நீங்க பாத்தீங்களா மாமா? அவர் எத்தனை பொண்ணுங்க கூட சுத்துறதை நீங்க உங்க கண்ணால பாத்தீங்க? இவங்களை தவிர இந்த ஊர்ல இருக்குற யாராவது ஒருத்தர் உங்க கிட்ட வந்து உங்க ரெண்டு பிள்ளைகளைப் பத்தி தப்பா சொல்லியிருக்காங்களா? இத்தனை வருஷமாவா உங்க பிள்ளைகள் செஞ்ச தப்பு இவங்களை தவிர மத்தவங்க கண்ணுக்கு தெரியாம போயிருக்கும்?”, என்று கேட்க பார்த்திபனோ மங்கையை விட்டு பார்வையை அங்கே இங்கே திருப்ப வில்லை.

வாழ்வில் முதல் முறையாக தனக்காக பேசும் அந்த ஜீவனை அவ்வளவு ரசித்துப் பார்த்தான். இத்தனை நாள் அவளுடைய கணீர் குரலுக்கு விசிறியாக இருந்தவன் முதல் முறை அந்த உணர்வைக் கடந்து அவளை ரசித்திருந்தான்.

சாதாரண இரவு உடை தான் அணிந்திருந்தாள். அவ்வளவு நீளமான தலை முடியை கொண்டையைப் போட்டு ஒரு கிளிப்பில் அடக்கி இருந்தாள். ஆனாலும் நிறைய முடிகள் கலைந்து தான் இருந்தது. நெற்றியில் பொட்டு இல்லை. காதில் எப்போதும் அவள் அணியும் கம்மலும் கழுத்தில் ஒரு சின்ன செயினும் தான் அணிந்திருந்தாள். ஒரு கையில் இரண்டு வளையல்கள் போட்டிருந்தாள். வாட்ச் அணியும் கரம் வெறுமையாக இருந்தது.

வேறு எந்த அலங்காரமும் இல்லை. ஆனாலும் அவன் கண்களுக்கு அப்படி ஒரு தேவதையாக தெரிந்தாள். முதல் முறையாக சாதாரண நேசத்துக்கும் மேலே ஒரு உணர்வு அவள் மேல் அவனுக்கு எழுந்தது.

“டேய் பார்த்தி இவ உனக்கானவ டா. எந்த சூழ்நிலையிலயும் அவளை இழந்துறாத“, என்று ஒரு குரல் அவனுக்குள் ஒலிக்க “மங்கை எனக்கு கிடைப்பாளா? அதுக்கு நான் தகுதியானவன் தானா?”, என்ற எண்ணம் வந்து அவனை சோர்ந்து போக வைத்தது. அங்கே அவ்வளவு பிரச்சனை தன்னை வைத்து நடந்து கொண்டிருக்க அவனோ அப்பட்டமாக அவளை சைட் அடித்தான். அவள் முகத்தில் இருந்த தார்மீக கோபமும் கேள்வி கேட்கும் போது அவளது கைகள் அசைவதும் அவள் உதடுகள் சுழிப்பதும் ஏனோ அவனுக்கு கவிதையாக இருந்தது.

ஏனோ அந்த கவிதையை தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசை அவனுக்குள் எழுந்து ஒரு சுழற்று சூழற்றியது அவனை. காதல் இப்படி தான் வர வேண்டும் என்று இருக்கிறதா என்ன? காதல் என்ற அழகான உணர்வு யார் மீதும் எந்த சூழ்நிலையிலும் வரலாமே?

“அம்மாடி மங்கை, பெத்த பிள்ளையை யாரும் நம்ப கூடாதுன்னு நினைக்க மாட்டாங்க மா. ஆனா இவன் நடவடிக்கை இப்படி இருந்தா என்ன செய்யுறது சொல்லு. காலைல பத்து மணிக்கு வீட்டை விட்டு போயிருக்கான்? இப்ப மணி நைட் பத்துக்கு மேல ஆகுது? இவ்வளவு நேரம் அவனுக்கு வெளிய என்ன வேலை சொல்லு? கொஞ்சம் பதறிப் போய் இருந்தேன். போன் போட்டா இவன் ஃபோன் ஸ்விட்ச் ஆப்ன்னு வருது. இவ கிட்ட கேட்டா அவ இவன் இப்ப ஆளே சரி இல்லைங்க. யார் யாரோ தப்பா சொல்றாங்கன்னு சொல்றா. நான் என்ன நினைக்கட்டும்?”, என்று கேட்டார் சேது.

“அவர் லேட்டா வறதுக்கு நீங்க கவலைப் பட்டா அது பிரச்சனை இல்லை மாமா. ஆனா சந்தேகப் படுறது எந்த விதத்துல நியாயம். அவர் வீட்டுக்குள்ள வந்ததும் எதுக்கு லேட்? எங்க போய்ட்டு வரன்னு கேட்டா அவர் சொல்லியிருக்க போறார். அதை விட்டுட்டு ஏதோ குற்றவாளியை விசாரிக்கிற மாதிரி வாசல்ல வச்சு இப்படி பேசுறீங்க? நாங்களும் இருக்கோம். எங்க முன்னாடி நீங்க அவமானப் படுத்தினா அவருக்கு எப்படி இருக்கும்?”, என்று அவள் கேட்க “அது..”, என்ற ஆரம்பித்து பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் சேது.